ஊடுருவல் -கடிதங்கள்

John-Chau-750_2

ஊடுருவல்கள்,சூறையாடல்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

 

“ஊடுருவல் ,சூறையாடல்கள் என்னும் கட்டுரை படித்து அழுதேன். கிராமத்திலிருந்து சென்னை வந்தபோது தோற்றத்தாலும் உடுத்தும் உடையிலும் எப்படியோ எனது பழங்குடிதன்மையை கண்டுகொள்ளும் நாகரிக சமூகம் ஏளனமாகவும் புறக்கணிப்பாகவும் நடப்பதை அனுதினமும் உணர்ந்திருக்கிறேன். அதை ஈடுகட்ட அவர்களை திட்டி, சண்டையிட்டு முட்டாள்தனமாக நடந்திருக்கிறேன்.இன்று அதை புறவயமாக உயர்தவர்களின் நட்பால் இல்லை அவர்களுக்கு உதவியாய் இருந்து அவர்களின் உதவியாளன் என்ற போர்வையினால் தப்புகிறேன். அகவயமாய் உங்களை தீவிரமாய் வாசித்து எனக்கு நடக்கும் நிகழ்வுகளை எனக்குள் தொகுத்து விவாதம் செய்து என்னை பக்குவபடுத்திகொண்டிருக்கிறேன். ஆனால் நான் கண்டுகொண்டது ஓன்று “அறிவும் நுட்பமும் ஐடியாக்களுமே அவர்களுக்கு எதிரான ஆயுதம் என்று”. அதைக்கொண்டு தாக்கும்போது அவர்களின் நாகரிக வேடம் கலைவது எப்பவும் மிகவும் மனக்கிளச்ச்சி அடையவைக்கும். இதுதவறுதான் …ஆனால் அதற்க்கு நான் கொடுத்த விலையும் கண்ணீரும் மிக அதிகம். இப்போது கிராமங்களில் இருந்து என்ஜினீயரிங், ஆர்ட்ஸ் என்று பெரிய பட்டங்களோடு வரும் இளைஞர்கள் நகரவாழ்வின் ஆரம்பத்தில்  அடிபடுவதை பார்க்கும்போது மிகவும் வலிக்கும்.ஆனால் அதை அவர்களிடம் கூறினால் நாம் செத்தோம்.

 

 

இப்படி நாகரிக சமுகம் என கூறிகொள்ளும் நமக்குள்ளே ஆயிரம் பாகுபாடு இருக்கும்போது தன்னந்தனி தீவில் அவர்களின் வாழ்வில் நிம்மதியாய் இருப்பவர்களை நாகரீகபடுத்துகிறேன் என கூறிகொள்வதற்க்கு எவ்வளவு திமிர் வேண்டும்.அவர்களை நோக்கி பரிசுபொருட்களை வீசுவதும் அவர்களை வேடிக்கை பொருட்களாய் எண்ணுவதும் எல்லாம் கொடுரம்.

 

 

நான் கத்தோலிக்க அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன். தினமும் திருப்பலி, ஜெபம் என்று என்று எனது இருபத்திரெண்டு வயது வரை வாழ்ந்தவன். அதை தவிர வேறு கலாச்சாரங்களோ, பண்பாடோ கொஞ்சமும் அறியாமல்தான் வளர்ந்தேன். ஒரே ஒரு பாதர் மட்டும் மகாபாரத்தை துண்டு துண்டாக கதையாக கூறுவார், சில சமயம் பகவத்கீதையை கொடுத்து படிக்க சொல்லிவிட்டு அதற்கு அவரே விளக்கம் தருவார்,அவ்வளவுதான்.ஏனென்றால் இது ஒற்றை பண்பாட்டை நமக்குள் நிறுவிவிட்டு மற்ற அனைத்தையும் புறக்கணிக்கும் அறியாமை என்பதை வெளிஉலகம் வந்துதான் கண்டுகொண்டேன். ஆனால் இந்துவாக இருக்கும் நண்பர்களின் செயலகளில் அதிகமாக யாரையும் மிகவும் புறக்கணிக்கும் தன்மை இருக்காது என்பதையும் கண்டு வியந்திருக்கிறேன்.

