ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1
2. மாற்றுப்பார்வையின் பின்னணி
ஓசைஒழுங்குள்ள சொற்றொடர்களால் ஆன கோஷங்களுக்கு பொதுச்சமூகத்தில் வலுவான செல்வாக்கை உருவாக்கும் ஆற்றல் எப்போதும் உண்டு. அதிலும் தமிழகம்போல பரப்பரசியலே அனைத்துக் கருத்தியல்களையும் முடிவுசெய்யும் சூழலில் வெடிப்புறச் சொல்லப்படும் கோஷங்கள் காலப்போக்கில் மையக்கருத்துக்களாக மறுப்பில்லாதபடி நிலைநின்றுவிடுகின்றன. அதிலொன்று ‘சாதியில்லா சங்ககாலத்தில் இருந்து இன்று சாதிச்சங்க காலத்தை நோக்கி வந்துள்ளோம்’ என்பது. இன்று இது பொதுவான நம்பிக்கை. சங்ககாலத்தில் சாதியடுக்குமுறை இருக்கவில்லை, அது பின்னாளில் வந்த பிராமணர்களால், அதாவது ஆரியர்களால் உருவாக்கி தமிழர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த வரியே இங்குள்ள திராவிட அரசியலின் மூலைக்கல் எனலாம்
ஆனால் இது உண்மையா? தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட வரலாறு அவ்வாறு காட்டவில்லை. தொல்தமிழ் வரலாற்றை ஆராய்ந்த ஜார்ஜ் எல் ஹார்ட் முதலிய மேலை நாட்டு ஆய்வாளர்கள் சங்ககாலம் என்பது சாதியக் கட்டமைப்பில் அழுத்தமாக ஊன்றியிருந்தது என்பதை பதிவுசெய்திருக்கிறார்கள். இழிசினர், கடையர் ,தொழும்பர், உரிமை மாக்கள் என்ற பல்வேறு சொற்களில் அன்றிருந்த அடித்தள மக்களும், அடிமைகளும் சுட்டப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் மையப்பண்பாடென்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான ஆதிக்கப்பண்பாடாக இருந்திருக்கிறதென்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சங்ககால இலக்கியங்கள் சாதிப்பாகுபாடுகளை, இந்தியச் சாதிபாகுபாட்டுக்கு அடிப்படையாக உள்ள தொழில்வழிப்பிரிவினையை, சாதிவிலக்குகளை உருவாக்கும் தூய்மைXதூய்மையின்மை பற்றிய நம்பிக்கைகளை வெளிப்படையாகவும் விரிவாகவும் பதிவுசெய்துள்ளன.
இந்தப் பொதுப்புத்திப் புரிதலுக்கு எதிரான ஒரு வரலாறு ஏன் உருவாக்கப்படவேண்டும்? ஏனென்றால் இந்த பொதுப்புத்தி வரலாறு என்பது இங்கு சாதியம் எப்படி உருவானது, எவரால் எப்படி நிலைநிறுத்தபப்டுகிறது என்றவினாவுக்குரிய பதில். அந்தப் பதில் பிழையாக இருந்தால் கடந்தகாலம் பிழையாக புரிந்துகொள்ளப்படுவதில்லை, நிகழ்காலம்தான் பிழையாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. வரலாற்றை புரிந்துகொள்வதென்பது எப்போதுமே நிகழ்காலப் பிரச்சினைகளுக்கான நோய்க்காரணங்களையும் மருந்துகளையும் கண்டடைவதற்காகவே.
