நெல்லையில் ஒருநாள்- கடலூர் சீனு

c
இது பத்தி நீங்க ஒரி பண்ணிக்காதீங்க, உங்க வேலைய பாருங்க, நீங்க நெல்லை போக பயண ஏற்பாடு, நீங்க கிளம்புற நேரம் ரெடியா இருக்கும் ஓக்கேயா? அழகா நீட்டா  ஓகே டன்

பத்து  நாளாக சிவாத்மா மணிமாறனுக்கு சொல்லிக்கொண்டிருத்த அதே பதிலை நாங்கள் கிளம்பும் நாளான வெள்ளிக்கிழமை மதியமும் சொன்னார்.  நானும் திருமாவளவனும் கிளம்பி பாண்டி வந்து இறங்குகையில் சிவாத்மாவால் கைவிடப்பட்டிருந்த மணிமாறன் வேறு பயண ஏற்பாடு முடித்திருந்தார். சிவாத்மா குற்ற உணர்வில் தவிக்காமல் இருக்கும் பொருட்டு திரும்பி வரும் பயணத்தின் ஏற்பாட்டை பதிலுக்கு அளித்திருந்தார் மணிமாறன். சனிக்கிழமை அதிகாலை நெல்லை வந்து இறங்கி எங்கள் வீடு சென்றோம்

நண்பர்கள் இருவருக்கும் இதுவே முதல் நெல்லை தரிசனம். எங்கள் வீட்டில் இப்போது சித்தியும் தம்பியும் மட்டும் இருந்தார்கள் நெல்லையப்பர் கோவில் எதிரே அந்தக்கால கூட்டுக்குடும்ப வீடு. ஒரு சிறிய இடம் வாங்கி அதில் குடும்ப உறுப்பினர்களும் உழைக்க முதலில் ஓடு வேய்ந்து பிறகு பக்கத்தில் எடுத்துக்கட்டி பிறகு ஓடு நீக்கி வாரை போட்டு தளம் எழுப்பி என வருடம் வருடமாக வளர்ந்த வீடு அது. முன்வாசல் பின்வாசல் தவிர வீட்டுக்குள் எந்த வாசலுக்கும் ஜன்னலுக்கும்  கதவு இருக்காது ஒவ்வொரு சுவரும் ஒன்றரை அடி அகலம் தடிமன்.  வீட்டில் உள்ள உறுப்பினருக்கு திருமணம் நடந்து மருமகள்கள் வரும்போது தவணை முறையில் இரவில் ஒரு இடம் சற்றே மறைப்பு கொண்டு  [வார சுற்று முறையில்தான் :)]  கிட்டும். இடுங்கலான பாதைகள் இடுங்கலான மாடிப்படி இடுங்கலான கழிவறை. உள்ளே செல்லும் ஒருவர் குனியாமல் அப்படியே, குத்த வைத்து எழும் சாகசம் அறிந்திருக்க வேண்டும். முன்பு அங்கே கோப்பைக்கு பதில், எடுப்பு கக்கூஸ் எனும் அமைப்பு இருக்கும்.  பின்பு தெருவுக்கு சாக்கடை வசதி வந்த போது, வீட்டு சாக்கடையின் திறந்த வாய் அந்த அறைக்குள் இருந்தது கதவை மூடா விட்டால் பெருச்சாளி வீட்டுக்குள் வந்து விடும் மூடி வைத்தால் பெருச்சாளி கும்மாளத்தால் சாக்கடை சிதறிக் கிடக்கும். மருமகள்கள் முறை போட்டு கழுவி விடுவார்கள் வீடு எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிக் கிடந்த வீடு,  காலம் மாறி வீடு வளர்ந்து இப்போது நவீன மேற்கு கோப்பை பதிக்கப்பட்டு விட்டது. அடிபைப் மோட்டார் ஆகி விட்டது. முன்வாசல் என்றே நாங்கள் நம்பி விட்ட பின்வாசல் வழியே நண்பர்களை வீட்டுக்குள் அழைத்து சென்றேன். மேல் வீட்டின் தம்பி புது வீடு கட்டி குடி செல்கிறான். ஆகவே வீடு முழுதும் இடம் மாறும் பொருட்களால் கந்தர் கோலமாக கிடந்தது.  நண்பர்கள் தன்னியல்பாக வீட்டுக்குள் பொருந்திக்கொண்டார்கள். சித்தி வசம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஆற்றுக்குளியல் போடக் கிளம்பினோம்.