 

 

இன்றும் என்றும் எனது மதம் கிறிஸ்தவம் தான். ஏனென்றால் எனது மனம் அப்படித்தான் வகுக்கப்பட்டிருக்கிறது.ஆனால் பொது வாழ்வில் அதை மறுக்க எத்தனை எத்தனை பாவனைகளை கைக்கொண்டிருக்கிறேன் …..கம்யூனிஸ்டாக, திராவிட பற்று உள்ளவனாக, தமிழ் தீவிரவாதியாக, பெரியாரியனாக, இந்துத்துவனாக….இப்பொழுது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.ஆனால் கிறிஸ்து யார்? என்ற தேடலில் சரியான விடையை கண்டுகொண்டது உங்கள் மூலம்தான்.கிறிஸ்து என்னும் எளிய கூழாங்கல்லை, மனிதகுமாரனை, அன்பனை எனக்கு அடையாளம் காட்டியது நீங்கள். உங்களை வாசித்து புரிந்து கொண்டபின் பைபிளை படிக்கும்போது அது காட்டும் கோணமே வேறு.

 

 

ஆனால் இந்த மத மாற்றிகள் அங்கு எந்த கிறிஸ்துவை, அவரின் செய்தியை கொண்டு செல்ல முயல்கிறார்கள் என்பதை நினைத்தாலே மனம் பதறுகிறது. நிம்மதியாய் இருக்கும் மனதில் விஷத்தை கலப்பதுதான் அது. அவர்களுக்கு வணிகத்தினால் சுரண்டலினால் ஆதிக்கத்தினால் வணிகத்தினால் பணம் கிடைக்கும். ஆனால் வணிகம் செய்ய வருபவர்களுக்கு வேடிக்கை காட்டும் குரங்கு பொம்மைகளாய் மண்ணின் குடிகள் மாறுவதை எப்படி அரசாங்கம் அனுமதிக்கிறது என்பதுதான் புரியவில்லை.

 

 

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்

 

 

அன்புள்ள ஸ்டீபன்ராஜ்,

 

நான் எப்போதுமே சொல்வதுதான் இது. கிறிஸ்துவேறு, மதப்பரப்பு –ஆதிக்க அரசியல் செய்யும் கிறிஸ்தவ அமைப்புக்கள் வேறு. அவர்களுக்கு கிறிஸ்து எப்போதும் வெறுமொரு பதாகைதான். கிறிஸ்து மீட்பளிக்கும் மெய்ஞானவடிவம் என்பதில், உலககுரு என்பதில், ஆகவே தெய்வத்தின் மைந்தன் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை. ஆனால் வன்முறை, உச்சகட்டப்பிரச்சாரம், மோசடிகள் வழியாக அவரை ஓர் அடையாளமாக உலகம் முழுக்கக் கொண்டுசென்று ஏற்கவைப்பது என்பது ஆதிக்க அரசியல் மட்டுமே

 

இதுவே இஸ்லாம், இந்துமதம் பற்றிய என் எண்ணமும். மதம் இரு முகங்கள் கொண்டது. ஆன்மிகமும் கலையும் பண்பாடும் அடங்கிய ஒரு முகம். ஆதிக்க அரசியலின் இன்னொரு முகம். இரண்டாவது முகம் நான் நீ என உலகைப் பகுப்பது. வெறியேற்றுவது. அதற்கு ஆன்மிக நோக்கங்கள் இல்லை. அதன் அத்தனை இலக்குகளும் இவ்வுலகிலேயே. அத்வைத தரிசனத்துக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே என்ன தொலைவோ அந்த தொலைவு என்று சொல்லலாம். பாரதிய ஜனதாவின் அரசியல் வெறுப்பு –பிரிவினை வாதம் சார்ந்தது. ஆட்சியைப்பிடிப்பதை அன்றிவேறெந்த இலக்கையும் கொள்ளாதது. அத்வைதம் ஒவ்வொருவரும் அந்தரங்கமாக அறியவேண்டிய மெய்மை. அத்வைதத்தின் அத்தனை கருத்துக்களையும் அடையாளங்களையும் பாரதியஜனதா தன் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். அப்போது அத்வைதத்தின் முதல் எதிரியே பாரதிய ஜனதாதான். இதை அத்தனை மதங்களின்மீதும் போட்டுப்பார்க்கலாம். மதத்தில் இருந்து அரசியலை, அமைப்புக்களை பிரித்துநோக்காவிட்டால் ஆன்மிகமெய்மையே இல்லை

 

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் சில செய்தித் தளங்களில் வாசகர் கருத்தை வாசித்தேன்.. வழக்கமாக, கிறித்தவ மத சார்பான வாசகர்கள் படிக்கும் தளங்களில் கூட, அந்த நபரின் செயல் கண்டிக்கப் பட்டு இருந்தது..

 

அவரை ஒரு மத தூதராகப் பார்க்காமல், மடையராக மட்டுமே பலர் பார்த்திருந்தனர்..

 

இது ஒரு மிகவும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தது..

