ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்
சில ஆண்டுகள் முன்பு ,ஆய்வாளர் ஆ.கா.பெருமாள் அவர்கள் தான் எழுதிய ஆய்வு நூல் ஒன்றினை, திரும்பப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது . காரணம் அவரது ஆய்வுக் குறிப்பு ஒன்று, அதன் உண்மை, குறிப்பிட்ட சாதியாரின் சாதிமேன்மை கற்பிதம் ஒன்றுக்கு எதிராக இருந்ததே காரணம். அது குறித்து [ஒரு சிறு குறிப்பாக மட்டுமே ] வருத்தமுடன் தனது வயக்காட்டு இசக்கி நூலின் முன்னுரையில் தெரிவித்திருக்கிறார் ஆகா பெருமாள் . அந்தக் குறிப்பினை இன்றைய தேதிகளில் , தமிழ் சமூக ஆய்வுகள் , அதன் வழியே உருவாகும்,நிலைபெறும் கருத்தியல் அடித்தளங்களை எல்லாம், அறிவுத் தரப்பிடம் இருந்து ,அதிகாரத்தை நோக்கி நகர சாதி ஒற்றுமையை பேணும் , சாதிச் சுமடர்கள் வன்முறை வழியே கைப்பற்றத் துவங்கி இருப்பதன் அபாய அறிவிப்பு என்பதாகவே கொள்ள வேண்டும் . இந்த தமிழ் நிலத்தை நேசிப்பவர் யாரும் ,சற்றே நின்று நோக்கினால் கூட போதும் , திரிபுகளை, பிழையான குறிப்புகளை ,போலி கற்பிதங்களை, முழுப் பொய்களை கோட்டான் போல கூவிக் கூவி, அதையும் மீறிச்சென்று வன்முறை வழியே சமூக பொது மனத்தில் விதைக்க சாதிப்பற்றாளர்கள் செய்யும் யத்தனங்கள் கண்டு மனம் கூச நேரும் .
வடிகாது கொண்டதனால் தீர்த்தங்காரர் யாவும் எமது சாதியே என கூவுகிறது ஒரு ஆய்வுக் கட்டுரை, மகாபலிபுரத்தை கட்டியவன் தனது சாதி சங்க தலைவனின் முப்பாட்டன் என்று கூவுகிறது மற்றொரு ஆய்வு கட்டுரை , மூவேந்தரும் தமது சாதியரே என்று இரண்டு சாதிகள் ஆய்வுத் தரவுகள் கொண்டு கட்டிப்புரண்டு கொண்டிருக்கிறது ,ராஜராஜ சோழன் என்ன சாதி என்று இன்னும் கால் நூற்றாண்டு கழித்து [அடிதடியில் மாய்ந்தபின்] எஞ்சிய சாதி கொண்டு அறிய நேரும் துர்பாக்கிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது .தமிழ் நிலத்தின் ஏழு கோடி சாதிகளில் மிச்சமின்றி எல்லா சாதியும் ஆண்ட சாதி ,சத்ரிய வம்சம் என்ற ,பெருமையை தேடிச் சென்று அள்ளிச் சூடிக் கொள்கிறார்கள் . இவர்களிடம் என்னதான் கோணல் ? எழுத்தாளர் சுந்தரராமசாமி அவருக்கே உரிய கூர்மையான சொல் கொண்டு ஒரு நேர்காணலில் அதை சுட்டி இருக்கிறார் . தமிழர்கள் வசமிருக்கும் நிமிர்த்த இயலா கோணல் அவர்களின் தாழ்வுணர்ச்சி . என்பதே அது .
