ராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்

_MG_6871

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்

ஜெ அவர்களுக்கு

வணக்கம்.

விஷ்ணுபுரம் விருது விழா அறிவிப்பைத் தொடர்ந்துதான் விருதாளர் பற்றி ஓரளவாவது அறிந்து கொள்வதும் அவரது படைப்புகளை வாசிக்கத் தொடங்குவதும் வழக்கம்.  அவ்வகையில் இம்முறை ராஜ் கௌதமன் எனும் பெயரே ஒரு நவநாகரீகயுவனுக்குரிய வசீகரத்துடன் இருந்தது.  அவரது பால்ய மற்றும் மத்தியக்கால சுயசரிதை நாவல்கள் கிடைக்க சாத்தியப்படுவதற்கு முன்பாக அதன் தொடர்ச்சியாக வந்திருந்த மூன்றாம் பாகம் கைவசப்பட்டது.  ராஜ் கௌதமன் பிள்ளைப்பருவத்திலும் இளமையிலும் வளர்த்தெடுத்த தனது பிறிதொரு வடிவமான சிலுவைராஜ் ஒரு இளம்வயோதிகனாக தான் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஒரு முழுநீள தன்வரலாற்று நாவல் வடிவில் எழுதியிருந்ததுதான் லண்டனில் சிலுவைராஜ்.  இந்தத் தருணத்தில் சொல்லிக்கொள்ள விழைவது நான் ஜப்பானில் கல்யாணராமன் பார்த்த பின்பே கல்யாணராமன் பார்த்த தலைமுறை.

வாசிக்கத் தொடங்கியதும் எனை ஆச்சரியத்தில் முழுக்காட்டியது என்னவெனில் பேராசிரியராக அவர் பணிபுரிந்த புதுவை காஞ்சி மாமுனிவர் பிஜி ஆய்வு மையமும் அவர் அன்றாடம் புழங்கிய லாஸ்பேட் கல்லூரி சாலை, ஏர்போர்ட் ரோடு இறக்கத்தில் அமைந்த பெட்டிக்கடை ஆகியவைகளும் என் வசிப்பிடத்திற்கு அருகிலானவைகள் மட்டுமல்ல ஒரு வகையில் அணுக்கமானவைகளும் கூட.

தன் ஒரே மகளையும் கட்டிக்கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பியபின் தன் மனைவியின் வசப்பட்ட கணவனாகதானுண்டு தன் வேலையுண்டு அனுதினமும் மருந்தளவு மதுவுண்டு ஒரு குறுகிய சட்டகத்திற்குள் தன் மீதமுள்ள காலத்தையும் ஓட்டிவிடக்கூடிய எண்ணம் கொண்ட சிலுவைராஜ் விருப்பமின்றி ஒரு கோடை விடுமுறையில் மனைவியுடன் தன் மகள் வசிக்கும் லண்டனுக்குச் செல்ல நேர்கிறது.

எனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை கண்ணாடி போல் பிரதிபலித்த நிகழ்வுகளை திரையிலும் எழுத்திலும் பலமுறை கண்டுணர்ந்ததுண்டு.  முதல் முறையாக மனித வாழ்வின் பருவ, கால வெளியை கடந்து கிட்டத்தட்ட அது போலவே அமையவிருக்கும் வாய்ப்பு பிரகாசமாகவுள்ள எனது ஏழாம் எட்டில் கொண்டு நிறுத்தியது, மனைவியுடன் சிலுவை படும் பாடு அல்லது வைஸ் வெர்ஸா.  இளம்வயோதிக வாழ்வினிமைகளுள் ஒன்றல்லவா அது என எண்ணிக்கொண்டேன்.

எங்கோ வனாந்தரத்தில் தனியாக மேய்ந்து கொண்டிருக்கின்ற காண்டாமிருகமாக இருக்க வேண்டியவன் தனக்கு கணவனாக வந்து வாய்த்திருக்கிறான் என்ற ஞானத்தை கண்டறிந்து அதன்பின் அதை வசப்படுத்தி ஒரு வீட்டு விலங்காக மாற்ற வேண்டிய கடமை தனக்குள்ளதாக நினைக்கும் மனைவி வாய்க்கப்பெற்றவர் சிலுவைராஜ் மட்டுமல்ல என்பதை வாசகர்கள் யாவருமறிவர்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா எனும் தொனியில் அல்லாமல் உலகத்தையே ஆண்ட ஓர் ஏகாதிபத்திய நாட்டின் தலைநகரில் காலடி பட்டதுமே பிரிட்டிஷ் நாகரீகத்தையும் கலாசாரத்தையும் தனக்கு கிடைக்கப்பெற்ற நாற்பது நாள்களுக்குள் ஒரு தமிழிந்தியனாக தனது எண்ணங்களுக்கு ஏற்ற மார்க்சிய சிந்தனைகொண்டு விரைவாக அதுவும் முழுதாக அறிந்துவிட வேண்டும் என்ற அவசரார்வம் சிலுவையை பற்றிக்கொள்கிறது.  விளைவாக தனது லண்டன் மற்றும் த்ரீ கேப்ஸ் பயணானுபவங்கள் பற்றி அவர் முன்வைத்த யாவும் வெறும் தகவல்பூர்வமானவைகள் மட்டுமல்ல.  மாறாக வரலாறு, தத்துவம், பண்பாடு, கலாசாரம், நாகரீகம் சார்ந்த அவரது வலுவான வாதங்கள்.  எடுத்துச்சொல்ல முற்பட்டு கெடுத்துவிடும் எண்ணமில்லை.  விட்டுவிடுகிறேன்.

அவரது ஒவ்வொரு அவதானிப்பும் பிரத்யேகமானது.  அதன் மீதான தனது உளக்கருத்தியலை மிக ஆழமாக செலுத்தி அவற்றை எழுத்தில் கொண்டு வரும்போது நட்சத்திர குறியீட்டு முத்திரை பதித்த எள்ளல்களை நூல் நெடுகிலும் கொட்டித் தெறிக்கவிட்டிருக்கிறார்.

இரா. முருகனின் லண்டன் டயரி வாசித்திருக்கிறேன்.  சுவாரஸ்யமான புத்தகம் தான்.  ஆனால் ராஜ் கௌதமனின் லண்டனில் சிலுவைராஜ் என் வரையில் சுவாரஸ்யத்தில் இருந்து கடைந்து எடுக்கப்பட்ட உன்னத சுவாரஸ்யம்.

மிக்க அன்புடன்

மணிமாறன்

புதுச்சேரி.

***

ராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்
ராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்
ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்
சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்
சுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1
ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2
சிலுவைராஜ் சரித்திரம் பற்றி
ராஜ் கௌதமனின் உலகம்
ராஜ் கௌதமனும் தலித்தியமும்
ராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்
ராஜ் கௌதமன் படைப்புக்கள்
ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்
சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்
ராஜ்கௌதமனின் இரு நூல்கள்
ராஜ் கௌதமன் -கடிதங்கள்
முந்தைய கட்டுரைஆனந்தியின் அப்பா -கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைவெறுப்பின் வலை -கடிதங்கள்