ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்
All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
-William Shakespere
கோபக்கார இளைஞனான புதுப்பட்டி சிலுவைராஜ் இப்போது தன் போக்கில் தனக்கான ஓர் அமைதியை உருவாக்கிக் கொண்டான். இளைஞனான சிலுவைராஜ் எந்திரத்தனமான சமூக இயங்கு விதிகளால் பாதிக்கப்பட்டுக் கடுமையான எதிர்வினைகளை ஆற்றிக் கொண்டிருந்தான். மனிதர்களுக்கிடையே சுயநலம் மட்டுமேயான நோக்கம் தன் சக மனிதனை நோக்கி வெவ்வேறு பேதங்களாக முன்வைக்கப்பட்டுக் கொண்டேயிருப்பது சிலுவைராஜைக் கொந்தளிக்கச் செய்தது. அக்கொந்தளிப்புகள் அவனை உள்ளூர அழித்து விடாமல் வாழ்க்கையை – வாழ்க்கையின் போக்கை – வாழ்க்கையின் இனிமையை – வாழ்க்கை என்னும் பிரம்மாண்டம் முன்னால் மனிதன் மிகச் சாதாரணமானவனாக ஆகும் தன்மையை – அவதானிக்கும் உள்ளூரப் புரிந்து கொள்ளும் ஒரு உற்சாகமான பார்வையாளன் சிலுவைக்குள் எப்போதும் இருக்கிறான். அந்தப் பார்வையாளனே சிலுவை தனக்கான மார்க்கத்தைக் கண்டடைய உதவுகிறான். அவனுடைய இளம் வயதில் மார்க்கசகாயமாகக் கதைகள் மூலம் அவன் கேட்ட உலகமும் கற்பனை மூலம் அவன் உருவாக்கிக்கொண்ட உலகமும் இருக்கிறது. சமூகத்தின் போலித்தனத்தால் அவன் சிதைந்து போகாமல் தன் இருப்பின் இனிமையை உணர அவையே அவனுக்கு உதவுகின்றன. வயதாகும் தோறும் சிலுவை விவேகத்தின் மூலமாகவும் தனது அறிதலின் மூலமாகவும் தனக்கான எழுத்துப் பணியின் மூலமாகவும் தனக்கேயான யாராலும் எவ்விதத்திலும் ஆக்கிரமிக்க முடியாத இடத்தை அடைகிறான் அல்லது உருவாக்கிக் கொள்கிறான். சிலுவையின் மொழியில் சொல்வதானால், ’’உட்கார்ந்து படித்து எழுதுகிற அந்தப் பத்துக்குப்பத்து அடி அறையை மட்டும் சிலுவை நன்றாக அறிந்து உணர்ந்து வைத்திருந்தான். அதை விட்டால் வீட்டின் முன் இருந்த தோட்டம். அவ்வளவுதான்.’’
சிலுவை வாசகனுக்கு மிக நெருக்கமானவனாக ஆவது அந்த உற்சாகத்தால்தான். அவனுக்கு எல்லா விஷயங்களைப் பற்றியும் திட்டவட்டமான அபிப்ராயங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அவனின் நிகழ்கணங்களில் குறுக்கிடுவதில்லை. நிகழ்கணங்களில் வாழும் சிலுவையினுள் உற்சாகமான பார்வையாளன் ஆர்வத்துடன் விழித்திருக்கிறான். அவன் சிலுவையுடன் அவ்வப்போது உரையாடுகிறானோ என ஐயுறும் படி சிலுவையின் தினசரி பாடுகள் இருக்கின்றன. சிலுவை இப்போது எந்த விதமான அலைக்கழிப்புக்கும் ஆளாவதில்லை. அகவயமானவையும். புறவயமானவையும். டிராஃபிக் அதிகமாக இருக்கும் கிழக்குக் கடற்கரை சாலையைக் கூட வேண்டாம் எனத் தவிர்த்து விடுகிறான். பெரும்பாலான மனிதர்கள் குறுகிய எல்லைக்குள் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள் என்பதைச் சிலுவை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் அதற்குள் அவன் நுழைந்து சலம்புவதில்லை. தன் எல்லையைச் சுமக்கும் மனிதர்களை அப்படியே விட்டு விட்டு சிலுவை பார்வையாளனாக அம்மனிதர்களின் உலகிலிருந்து மேலேறி எப்போதும் உற்சாகமாகப் பற்ந்து கொண்டிருக்கிறான். எப்போதும் அப்படிப் பறக்கும் சிலுவைராஜுக்கு லண்டனுக்குப் பறந்து செல்லும் சூழல் உருவாகிறது. அதைப் பற்றிச் சிலுவைக்குப் பெரிய உற்சாகம் இல்லை. ம்களும் மனைவியும் வலிய அழைக்கிறார்களே என்பதால் அரை மனதுடன் சம்மதிக்கிறான்.
