ராஜ் கௌதமனின் அயோத்திதாசர் ஆய்வுகள்- சுனீல் கிருஷ்ணன்

_MG_7189

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

சிங்காரவேலர்

காலச்சுவடு வெளியிட்ட ராஜ் கவுதமனின் க. அயோத்திதாசர் ஆய்வுகள் எனும் நூல் ஒன்பது அத்தியாயங்கள் கொண்டது. 2004 ஆம் ஆண்டு, அதாவது ஞான அலாய்சியஸ் அயோத்திதாசர் தொகுதிகளை மீள் பிரசுரம் செய்த சில ஆண்டுகளில் இந்நூல் வெளிவந்துள்ளது. டி. தர்மராஜின் ‘நான் பூர்வ பவுத்தன்’ ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘அயோத்திதாசர் வாழும் பவுத்தம்’, பிரேமின் ‘அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப் போராட்டம்’  மற்றும் ராஜ் கவுதமனின் இந்நூல், ஜெயமோகனின் ‘அயோத்திதாசர் எனும் முன்னோடி’ ஆகிய படைப்புகள் வழியாக 2000 க்கு பின்பான காலங்களில் தொடர்ச்சியாக அயோத்திதாசர் தமிழ் இலக்கிய சூழலில் விவாதிக்கப் படுகிறார். ஏறத்தாழ அவர் மறைந்து நூறாண்டுகளுக்கு பின்னர் அவருடைய சிந்தனை மீள் கண்டுபிடிப்பு செய்யப்பட்டது.

இந்நூலிற்கு ராஜ் கவுதமன் எழுதிய முன்னுரையில் மார்க்சிய நோக்கில் ஒடுக்கப்பட்டோர்க்குரிய அம்பலப்படுத்துதல் (exposition) அழித்தொழித்தல் (annihilation) அபகரித்தல் (appropriation) ஆகிய மூன்று போர்முறைகளை முழுமையாக தாசரிடம் காணலாம்’ என எழுதுகிறார். அயோத்திதாசரின் சிந்தனைகளை தொகுக்கும் புள்ளியாக இவற்றை சொல்லலாம்.