எப்போதும் வாகையடி முக்கு போய்,இடதுபுறம் திரும்பி வலது புறம் வயல்கள் செழித்து இறுதியாக  குன்றில் முட்டி நிற்கும் பிரும்மாண்டமான நீர் மருதைகள் வரிசை கட்டிய சாலை வழியேதான் பொருனை சென்று குளிப்பது எனது வழக்கம். இப்போதும் அந்த பாதை வழியேதான் நண்பர்களை அழைத்து சென்றேன். கால்நூற்றாண்டு  முன்பு குதிரை லாயம் இருந்த இடத்தில் இப்போது அருணகிரி தியேட்டர். பக்கத்தில் இப்போது  புதிதாக ஏதோ சித்தர் பீடம். ரயில்பாதை கடந்தால் தென்படும் நெடிதுயர்ந்த நீர்மருதைகளில் சரிபாதி காணாமல் போய்  டவ்னில் இருந்து ஜங்க்ஷன் செல்லும் மண்பாதை அகலப்பட்டு புறவழி சாலையாக மாறி விட்டது. நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே நிற்கும் மருதைகளில் எஞ்சி இருக்கும் பழம்தின்னி வவ்வால் கூட்டத்தை நண்பர்களுக்கு காட்டினேன். படித்துறை அருகே இந்த முறை புதியதாக ஒரு மரம் அகற்றப்பட்டு புதியதாக ஒரு கோவில் முளைத்திருந்தது. வெள்ளம் தாங்கி அம்மன் என்று கடலூர் பக்கம் அழைக்கப்படும் வெள்ளத்து இசக்கி இப்போது ஏதோ மீசைக்கார சாதிக்காரனின் கனவில் வந்து கோவில் கேட்டு அமர்ந்து விட்டாள்.  கோவில் வாசலில் குளியல் பொருட்கள் விற்க சிறிய கடை ஜோதிடன் எவனோ செல்போன் நம்பர் போட்டிருந்தான்.

அதிகாலை சூரியனின் வழுக்கைத்தலை தென்பட, நீர்த்தடம் பூசிய படித்துறை மண்டபம்  செம்பு வண்ணம் கொண்டு ஒளிர பொருனை பொன்வண்ணம் கொண்டு தளதளக்க எங்கோ ஒரு மயில் உவ்வாவ் என்றது சிவாத்மா போல. ஹம்… அவரும் வந்திருக்கலாம். ஆற்றுக்குள் மீன்களுக்கு இதயத்தாக்கு வரும் வண்ணம்  விழுந்து சாடினோம்.  ”ஆண்டவா அரை பக்கிட் தண்ணீல மட்டுமே தினமும் குளிச்சு வளந்த எனக்கு இன்னைக்கு குளிக்க இவ்ளோ தண்ணியா என்ன பண்றத்துன்னே தெரியலையே” மணிமாறன் கண்கலங்கினார். திருமா செல்பிக்களை எடுத்து யாருக்கோ அனுப்பி அவர்களின் கும்பியை புகைய வைக்கும் முயற்சியில் இறங்கினார். ஒன்றரை மணிநேரம் மீன்கள் கடிக்க கடிக்க குளித்தோம். அன்று அதிகாலைதான் இரண்டுநாள் மழை முடிந்திருந்தது .ஆனாலும் நீர் வெது வெது என்றே இருந்தது. குளித்து முடித்து குறுக்குத்துறை முருகனை சென்று வணங்கி விட்டு டவ்ன் வந்து சந்து பொந்துகளில் சுற்றினோம். காலம் நூறு வருடங்களுக்கு முன்பே உறைந்து நின்றுவிட்ட சில தெருக்களுக்கு நண்பர்களை அழைத்து சென்றேன். நல்ல பசி. காலை உணவு முடித்து நெல்லையப்பர் கோவில் சென்றோம்.