இது தாழ்வுணர்ச்சி என்பதையே அறியாமல் ,அதை மேன்மை எனக்கொண்டு ,அந்த மேன்மைக்கு ஆதாரமாக இவர்கள் முதலில் சுட்டுவது சங்க இலக்கியத்தில் காணும் ஏதேனும் சில குறிப்புகளாகவே இருக்கும் . உதாரணமாக
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு எனத், தொண்டு என
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை’
இது பரிபாடலில் பெட்டன் நாகனார் என்பவர் எழுதிய பாடல் ,இந்த பாடலை அடிப்படையாக கொண்டு , ஆர்யப்பட்டர் இந்த பரிபாடலின் காலத்துக்கு பிந்தியவரே ஆகவே , சுழியம் என்பதை கண்டு பிடித்தவன் ,சங்க காலத்தில் வாழ்ந்த பெட்டன் நாகனார் எனும் தமிழனே [இவர் என்ன சாதி எனும் அடி தடி ,இவருக்கான இடம் அறிவுத் தளத்திலும் பண்பாட்டு தளத்திலும் உருவான பின் நிகழும் ] என்று அறுதி இட்டு கூறும் ஆய்வு சென்றவாரம் வாட்சப் குழும தமிழர்களை வந்து அடைந்து அறிவூட்டி புளகம் கொள்ள வைத்தது . இப்படி சொந்த அரிப்பை சுகமாக சொறிந்து கொடுப்பது மட்டுமே ஆய்வுகள் ,அது மட்டும் போதும் அதற்கு மாறான உண்மை நிலையை பேசும் ஆய்வுகளை முன் வைப்பவர்களை மிரட்டி பின்வாங்க வைக்கும் சாதி அமைப்புகள் ஒரு பக்கம் , சங்க இலக்கியம் பேசும் பூக்கள் வகை எத்தனை ,அதை மேயும் மாடுகளின் கால்கள் எண்ணிக்கை அதில் எத்தனை என ,படிப்பவர் போட்டியை கக்க வைக்கும் ,பல்கலைகழக ஆய்வுகள் மறு பக்கம் இவற்றுக்கு வெளியே நின்று , கொண்ட ஆய்வு பொருள் மீது உண்மையான அக்கறையுடனும் , அறிவார்ந்த நோக்குடனும் , விருப்பு வெறுப்பற்ற தன்மையுடனும் , விமர்சனப் பார்வையுடனும் ,சங்க இலக்கியங்களை இன்றைய காலத்தின் கோட்பாட்டுக் கருவி கொண்டு , பொருள்கோடல் நிகழ்துபவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்கள் .சாகச விரும்பிகள் மட்டுமே சென்று கால் பதிக்கும் பனிபடு ,உயர் வரையின், ஒளி இமிழ் சிகர முனையை போல , தமிழ் சமூக உருவாக்கத்தின் பின்புலம் நோக்கிய அறிதல் ஆர்வமும் ,உழைப்பும் ,தேடிக் கண்டடையும் தீவிரமும் கொண்டவர்களுக்காக ,அவர்களுடன் உரையாட காத்திருக்கிறது , ராஜ் கௌதமன் அவர்களின் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் [தமிழினி இரண்டாம் பதிப்பு 2912]எனும் சமூக விமர்சன நூல் .
‘ தமிழிலக்கிய மரபு இருபதுநூற்றாண்டு வரலாற்றுத் தொன்மை கொண்டது. அதற்கு மரபான ஒரு வரலாற்றுச் சித்திரமும் வைப்புமுறையும் உள்ளது.இருபதாம் நூற்றாண்டில் இவையனைத்தும் மாறின. அதை நாம் நவீனக் காலகட்டம் என்கிறோம்.
இருபதாம்நூற்றாண்டு என்பது குடியாட்சியின் காலகட்டம். அனைத்துமக்களும் கல்வி கற்று அறிவுப்புலத்திற்கு வந்தனர். அனைவரும் அரசதிகாரத்தில் பங்குகொண்டனர். குலவழக்கங்களும் மதங்களும் கொண்டிருந்த இடத்தை புதிய அரசியல்கொள்கைகள் எடுத்துக்கொண்டன. அனைத்துத் தளங்களிலும் புதிய நோக்குகள் உருவாகி வந்தன. வரலாறும் வைப்புமுறையும் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டன.
இந்த மாற்றத்திற்கு ஏற்ப உலகமெங்குமே அரசியல் ,சமூக வரலாறுகள் மாற்றியும் விரித்தும் எழுதப்பட்டன. அவற்றுக்கேற்ப இலக்கிய வரலாறும் இலக்கியக் கோட்பாடுகளும் மாற்றமும் வளர்ச்சியும் பெற்றன. இவ்வாறு புதியநோக்கில் இலக்கியத்தை ஆராய்ந்து வரையறுக்கும் இலக்கியக் கோட்பாட்டாளர்கள் உருவாகி வந்தனர். ராஜ் கௌதமனுக்கு தமிழிலக்கிய மரபில் உள்ள இடம் என்பது அவர் தமிழிலக்கிய மரபை வகுத்தளித்த ஆய்வாளர்களில் முதன்மையான மூவரில் ஒருவர் என்பதே.’