முதல்  அத்தியாயம் இந்திய- தமிழக பவுத்தத்தின் சுருக்கமான வரலாறைச் சொல்கிறது. ஹீனயானம் மகாயானம் வேறுபாடுகள் பற்றிச் சொல்லும்போது ஹீனயானம் சங்கத்தை, அறத்தை, தத்துவம் மற்றும் பகுத்தறிவை மையமாகக் கொண்டது, மகாயானம் புத்தரை, பக்தியை, மறைஞானத்தை மையமாகக் கொண்டது என்கிறார். மகாயானம் இந்துமதத்தை தாக்குப்பிடிக்க, குறிப்பாக வைணவத்தின் பிரபத்தி எனும் சரணாகதி கொள்கையைத் தாக்குபிடிக்க தன்னை தகவமைத்துக்கொண்டது என்கிறார். பக்தியும், யோகநெறியும் தென்னிந்தியாவில் தான் மகாயானத்துடன் இணைந்தது எனச் சோ.ந. கந்தசாமியை மேற்கோள் காட்டுகிறார். மேலும் அரசு- வணிக- வர்த்தகம் சார்ந்து கடற்கரையோரமும் உள்நாட்டிலும் வேர்பிடித்து வளர்ந்த பவுத்தம் வேளாண்குடி மக்களை பெரிதும் ஆட்கொள்ளவில்லை எனும் ஒரு அவதானிப்பையும் வைக்கிறார். தொடக்கக்கால தமிழ் பவுத்தர்கள் நெய்தல் நிலத்து பரதவ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் சுட்டுகிறார். ‘பவுத்த சாத்தனார் கேட்டுக்கொண்டதன் பேரில் ஜைன இளங்கோவடிகள் ‘சிலப்பதிகாரம்’ எழுதியது நம் நினைவில் ஊடாடுவதைத் தவிர்க்க முடியாது. பவுத்த – ஜைனரிடையே இப்படி நூல் எழுதும் வழக்கம் இருந்திருக்குமோ?’ என்றொரு கேள்வியை எழுப்புகிறார். அயோத்திதாசர் பவுத்தர்களையும் ஜைனர்களையும் பிரித்து நோக்குவதே இல்லை. சிற்சில இடங்களில் பவுத்தத்தின் ஒரு பிரிவு என்று மட்டும் ஒப்புக்கொண்டுள்ளார். திசையாடை சமணத்தை அவர் கடுமையாக நிராகரிக்கவும் செய்கிறார். மகாயான பவுத்த கதைகளில் இடம் பெற்றுள்ள பல தேவதைகள், பெண் தெய்வங்கள் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளன என்கிறார் . ‘மணிமேகலா’ கடல் வர்த்தகர்களை காக்கும் கடல் தெய்வம், தீவுகளுக்கு காவலிருந்தது ‘தீவுத்திலகை’ எனும் தெய்வம், மதுரையைக் காத்தது ‘மதுராபுரி’, ‘சம்பாபதி’ தரைக்காவலுக்கு உரியது, கலைமகளை ஒத்த சிந்தாதேவி, கற்பின் தெய்வமான கண்ணகி. மதுரையில் ஆயிரக்கணக்கான பவுத்தர்கள் கழுவேற்றப் பட்டார்கள் என்றொரு கருத்தையும் சொல்கிறார். அது குறித்து தீர்மானமான எந்த சான்றுகளும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சென்ற இரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பவுத்த மறுமலர்ச்சியைப் பற்றிய அத்தியாயத்தில் இந்து சீர்திருத்தவாதிகள் பவுத்தத்தை வைதீகத்திலிருந்து கிளைத்த ஒரு கிளை என்றளவில் மட்டுமே கருதியதை விமர்சிக்கிறார். ஆசாரசீலர்களால் வசைபாடப்பட்டாலும் கூட உ.வே.சாவும் கூட இத்தகைய பார்வையையே கொண்டிருந்தார் என அவர் ‘மணிமேகலையை’ பதிப்பித்தபோது அதற்கெழுதிய முன்னுரையைச் சான்றாக்குகிறார். ‘வழிவழியே வந்த இந்து மதத்தின் அகத்திலிருந்தே பவுத்தம் வளர்ந்து பெருகியது. பவுத்தத்தின் மேலான விஷயம் எல்லாம் மூலமதமான இந்துமதத்தின் சிறப்பையே விளக்கும். கெளதமரின் பயிற்சியெல்லாம் பிராமண மதத்திற்குள்ளேதான்’ என ரைஸ் டேவிட்சின் மேற்கோளை உ.வே. சா தமிழ் படுத்தியுள்ளார். 1880 வரை ஆங்கில வாடையே அறியாது திருவாடுதுறை ஆதீனத்தின் பழஞ்சுவடிப் புழக்கத்தில் வந்த உ.வே.சா 1898 இல் ரைஸ் டேவிட்சை மொழிபெயர்க்கும் அளவுக்கு ஆங்கிலப்புலமை பெற்றது வியக்கத்தக்கதே பாராட்டுக்குரியதே. ரைஸ் டேவிட்சைக் கொண்டு புத்தரை இந்துவாக்கிய உ.வே.சா, பிராமணருக்கும், சாதியத்திற்கும், கர்மகாண்டத்திற்கும் புத்தர் முதலிடம் தராததை கவனப்படுத்தியுள்ளார்.’ என்று விமர்சனபூர்வமான கருத்தை பதிவு செய்கிறார். எனினும் இக்கருத்தும் விவாதத்திற்கு உரியதே. இந்து மதத்தின் நீட்சியாக கருதும் ஆய்வாளர்களும் அதை மறுக்கும் ஆய்வாளர்களும் உள்ளார்கள். தீர்மானமான உண்மை என்பதைக் காட்டிலும் அவரவர் அரசியல் தரப்பு சார்ந்தே இதில் ஒரு முடிவை தேர்கிறார்கள்.  இதே போன்று மறைமலையடிகள் தமிழ் சமயம் என பவுத்தத்தை முன்னெடுத்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.

நவயானம் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை அளிக்கிறார். சமூக மாற்றத்திற்காக பவுத்தம் (engaged buddhism) என்பதே அதன் சாரம். திச் நாத் ஹன் ‘ஈடுபடும் பவுத்தம்’ எனும் தொடரை அறிமுகப்படுத்தினார். சமய நோக்கு பின்னுக்குச் சென்று சமூக விடுதலையை முதன்மை இலக்காகக் கொண்டு பவுத்த கோட்பாடுகள் மறுவிளக்கம் செய்யப்பட்டன. அம்பேத்கார் முன்னிறுத்திய பவுத்தம் இத்தகைய இயல்புகளை உடையதே.  இந்த அத்தியாயத்தில் சிங்காரவேலர், லட்சுமி நரசு மற்றும் அயோத்திதாசர் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆல்காட்டுடன் சேர்ந்து பவுத்தத்தில் இயங்கியதும் பின்னர் அவர்களின் தனித்து நோக்குகள் காரணமாக பிரிந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.