b

சமீபத்தில் கோவில் கும்பாபிஷேகம் தேரோட்டம் எல்லாம் முடிந்து இது வரை நான் காணாத புது மெருகு கொண்ட கோவில்  கதகளி மேடையில் திறநோட்டம் காட்டும் கர்ணன் போல நின்றிருந்தது. அம்மன் சன்னதி வழியே கோவிலுக்குள் நண்பர்களை அழைத்து சென்றேன். அதன் வழியே கோவில் நுழைவதே எப்போதும் எனக்கு பிடித்தமானது.காரணம் அம்மன் சன்னதி கோபுர வாயில் உள் விதானத்தில் நூறுக்கு குறையாத மரச்சிற்பங்கள் உண்டு. பலர் அறியாதது .அறிதாலும் காண அபூர்வம் கோவிலுக்கு உள்ளே இருக்கும் கடைகளின் இழுத்து கட்டப்பட்ட தார்பாய்கள் அனைத்தயும் மறைக்கும் ,அதை அகற்றினால் அத்தனை சிற்பங்கள் மேலும் கட்டி இழுக்கப்பட்டிருக்கும் கோபுரம் மற்றும் கடைகளுக்கான மின்சார ஒயர்கள் வெறுப்பேற்றும் .

இம்முறை கும்பாபிஷேக வைபவம் காரணமாக சிற்பங்கள் வார்னீஷ் அடித்து புதுப்பொலிவு கொண்டு ,மறைப்புகள் இன்றி துலங்கின ,சரிபாதி கலவி சிற்பங்கள். எனக்கு பிடித்தது தனது குறியை தானே சுவைக்கும் கிங்கரன் சிற்பம் . குறி, கனவு விருப்பம் போல நீண்டு , ஒரு மாலை போல தோளில் கிடக்கும் .  இரண்டடி உயர சிலை .சின்ன வயதில் அங்கே நின்று அண்ணாந்து பார்த்தால் ,புகாரி மாமா ,சித்தப்பா வசம் சொல்லிவிடுவார் . இன்று புகாரி மாமாவோ சித்தப்பாவோ இல்லை . அந்த சிலை மட்டும் சுவைத்தபடி அங்கேயே நிற்கிறது ,பழிப்புக் காட்டியபடி ,காலரூபனாக . திடீர் என உலுக்கிக்கொண்டு எழுந்து திருமா வாய் பிளந்து ரகசிய குரலில் சொன்னார் ”சார் எல்லாம் கலவி சிற்பம் சார் ” சரிதான் என அவரை கையைப்பிடித்து இழுத்து கோவிலுக்குள் அழைத்து சென்றேன் .