மேற்கண்ட வரிகள் ராஜ் கௌதமன் அவர்கள் குறித்த அறிமுக கட்டுரையில் ஜெயமோகன் எழுதி இருப்பவை . தமிழ் சங்க இலக்கியப்பிரதிகளை முதன் முதலாக அக் காலக்கட்டத்துக்கு உகந்த வகையில் பொருள் கோடல் நிகழ்த்த அடிப்படை அமைத்து தந்த தொல்காப்பியர் முதல் இக் காலக்கட்டத்துக்கு உரிய முறையில் பொருள்கோடல் நிகழ்த்த அடிப்படை அமைத்துக் கொடுத்த பேராசிரியர் ராஜ் கௌதமன் வரை , இந்த வரிசை நான்கு காலக்கட்டங்கள் அடங்கியவை . ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்/பாண்டியர் காலத்தில் நிகழ்ந்த முதல் பொருள் கோடல். அதற்கான காரணம் ,பின்புலங்கள் குறித்து இந்த நூலில் விரிவாக பேசுகிறார் நூலாசிரியர் . சோழப்பேரரசு அமைந்து விட்ட அடுத்த காலக்கட்டம் இரண்டாவது . நாயக்கர் ஆட்சிக்குப் பிறகு , உ வே சாமிநாத ஐயர் போன்றோர் முயற்சியால் ‘வெளிப்பட்டு’ , மறைமலை அடிகள் போன்றோரால் ‘தனித்தமிழ்’ இயக்கத்துக்கு அடித்தளம் அமைத்த பொருள்கோடல் நிகழ்ந்த மூன்றாம் காலக்கட்டம் . விளிம்பு நிலையில் நிற்கும் ஒவ்வொருவரும் தான் நிற்கும் நிலம் சார்ந்து ,அதில் தான் வேரோடி வாழ்ந்திர்க்கும் ஆழம் சார்ந்து ,இதுவரை அதிகார கருத்துக்களால் கட்டப்பட்ட அனைத்தயும் ‘கலைத்தடுக்கி ‘ ,அந்த வேர் சென்று புதைந்து நிற்கும் ஆழம் நோக்கி ,நிகழ்ந்த ஆய்வுகளை அடங்கியது ராஜ் கௌதமன் அவர்களின் இந்த நூல் நிற்கும் நான்காம் காலக்கட்டம் .
‘சங்க கால’அறிவு மரபிலும் ,அதன் பின்பு வந்த தொல்காப்பிய கால அறிவு மரபிலும் , தமிழ் நிலத்தின் அசல் சிந்தனைகளில் எவை எவை பேசப்பட்டன ,என்னவிதமான உரையாடலும் ,பொருள்கோடலும் நிகழ்ந்தன ,என்னவிதமான மாற்றங்கள் நிகழ்ந்தன அதன் பின்புலம் என்ன ஆகிய புலங்களில் மையம் கொள்கிறது இந்த நூல் . பாணர் மரபில் துவங்கி ,புலவர் மரபுக்கு நகரும் ,வேடர் மரபில் துவங்கி வேந்தர் மரபுக்கு நகரும் சமூக சித்திரத்தை கொண்ட , கிமு மூன்று முதல் ,கிபி இரண்டு வரையிலான காலக்கட்டத்தை உள்ளடக்கிய சங்க நூல்களை களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்டதொல்காப்பியம் கொண்டு அவர்களுக்கு பின்னான பல்லவர்/பாண்டியர் காலத்தில் முதல் பொருள்கோடல் நிகழ்ந்த வகையில் , உருவான புதிய நிலைகள் குறித்து ராஜ் கௌதமன் கவனம் குவிக்கிறார் .குறிப்பாக சங்க கால காமம் என்னவாக இருந்தது ,பிற்காலத்தில் அவற்றுக்குப் பொருள் வகுத்த தொல்காப்பிய காலத்தில் , அதன் வழியே காமம் என்னவாக பரிமாணம் பெற்றது எனும் சித்திரத்தை அளிக்கும் முதல் கட்டுரை ,இந்த நூலின் பிற பத்து கட்டுரை அளவே காத்திரமானது .