சங்ககாலத்தில் சாதி இருக்கவில்லை என்ற வரி தமிழின் ஆதிக்கச் சாதிகளிடமிருந்து சென்றகாலச் சாதிசார்ந்த ஒடுக்குமுறைகளின் பொறுப்பை, இன்றும் சாதியைக் கடைப்பிடிப்பதன் பிழையை இல்லாமலாக்கிவிடுகிறது. அவர்கள் இயல்பாகச் சாதியற்றவர்கள், சாதி அவர்களின் ஒரு பிறழ்வு மட்டுமே என்ற பிழையான புரிதலை உருவாக்கிவிடுகிறது. சாதி அவர்களின் பண்பாட்டின் அடித்தளத்திலேயே உள்ளது, அவர்களின் வரலாற்றின் ஊற்றுக்கண்ணிலிருந்தே எழுந்தது அது என்ற உண்மை மறைக்கப்படுகிறது. விளைவாக இன்றும் தமிழ்ச்சமூகத்தின் எல்லா தளங்களிலும் உக்கிரமாக நீடிக்கும் சாதியைப் புரிந்துகொள்ளவோ மதிப்பிடவோ இயலாதாகிறது. அந்த மக்களுக்கேகூட தங்களிடம் மொழியாக, தொன்மங்களாக, ஆசாரங்களாக உறையும் சாதியைப் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது
தமிழ்த்தேசிய வரலாறு உருவாக்கிய இந்தக் கற்பிதத்துக்கு எதிரான ஊடுருவலை நிகழ்த்தியது தலித் ஆய்வுமுறைமைதான். ஏற்கனவே மார்க்ஸிய ஆய்வாளர்கள் சிலர் மரபின் மீதான விமர்சன ஆய்வுமுறைமையை கொண்டிருந்தாலும்கூட அவர்களில் பெரும்பாலானவர்கள் பெருமிதவரலாறுகளின் உளநிலையிலிருந்து வெளிவர இயலாதவர்களாகவே இருந்தனர். தலித் ஆய்வாளர்களிடம் மட்டுமே ‘அது என் பெருமிதம் அல்ல, என் பெருமிதங்கள் வேறு’ என்னும் உறுதியான நிலைபாடு இருந்தது. அத்துடன் அவர்களின் ஆய்வுமுறைமைக்கான முன்வடிவங்களும் எழுபதுகளிலேயே இந்தியாவில் அறிமுகமாயின. அவர்களுக்கான அரசியலும் அப்போதுதான் தேசிய அளவில் வடிவம் கொண்டது. ராஜ் கௌதமன் அதன் விளைவு.
1970-களில் மஹாராஷ்டிராவில் ‘தலித்’ இயக்கம் தோன்றியது. அதாவது ‘தலித்’ என்னும் சொல்லில் திரண்ட அரசியல் –பண்பாட்டு இயக்கம். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்ட அரசியலுக்கு மேலும் நூறாண்டுக்கால தொன்மை உண்டு. மகாராஷ்டிரத்தில் இருந்து குஜராத்துக்கும் கர்நாடகத்திற்கும் பரவி தமிழகத்தில் அது எண்பதுகளின் தொடக்கத்தில் வந்துசேர்ந்தது. இங்கே அது ஆழமான அரசியல் –பண்பாட்டு விவாதங்களை உருவாக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தமிழ் அறிவுச்சூழல் இங்குள்ள தலித் அறிவியக்கத்தை தந்திரமாகக் கடந்துசென்றது. அவர்களின் பெரும்பாலான கருத்துக்கள் விவாதிக்கப்படவே இல்லை. மாறாக அவர்களை வெறுமே ‘ஆதரிப்பது’ ஒருவகை ‘அரசியல்சரி’யாக ஆகியது.
அத்துடன் அவர்கள் திராவிட இயக்கத்தை விமர்சிப்பது ‘நன்றிகெட்டத்தனமாக’ முத்திரையிடப்பட்டது. திராவிட இயக்கத்தைவிட பலமடங்கு தலித் மேம்பாட்டுக்காக பங்களிப்பாற்றிய காங்கிரஸ் பேரியக்கம் மீது தலித் அரசியல்வாதிகள் முன்வைத்த விமர்சனங்களை மேலும் பெருக்கி அரசியல்கூச்சல்களாக ஆக்கிக்கொண்டவர்கள் திராவிட இயக்கத்தவர், ஆனால் எளிய விமர்சனங்கள்கூட அவர்களைக் கொந்தளிக்கச் செய்தன. இந்த ஆதரவு – எதிர்ப்பு சூழல் தலித் அறிவியக்கத்தினரை காலப்போக்கில் இரண்டாகப் பிளந்தது. அவர்கள் மெல்லமெல்ல கேட்கப்படாத குரலாக ஆனார்கள். ராஜ் கௌதமனும் விமர்சிக்கவோ விவாதிக்கவோ படாமல் ஒதுக்கப்பட்டார்.
தமிழகத் தலித் அறிவியக்கியத்தைப் புரிந்துகொள்ள மூன்று வரலாற்றுச்செய்திகள் முக்கியமானவை.
அ. அது இங்கிருந்த எழுத்தாளர்களால் கர்நாடகத்திலிருந்தும் மஹாராஷ்டிரத்திலிருந்தும் மொழிபெயர்ப்பினூடாக கொண்டு வரப்பட்டது.