அம்மன் சன்னதி முன்பு ,வசந்த மண்டபத்தின், தொகுப்பு  ,தூண்களை வழக்கம்போல யாரோ யாருக்கோ டாங் டாங் என தட்டி,”பாருங்க ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு சத்தம் வரும் .சங்கீத தூணுங்க ” …சிற்ப மேன்மை உரைக்க ,மற்றவர் அவரும் டாங் டாங் என தட்டிப்பார்து சிற்ப மேன்மை அறிந்துகொண்டிருந்தார் .  அம்மனை தரிசித்து விட்டு கோவில் சுற்றினோம் .கோவில் மொத்தமும் ஆரஞ்சு வண்ண குழல் விளக்கு ஏற்றப்பட்டு , இதோ இந்த முடுக்கு திரும்பினால் , மோகமுள் ஈரோயினியை பார்த்துவிடலாம் என்றொரு உளமயக்கை உள்ளே விதைத்து . நண்பர்களுடன் பேசியபடி கோவிலின் ஒவ்வொரு அங்கமாக சுற்றிக் காட்டினேன் .தமிழ் நிலத்தின் பிற தொன்மையான கோவில்கள் போலவே அபூர்வமான கோவில் , முருகன் வழிபாடு என இன்று நாம் காண்பது ,முருகு எனும் பெயரில் அமைத்த தமிழ் நிலக் கடவுளின் கீழ் தொகுக்கப்பட்ட வெவ்வேறு முருகனை ஒத்த கடவுள் வழிபாடுகளின் தொகுப்பே .ஒரு முருகன் அழகன் ,காதலன் ,ஒரு முருகன் போர் தெய்வம் ,முத்துவேலன் கடல் மக்கள் காவலன் ,வள்ளி கந்தன் வேறொரு மக்கள் குழு தெய்வம் . இந்த வெவ்வேறு முருகர்கர் வந்து இணையும் பொது தொகுப்பு வெளியே இந்த கோவில் .ஒவ்வொரு முருகனுக்கும் தனித்தனி சன்னதி இங்கே உண்டு ,இப்படி சைவத்திலும் வெவ்வேறு போக்குகள் உண்டு , பாசுபத சைவம் ஒரு மரபு ,நடராஜ தத்துவம் ஒரு மரபு ,இப்படி சைவ மரபு சார்ந்த அத்த்யனை சைவ மூர்த்தங்களும் தொகுக்கபட்ட கோவில் இது .  அதுபோலவே சாக்தம் தொகுத்தளித்த அத்தனை சக்தி வடிவங்களுக்கும் இங்கே தனித்தனி சன்னதி உண்டு .  கைலையை தூக்கும் ராவணேஸ்வரன் சிலையை கடந்து , கூம்பி முடியும் விதானம் கொண்ட ,இருளும் மௌனமும் கொண்ட மண்டபம் வழியே ,தாமிசபையை கடந்து ,சுற்றி , நெல்லையப்பர் சன்னதி நோக்கி நடந்தோம் .வழியில் குபேர லிங்கம் ,பொன்வண்ண விளக்குகளால் ,பொன்னே போல ஒளிர்ந்துகொண்டு இருந்தது . சன்னதி முன்பு கர்ணன் ,அர்ஜுனன் ,வீரபத்ரர் ,சிலைகளை நீண்டநேரம் ரசித்து நின்றோம் .விதானத்தின் ஒளிக்கான பிளவு ஒன்றின் வழியே ,சாய்கோணத்தில் காலை ஒளி கர்ணன் மேல் விழுந்து , முற்ற முழுதாக ,இக்கணம் உயிர் கொண்ட ,உடலே இது ,என சிற்பத்தின் கருமை , மானுட உடலின் சருமக் கருமை கொண்டு துலங்கியது . வலது கால் கட்டை விரலில் மிஞ்சி , போரின் போது அணியும் வெண்டயம்,தண்டை , கால்களின் குதிரைச்சதையை கெளவி அமையும் வளை, தொடை முதல் இடை வரை இறுக கட்டிய ஆடையின் மடிப்புகள் , ஆடைக்கான அலங்கார தையல் வேலைகள் , முழங்கால் துவங்கி இடை வரை மூன்று வெவ்வேறு , நுட்பமான செதுக்கு கொன்ட  ஆரங்கள் ,தொப்புள் வரை புரளும் சங்கிலிகள் ,விரிமார்பின் மையத்தில் பதக்கம் ,அதற்கு மேலே அட்ட்டிககைகள் ,முத்து மாலைகள் ,கழுத்தை அணைக்கும் ஆரங்கள் , கரங்களின் மோதிரங்கள், மணிக்கட்டின் கங்கணம் ,கேயுரம் , புஜ வளைகள், தோள்வளைகள் , தோள் தொட்டு துவண்டு கிடக்கும் செவிக் குழைகள், முறுக்கிய மீசை ,இணைந்து நிற்கும் புருவங்களின் மத்தியில் தீபச் சுடர் என திலகம் ,இடக்கையில் வில் ,வலக்கையில் நாகம் ,மூடிய விழிகளின் புருவ மேட்டின் மேலும் ,கன்னக் கதும்பிலும் காலை  ஒளி இழைய,….நெடிதுயர்ந்து நிற்கும் நாகபாசனின் முகத்தில் அது என்ன ?….கருணையா? துயரமா ? ….ஆம் துயரம்தான் …கருணை கொண்ட துயரம் .இந்த வாழ்வு எனும் ,இணையே அற்ற தனிமையில் தனியே நிற்க அஞ்சி ,கிடைத்ததை எல்லாம் அள்ளிப் பற்றி ,பற்றிய அனைத்தையும் இழந்து விடுவோமோ என ,துயருற்று நிற்கும் மானுடத்தின் முன்பு , அதன் பேதைமை கண்டு துயருற்று நிற்கும் கருணை , அந்த சூரியன் போல , கொடுத்து ,கொடுத்து ,மட்டுமே வாழ்ந்து சென்ற கருணை …

h

மனம் பொங்கி அடங்கி , மௌனம் கொள்ள சன்னதிக்குள் சென்றோம் , முகமண்டபம் தொகுப்பு தூண்கள் கொண்டு , கல்லை மலர்களாக மலர வைத்த தலைகீழ் வனத்தை விதானமாக கொண்டு நின்றிருந்தது .கடந்து உள்ளே சென்று கருவறைக்கு வெளியே நின்று நெல்லையப்பரை தரிசித்தோம் .ஆளுயர விநாயகர் எங்களை பார்த்துக் கொண்டிருந்தார் . வெளியே வந்து வெளிப்புறமாக பிரகாரத்தில் கோவிலை சுற்றினோம் ,பிரகாரத்தில் கோவில் யானை காந்திமதியை , தூரத்தில் ஓரமாக அமர்ந்து ஒரு ஐந்து பள்ளி மாணவர்கள் அமைதியாக வேடிக்கப்பார்த்துக்கொண்டு இருந்தார்கள் . வெளியேறும்போது மகியமாகிவிட்டு இருந்தது .