புணர்ச்சிக்கான ஏக்கம் ,புணர்ச்சிச் செயல்பாடு , புணர்ச்சி இன்பம் என மூன்று நிலைகளில் தொல்காப்பிய காலத்தில் பிரிவுபடும் காமமானது , சங்ககாலத்தில் எய்யப்பட்ட அம்பின் வழி போல ஒரே ஆற்றலும் கோடும் கொண்டதாக பிரிவற்றதாக துய்க்கபெற்றிருக்கிறது. கொண்ட காம வேட்கையின் அளவு ,கூடாமல் குறையாமல் சரியான அளவில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே சங்க கால நிலையாக இருந்திருக்கிறது .மாறாக சமூக உருவாக்க காரணிகளின் பின்புலத்தின் ஒன்றாக பெண்ணின் காமமும் கற்பும் தளைப்படும் போது.இந்த ஒரே செயல் முதற்சொன்ன மூன்று கூறுகளாக பிளவுபடுகிறது . முதல் கூறு வழியே அகவைய உணர்சிகளில் மேல் கீழ் தாழ்வும் ,இரண்டாம் கூறு வழியே கற்பு களவு போன்ற ஒழுக்கங்களும் ,மூன்றாம் கூறு வழியே புறவய குல கலப்பின் மேல் கீழ் அடுக்கும் உருவாகும் விதத்தை , சமூக மாற்றம் நிகழும் வரிசைகிரமமான பாடல்கள் வழியே ,அதில் துலங்கும் குறிப்புகள் வழியே , மிஷேல் ப்ஹூகோ வின் கோட்பாட்டுப் பார்வை கொண்டு விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர் .
அதன் தொடர்ச்சியாக பெண் என்பவளின் காமத்துடன் இயந்த வாழ்வு , துண்டு துண்டாக ,பூப்பு எய்துதல் ,திருமணம் ,குழந்தைப்பேறு ,கணவன் இறந்ததும் ஏற்கும் கைமை நோன்பு இவற்றின் வழியே உறையவைக்கப்பட்டு , இந்த உரை நிலை அடுக்குகள் வழியே ஒவ்வொரு குடியும் ,மேல் கீழ் என அமைத்த சமூக அடுக்கில் மேல் நோக்கி நகரும் சித்திரத்தை பல பாடல்களின் குறிப்பு வழியே அளிக்கிறார் . அதை தொடர்ந்து உணவு என்பது ஐவகை நிலத்தை சேர்ந்த குடிகளிலும் என்னவாக இருந்தது , எவையெல்லாம் உண்ணப்பட்டன ,அதில் மேலானவை கீழானவை என எவை எல்லாம் பார்க்கப்பட்டன , எந்த உணவுகள் வணிகத்துக்கு உட்பட்டு ,உபரியை உருவாக்கி ,அரசு மற்றும் வர்க்க சமுதாயத்தை உருவாக்குவத்தில் பெரும்பங்கு ஆற்றின என்பதை ஆராய்ந்து சொல்கிறது மற்றொரு அத்யாயம் . இனக்குழு என்பதில் இருந்து சாதி அடுக்கு வரை தமிழ் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றத்தில் , தீண்டாமை இருந்ததா ? வர்ணாசிரம அடிப்படையிலான பேதங்கள் சங்க காலத்தில் இருந்ததா என்பதை ஆய்வு செய்யும் கட்டுரை இந்த நூலின் தலையாய கட்டுரைகளில் இரண்டாவது .
