தமிழர்களின் வரலாறு இருண்டதா -கடிதங்கள்

Daily_News_Nove_2018__2177240252495 (1)

தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா?

 

திரு ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம் .தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா? கட்டுரையை படித்தேன் .உங்களின் எதிர்வினை அருமை . உங்கள் கட்டுரையை படித்தபோது தான் மாற்று மதத்தினர் இதுவரை மேற்கொண்ட ஹிந்து மத கலாச்சாரங்கள் குறித்த திரிபு வாதங்களை ஐயமின்றி புரிந்து கொள்ள முடிந்தது .மேலும் தற்போதைய பத்திரிக்கை  செய்திகளின் படி அந்த உலகளாவிய கருத்தரங்கம்  தள்ளிவைக்கப்பட்டதாக St.Joseph’s  college trichy முதல்வர் ஆரோக்கியசாமி தெரிவித்திருக்கிறார் .அதற்க்கு அவர் மத்திய அமைச்சர் ராஜா அவர்களின் எதிர்வினையையோ /அல்லது தமிழக அமைச்சர் மா .பா .பாண்டியராஜன் அவர்களின் கண்டனத்தையோ குறிப்பிடாமல் , கஜா புயல் நிவாரண பணிகளை  கல்லூரி ஆசிரியர்கள்  மேற்கொள்ளவிருப்பதால் கருத்தரங்கம்  தள்ளிவைக்கப்பட்டதாக கூறியுள்ளார் .ஆனால் மத்திய அமைச்சர் எச்.ராஜா அவர்கள் கருத்தரங்கம் முற்றிலும் கைவிடப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ..நன்றி ஜெயமோகன் அவர்களே .
தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்

 

அன்புள்ள செந்தில்,

 

கருத்தரங்கைத் தடைசெய்வதில் எனக்கு உடன்பாடில்லை. இப்போது இது வெளிப்படையாக ஆகிவிட்டமையால் இன்னும் பூடகமாக, ரகசியமாக இதைச்செய்வார்கள். இது அவர்களின் ரகசியத்திட்டம். இது இந்நாட்டுக்கு வெளியே இருந்து வடிவமைக்கப்பட்டு இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. நினைத்தாலும் இதை தடுக்கமுடியாது அவர்களால். இவர்களைப்புரிந்துகொள்வது, அறிவுத்துறையில் இவர்களின் ஊடுருவலை அறிந்துகொள்வதும் மட்டுமே செய்யவேண்டியது

 

ஜெயமோகன்

 

 

அன்புள்ள ஜெ

 

நலம்தானே?

 

திருச்சி புனித ஜோசப் கல்லூரி நடத்தவிருந்த கருத்தரங்கம் ‘ஒத்திவைக்கப்பட்டுள்ளது’. அமைச்சர் பாண்டியராஜன் வெளிப்படையாகவே விடுத்த எச்சரிக்கைதான் காரணம். இந்த நிறுவனம் தமிழக அரசின் பூரண நிதியுதவியுடன் நடத்தப்படுவது. தமிழையும் தமிழ்ப்பண்பாட்டையும் இழிவுசெய்யும் நோக்கத்துடன் ஒரு கருத்தரங்கு அங்கே தமிழக அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படுவது மிகப்பெரிய கீழ்மை. அதை கண்டித்துத் தடுத்து நிறுத்திய பாண்டியராஜன் நன்றிக்குரியவர்.

 

தமிழிலக்கியத்தில் பெண்களின் நிலை என்பது கருத்தரங்கின் தலைப்பு என்றால், தமிழிலக்கியம் பெண்களைப் பார்த்த அணுகுமுறையில் உள்ள சாதகமும் பாதகமுமான அம்சங்கள் பேசப்பட்டிருந்தால் அது கல்வித்துறை ஆய்வு. அதற்கு தடைவிதிக்கமுடியாது. ஆனால் இது தலைப்புகளே சொல்வதுபோல நேரடியான, அப்பட்டமான வெறுப்புப் பிரச்சாரம். அதன் அடிப்படையில் இருப்பது மதவெறி மட்டுமே. அதை ஒரு கல்விநிறுவனத்தில் எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது.

