சிறுகதைகள்,கடிதங்கள்

என் பெயர்

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

“எனது பெயர்” என்ற சிறுகதையை வாசித்தேன். ஏவுகணை ஆராய்ச்சி மையம் அல்லது விண்வெளி ஆராய்ச்சிமையம் என்றால் என்ன என படிப்பதற்காக தமிழ் விக்கிபீடியாவிற்கு சென்று படித்தால் அது நீங்கள் எழுதும் கட்டுரை போலவே, உங்களின் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கொண்டு இருந்தது. ஒருவேளை இதையும் நாம்தான் செய்யவேண்டும் என நீங்கள்தான் தமிழ் விக்கிபீடியாவில் எழுதுகிறீர்களா?

 

ஆனால் அதன் அறிவியல்,விஞ்ஞானச் சொற்கள் ஏதும் எனக்கு புரியவில்லை. அதில் அரசியல் இல்லை.ஆனால் அதில் நாட்டுநலன் கருதி செயல் படும் அமைப்பு என்ற வரிகள் என்னை கவர்ந்தது.

 

சிறுகதையில் அனைத்துமே அரசியலாக இருக்கிறது. முதலில் இந்தியர்களின் ஒரே மனநிலையாகிய நிர்வாகம் குறித்து “மேற்பார்வை,கண்காணிப்பு.கணக்கெடுப்பு,பதிவு செய்தல் ” ..என. இதின் விரிவுதான் மீதி கதை.அனைவரும் அனைவரையும் கண்காணித்துகொண்டே இருக்கிறார்கள். ஒரு குழுவாக செயல்படும்போதும் அவர்களின் தனிமனித உரிமைக்கு எந்தமதிப்பும் இல்லாமல் அனைத்தும் விமரிசனத்திற்கு உள்ளாகிறது.

 

முதலில் ஆய்வகத்தின் அரசியல் : அங்கு ஆய்வு என்பது உளவுத்துறை திருடி அல்லது வாங்கி வருவதைகொண்டு எதையாவது ஒப்பேத்தி ஒன்றை உருவாக்குவது என்று படிக்கும்போது நெஞ்சு அடித்துகொண்டது. அவர்கள் ஆய்வு செய்வதே இல்லை. பிறகு எதற்காக இத்தனை கோடி செலவுகள்? வெறும் பாவனைக்காக என்று என்னும்போது அயர்ச்சி வருகிறது. பணம் வரும் வேலைகளிலும் திட்டங்களிலும் தலைமையை தவிர யாரையும் அனுமதிப்பதில்லை என்பதெல்லாம் அப்படியே இந்தியாவின் அனைத்து தொழில்களிலும் வணிக நிறுவனங்களிலும் நடைபெறும் அரசியல் போலவே உள்ளது. பாவம் உண்மையான அறிவியல் ஆர்வம் கொண்டவர்கள் சிதறி ஓடிவிடுகிறார்கள்.

 

ஜாதி அரசியலும் வருகிறது. பத்மா அப்படியே பிடித்துகொண்டு ஏறிவிடுகிறார். அந்த குற்றவுணர்ச்சியில் தான் கணவனைகுறித்து அதிகம் கவலைபடுவதுபோல் பாவனை செய்கிறார். அதாவது ஜாதி அரசியலும் குடும்ப அரசியலும் ஒன்றுக்குள் ஓன்று என கதை கூறுகிறது.

 

தனிமனித அரசியல் தான் நாறுகிறது. யாருக்கும் யார் மீதும் மதிப்பு இல்லை. பத்மா முகர்ஜியை சிறுபிள்ளைத்தனமானவன் என நினைக்கிறாள். முகர்ஜியும் நாய்டுவும் பெண் விஞ்சானிகளின் உடலுறுப்புகளை குறித்து பேசி கிண்டல் அடித்துகொண்டிருக்கிறார்கள். தலைவரை அனைவரும் கிழம் என கூறுகிறார்கள். ஹரிக்கு ஏற்கனவே வெடி வைத்து இருக்கிறார்கள். ஆனால் கடைசியில் பெண்களின் அரசியல் வருகிறது.

 

ஒரு நவீன அறிவியல் மையம் எவ்வளவு பழமையான ஆணாதிக்க மனதோடு நடந்து கொள்கிறது எனவும் அதற்கு ஸ்னேகலதா ரெட்டி போன்றவர்கள் எப்படி ஒத்துபோகிறார்கள் எனவும் படிக்கும்போது இப்போது நடைபெறும் மீ டூ வில்  கொந்தளிக்கும் பெண்களின் மனநிலை புரிகிறது. அடங்கி போக வில்லை என்றால் சிதறி ஓடவேண்டி இருக்கும். காபி சாப்பிடலாம் என கூறும்போது பத்மா  அமைதியாய் இருக்க ஜாதி மதம் குடும்பம் எல்லாம் கடந்து ஆணாதிக்கம் அதிகாரம் முன்னால் வந்து அவளை வெட்டி வீசி செல்கிறது.

 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் சிறுகதைத் தொகுதியில் மிகவும் தொந்தரவுசெய்த கதை திருமதி டென். சாதாரணமாக ஒரு குரூரத்தைச் சொல்லிச்செல்லும் கதை என்று தோன்றும். ஆனால் அது அன்னை என்றால் என்ன என்ற கேள்வியைக் கேட்கிறது. கோழிக்குஞ்சை பிடித்து கிழித்து தன் குட்டிகளுக்கு ஊட்டும் தாய்க்காக்காவைப்போலத்தான் அன்னைகள் இருக்கிறார்கள். அந்தக்கதையை மறுபடி நினைக்கவும் பிடிக்கவில்லை. மீண்டும் படிக்காமலும் இருக்கமுடியவில்லை

 

எஸ்.மதிவாணன் களஞ்சியம்

 

முந்தைய கட்டுரைபக்ஷிராஜன்
அடுத்த கட்டுரைபிரதமன் கடிதங்கள் 4