ஆ. இங்கு தலித் இயக்கத்தை அறிமுகம் செய்தவர்களில் முன்னோடிகளில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் அல்ல. அவர்கள் இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள்
இ.தலித் இலக்கியம் இங்கே முதலில் விமர்சகர்களால் கோட்பாடாக அறிமுகம் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு அதன்பின்னரே படைப்புக்கள் வரத்தொடங்கின.
ஈ. தமிழில் எழுந்த தலித் படைப்புகள் அக்கோட்பாட்டாளர்களின் முன்வழிகாட்டலை முழுமையாக மீறிச்சென்றன
இங்கு தலித்தியம் ஆறிமுகம் ஆனமைக்கான பின்புலக் காரணங்கள் சில உண்டு. அவற்றில் முதன்மையானது இடதுசாரிகளுக்குள் உருவான சோர்வும் பூசலும். தமிழக இடதுசாரி இயக்கங்களின் வீச்சு எண்பதுகளின் இறுதியிலேயே தளரத்தொடங்கியது. இருபெரும் இடதுசாரி இயக்கங்களின் கலாச்சார அமைப்புகளிலிருந்து பலர் வெளியேறினர். அவர்கள் தீவிர இடதுசாரி அமைப்புக்குள் சென்று சேர்ந்து விரைவில் அங்கிருந்தும் வெளியேற நேரிட்டது. ஞானி, அ. மார்க்ஸ், கோ.கேசவன் போன்றவர்களை உதாரணமாகச் சுட்டலாம். இவர்களை ஓர் விவாதத்தில் இந்திரா பார்த்தசாரதி பாராட்டாக ‘அநாசார மார்க்ஸியர்கள்’ என்கிறார்.
இவர்கள் தமிழக இடதுசாரி அரசியலில் அடுத்தகட்ட நகர்வுக்கான பாதையைத் தேடிக்கொண்டிருந்தனர். மையப்படுத்தப்பட்ட இடதுசாரி அமைப்புகளின் அரசியல் உருவாக்கிய நடைமுறைச் சிக்கல்கள், கொள்கைச் சிக்கல்கள் ஆகியவற்றுக்கான தீர்வுகளை தத்துவார்த்தமாக யோசித்துக் கொண்டிருந்தனர். அவற்றுக்கான பதில்களை ஐரோப்பிய நவமார்க்சியச் சிந்தனைகளிலும் பின்நவீனத்துவச் சிந்தனைகளிலும் கண்டடைந்தனர். எண்பதுகளின் இறுதியில் சோவியத் ருஷ்யாவில் உருவான கொள்கை மாற்றங்களும் 1992ல் அதன் அதிகாரபூர்வ உடைவும் இடதுசாரிகளில் ஒருசாராரை அவநம்பிக்கைக்கும் சோர்வுக்கும் கொண்டுசென்றது. அவர்களே தலித் அரசியலை புதிய அலை என கண்டுகொண்டார்கள்.
தமிழகத்தில் ஆரம்பகால தலித் கருத்துக்கள் தமிழவனால் கன்னடத்திலிருந்து கொண்டுவரப்பட்டன. தமிழவனின் பயணம் மரபான மார்க்சியம், அங்கிருந்து ஐரோப்பிய நவமார்க்ஸியம், அங்கிருந்து தலித்தியம் என அமைந்திருந்தது. தொடர்ந்து மக்கள் யுத்தக்குழு போன்ற தீவிரநோக்குள்ள இடதுசாரி அமைப்புகளில் இருந்த அ.மார்க்ஸ், பழமலை போன்றவர்கள் தலித் இயக்கத்தின் கருத்துக்களை நோக்கி வந்துசேர்ந்தனர். ரவிக்குமார் போன்றவர்களும் அடிப்படையில் இடதுசாரிகளே.ஆகவே அன்றைய பார்வை என்பது இடதுசாரி அரசியலின் ஒருபகுதியாக தலித் அரசியலைப் பார்ப்பதாக அமைந்தது. அந்த அரசியலை முன்வைப்பதற்காகவே நிறப்பிரிகை என்னும் சிற்றிதழ் தோன்றியது. 1990 முதல் ஒரு வலுவான சிறிய கருத்துக்குழுவாக இரண்டு ஆண்டுக்காலம் இது இயங்கியது.