சுந்தர நாயனார் கதையில் சுந்தரருடன் ஒரு பாணர் வருவார் .சுந்தரர் சிவனைப்பாட ஒரு கோவிலுக்குள் நுழைவார் . நண்பரான பாணர் சமூக தடை காரணமாக வெளியிலேயே நிர்ப்பார் . உள்ளே சென்ற சுந்தரர் சிவபெருமான் வசம் முறையிடுவார் .அந்த சிவனே அசரீரி குரல் கொண்டு ,ஊரார் அறியும் வண்ணம் ,பாணரை கோவிலுக்குள் அழைப்பார் ,அழைத்ததோடு மட்டுமன்றி ,அந்த பாணர் நின்று பாட , சரியாசனம் ஒன்றும் அளிப்பார் .இப்படி ஒரு ஐதீக கதை உண்டு , இந்த கதையில் ,இந்த காலக்கட்டத்தில் கீழ்நிலையில் இருக்கும் பாணர் மரபு , சங்க இலக்கிய காலத்திலேயே தனது சமூக அடுக்கிலிருந்து சரிந்து கீழ் நிலைக்கு சென்று விட்ட சித்திரத்தை ,பல்வேறு பாடல்களின் குறிப்பு வழியே ராஜ் கௌதமன் சுட்டுகிறார் . பாணனை காட்டிலும் துடியன் கீழ் நிலையிலும் , அழுக்குத்துணி துவைப்போர் , சாவு வீட்டில் ஈமக் கடன் செய்வோர், பிரசவம் கண்ட பெண்ணுக்கு கட்டில் போன்ற பொருட்களை பின்னி அளித்து ஏவல் செய்வோர் இவர்கள் எல்லாம் இழிசினராக பார்க்கப்பட்ட சித்திரத்தை அளிக்கிறார் . சுவாரஸ்யமான தகவலாக , முருகு வந்து அல்லல் படும் இளம்பெண்,அவள் எந்தக் குடியாக இருந்தாலும் அந்த நேரத்தில் மட்டும் புலைச்சி என்று இழிந்துரைக்கப்படமையை நூலாசிரியர் சுட்டுகிறார் . சங்ககாலத்தில் தமிழ் சமூகத்தில் அந்தணர்கள் நிலைபெற்று விட்டாலும் , இழிவு என்பது தொழிலின் பார்ப்பட்டு சுட்டபட்டதே அன்றி ,சாதியின் பார்ப்பட்டு அல்ல , இரண்டாவதாக சமூக அடுக்கில் இந்த தொழில் மேலானது ,இந்த தொழில் கீழானது எனும் வகையில் இழிவு பேசப்பட்டு இருக்கிறது . வயலில் தூற்றிய நெல்லின் உமித்துகள்கள் காற்றில் பரத்து ,உப்பு விளையும் உப்பளத்தில் விழுந்து பாழ்படுத்துவதை தொடர்ந்து ,இரு குடி பெண்களும் செய்யும் தொழிலை இழி சொல்லால் பழிக்கும் பாடல் வரி குறிப்புகளை நூலாசிரியர் தருகிறார் . கீழான தொழிலை செய்யும் எதிலார்கள் தமிழ் சமூகத்தில் எவ்வாறு தோற்றம் கொண்டனர் என்பதையும் , சங்க காலத்திலேயே பிராமணர்கள் தமிழ் நிலத்தில் ‘பண்பாட்டு கலப்பில் ‘இணைந்து விட்டிருந்த போதும் ,பல்லவர் காலத்திலும் பிறகு வந்த அரசர்கள் காலத்திலும் ,அரசு அதிகார உருவாக்க கருத்தியலில் மனு நீதி தலைமை கொண்ட பிறகே ,துல்லியமாக வர்ண அடிப்படையில் குடிகள் சாதிகள் என பிரிக்கப்பட்டு ,மேல் கீழ் அடுக்குகள் உருவாக்கப்பட்டு ,அவை உறயவைக்கப்பட்டு, தீண்டாமைக்கான சாதி சொல்லி இழிவு செய்யும் நிலைக்கான சூழல் எழுந்தது என இந்த நூலின் வழியே ராஜ் கௌதமன் தனது கண்டடைதல்களை முன்வைக்கிறார் . ஆசிரியர் அம்பேத்கர் இந்திய சூழலை ஆராய்ந்து வந்தடைந்த அதே முடிவு , சங்க இலக்கிய பாடல்கள் வழியே துலங்கும் ஆய்வு தரவுகள் கொண்டு ராஜ் கௌதமன் அவர்களும் வந்தடைகிறார் .