 

எஸ்.ராஜேந்திரன்

 

 

அன்புள்ள ராஜேந்திரன்,

 

கல்வியமைச்சர் என்ற முறையிலும், தமிழ்ப்பெருமையைப் பேசும் திராவிட அரசியலின் பகுதி என்றவகையிலும் அமைச்சரின் இடையீட்டைப் புரிந்துகொள்கிறேன். இத்தகைய கண்காணிப்பு இவர்கள்மேல் எப்போதுமிருக்கவேண்டும். ஆனால் அது கருத்தரங்குகள், சிந்தனைகள்மேல் அரசின் தலையீடாக ஆகிவிடக்கூடாது

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ

 

நீங்கள் சொன்னதுபோல தொட்டதற்கெல்லாம் அறிக்கைவிடும் திமுக, திக தலைவர்கள் திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி வகையறாக்கள் ஒருவார்த்தைகூட சொல்லவில்லை. ஒப்புக்குக் கூட கண்டிக்கவில்லை. இணையத்திலேயே ‘ஜோசப் கல்லூரி எவ்ளவு பாரம்பரியமானது தெரியுமா? நான்லாம்கூட அங்கதான் படிச்சேன். ரொம்ப நல்லவங்க’ என்றபாணியில்தான் திமுகவினரும் திகவினரும் எதிர்வினையாற்றுகிறார்கள். இதேபோல சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் இதே தலைப்புகளில் ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டிருந்தால் தமிழின் கௌரவம் காக்க இவர்களெல்லாம் எப்படியெல்லாம் எம்பிக்குதித்திருப்பார்கள் என நினைக்கும்போதுதான் இவர்களெல்லாம் உண்மையில் யார் என்பது புரிகிறது

ஆர்.சிவசங்கர்

 

அன்புள்ள சிவசங்கர்,

 

அவர்களால் ஒரு பேச்சுக்குக் கூட ஒரு வார்த்தை கண்டிக்க முடியாது. இதன் கணக்குகள் மிக அப்பட்டமானவை. அந்தத் தலைப்புக்களிலே பாருங்கள், எல்லா தலைப்புக்களும் அந்த மூலநூல்களை எதிர்மறையாக, பெண்ணடிமைத்தனம் மிக்கவையாகப் பார்ப்பவை. ஆனால் வைரமுத்துபற்றிய தலைப்பு மட்டும் வைரமுத்து முதிர்கன்னிகளைப்பற்றி எழுதியதை மட்டும் பேசுகிறது, வைரமுத்து கவிதைகளை விதந்தோதுகிறது. அதாவது மொத்தத் தமிழிலக்கியத்திலும் வைரமுத்து எழுதுவது மட்டும்தான் முற்போக்கானது என்று பொருள். வைரமுத்துவின் பாடல்களில் இல்லாத பெண்ணிழிவுபடுத்தல்களா?

 

ஜெ

 

அன்புள்ள ஜெ,

 

இது செய்தி

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண் உரிமைக்கும் பாலின சமத்துவத்திற்கு எதிரான ஆணாதிக்க ஆணவத்தோடு விடுவிக்கப்பட்ட அச்சுறுத்தலே கருத்தரங்கம் ஒத்திவைப்பு என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. 

 

திருச்சி பல்கலைக்கழகம் பெண்ணியக் கருத்தரங்கை நடத்தவில்லை, தமிழிலக்கியமரபை ஒட்டுமொத்தமாக இழிவுசெய்யும் மதச்சார்புள்ள கருத்தரங்கை நடத்த முற்பட்டது. அந்த பட்டியலில் எந்த கிறித்தவநூலும் இடம்பெறவில்லை. இதுதான் குற்றச்சாட்டு, அதைக் கண்டிப்பவர்கள் பாலினசமத்துவத்திற்கு எதிரானவர்கள் என இந்த முற்போக்கு எழுத்தாளர்சங்கம் குற்றம்சாட்டுகிறது

 

இவர்கள் உண்மையில் எவருடைய குரல்கள்?

 

ராஜசேகர்

 

அன்புள்ள ராஜசேகர்

 

சென்ற இருபதாண்டுக்காலமாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப் பெருமன்றம் பேசிவரும் எல்லா பண்பாட்டுக்கருத்துக்களும் இப்படி வெவ்வேறு கிறித்தவ அமைப்புகளின் கருத்தரங்குகள் வழியாக அவர்களுக்கு அளிக்கப்படுவனவே

 

செம்மொழி நிதியை பெற்றுக்கொண்டு தமிழகம் முழுக்க முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சங்க இலக்கியம் பற்றிய கருத்தரங்குகளை நடத்தியது. அவற்றில் அவர்கள் மேலே குறிப்பிட்ட கிறித்தவ அமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கருத்துக்களை, மொத்தத் தமிழ்ப்பண்பாடும் அடிப்படையில்  காட்டுமிராண்டித்தனமானது என்னும் கோணத்தையே முன்வைத்தனர்

 

ஜெ

முந்தைய கட்டுரைபிரதமன் -கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனை அறிய…