நிறப்பிரிகையின் சார்பில் அ.மார்க்ஸ் முன்னெடுப்பில் தலித் அறிக்கையெனும் முதல் ஆவணம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடதக்க நிகழ்வு. இந்தியாவில் வேறெங்காவது இப்படி தலித் அறிவியக்கம் ஒன்றுபெரும்பாலும் தலித் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. தலித் இயக்கத்திற்கு இந்தியாவில் வேறெங்கும் இப்படி நேரடியான இடதுசாரித்தன்மையும் இருக்கவில்லை. ஏனென்றால் அம்பேத்கர் இடதுசாரிக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர் அல்ல.நவம்பர் 27, 1993 அன்று தஞ்சையில் கூடிய பலதரப்பைச் சேர்ந்த சமூகச்செயல்பாட்டாளர்கள் மற்றும் இடதுசாரிகள் பேசி தலித் அறிக்கையின் முன்வரைவை தயாரித்தனர். அது பின்னர் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையை தலித் இயக்கத்தவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என இப்போது அதன் ஒருங்கிணைப்பாசிரியரான அ.மார்க்ஸ் கருதுகிறார். அது உண்மையல்ல. இன்றும் தலித் இயக்கச் செயல்பாடுகளின் கருத்தியல் அடிப்படையாக, முதற்களமாக, அந்த அறிக்கையே உள்ளது. அதிலிருந்து தங்களுக்கான நடைமுறை விரிவாக்கங்கள், திருத்தங்களை அவர்கள்செய்துகொண்டிருக்கிறார்கள். அவ்வாறுதான் அரசியல் முன்னகர முடியும். வரலாற்றில் எப்போதுமே அப்படித்தான் – கம்யூனிஸ்டு அறிக்கைக்கே கூட.
அவ்வறிக்கையை உருவாக்கிய தலித் இயக்கமுன்னோடிகளான தலித்அல்லாத, பெரும்பாலும் மிகவும்பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியைச்சேர்ந்த அறிவுயிரிகள் ஓரு தலித் – பிற்படுத்தப்பட்டோர் இணைப்பையும் பெரியாரிய இடதுசாரி கலவையையும் கனவுகண்டனர். பிராமண மற்றும் உயர்ஜாதிகளுக்கு எதிரான ஓர் ஆற்றல் குவிப்பை அவர்கள் இலக்காக்கினர். பலர் அந்தப்போரில் தங்களுக்கு சாதகமாக நின்றிருக்கும் புதிய சக்தி என்ற அளவிலேயே தலித்துகளை பார்த்தனர். ஆனால் அது பலவகையிலும் களயதார்த்தத்துடன் இணையவில்லை. களத்தில் அன்று உருவாகிவந்த தலித் எழுச்சியின் முதல் எதிரிகளாக, நேரடியான அடக்குமுறையாளர்களாக இருந்தவர்கள் மிகவும்பிற்படுத்தப்பட்ட சாதியினர்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் திராவிட இயக்கத்தினர். இந்தியச் சாதியமைப்பில் இருந்த பழங்குடி உளநிலைகளை அவர்கள் அறியவில்லை. அவர்களின் புரிதல் பெரும்பாலும் கோட்பாடுகளிலிருந்து மக்களை நோக்கி ‘இறங்கி’ வருவதாகவே இருந்தது.
ஆரம்பகட்ட தலித் இயக்கத்தின் தலித் அல்லாத ஆளுமைகளான தமிழவன், பழமலை,பிரேம் ஆகியோரின் அரசியல் வெளிப்படையாகவே இடைநிலைச்சாதி அரசியலாகவே இருந்தது. உதாரணமாக நிறப்பிரிகை அன்று வன்னியர்சாதியின் தலைவராக, வன்னியருக்கான இடஒதுக்கீடுப் போராட்டம் வழியாக அடையாளபெற்று முன்னணிக்கு வந்தவரான டாக்டர் ராமதாஸின் விரிவான பேட்டியை வெளியிட்டு அவர்தலைமையில் தலித்துக்கள் அணிதிரளவேண்டுமென அறைகூவியது. நிறப்பிரிகையிலிருந்த பலர் பின்னாளில் பாட்டாளி மக்கள்கட்சியின் செயல்வீரர்களாகவும் ஆனார்கள். மிக விரைவிலேயே தலித்துகள் இவர்களின் இடைநிலைச் சாதிசார்ந்த அரசியலை அடையாளம் கண்டு கொண்டமையால்தான் இவர்கள் அனைவருமே தலித் இயக்கங்களை விட்டு ஒரிரு ஆண்டுகளுக்குள் அகல நேர்ந்தது.