அடுத்த அத்தியாயமான ‘அயோத்திதாசரின் காலம்’ அன்றைய சுதேசி எழுச்சி போக்குகள், மற்றும் அறிவியக்கத்தின் பின்புலத்தைச் சொல்கிறது. சுதேசி இயக்கத்தை பச்சையான இந்து மீட்பியக்கம் என்றே காண்கிறார். அதற்கேற்றாற்போல் சுதேசி விழிப்பை பேசிய பத்திரிக்கைகள் பெரும்பாலும் பிராமணர்களால் நடத்தப்பட்ட்டதையும் அவை அவ்வப்போது பிராமண மேட்டிமையை பதிவு செய்ததையும் ஆவணப்படுத்துகிறார். குறிப்பாக சுதேசமித்திரன் பிராமணர்களின் நலன் பொருட்டே இயங்கியது என்கிறார் ராஜ் கவுதமன். பாரதியாரின் கருத்துக்களின் மீதும் விமர்சனப்பூர்வமாக எதிர்வினையாற்றினார். ‘ஈனப்பறையர்’ எனும் பயன்பாட்டை எதிர்த்து எழுதியுள்ளார் என ஸ்டாலின் ராஜாங்கம் கூறுகிறார். ‘பாரதி மகாகவியாக இருக்கலாம், புதுமைவிரும்பியாகக்கூட இருக்கலாம், அவர் அவர்காலத்து சனாதனிகளில் இருந்து முற்போக்கானவராக தன்னை நினைத்திருக்கக்கூடும். ஆனால் தாசரோடு ஒப்பிடுகையில் பாரதி மிகவும் பிற்போக்கானவரே.’ என ராஜ் கவுதமனும் எழுதுகிறார்.  அவருடைய முனைவர் ஆய்வுக்கு உரியவரான அ. மாதவையாவின் கருத்துக்கள் துணிவுடன் பிராமணியத்தை கேள்விக்குள்ளாக்கியது என்பதையும் ராஜ் கவுதமன் அடையாளப் படுத்துகிறார். இந்து மத சீர்திருத்த முயற்சிகள் என்பவை மேற்கத்திய சமத்துவ மதிப்பீடுகள் மற்றும் கிறிஸ்தவத்தின் தாக்குதலில் இருந்து இந்து சமயத்தையும் சாதிமுறையையும் காக்கும் முயற்சிகளே என தாசர் கருதினார். காங்கிரஸ் கட்சியே இந்து காங்கிரசாக நடந்து கொண்டது என்றார். ஆல்காட்டுக்கு பின் ஆனி பெசன்டின் வருகை நிகழ்கிறது. அவருடைய காலகட்டத்தில் தியாசபிகல் சொசைடி பிராமணியத்தை அனுமதித்து என்கிறார். ஆல்காட் மரணித்தபோது ஆனிபெசன்ட் அம்மையாரின் அழைப்பை ஏற்று அயோத்திதாசர் அவருக்கு பவுத்த முறைப்படி இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார் என்பது ஒரு சுவாரசியமான புதிய தகவல். அவர்கள் இவருடைய உறவு எத்தகையதாக இருந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.  ஆல்காட்டின் வாழ்வை எழுத்தில் விரிவாக ஆவணப்படுத்த வேண்டும். தர்மபாலா துவங்கிய மகாபோதி சங்கம் சாதிய நோக்கை கைவிடவில்லை என்பதால் அதைவிட்டு அயோத்திதாசர் வெளியேறுகிறார்.

அயோத்திதாசரின் முக்கியமான பங்களிப்பு என்பது அம்பேத்கர் நவாயான பவுத்தத்தை முன்னெடுப்பதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே அதை பிராமணர்களால் வீழ்த்தப்பட்ட பறையர்கள் எனும் சாதி பேதமற்ற திராவிடர்களின் பூர்வமதமாக கட்டமைக்க முயன்றார் என்பதே. 1881 மக்கள் கணக்கெடுப்பில் பறையர்களை இந்துக்களாக பதியக்கூடாது என வலியுறுத்தினார். அதன் பின் அவர்களை ஆதி தமிழர் என பதியச் சொன்னார். ஸ்டாலின் ராஜாங்கம் கால்ட்வெல் மற்றும் அயோத்திதாசர் பற்றி எழுதிய கட்டுரையில் அவர்களுக்கு இருக்கும் ஒற்றுமையைப் பற்றி எழுதுகிறார். இன்று வழங்கப்படும் ஆதி திராவிடர் எனும் சொல்லுக்கான வேர் அங்கிருந்தே துவங்குகிறது. ஸ்டாலின் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார். கால்ட்வெல் பறையர் பற்றி எழுதிய பகுதிகளை நீக்கியே அன்றைய சென்னை பல்கலைகழகம் பதிப்பித்தது. முழுமையான பதிப்பு இப்போது 2008 ஆம் ஆண்டுதான் வெளிவந்துள்ளது. திராவிட அரசியலின் மிக முக்கியமான நூலாக கருதப்படும் நூல் கால்ட்வெல் எழுதியது அதில் அவர் பறையர் பற்றி எழுதியவை நீக்கப்பட்டதற்கு பெரிதாக எந்த காரணமும் வழங்கப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒரு கோணம் தான்.

