அஞ்சலி: ஐராவதம் மகாதேவன்

airavatham-mahadevan

 

தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்வரலாற்றியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் இன்று மறைந்தார்.

 

ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப்பணியில் இருந்தவர். தன் ஆர்வத்தால் தமிழ் மொழி ஆய்விலும் கல்வெட்டு ஆய்விலும் ஈடுபடுத்திக்கொண்டு அத்துறையின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவராக ஆனார். அவரை இத்துறைக்கு ஆற்றுப்படுத்தியவர் வரலாற்றாய்வாளரான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி. இந்த தலைமுறையின் முதன்மையான தொல்வரலாற்றியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்தான் எனலாம்

 

சுருக்கமாக அவருடைய பங்களிப்பு என இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம். நெடுங்காலம் தமிழகவரலாற்றின் துலங்காப் பகுதியாக இருந்தது சங்ககாலம்தான். இலக்கியச் சான்றுகள் கிடைத்தன, ஆனால் சொல்லும்படியான தொல்லியல் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. சங்ககால மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட கல்வெட்டுகள் எவையும் வாசிக்கப்படவில்லை. ஆகவே சங்ககாலம் என்பதே பல்லவர்கால புலவர்கள் சிலரின் கற்பனை என்னும் கருத்து பொதுவாக இந்திய அறிவுலகில் நிலவியது.

 

கே.ஏ.நீலகண்டசாஸ்திரி 1961ல் ஐராவதம் மகாதேவனிடம் தமிழகத்தின் சமணக்குகைகளில் பல கல்வெட்டுகள் உள்ளதாகவும், அவை தொன்மையான பிராமி எழுத்துக்களில் தமிழில் எழுதப்பட்டுள்ளதாகவும் அவை முறையாக வாசிக்கப்படவில்லை என்றும் சொன்னார். ஏற்கனவே பிராமி லிபியில் ஐராவதம் மகாதேவனுக்கு அறிமுகம் இருந்தது. புகளூர் குகையில் இருந்த கல்வெட்டை அவர் வாசித்து வெளியிட்டார். இந்த எழுத்துவடிவை தமிழ்பிராமி என அவர் அடையாளப்படுத்தினார்.

 

தொடர்ந்து  ஐராவதம் மகாதேவன் சங்ககாலத்தைச்  சேர்ந்த முக்கியமான கல்வெட்டுகள் சிலவற்றை கண்டடைந்தார். உதாரணம் கேரளத்தில் எடக்கல் குகையில் உள்ள தமிழ்பிராமி கல்வெட்டு. அது கிட்டத்தட்ட மலையாளமாகவே இருந்தது. கிபி நான்காம்நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அது. மலையாளத்தின் தொன்மையை குறிக்கும் கல்வெட்டாக அது இன்று கருதப்படுகிறது. பிழையாகவோ போதாமைகளுடனோ வாசிக்கப்பட்ட கல்வெட்டுகள் பலவற்றை விரிவான மறுவாசிப்புக்கு உட்படுத்தினார். சங்ககால மன்னர்களின் பெயர்களை அவற்றில் கண்டடைந்தார். தொல்லியல் சான்றுகளுடன் சங்ககாலத்தை இந்திய ஆய்வுப்புலத்தில் நிறுவினார்

 

சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் பிராமியின் தொல்வடிவமான எழுத்துரு ஒன்றில் தமிழ் எழுதப்பட்டுள்ளது என்பதையும் அது சிந்துசமவெளி சித்திர எழுத்துக்களுடன் பொதுவான கூறுகள் கொண்டுள்ளது என்பதையும் விரிவான ஆய்வுத்தரவுகளுடன் உலகத் தொல்வரலாற்று ஆய்வுக்களத்தில் நிறுவினார். அந்தத் தளத்தில் அவருடைய ஆய்வுநூல் Early Tamil Epigraphy : From the Earliest Times to the Sixth Century A.D ஒரு பெரிய செவ்வியல் ஆக்கமாகக் கருதப்படுகிறது

 

அத்துடன் 1987- 1991 காலகட்டத்தில் தினமணி நாளிதழின் ஆசிரியராக ஐராவதம் மகாதேவன் பணியாற்றினார். அதுதான் உண்மையில் தமிழ் நவீன இலக்கியத்தின் திருப்புமுனை. நவீன இலக்கியம் என்பதையே தினமணி ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்கும் மேலாக ஒதுக்கி வைத்திருந்தது. பிற வணிக இதழ்களிலும் நவீன இலக்கியத்திற்கு எவ்வகையிலும் இடமிருக்கவில்லை. தமிழ் நவீன எழுத்து என்பது முழுக்கமுழுக்க சிற்றிதழ்ச்சூழலில், இருநூறு வாசகர்களுக்குள் ஒடுங்கியிருந்தது. ஐராவதம் மகாதேவன் தினமணி இணைப்பாக கொண்டுவந்த தமிழ்மணி இதழ் தமிழின் பொதுவாசகர்களில் ஒரு தலைமுறைக்கே புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரையிலான நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தது.

 

தமிழ்மணியில் ஏராளமான சிற்றிதழ்சார் எழுத்தாளர்கள் எழுதினர். அது ஒரு பெரிய தொடக்கம். அன்று ’சுந்தர ராமசாமி சொன்னார், ‘புதுமைப்பித்தம்ங்கிற பேரை தினமணி அடிக்குமா, அடிச்சா அச்சாகுமான்னே சந்தேகம் இருந்திச்சு. இப்ப அது தீந்திருச்சு”.ஐராவதம் மகாதேவனுக்கு நவீனத்தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருமே கடன்பட்டுள்ளனர்.

 

ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு அஞ்சலி

 

ஐராவதம் மகாதேவன் ஹிந்து 

 

முந்தைய கட்டுரைதமிழர்களின் வரலாறு இருண்டகாலமா?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79