தமிழகத்தில் தலித் இயக்கம் இலக்கியத்தில்தான் முதலில் தொடங்கியது .பின்னர்தான் அரசியலில் அது ஊடுருவியது. தொடக்க காலகட்டத்திற்குப்பின் தலித் சிந்தனையாளர்கள் தனித்த சிறு குழுக்களாக இயங்கினர் . தமிழகத்தில் அரசியலில் தலித் இயக்கம் ஒன்று மெய்யாகவே உருவாகியதா என்னும் வினா ஐயத்திற்குரியது. ஏனென்றால் தனித்தனியாக தலித் சாதிகளுக்குரிய கட்சிகளே இங்கே உருவாயின. விடுதலைச் சிறுத்தைகள் பறையர்களின் கட்சியாகவும் புதிய தமிழகம் பள்ளர்களின் கட்சியாகவும் உருவாகியது. அவை போன்ற அரசியலமைப்புகளினூடாக இங்கே கூட்டாக தலித்துக்களுக்கான அரசியல் வெளி ஒன்று உருவானது என்பதும் உண்மை. தலித்துக்களை தங்கள்கீழ் ஒருங்கிணைக்க முடியும் என இடதுசாரிக்குழுக்களும் பாட்டாளி மக்கள் கட்சியும் கொண்ட நம்பிக்கை மறைந்தது
தமிழகத்தில் தலித் எனும் சொல் தன்னால் தான் அறிமுகம் செய்யபப்ட்டது என்று வெவ்வேறு எழுத்தாளர்கள் இன்று கூறிவருகிறார்கள். தமிழவன் அச்சொல்லை கன்னடத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்ததாக கூறினார். அதை மறுத்து முன்னரே அச்சொல் புழக்கத்தில் இருந்தது . ‘தலித் எழில்மலை’ என்னும் அரசியல்வாதி இங்கிருந்தார் என்று ரவிக்குமார் எழுதியிருக்கிறார். அச்சொல் மண்ணிலிருந்து எழுந்தவர்கள், மண்ணுக்குரியவர்கள் என்று பொருள் கொள்கிறது. அதன் வரலாற்றையும் அது இங்கு பயன்படுத்தப்பட்ட முறையையும் முறையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ‘தலித் இயக்கம்’ அச்சொல்லால் மட்டுமே புதுவரவு. தமிழகத்தில் தோன்றிய முதல் நவீன அரசியல் என்பது தாழ்த்தப்பட்டோர் உரிமைக்கான இயக்கமே. தமிழகத்தின்மீது பிரிட்டிஷாரின் ஆதிக்கம் உருவான தொடக்க காலத்திலேயே தலித் விடுதலைக்கான குரலும் எழுந்தது. அதற்கான காரணங்கள் பல. உதன்மையான காரணம், 1770 களில் பஞ்சத்தில் பல்லாயிரம் தலித்துகள் மடிந்ததும், பல்லாயிரம் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்ததும், அகதிகளாக பிற நாடுகளுக்குச் சென்றதும். இது நிலப்பிரபுத்துவ அமைப்பின் கட்டமைப்பிற்குள் அசைவிலாது சிக்கிக்கிடந்த தலித் மக்களிடையே ஓர் உடைவை உருவாக்கியது .புதிய சந்தர்ப்பங்களையும் புதிய சவால்களையும் நோக்கி அவர்கள் செல்ல நேர்ந்தது.
இரண்டாவதாக, சென்னை திருச்சி போன்ற பெருநகரங்களில் பிரிட்டிஷாரின் ராணுவம் மற்றும் ஆட்சியாளர்களின் ஏவலர்களாகவும் சமையற்காரர்களாகவும் தலித்துகள் பணியாற்றத்தொடங்கினர் .அது அவர்களுக்கு கல்வியையும் வணிக வாய்ப்பையும் அளித்தது . மூன்றாவதாக, இந்தியாவில் பணியாற்றிய பிரம்மஞான சங்கம் [தியாசபிகல் சொசைட்டி] போன்ற அமைப்புகள் இங்கு தலித் கல்வியை பரப்பத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்புகள் தலித் கல்விக்கும் தங்கள் பணியில் இடம்கொடுத்தன. ஆனால் பிரம்மஞான சங்கம் தலித் கல்வியை அன்றைய பிரிட்டிஷ் மாகாணம் முழுக்கவே முழுவீச்சில் தனி இயக்கமாகவே முன்னெடுத்தது.