வண்ணாரப்பேட்டை அறைக்கு வந்து சற்றே உறங்கி எழுந்து , உரை நிகழும் இடத்துக்கு நடந்து வந்தோம் . நெல்லையில் இருக்கும் எட்டு திரை அரங்குகளிலும் சர்க்கார் மட்டுமே ஓடுவதாக போஸ்டர்கள் சொன்னது . ராம் முத்துராம் எனும் இரட்டை திரை அரங்கு , ரசிகர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது . ஊரே கூடி சர்க்கார் சார்ந்து அகப்பட்ட அத்தனை பேரையும் முகநூலர்கள் அடித்து துவைத்தும் , பட வெளியீடு அன்றே ராக்கர்கள் படத்தை காட்டிவிட்ட பிறகும் , இதன் வெற்றியை தடுக்க இயலவில்லை போல , மெல்ல பஜாரை சுற்றிப்பார்த்து விட்டு உரை நிகழும் அரங்கம் வந்தோம் , அநியாயம் ஈரோடு கிருஷ்ணன் எங்களை உள்ளே தள்ளி ,வெளியே ஹௌஸ் புல் போர்டு மாட்டினார் . இது முன்பே தெரிந்திருந்தால் , எனது டிக்கட்டை வெளியே முன்னூறு ரூபாய்க்கு விற்று விட்டு ,சர்க்கார் பார்க்க போயிருப்பேன் .

இரவு பல புதிய வாசகர்களை உங்களை சுற்றி காண முடிந்தது . கிருஷ்ணன் ,வீராவை அடிக்கடி அமைதிப்படுத்தி புதிய வாசகர்களை உங்களுடன் பேச வைக்க நீங்கள் படாத பாடு படுவதைகான சுவாரஸ்யமாக இருந்தது .ஒருவழியாக ஒரு புதியவாசகர் பேச துவங்க ,அவருக்கு நீங்கள் பதிலளிக்க உத்வேகம் கொண்டு ,எழுத்த சமயம் போதும் நேரமாச்சு எல்லாரும் போய் படுங்க என அஜிதன் சபையை கலைத்துவிட …காலையில் கும்பலாக அனைவரும் சாலை மையத்தில் நிற்ப்பதை கண்டு ஒரு காவலர் வந்து ,யார் நீங்க எங்க போறீங்க என குடைந்து குடைந்து விசாரித்தார் .  நெற்றியில்  சைவ பட்டை அடித்த வீரா ,நாங்கள் ஆழ்வார் திருநகரி போகிறோம் என்றார் .எல்லோருமா என காவலர் சந்தேகம் கொண்டு விசாரித்தார் . இறுதி வரை நம்பாமல் திரும்பி திரும்பி கூட்டத்தை பார்த்தபடி தூரத்தில் நின்றிருந்தார் . என்ன துன்பம் இது புரியலையே என விசநித்தபடி உங்களை பார்த்த கணம் ,அந்த காவலர் போலவே நாங்களும் திடுக்கிட்டோம் . நீங்கள் ஷாகுல் தோளில் கைபோட்டு எதோ பேசிக்கொண்டு இருந்தீர்கள் , ஷாகுல் அவரது பாரம்பரியமான தலை குல்லாய் உடன் தலையை ஆட்டி ஆட்டி அதை ஆமோத்தித்துக் கொண்டிருந்தார் .  சரிதான் எந்த நெல்லைக் காவலரும் நாங்கள் சொன்ன பதிலை நம்பப் போவதில்லை . சர்க்கார் படத்துல நீக்கப்பட்ட வசனத்தை ,அந்த அராஜக போக்கை கண்டித்து ,சர்க்கார் வசனகர்த்தா உடன் அவரது ஆதரவாளர்கள் , திரை அரங்கம் நோக்கி மௌன ஊர்வலம் செல்கிறார் என சொல்லி இருந்தால் அவர் நிச்சயம் நம்பி இருப்பார் . பேருந்து வர கிளம்பினோம் .கிருஷ்ணன் ஓடிச்சென்று பேருந்தின் முன்னால், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் கானுலா எனும் பதாகையை மாட்டினார் .  கிருஷ்ணா புரம், ஆழ்வார் திருநகரி இவை எல்லாம் காடு எனும் திணைக்குள் வரும் என்று எவ்வாறு கிருஷ்ணன் அனுமானித்தார் என்பதை இரண்டு நாள் விவாத அரங்கம் வைத்தாலும் அறிய இயலாது .