தமிழ் சமூக உருவாக்கத்தில் தொல்காப்பியத்தின் பங்களிப்பு சார்ந்த கட்டுரை இந்த நூலின் தலையாய கட்டுரைகளில் முதலாவது . தொல்காப்பியம் சங்க இலக்கியங்களை தனது காலக்கட்டத்தில் பொருள் கோடல் நிகழ்த்த முக்கிய காரணம் ,சங்க இலக்கியகளில் உள்ள ஒரு விதமான தன்னுணர்வு . வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் உள்ள நிலத்தில் நாங்கள் இருக்கிறோம் ,அந்த நிலம் பனிபடு நெடுவரையை எல்லையாகக் கொண்ட பெரு நிலத்தின் ஒரு பகுதி எனும் தன்னுணர்வு அது . அதை தொகுத்து ,அகம் புறம் என்ற தத்துவ அடிப்படைகளை அளித்து , அக்காலத்தில் இந்திய நிலம் எங்கும் பரவி விரிந்து கொண்டிருந்த ,சமண , பௌத்த ,வைதீக அறிவுத்தள உரையாடல்களுடன் ஒரு பிணைப்பை உருவாக்கி அளித்ததே தொல்காப்பியத்தின் முதல் கொடை. இரண்டாவது கொடை ஒவ்வொரு திணைக்குமான தெய்வத்தை வகுத்தளித்தமை . உதாரணமாக குறிஞ்சி திணையை எடுத்துக்கொண்டால் ,எத்தனயோ விதமான தெய்வங்கள் பலி கொடுத்து வணங்கப்படும் சித்திரங்கள் வருகிறது ,இந்த சின்னச் சின்ன பழங்குடி வணக்கங்களை தொகுத்து ,மேல்நிலையாக்கம் வழியே ஒரு மூல முதல் தெய்வமாக அனைத்தும் முருகனை சென்று சேரும் வகைமையை தொல்காப்பிய மரபே உருவாக்கி அளிக்கிறது . இந்த தனித்தன்மைகளில் கவனம் கொள்கிறது இந்த கட்டுரை .
புனைவோ ஆய்வோ ஒரு நூலை இந்த வகைமையில் இது கிளாசிக் என சொல்ல வைப்பது எந்த கூறு ? அந்த நூல் எதைப் பேசுகிறதோ , அந்தப்புலதிலிருந்து அந்த நூலுக்கு வெளியில் நின்று , உங்களுடையதே ஆன ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டு , அந்த நூலை அணுகிப் பார்த்தால் ,அந்த வினாவுக்கு அந்த நூல் தனது கட்டமைப்புக்குள் மறைபிரதியாகவேனும் பொருத்தமான பதிலை வைத்திருந்தால், அது கிளாசிக் .உதாரணமாக இந்த நூலை நோக்கி ,நான் முன் வைத்த எனது கேள்வி , தொல்காப்பியம் வகுத்து வைக்கும் திணைகள் சார்ந்த வைப்பு முறை .
முல்லை குறுஞ்சி மருத நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே [தபல். அக .5]
பண்டைய மரபில் வைப்பு முறை மிக முக்கியமானது . இங்கே தொல்காப்பியம் சொல்லும் வைப்பு முறை காடு,மலை ,வயல் ,கடல் . தமிழ் நிலவியலின் படி வடவேங்கடம் முதல் தென் குமரி வரை எனக்கொண்டால் ,மலை ,லாடு,வயல், கடல் என்றுதான் வரவேண்டும் . ஆக எங்கே சிக்கல் ? இந்த வினாவுக்கு விடையை ராஜ் கௌதமனின் நூல் தன்னுடைய கட்டமைப்புக்குள் கொண்டிருக்கிறது . அவர் வேட்டுவர் குடி சார்ந்த தனித்தன்மைகளை ,அதன் தரவுகளை சங்க இலக்கிய பாடல்கள் கொண்டு விளக்கும் போது ஒரு வலிமையான சித்திரத்தை முன்வைக்கிறார் .அது பண்டைய தமிழ் நிலத்தை சேர்ந்த குடிகளில் ,வேட்டுவர் குடி பிரதானமாக இரு வேட்டுவர் குடிகள் இணைந்த ஒன்று ,ஒரு வேட்டுவர் குடி ,வேங்கடமலைக்கு இந்தப்பக்கம் இருந்த காட்டை சேர்ந்த குடி அவர்கள் பெயர் எயினர்.மற்றொரு குடி ,வேங்கட மலைக்கு அந்தப்பக்கம் இருந்த காட்டை செந்த குடி , அவர்களின் குடி பெயர் நீள் மொழி வடுக வேட்டுவர் . [அன்று கன்னடம் தெலுங்கு இரண்டுமே வடுகர்தான்] .இப்படி வேங்கட மலைக்கு அப்பால் இருந்த காட்டில் இருந்து இங்கு வந்து கலந்து விட்ட குடியாலும் ஆனதுதான் தமிழ் நிலம் . ஆம் வந்தேறி வடுகர்கள் அல்ல , பண்பாட்டு கலப்பின் ஒரு பகுதியாக வந்து கலந்து விட்ட வடுகர் . சங்கப் பாடல்கள் வழியே துலங்கும் இந்த சித்திரத்தை ,தொல்காப்பியத்தின் அந்த வைப்பு முறையுடன் ஒப்பு நோக்கினால் ,உண்மையில் தொல்காபியம் தமிழ் நிலத்துக்கு அளித்த கொடையின் ஆழம் விளங்கும் .