பிரம்மஞான சங்கம் இங்கே ஒரு தலித் அரசியல் உருவாக தேவையான அடிப்படைக் கருத்தியல்களை உருவாக்கி அளித்தது . அவ்வரசியல் தோன்றுவதற்குரிய பொருளியல் அடிப்படை உட்பட அனைத்தையும் கொடுத்தது. குறிப்பாக இந்தியாவின் தாழ்த்தப்பட்டோர் அரசியலின் உருவாக்கத்தி பிரம்மஞான சங்கத்தின் தலைவரான ஹென்றி ஸ்டீல் ஆல்காட் நேரடியாகவே பங்காற்றி முன்னோடி பாத்திரத்தை வகித்தார். அயோத்திதாசரை ஆல்காட்டின் மாணவர், அவருடைய உருவாக்கம் என்றே சொல்லமுடியும். தாழ்த்தப்பட்டோருக்கும் பௌத்தத்திற்குமான தொடர்பை நிறுவியவரும் ஆல்காட்தான். பின்னாளில் நவயான பௌத்தம் போன்றவை ஆல்காட் உருவாக்கிய செயல்படும் பௌத்தம் என்ற இயக்கத்திலிருந்து உருவானதுதான்.
தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோர் இயக்கம் அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன், எம் .சி. ராஜா ஆகியோரால் அரைநூற்றாண்டுகாலம் இங்கே வளர்த்தெடுக்கப்பட்டது. தமிழக தலித் இயக்கத்தின் முன்னோடித்தலைவர்கள் அனைவருமே பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு வரலாற்றுக்கூறு. வெவ்வேறு களங்களில் அவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அயோத்திதாசரின் பார்வை மரபு சார்ந்தது, மாற்று மரபு ஒன்றை முன்வைப்பது. இந்திய, தமிழக வரலாற்றை தன் கோணத்தில் மறுகட்டமைப்பு செய்ய முனைவது. அவர் முதன்மையாக கோட்பாட்டாளர்.அன்றிருந்த காலனிக்கால அரசியலின் எல்லைக்குள் தாழ்த்தப்பட்டோர் நலன்களைப்பேணச் செயல்பட்டவர்கள் ரெட்டமலை சீனிவாசனும் ,எம்.சி.ராஜாவும். அவர்கள் களப்பணியாளர்கள்
இங்கு அவ்வாறு உருவான தலித்தியக்கம் தாழ்த்தப்பட்டோர் மறுமலர்ச்சி இயக்கம் பின்னர் திராவிட இயக்கத்தால் உள்ளிழுக்கப்பட்டு அதில் மறைக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் இயக்கத்தின் முன்னோடிகள் பேசிக்கொண்டிருந்த பல கோரிக்கைகளும் கொள்கைகளும் பேச்சளவில் திராவிட இயக்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவசன் ,எம்.சி.ராஜா போன்ற தலித் தலைவர்கள் முற்றாக வரலாற்றிலிருந்து அவர்களால் மறைக்கவும் பட்டார்கள். தலித்துக்கள் ஏற்கனவே காங்கிரசால் அளிக்கப்பட்ட 18 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அப்பால் எதையும் இவர்களிடமிருந்து அடையவில்லை. திராவிட இயக்கத்தின் குறிக்கோள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடும் அதிகாரமயமாக்கலும் மட்டுமே.
இதைப் புரிந்துகொள்வது சற்று சிக்கலானது. பரப்பியக்கத்தின் [populism] இயல்பு இது என்ற கோணத்திலேயே அணுக வேண்டும். அது தனக்கு முன்பிருக்கும் இயக்கங்களிலிருந்து கோஷங்களை மட்டுமே பெற்றுக்கொள்ளும், பெயர்களையும் அவ்வப்போது சொல்லும். அதை மிகைப்படுத்தி மேடைகளிலும் பரப்புரைகளிலும் கொண்டு சென்று மக்களை கவர்ந்து ஒருங்கிணைத்து அதிகாரத்தை நோக்கிச் செல்லும். அந்த கோரிக்கைகள் எதிலுமே அதற்கு ஆழ்ந்த பிடிப்பு இருக்காது. அக்கொள்கைகளில் முன்னோடிகள் எவரையுமே அது பெரும்பாலும் பொருட்படுத்தாது .அதிகாரத்தை எட்டுவது மட்டுமேஅதன் இலக்கு.