அயோத்திதாசரிடம் திகழ்ந்த பகடி உணர்வை ராஜ் கவுதமன் ஆங்காங்கு பதிவு செய்கிறார். உதாரணமாக வெங்கைய மகாத்மா எனும் வேதாந்தி ஒருவர் மெல்போர்னில் தனது டைபிஸ்டை கட்டிப்பிடித்து முத்தமிட்ட செய்தியைப் பற்றி அயோத்திதாசர் எழுதியது வேடிக்கையானது. “பரமாத்துமா, சீவாத்துமாவை வலுக்கட்டாயமாக முத்தமிடுவது இந்திய அத்வைத வேதாந்தத்துக்கு உடன்பாடாகலாம்; ஐரோப்பாவில் இது சட்டப்படி குற்றம்”. மற்றொரு அத்தியாயத்தில் “ஜலக்கிரிடினன்- கிருட்டிணன்- கிருட்டன்- கிருஷ்ணன் என மருவி வழங்கியது போல், விட்டோ விட்டோ போவான் என்று கூறியதே நாளடைவில் விட்டுணு, விஷ்ணு என வழங்களாயிற்று என்பார் தாசர். தாசருக்கு மொழி ஆராய்ச்சியோடு கூட நகைச்சுவை உணர்ச்சியும் மிகுதி என்பது தெரிகிறது.” என எழுதுகிறார்.

ராஜ் கவுதமன் அயோத்திதாசரின் பிராமண விமர்சனங்களை சொல்வதோடு நில்லாமல் அக்காலக்கட்ட்து கிறிஸ்தவத்தில் நிலவிய சாதிபாகுபாடையும் விமர்சிக்கிறார். ‘சிலுவைராஜ் சரித்திரம்’ நாவலில் தமிழ் ட்யுட்டராக வேலைக்கு சேரும் சிலுவையை அவருடைய ஆசிரியர் அனைவரிடமும் தானொரு ஆர்.சித்தெரு பையனுக்கு பணி வாங்கி கொடுத்ததாக சொல்லிக்கொள்வார். அவருடைய கல்லூரியில் நிலவிய சாதி பாகுபாட்டைப் பற்றியும் விமர்சன ரீதியாக அந்நாவல் பேசியிருக்கிறது. இந்நூலிலும் கிறிஸ்தவ பறையர்கள் ஒதுக்கப்பட்டதும் அவர்கள் இரட்சணிய சேனை எனும் அமைப்பில் இணைந்து வளம் பெற்றதைச் சொல்கிறார். ஆசார இந்துக்கள் பலரும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறி அங்கும் தலித்துகள் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள். இதற்கு மிஷனரிகளும் ஆதரவாக இருந்தார்கள் என்கிறார். ப்ரோடஸ்டன்ட் பிரிவுக்குள் சீகன் பால்குவும், கத்தோலிகத்தில் ராபர்டி நொபிலி மற்றும் வீரமாமுனிவரும் தான் சாதிகள் நுழைய காரணம் எனக் குற்றம் சாட்டுகிறார். எனினும் கிறிஸ்தவ மிஷனரிகள் ஏழைப் பறையர் மீது பரிவுடன் நடந்துகொண்டார்கள் என்பதையும் பதிவு செய்கிறார்.