டிராவல் ஏஜெண்ட்டின் செயல்பாடுகளைச் சிலுவை வேடிக்கை பார்க்கிறான். அவருடைய நடை, உடை, பாவனைகள் சிலுவைக்குச் சுவாரசியமாயிருக்கின்றன. சில முறை அவரைப் போலப் பேசிப் பார்க்கிறான். லண்டன் சென்றதும் ஸ்கின் அலர்ஜி வருகிறது. அதை கைனகாலஜிஸ்ட் ஆன மகளிடம் காட்டி என்ன என்று விசாரிக்கும் போது ‘’அவள் அவன் உள்ளங்கைகளை அப்படி இப்படிப் பார்த்து விட்டு ஸ்கேபிஸ் என்றாள்.’’ சிலுவைக்குப் புரியவில்லை. தமிழில் சொல்லுமாறு கேட்கிறான். ‘’சிரங்கு என்று சிரித்தாள்’’. சின்ன வயதில் சிரங்கு வந்த அனுபவம் இருப்பதால் மகளிடம் நீ படித்தது மகப்பேறு மருத்துவம் என்பதால் இதைப் பற்றி உனக்குத் தெரியவில்லை எனச் சிலுவை சொல்கிறான். அதைக் கேட்ட மகள் ‘’ஸ்டுபிட்’’ என்கிறாள். ஸ்டுபிடிடியால் ஆன உலகம் தன்னை ஸ்டுபிட் என்பதன் அபத்தத்தை எண்ணி உற்சாகம் கொள்கிறான் சிலுவை.
சிலுவை மனிதர்களை வேடிக்கை பார்ப்பதன் மூலமே புரிந்து கொள்ளவும் தொடங்கி விட்டான். சின்னப் பெரிய சமாச்சாரங்கள் எதிலும் சிலுவை மூக்கை நுழைப்பது இல்லை. சிலுவையின் மனைவி சிலுவையைக் கண்காணிக்கும் போலிஸாக மாறி சிலுவை புகைப்பதற்குத் தடை ஏற்படுத்துகிறார். சிலுவை சிகரெட்டுக்கு அடிக்ட் ஆகி விட்டதாகப் பபுள் கம்மை மென்று கொண்டு கூறுகிறார். சிலுவையின் மருமகன் அனுமார் பக்தர். வேலை தேடிக் கொண்டிருக்கும் அவரது நண்பரான ஓர் இந்திய டாக்டர் மருமகனின் பர்ஸை பதம் பார்க்கிறான். சிலுவை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதெல்லாம் கொஞ்ச நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்பது சிலுவைக்குத் தெரிகிறது. லண்டனில் ஏன் காகங்கள் இல்லாமல் இருக்கிறது என்ற புதிரை சிலுவைராஜால் விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை.
சிலுவை மார்க்ஸியம் கற்றவன் ஆனதால் லண்டனின் காணும் எல்லாக் காட்சிகளுக்கும் பின்புலமாய் இருக்கும் பொருளாதாரச் சமூகவியல் காரணிகள் சிலுவைக்கு மிகவும் பரிச்சயமானவை. ஆனாலும் வேடிக்கை பார்க்கும் சிலுவைக்கு அலுப்பு ஏற்படவேயில்லை. பிரிட்டன் தனது தேசம் முன்னெடுத்த போர்களையும் அப்போர்களில் நாட்டுக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்த தளபதிகளையும் தம் மக்களின் நினைவில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டேயிருப்பதை அவதானிக்கிறான். லண்டன் மியூஸியத்தில் குடும்பத்துடன் சுற்றுகிறான். அப்போது வழக்கம் போலப் பிரிந்து தனியாகி மீண்டும் மியூஸியத்தின் இந்தியப் பகுதியில் கண்டடையப்படுகிறான். மகளும் மனைவியும் ‘’கழுதை கெட்டால் குட்டிச்சுவர்’’ எனச் சொல்லி சிரிக்கின்றனர். சிலுவையும் அது சரிதான் என அவர்கள் சிரிப்பில் இணைந்து கொள்கிறான்.
லண்டனின் வரலாறு, பொருளாதாரம், சமூகவியலைப் பற்றி எவ்வளவு தெரிந்தவனாக இருந்தாலும் லண்டன் மனித உழைப்பால் உருவானது என்பதில் சிலுவைக்குப் பெரிய மகிழ்ச்சியும் மகத்தான பெருமிதமும் இருக்கிறது. சிலுவையின் ஆசிரியர்களில் ஒருவரான மார்க்ஸ் முதலாளித்ததுவத்தை விமர்சித்தவராயினும் உலக வரலாற்றில் அதன் பங்கை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர் ஆயிற்றே!
பயணத்துக்குள் பயணம் எனச் சிலுவை ‘’திரீ கேப்ஸ்’’க்கு மனைவியுடன் பயணம் செல்கிறான். பயண வழிகாட்டி ஸோனல், சக பயணிகள் நாராயணசாமி குடும்பத்தார் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். மனைவியின் கெடுபிடிகளைத் தாண்டி அபூர்வமாகக் கிடைக்கும் சிகரெட் பாக்கெட்களும் ரம் பாட்டில்களும் சிலுவைக்கு மகிழ்ச்சி தருகின்றன.
புதுப்பட்டி சிலுவை இப்போது வாழ்க்கையை அறிந்தவன். மனிதர்களின் எல்லைகளும் அற்பத்தனங்களும் அவனால் முற்றிலும் அறியப்பட்டுள்ளது. அவன் மனிதர்களை மன்னிக்கும் இடத்தில் மானசீகமாக இருக்கிறான். லௌகிக உலகிலிருந்து மேலெழும் கற்பனையின் வரம் சிலுவையிடம் இருக்கிறது. அது அவன் பாட்டி கதைகள் மூலம் அவனுக்குத் தந்தது. கல்லூரி நாட்களில் அவன் சிலையாகக் கண்ட தச்சனின் மகனிடமிருந்து மனிதர்களை மன்னிக்கும் தன்மையைப் பெற்றுக் கொண்டிருக்கிறான். இது சிலுவைக்குத் தெரியுமா என்பது தெரியாது. சிலுவை இதனை ஒத்துக் கொள்வானா என்பதும் தெரியாது. ஆனால் சிலுவையின் சொற்கள் வழியே நம்மால் உணர முடிகிறது.