தமிழியக்கம் சைவ மறுமலர்ச்சி இயக்கம் ஆகியவற்றிலிருந்து கோஷங்களை பெற்றுக்கொண்டது போலவே தலித் இயக்கத்திலிருந்தும் திராவிட இயக்கம் கோஷங்களை பெற்றுக்கொண்டது. ஆனால் தலித் இயக்கத்தின் இன்றியமையாத தொடர்ச்சியாக அது அமைந்திருக்குமெனில் அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன். எம். சி.ராஜா போன்றவர்கள் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகாலம் தலித்துகளுக்கே தெரியாதவர்களாக வரலாற்றிலிருந்து முற்றாக மறைந்து சென்றிருக்க வாய்ப்பில்லை. அவர்களின் நூல்கள் அரைநூற்றாண்டுக்காலத்தில் எங்கும் மறுபதிப்பு உருவாகவில்லை. அவர்களின் பெயர்கள் எங்கும் உச்சரிக்கப்படவில்லை. மிக அரிதாக அயோத்திதாசரோ ரெட்டைமலை சீனிவாசனோ நினைவுகூரப்படுவது அவர்களின் நேரடி ஆதரவாளர்களால் நடத்தப்படும் சில கூட்டங்களுக்கு திராவிட இயக்கத்தலைவர்கள் அழைக்கப்படும்போது மட்டுமே .அவர்களின் இயல்பான எழுத்துக்கள் எங்குமே அவர்களால் மேற்கோள் சொல்லப்படவில்லை.
திராவிட இயக்கத்தின் உள்ளுறை என்பது பிற்படுத்தப்பட்டோர் அரசியல் .பிராமணர்களுக்கு எதிரான உயர்சாதி அரசியலிலிருந்து தோன்றி பிற்படுத்தப்பட்டோர் அரசியலை நோக்கி நகர்ந்தது அது .அதில் மெய்யாகவே தலித் அரசியல் இருக்கவில்லை என்பதுடன் கொள்கை அளவிலேயே அது தலித் அரசியலுக்கு எதிரானதும் கூட. திராவிட இயக்கங்கள் அரை நூற்றாண்டாக தமிழகத்தை ஆட்சி செய்த பின்னர்தான் அது குறித்த தெளிவுகள் தலித்துகளுக்குள் வந்தன. திராவிட இயக்கத்தில் தலித்துகளுக்கு உண்மையான இடமில்லை என்ற வரலாற்று இடைவெளியில் இருந்துதான் இங்கு தலித் அரசியல் தோன்றலாயிற்று .
தலித் அரசியல் தமிழகத்தில் நூறாண்டுகளுக்கு முன்பு உருவான தாழ்த்தப்பட்டோர் அரசியலின் இரண்டாவது காலகட்டம் என்று சொல்லலாம். கொள்கை அடிப்படையில் இங்குள்ள திராவிட அரசியலை தலித் அரசியல் எதிர்நிலையில்தான் வைத்து பார்க்க வேண்டும். அரசியல்களங்களில் ஒப்புநோக்க மேல் என்ற அடிப்படையில் திராவிட அரசியலியக்கங்களை தற்காலிகமாக தலித் இயக்கங்கள் நட்புசக்தியாகக் கருதக்கூடும் எனினும் அவற்றின் அடிப்படையான கொள்கைகளில் மையமான சில முரண்பாடுகள் உள்ளன .அந்த முரண்பாடுகள் பண்பாட்டு அடிப்படையில்லானவை. திராவிட இயக்கமோ தமிழ்த் தேசிய இயக்கங்களோ முன்வைக்கும் திராவிடப் பொன்னாடு அல்லது தமிழ்ப்பண்பாட்டுப் பொற்காலம் என்பது தலித்துகளுக்கு கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இயலாது ஒன்று. அது இங்குள்ள அதிக்க சாதிகளின் பொற்காலம் .ஆதிக்க கருத்துகளால் கட்டமைக்கப்பட்ட ஓரு கற்பனை.
தமிழகத் தலித் அறிவியக்கத்தின் நோக்கம் என்ன என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட சாதியினரையும் , பழங்குடியினரையும் ஒற்றை அடையாளத்திற்குள் தொகுப்பதே ஆகும். அவ்வாறு ஒரு முயற்சி அதற்கு முன்னர் நிகழ்ந்ததில்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழகத்தில் முன்னோடியான தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் அவற்றின் வெளி கட்டமைப்பில் தூலமாகத் தெரியவில்லையெனினும் உள்ளூர சாதிய உள்ளடக்கம் கொண்டிருந்தன. உதாரணமாக அயோத்திதாசர் அவருடைய எழுத்துகளில் பறையர் சாதியை முதன்மைச் சாதியாக முன்வைக்கிறார் . அவர்களின் தொல்வரலாற்றை மீட்டு எழுதுகிறார். பறையர்களை பிற தலித் சாதிகள், பழங்குடிகள் மற்றும் நாடோடிச் சாதிகளிடமிருந்து பிரித்துப்பார்க்கவேண்டும் என்றும், அவர்கள் பண்பாட்டில் பலபடிகள் மேம்பட்டவர்கள் என்றும் தனது குறிப்புக்ளில் சொல்கிறார்.