ராஜ் கவுதமன் தாசரிடம் இருந்து விலகும், விமர்சிக்கும் புள்ளிகளையும் பதிவு செய்வது இந்நூலை தனித்துவமாக்குகிறது. அயோத்திதாசர் பஞ்சத்திற்கான காரணம் ஆங்கிலேய அரசு அல்ல என்றே நம்பினார். பேராசை காரணமாக பணப் பயிர்கள் விளைவிப்பதே பஞ்சத்திற்கு காரணம் என்றார். ஆனால் அதை ஊக்குவித்ததே ஆங்கிலேய அரசு என்பதை அவர் மறந்துவிட்டார் என்பதை ராஜ் கவுதமன் அடையாளப் படுத்துகிறார். அயோத்திதாசர் பறையர், பள்ளர் போன்ற சாதிகளை தாழ்த்தப்பட்ட சாதி என்றும் குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாங்களாகவே தாழ்ந்த சாதிகள் எனும் பாகுபாட்டை செய்தார் என்பதையும் ராஜ் கவுதமன் பதிவுசெய்கிறார். முன்னவர்கள் மேம்பட்ட நிலையில் இருந்து வேஷ பிராமனர்களின் தலையீட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதே அவருடைய கருத்து. இன்றைய தலித் அரசியல் போக்கைக் கொண்டு அன்றைய தாசரின் நிலைப்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிறார் ராஜ் கவுதமன். அயோத்திதாசரின் இந்நிலைபாட்டிற்கு ஸ்டாலின் ராஜாங்கத்தின் நூலில் சற்றே விரிந்த கோணத்தில் பதிலிருக்கிறது. ‘தலித்’ எனும் ஒற்றை அடையாளத்தில் பல்வேறு இனக்குழுக்களை அடைப்பது ஒரு நவீன கால அரசியல் செயல்பாடு என்ற அளவில் சரி. எனினும் பண்பாட்டு அளவில் அதில் பல சிக்கல்கள் உண்டு. நவீனத்துவத்திற்கு முன்பான அறிதல் முறை கொண்ட அயோத்திதாசரின் புரிதல் வேறு மாதிரியாக இருந்தது என்கிறார். சமணத்தை தனி மதமாக அயோத்திதாசர் ஏற்கவில்லை. சங்க இலக்கியத்தின் புறப்பாட்டில் தொல் குடிகளில் ஒன்றாக பறையரின் பெயரும் இடம்பெற்றதை அவர் ஏற்கவில்லை. சங்க இலக்கியம் குறித்து அவர் அறிந்திருக்கவில்லை என்கிறார் ராஜ் கவுதமன். ஸ்டாலின் இதை வேறு கோணத்தில் அணுகுகிறார். பறையர் எனும் சொல்லின் தொன்மையை ஒப்புக்கொள்வதாக ஆகிவிடும். அது அவருடைய கோட்பாட்டுக்கு முரணாக இருக்கும் என்பதாலேயே ஏற்கவில்லை என்கிறார்.

அயோத்திதாசர் மீள் கண்டுபிடிப்பு செய்யப்பட்டு அவருடைய மேதமை அங்கீகரிக்கப்பட்ட காலத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 1990 களில் தலித் இயக்கங்களின் எழுச்சி நிகழ்கிறது. ஏறத்தாழ அதே காலகட்டத்தில் நவீனத்துவ சிந்தனைகள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து பின் நவீனத்துவ சிந்தனைகள் உலக அரங்கையும், இந்தியாவையும், தமிழகத்தையும் மையம் கொள்ளத் துவங்கின. நவ வரலாற்றுவாதம் மிக முக்கியமான பேசு பொருளானது. வரலாற்றை கதையாடலாக நோக்கும் சிந்தனைத் தரப்புகள் வலுப்பெற்றன. அயோத்திதாசரின் சிந்தனைகளை குறிப்பாக அவருடைய ஆதி வேதம், இந்திரர் தேசத்து சரித்திரம் போன்ற முயற்சிகளை இந்த சட்டகங்கள் கொண்டே விளக்கிக்கொள்ள முடியும். இவற்றை அயோத்திதாசர் அவர் காலத்திற்கு அப்பால் தொட்டறிந்தார் என்பதே அவரை அசல் சிந்தனையாளராக  ஆக்குகிறது. கதைகளை எதிர்கொள்ள கதைகளே தேவை  அயோத்திதாசர் இயங்கிய காலகட்டத்தை கவனத்தில் கொண்டோம் எனில் சுதேசிய சிந்தனைகள் ஒருங்கு திரண்ட காலகட்டம். மத சீர்திருத்தங்கள் நிகழ்ந்த காலகட்டம். ஆங்கிலேயர்கள் ‘வெள்ளையனின் சுமை’ என்று பேசிக்கொண்டிருக்கும்போது மாக்ஸ் முல்லர் போன்ற இந்தியவியலாளர்கள் தொன்மையான இந்தியா எனும் கருத்தாக்கத்தை கண்டடைகிறார்கள். பழைய இலக்கியங்கள் மீட்கப் படுகின்றன. தயானந்த சரஸ்வதி ‘வேதங்களுக்கு திரும்புவோம்’ என்றார். தொன்மையான தூய்மையான, பாகுபாடற்ற சமத்துவம் நிறைந்த, மெய்ஞானத்திலும் அறிவியலிலும் கோலோச்சிய  கடந்த கால பொற்காலம் ஒன்று உருவகப்படுத்தப்பட்டது. பிறகு அது அந்நியர்களின் வருகையால் சிதைக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டது. தற்போது செயல்பாடுகளின் வழி கடந்தகால பெருமையை மீட்போம் என்பதே அறைகூவல். அயோத்திதாசரின் சிந்தனைகளும் இத்தகைய கூறுகளை கொண்டதாகவே உள்ளது. தனித்தமிழ் தேசியம் சார்ந்த விவாதங்கள் வலுப்பெற்றபோது சைவ சமையம் இந்து மதத்திலிருந்து தனித்த ஒன்றாக, சமத்துவ பண்பாடு கொண்டதாக, தமிழர் மதமாக முன்வைக்கப்பட்டது. அண்மைய காலத்தில் தமிழர்களின் மதமாக ஆசீவகத்தை இதே காரணங்கள் பொருட்டு கட்டியெழுப்ப முனைகிறார்கள். அதிகாரத்தை கைகொள்ள உருவாக்கப்படும் கதையாடல்கள் ஏற்கனவே வேர்பிடித்திருக்கும் வரலாற்றை கேள்விக்குள்ளாக்குகிறது. நவீன கால இந்துத்துவர்கள் ராமல்லா, ராமஸ்தான், கலிபோர்னியா என சொல்லாராய்ச்சி வழி உலக நாகரீகத்தின் இந்து வேர்களை நிறுவ முயல்கிறார்கள். ம.சோ. விக்டர் போன்றோர் இன்று தனித்தமிழ் பண்பாட்டை சொல்லாராய்ச்சி வழியாக உலகளாவியதாக நிறுவ முயல்கிறார்கள். ஒற்றை புறவயமான உண்மை என்பது ஒரு கற்பிதம் எனும் பின் நவீன சிந்தனையை ஏற்று பல தளங்களில் தத்தமது தொன்மங்களை உருவாக்கி உலவவிடுகிறார்கள். அவை ஒன்றொடொன்று சமரிட்டுக் கொள்கின்றன. இதில் உண்மை பொய் போன்றவை எத்தொன்மம் பரவலாக மக்கள் ஏற்பைப் பெற்று, வலிமை பெற்று அதிகாரத்தை அடைகிறது என்பதைப் பொருத்ததே. யுவால் நோவா ஹராரி மேலும் ஒரு படி நகர்ந்து மனிதநேயம், தாராளவாதம், முதலீயம், பொதுவுடைமைவாதம் போன்றவை கூட நவீன தொன்மங்களால் கட்டப்பட்ட நவீன மதங்கள் என்றே குறிப்பிடுகிறார்.