இந்த நூலின் ஆய்வுப்புலத்துக்கு வெளியே ,இந்த நூலாசிரியர் சுட்டாத ஒரு முக்கியமான பண்பாட்டுக் கூறு ,தன்னியல்பாக எழுந்து வந்திருக்கிறது . சங்க காலத்தில் சாதி சொல்லி கீழ்மை செய்யும் நிலை இல்லை . பல்லவர் காலத்துக்குப் பிறகே மனுநீதி தலைமை கொண்ட பிறகே ,பிராமண மேலாதிக்கத்துக்குப் பிறகே இங்கே சாதிப் படிநிலை ,இழிவு செய்யும் கீழ்மைகள் நுழைகின்றன .சங்க கால தமிழ் சமூகத்தில் பண்பாட்டு கலப்பாக பிராமணர்கள் ஒன்று கலந்து விட்டனர் .இவை இந்த நூல் முன்வைக்கும் ஆய்வு தரவுகள் . இதற்க்கு அப்பால் இந்த அரசியல் மேட்டிமை அதிகார முகத்துக்கு அப்பால் பிராமனருக்கு இன்னொரு முகம் உண்டு . அது இந்த பாரதப் பெரு நிலத்தை ஊடும் பாவுமாக தனது ஆக்கப்பூர்வமான கருத்தியல் சரடு கொண்டு நெய்தது . பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த மதுரா விஜயம் நூலில் ,மதுரையில் ஊருக்கு வெளியே , முப்புரி வேலில் மண்டை ஓடு செருகி வைத்து ,அத்தகு வேல்களால் வேலி அமைத்து அதற்குள் வாழ்ந்த கபாலிகர்கள் சித்திரம் வருகிறது . முப்புரி வேலில் செருகப்பட்ட அந்த மண்டை ஓடு,எலுமிச்சம்பழம் என்று மாற எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது .அந்த மாற்றத்தை பௌத்தமும் சமணமும் பிராமண தொகுக்கும் போக்கும் ,ஊடு பாவாக இந்த நிலமெங்கும் திரிந்து உருவாக்கி அளித்த கொடை. இந்த நூலில் வேடர் குடியின் வாழ்வு எப்படிப்பட்டது என்று சித்தரிக்க ராஜ் கௌதமன் ஒரு பாடலை முன்வைக்கிறார் .அந்தப் பாடலில் வேடர்கள் ,பொன் வைத்திருப்பான் என நம்பி,வனத்தை கடந்து செல்லும் ஒரு ஆளை கொலை செய்கிறார்கள் .அவனிடம் எதுவுமே இல்லை .அவன் ஒரு பிராமணன் .மேலதிகமாக நூலாசிரியர் கவனம் குறிக்காத ஒரு குறிப்பு அந்த பாடலில் வருகிறது .அது அந்த பிராமணன் ‘எதற்கோ ‘தூது செல்லும் முகமாக அந்த வனத்தை கடப்பவனாக இருக்கிறான் . இந்த குறிப்பின் வழியே அரசியல் அதிகாரம் என்ற அசிங்கமான முகத்துக்கு வெளியே பிராமணர்கள் இங்கே தமிழ் நிலத்துக்கு செய்தது என்ன என்பதை ஒரு வாசகன் ,இந்த நூலின் கட்டமைப்பு வழியாகவே ஊகித்து விட முடியும் .
கடலூர் சீனு
ராஜ் கௌதமனை அறிய…
ராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்
ராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும்பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்
ராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்
ராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்
ராஜ் கௌதமன் ‘கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக’- கடலூர் சீனு
ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்
சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்
சுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1
ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2
சிலுவைராஜ் சரித்திரம் பற்றி
ராஜ் கௌதமனின் உலகம்
ராஜ் கௌதமனும் தலித்தியமும்
பாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்
ராஜ் கௌதமன் -கடிதங்கள்