பறையர்கள் தங்களை சக்கிலியர்களுடனும் காட்டு நாயக்கர்களுடனும் எப்போதுமே அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் அல்ல .பண்பாட்டுரீதியாக நீண்ட பாரம்பரியமும் தனித்தன்மையும் மேம்பட்ட வாழ்க்கைச்சூழலும் கொண்டவர்கள். பறையர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் பள்ளர்கள் அல்லது தேவேந்திர குல வேளாளர்கள். அவர்கள் தமிழகத்தில் சாதிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக தங்களை சொல்லிக்கொள்ளுமிடத்தில் இருந்தார்கள் என்பதே ஒழிய அதற்கு முன்பும் பின்பும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சமூக நிலையோ வாழ்க்கைச்சூழலோ கொண்டவர்களாக இருக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. இன்று தலித் எனும் அடையாளத்தை ஓங்கிச்சொல்பவர்களாக பறையர்களும் அவ்வடையாளத்தை துறக்க முயல்பவர்களாக தேவேந்திர குலவேளாளர்களும் அவ்வடையாளம் குறித்த பிரக்ஞையற்றவர்களாக அருந்ததியர்களும் காட்டுநாயக்கர்களும் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த மூன்றுநிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை தலித் என்னும் ஒற்றை அடையாளத்திற்குள் தொகுத்து, மிகவும் பிற்பட்ட சாதியினரை அவர்களுடன் நட்புசக்தியாக ஆக்கி அதன் விளைவாக ஓர் அரசியலை உருவாக்கிக் கொள்வதுதான் ஆரம்பகட்ட தலித் இயக்கத்தின் நோக்கமாக இருந்தது. மகாராஷ்டிரத்திலும் கர்நாடகத்திலும் கூட அது அந்நோக்கத்துடனேயே எழுந்தது. கர்நாடகத்தை பொறுத்தவரை தலித் – பண்டாயா மொமண்ட் என்றே அது அழைக்கப்படுகிறது. ஆனால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்பு இப்போது எண்ணிப்பார்க்கையில் தலித் இயக்கம் எங்குமே அந்த இலக்கை நோக்கை செல்லவில்லை என்று காணமுடிகிறது.இன்றும் தேவேந்திரகுல வேளாளர் -பறையர் இணைப்பென்பது தமிழகத்தில் இன்றும் நினைத்துப்பார்ப்பதற்கு அரியதாகவே உள்ளது. அவர்கள் அருந்ததியர்களுடன் இணைவதென்பது சமீபகாலத்தில் எங்கும் நிகழ்வதாக இல்லை. தலித் சாதிகள் தங்கள் சாதி அடையாளங்களை விட்டு தலித் என்னும் பொது அடையாளத்திற்குள் இணைய வேண்டுமென்ற கனவு ஒரு தொலைதூர அரசியல் இலக்காகவே இன்று உள்ளது.
அந்தக்கனவு தமிழில் முன்வைக்கப்பட்ட தொடக்க காலத்தில்தான் ராஜ் கௌதமன் தமிழில் எழுத வந்தார். அவருடைய ஆரம்ப கால எழுத்துக்கள் அனைத்துமே அக்கனவின் வெவ்வேறு படிநிலைகளைக் கொண்டவை. கொள்கை அடிப்படையில் தலித்தியம் என்பதை தமிழ்ச் சூழலில் நின்று வரையறுத்துக் கொள்வதற்கான முயற்சி என அவற்றைச் சொல்லலாம். அல்லது தலித் என ஒரு பொது அடையாளம் தேடிப்போவதற்கான பண்பாட்டாய்வு அது. தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றை முழுமையாகவே ஆராய்ந்து அதன் நீண்ட பரிணாமத்தில் ஒடுக்கப்பட்டோர் எப்படி உருவானார்கள், அவர்களை அவ்வாறு வரையறுத்த கருத்தியல் எப்படி ஒருங்கமைந்தது, அது மொழியிலும் ஆசாரங்களிலும் எப்படி நிலைநிறுத்தப்பட்டது, எப்படி இன்றைய நவீனச் சூழலிலும் அது அவ்வண்ணமே நீடிக்கிறது என்பதை ராஜ் கௌதமன் ஆராய்ந்து வகுத்துரைக்கிறார்.