பிரதி வழி நிரூபணம் என்பதும் கூட நவீனதத்துவத்தின் வெளிப்பாடே. வழக்காறுகளை அவை முக்கியமான சான்றாக கொள்வதில்லை. அயோத்திதாசர் மக்களிடையே புழங்கிய ‘பாப்பானுக்கு மூப்பான் பறையன். கேள்பார் இல்லாமற் கீழ்ச்சாதி ஆனான்’ எனும் சொல்வழக்கைக்கொண்டு பறையர்கள் பார்ப்பனர்களுக்கு மூத்தோர் எனும் முடிவுக்கு வருகிறார். பவுத்தமயமாக இருந்த தேசத்தில் மெய்யான அற்ஹத்கள்/ பிராமணர்கள் பவுத்தர்களாகவே இருந்தார்கள். அப்போது பாரசீகத்திலிருந்து வந்த ஒரு குடி பிராமணரைப் போல் தங்களை புனைந்து கொண்டு ஏமாற்றி பறையர்களை கீழிறக்கியது. இத்தகையவர்களை வேஷ பிராமணர்கள் என்றே அழைக்கிறார் அயோத்திதாசர். இந்திரர் தேசமேன்பதே இந்திய தேசம். இந்திரர் என்பது புத்தரின் நாமங்களில் ஒன்று. பறையர்கள் மத்தியில் புழங்கும் மற்றுமொரு சடங்கைப் பற்றி அயோத்திதாசர் அறிகிறார். பறையர்கள் வாழும் பகுதிக்கு பிராமணர்கள் நுழைந்தால் சாணச் சட்டி உடைத்து அவர்களை அடித்து துரத்தினார்கள். பிராமணீயம் பிறப்படிப்படையில் எல்லாவற்றையும் எடைப்போட்டது. தனது எதிர் தரப்பை பிறப்படிப்படையில் நிராகரித்தது அல்லது அவர்களை அங்கீகரித்து உள்வாங்கிக்கொண்டது. வள்ளுவர் பொருட்டு நிகழ்ந்த அடையாள திரிபுகளை சுட்டிக்காட்டுகிறார் ராஜ் கவுதமன். அயோத்திதாசர் சாதியை பிறப்படிப்படையில் புரிந்துகொள்ளும் வழமையைத் தவிர்த்து பண்புகளின் அடிப்படையில் வரையறை செய்ததும், பவுத்த தர்மத்தை பறையர் முதலான இன்றைய தலித்துகளின் மதமாக ஆக்கியதையும்   அவருடைய முக்கியமான சாதனை என்கிறார் ராஜ் கவுதமன்.