‘என் மதம் மட்டுமே உண்மையான மதம்’ என்னும் கருத்து மேலைநாடுகளின் சிந்திக்கும் மக்களிடம்  குறைந்து கொண்டே வருவதாகத் தான் நான் நினைக்கிறேன்..

 

ரத்தன்

 

அன்புள்ள ரத்தன்

 

அந்த ஆளை ஒரு மடையனாகப் பார்ப்பதே மையப்போக்காக இருக்கவேண்டும். ஆனால் அது ஒரு தரப்பாகவே ஒலிக்கிறது – அந்த பழங்குடிமக்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற குரலையே நான் அதிகம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்

 

ஜெ

 

Dear Jeyamohan

 

 

Well done. Your article on John Allen Chau, an immature chap who violated the laws of the Indian government and degraded the Sentinel Islanders by calling them as Satan’s children is loaded with anguish and “Aram”.  I was surprised to learn that some of the Indians are calling him as a hero just like you have expressed.

 

The Sentinel Islanders were kind enough to let him go on day one when he trespassed. On the second day they shot him with arrows when he tried to enter their property. It is their self-defense.

 

In the USA,  there are State laws where one can defend from an intruder. According to Florida’s Stand Your Ground Law – Section 776.013 Florida Statutes, the law will presume that the defendant had a reasonable fear of imminent death or bodily harm if the alleged victim unlawfully entered one’s property. Texas Castle Doctrine stipulates that one can shoot if they feel threatened by a trespasser. These laws are dangerous to someone who is new to the area or does not know the consequence of knocking at someone’s door to ask for roadside assistance.  Still there are resistance to modify the law to protect the innocent or out of State visitors. But, Allen Chau knows the law and the sentiments of the Sentinel Islanders who do not want any guests. He had trespassed with a superior attitude of a savior, uninvited, looked down upon them as uncivilized, mixed with immaturity and a will to disobey the laws of another country.

 

I also wish at least he did not go on the second day and survived to eventually learn that trespassing is an offence, to disrespect others is even a greater offence.

Warm Regards,

Sobana Iyengar

 

 

அன்புடை ஜெயமோகன் அவர்களுக்கு,

 

தொடர்ந்து சில மாதங்களாக உங்கள் வலைதளத்தில் ஊடுறும் வாசகன் நான் – இன்று என் முதல் கடிதம். உங்கள் அறம் வரிசையிலான கதைகள், பயணக் கட்டுரைகள், பல ஆளுமைகளைப் பற்றிய பதிவுகள், வாசகர் உரையாடல்கள், அறச்சீற்ற பதிவுகள் இன்னபிற – இவற்றில் மூழ்கித் திளைத்தும் இன்றே முதல்தொடர்பு.

 

‘ஊடுறுவல்கள், சூறையாடல்கள்’ – இத்தகைய உண்மையை முகத்தில் அறையும் கட்டுரை எளிதில் இங்குபொதுவாக காணப்பெறாதது. இன்றைய பொருளியல் உலகில் பெரும்பாலானோர் எளிதாக கடந்துசெல்லும் இந்த குற்றச் செயலை எந்த சமரசமும் இன்றி பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.

 

இந்த நிகழ்வின்இக்காலத் தருணத்தில், இந்த கட்டுரை நியாயமாக பரவலாக பகிரப்பட்டு, இந்திய அளவில் ‘viral’ஆகவேண்டியது. சென்டினல் பழங்குடியினரை விட பின்தங்கிய நம்மவரிடம் இதை எதிர்பார்ப்பது அறிவீனமே.

 

என்னளவில்  என்  நண்பர்  குழுக்களுக்கு  கட்டுரைச்   சுட்டியை  பகிர்ந்தும், whatsapp  நிலைப்பாட்டில்  பதித்தும் முயற்சிக்கிறேன்.

 

சென்னை  அருகாமையில்  உங்கள்  கூடுகை  அல்லது  கட்டண  உரை நிகழ்வில்  நேரில்  காணும்  ஆவலுடன்,

 

— தெக்களூர் பாலா

 

அன்புள்ள பாலா

 

நன்றி. இத்தகைய தருணங்களில் ஒரு நடுநிலையான, எல்லைமீறாத நோக்கை உருவாக்குவது, அதேசமயம் உணர்ச்சிகரமாக இருப்பது எளிதல்ல

 

என் தரப்பை சொல்லியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்

 

ஜெ

முந்தைய கட்டுரைசிதைவு -அனிதா அக்னிஹோத்ரி
அடுத்த கட்டுரைநிழல் யுத்தம் -கடிதங்கள்