நிழல்யுத்தம் -கடிதங்கள்

.anitha

 நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

வங்காள எழுத்தாளரின் “நிழல் யுத்தம்” சிறுகதை தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ ஆவணம் போலவே இருக்கிறது. ஏன் அவரின் அனைத்து கதைகளும் திரில்லரை போல மனதை பதற வைக்கிறது? உண்மைக்கு மிகவும் அருகில் இருப்பதினாலா ? இல்லை நம்மை சுற்றி இந்த மாதிரியான விஷயங்கள் நடப்பது மட்டுமா? இல்லை இதுமட்டும்தான் நடக்கிறது என ஊடகங்களால் நம்ப வைக்க பட்டிருக்கிறோமா?

 

பழங்குடிகளுக்கும் நவீன மனிதர்களுக்குமான போர் எப்போது தொடங்கியது? எப்போது முடியும் ? காரணம் திதியின் நடத்தையில் இருக்கிறது. அடைமழை பெய்தாலும் நடு இரவானாலும் நீ எனக்கு காத்திருக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் அதிகாரத்தின் நுனியில் உள்ளது. அவளுக்கு அவனது மகனின் தந்தை மீது கோபம் வரவில்லை ,ஆனால் ஒரு கையாலாகாதவனின் மீது கோபம் வருகிறது. ரித்விக் இஸியாக வேலை இருக்கிறது என ஒதுங்கிகொள்வான். ஜூலியசால் முடியவில்லை…அதிகாரத்தின் முன் பணிவதை எப்போதுமே செய்து வந்துகொண்டிருக்கும் பழங்குடி மனம்.

 

பழங்குடிகளுக்கும் சமவெளி மனிதர்களுக்கும் ஆன முரணை பக்கம் பக்கமாக கொண்ட வெண்முரசில் ஒரு பகுதியை வாசித்தது போலவே இருந்தது.

 

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்

 

ஜெ

 

நிழல் யுத்தம் ஒரு அருமையான கதை. வெளியே நின்று பார்க்கும் கோணத்தில் வடகிழக்கின் வாழ்க்கையின் சிக்கலைச் சொல்கிறது. பழங்குடிகளுக்கும் அரசுக்கும் உள்ள பிரச்சினை சாமானியமான ஆதிக்கப்பிரச்சினை இல்லை. இரண்டு பண்பாடுகளின் பிரச்சினை. அது சென்றகாலங்களில் எல்லாம் வன்முறை, ஆதிக்கம் வழியாகவே தீர்க்கப்பட்டுள்ளது. இந்தக்காலகட்டத்தில் அதை அப்பட்டமாகச் செய்யமுடியாது. இதுதான் உண்மையான சிக்கல்

 

அந்தச்சிக்கலை செயற்கையாக அந்தமக்களை கற்பனையில் உருவாக்குவதன் வழியாகத் தீர்த்துவைக்க அனிதா அக்னிஹோத்ரி முயலவில்லை. அவர்கள் நம்பகமான ஒரு இடத்தில் கதையை நிறுத்துகிறார்கள். நடைமுறைத்தளத்தில் உள்ளது இந்தக்கதை. வெளியே நின்று பார்ப்பவரின் கோணம்தான் இந்தக்கதையை நம்பகமாக ஆக்குகிறது. ராம்குமார் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்

 

சரன் லட்சுமணன்

முந்தைய கட்டுரைபழைய யானைக்கடை -கடலூர் சீனு
அடுத்த கட்டுரைதமிழகப் பொருளியல்- ராம்குமார்