வரலாற்று ஆய்வுகள் வழி இந்துமதம் உட் செரித்துக்கொண்ட தெய்வங்கள், கோவில்கள் பற்றி தெரியவருகிறது. பண்பாட்டு ரீதியாக பல பண்டிகைகளையும் வேறு புராணங்கள் வழி தனதாக்கிக்கொள்கிறது. படைப்பூக்கமிக்க மாற்று புராணங்கள் வழியாக அயோத்திதாசர் எல்லாவற்றையும் தலைகீழாக்குகிறார். அண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தின் கதை என்பது அண்ணாந்து மலையில் (உயரமாக இருப்பதால்) முதன்முறையாக ஆமணக்கு எண்ணெய்யை கண்டுபிடித்ததன் நினைவாக கொண்டாடப்படுவது என்கிறார். சங்கரரை சங்க ஹரர் எனப் பிரித்து அச்சொல் புத்தரை குறிப்பது என்கிறார். புத்தரின் சாம்பலை மஹாபூதி எனப் பூசிக்கொண்டார்கள் அக்காலத்திய பவுத்தர்கள். அதை பின்பற்றி விபூதி என வேஷ பிராமணர்கள் பூசிக்கொண்டார்கள் என்கிறார். கோவில் எனும் சொல் சித்தார்த்தனின் இல்லத்தைக் குறிப்பது என்றார்.

நூலின் மிக சுவாரசியமான பகுதி என்பது அயோத்திதாசர் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை பவுத்தமயமாக்க முனைந்த அத்தியாயத்தைச் சொல்லலாம். தோமையர் கதை வழியாக வள்ளுவரை கிறிஸ்தவராக்க முயன்று கொண்டிருந்தபோது இங்கே அயோத்திதாசர் சத்தமில்லாமல் இயேசுவை பவுத்தராக்கிவிட்டார். அதைவிட ஆதியாகமத்தையே பவுத்த பிரதியாக்கினார். ஆங்கிலேய ஆட்சியையே பவுத்த தரும ஆட்சி என்றார். திருக்குறளை திரிக்குறள் என பவுத்த திரிபீடக நூல்களை பற்றி பேசும் நூலாக மாற்றினார். வாமன அவதாரத்து மாபலியை திருப்பதி வெங்கடாசலபதியுடன் சேர்க்கிறார். நடராஜருக்கு அவர் அளிக்கும் விளக்கம் எல்லாம் நமக்கு முதலில் சற்று அதிர்ச்சியை அளிக்கும். புத்தர் அவருடைய தந்தை இறந்து தகனம் செய்யப்பட பின் தகன மேடையைச் சுற்றி உச்சகட்டமாக தன்னை மறந்து ஆடியதால் அவருக்கு அளிக்கப்பட பெயரே நடராஜர் என்றார்.

சொற்களில் இருந்து அர்த்தத்தை விடுவிப்பது என்பது பின் நவீனத்துவ செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. சொல்லுக்கு ஒரு பொருள் என்பதே கூட பாசிசம் என முன்வைக்கப்பட்டது. அயோத்திதாசர் சொற்களை உடைத்து பொருள் கொள்ளும் வகையில் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். எல்லாவற்றையும் பூர்வ பவுத்தர் vs வேஷ பிராமணர் எனும் கண்ணோட்டத்தில் விளக்கிக்கொள்ள முயல்கிறார். ராஜ் கவுதமன் ஒரு உதாரணத்தை அவருடைய நூலில் அளித்துள்ளார். “‘தையல் சொல் கேளேல்’ என்பதற்கு மரபாக பெண் சொல்லைக் கேட்காதே என்பதே பொருளாக வழங்கப்படுகிறது. இதற்கு அயோத்திதாசர் அளிக்கும் விளக்கம் என்னவென்றால், தையல் என்றால் கொடூரமான மனதை தைத்து புண்ணாக்கும் சொல், கொடூரத்தால் இலை உதிரும் மாதம் தை, கொடூரமான நெய் கலந்த வஸ்துக்களுக்குப் பெயர் தைலம். இதயம் புண்படத் தைக்கக் கூறும் வார்த்தை தையல் மொழி. கொடூரமான சொற்களுக்கு செவி கொடாதே என்பதே பொருள்.” தங்கள் உடலை சீராக, சுத்தமாக பேணுபவர்கள் சீர் மெய்யர். ஆகவேதான் ஐரோப்பாவிற்கு சீர்மெய் (சீமை) என பெயர் வந்தது என்கிறார். ‘கோத்திரம் அறிந்து பெண் கொடு’ என்பதை கோ (அரசன்) திறமை அறிந்து பெண் கொடு என முற்றிலும் வேறு தளத்தில் பொருள் கொள்கிறார்.

தன்வரலாற்று நாவலான ‘சிலுவைராஜ் சரித்திரத்தில்’ சிலுவைக்கு புத்தகங்களை வாசிப்பதிலும் அவற்றை தொகுத்து விமர்சன கோணத்தில் மறுவமைப்பு செய்து எழுதுவதிலும் பெரும் ஆர்வமும் தேர்ச்சியும் உண்டு என்றொரு சித்திரம் வருகிறது. ஒருவகையில் அயோத்திதாசரைப் பற்றிய அவருடைய இந்நூலும் கூட அவரை பிரதி வழி வாசித்து தொகுத்து அறிமுகப்படுத்தும் ஈடுபாட்டின் தொடர்ச்சியே. ராஜ் கவுதமன் ‘சிந்திக்கும் மனிதர்’ புதிய சிந்தனைகள், அவை சார்ந்த இணைப்புகள், கண்டடைதல்கள் அவரை கிளர்த்துகின்றன. அவருடைய அறிவுத்தேடல் வழியாக அவர் கண்டடையும் இன்பத்தை வாசகரும் வாசிப்பில் உணர முடிகிறது. ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘ அயோத்திதாசர் வாழும் பவுத்தம்’ பின்நவீனத்துவ நோக்கில் வழக்காறுகளை, களப்பணியை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. பலதளங்களில் நுண்ணிய வேறுபாடுகள் கொண்டவையாக இவ்விரு படைப்புகள் உள்ளன.

அயோத்திதாசரைப் பற்றிய இந்நூல் வழியாக பவுத்த அறிஞர் லட்சுமி நரசுவை பரிச்சயம் ஆகிறார். 19, 20 ஆம் நூற்றாண்டின் பவுத்த மறுமலர்ச்சி எனும் அத்தியாயத்தில் லட்சுமி நரசின் எழுத்துக்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் கிடைக்கிறது. அவரை முழுமையாக வாசித்து அறிய அது தூண்டுகிறது. லட்சுமி நரசுவின் விஞ்ஞானவாத பவுத்தத்தை அயோத்திதாசர் கைவிட்டது குறித்து ராஜ் கவுதமனுக்கு வருத்தம் இருக்கிறது. அதை அவர் மெல்லிய தொனியில் பதிவும் செய்கிறார். இருவருக்கும் பவுத்தத்தின் புரிதலும் நோக்கமும் வேறாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அயோத்திதாசரின் காலத்திற்கு பின் லட்சுமி நரசுவின் தலைமையில் தான் சாக்கிய சங்கம் சில ஆண்டுகள் இயங்கியது. ஸ்டாலின் ராஜாங்கம் லட்சுமி நரசுவின் விஞ்ஞான வாத பவுத்தத்தை அயோத்திதாசர் விலக்கி வைத்ததன் நியாயத்தை வேறொரு கோணத்தில் இருந்து பேசுகிறார். அயோத்திதாசர் லட்சுமி நரசுவைப் போன்று மேலை கல்வி கற்றவர் அல்ல. மரபான சித்த மருத்துவக் கல்வி பயின்றவர். அவருடைய நோக்கும் காலனிய சட்டகத்திற்கு அப்பாலான உள்ளூர் அறிவுச் சூழலால் வடிவமைக்கப்பட்டது. ஆகவே அவர் பண்பாட்டு பவுத்தத்தை முன்னெடுத்தார். அவர் காலத்திற்கு பின் விஞ்ஞானவாத பவுத்தத்தின் வழியை தேர்ந்தவர்கள் பிற்காலத்தில் பவுத்தத்தின் பண்பாட்டுக் கூறுகளை முழுக்கவே கைவிட்டு அரசியல்மயமான பவுத்தத்தை மட்டுமே கைக்கொண்டார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். நவீனத்துவ நோக்கும், பிரதி வழி பன்முக வாசிப்பும் ராஜ் கவுதமனின் தனித்துவம் மட்டுமல்ல அதுவே அவருடைய எல்லையாகவும் ஆகிவிடுகிறது.

ஒட்டுமொத்தமாக ராஜ் கவுதமனின் நூல் அயோத்திதாசரை அவர் உருவான வரலாற்று சூழலுடன் பொருத்திக் காட்டி அவருடைய சிந்தனைகளை மற்றும் அதன் முறைமைகளை பரந்த தளத்தில் அறிமுகம் செய்து அவருடைய முக்கியத்துவத்தை நிறுவிச் செல்கிறது.

க. அயோத்திதாசர் ஆய்வுகள்

ராஜ் கவுதமன்

காலச்சுவடு

ராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்————இன்றைய கோட்பாட்டு விவாதங்களில் ராஜ் கௌதமன் எழுத்துக்கள்

ராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்

ராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்

சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்

சுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1

ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2

சிலுவைராஜ் சரித்திரம் பற்றி

ராஜ் கௌதமனின் உலகம்

ராஜ் கௌதமனும் தலித்தியமும்

பாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

முந்தைய கட்டுரைசிறுகதைகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிராவிட இயக்கம் ஒரு கடிதம்