k

கிருஷ்ணாபுரம் திருச்செந்தூர் பக்தர்கள் நிறைந்தும் அமைதியாகவே இருந்தது ஆச்சர்யமாக இருந்தது . சிற்பங்கள் இருக்கும் மண்டபத்தை மட்டும் வழக்கமாக ,அங்கே உள்ளூரில் நிகழும் ஏதேனும் விசேஷத்துக்கு விடுவார்கள் . விழாவுக்கு வரும் குழந்தைகள் சிற்பங்களில் தொற்றி ஏறி விளையாடுவார்கள் .நல்லவேளை இன்று அவ்வாறு ஏதும் நிகழவில்லை . உங்கள் தலைமையில் அந்த ஆலயத்துள் இருந்த நிமிடங்கள் மிக மிக சந்தோசம் அளித்த ஒன்று .எந்த அளவு மகிழ்ச்சி என்றால் ,அங்கே கிருஷ்ணாபுரத்தில் நான் என் தம்பிகளுடன் இணைந்து ஒரு பிளாட் வாங்கி போட்டேன் .இறுதி காலத்தில் அந்த கோவில் சிற்பங்களை கண்ட படியே போய்ச்சேர்ந்து விடுவது எனது கனவுகளில் ஒன்று .அந்த பிளாட் வாங்கும் போது என்ன மகிழ்ச்சியோ அந்த மகிழ்ச்சி ,பிற்ப்பாடு அந்த பிளாட்டை தங்கை வைத்தியம் வேண்டி விற்க நேர்ந்தது .வாழும் கனவுக்காக சாகும் கனவை சற்றே ஒத்தி வைக்க நேர்ந்தது .

ஆழ்வார் திருநகரி உண்மையாகவே பல வருடம் கழித்து வருகிறேன் . என் தம்பி பள்ளி இறுதி படிக்கையில் ,அவனது  அமல்ராஜ் வாத்தியார் இங்கே ஒரு சிறிய சர்ச் கட்டிக்கொண்டு இருந்தார் .அவ்வப்போது அவரது மாணவர்களை அழைத்து அந்த பணியில் ஈடுபடுத்துவார் . என் தம்பி ஒரு முறை இந்த பணிக்கு வந்தான் , என்னையும் அழைத்து வந்தான் ,” நீ மார்க்கு வேணும்னு இந்த வேலைக்கு போற நான் எண்டா உன் கூட வரணும் ,எள்ளுதான் காயணும் எலிப்புழுக்கை காய்வது நியாயமே இல்லை” வித விதமாக வாதாடியும் வலுக்கட்டாயமாக தம்பி என்னை அழைத்து சென்ற காரணம் அங்கே சென்றதும் தான் விளங்கியது.

நிர்மானிகப்பட்டுக்கொண்டிருக்கும் ஆலயத்தின் விதானத்தை ஒட்டி , நீளமான வெண்டிலேஷன் . குறிப்பிட்ட சுவற்றில் , சுவற்றுக்கு இணையாக தொண்ணூறு டிகிரியில் ஏணியை நிற்க வைத்து ,அதன் உச்சிப் படியில் கட்டை விரலை ஊன்றி எக்கி,அந்த இடைவெளி வழியே வெளியே பார்த்தால் , தாமிரபரணி தெரியும் ,குறிப்பிட்ட நேரத்தில் ,குறிப்பிட்ட இளம் பெண் ஒருவள் ,குறிப்பிட்ட விதமாக தினமும் குளிப்பதை தம்பி குறித்து வைத்திருந்தான் , இவன் அல்லவோ தம்பி … தம்பி உடையான் குறிப்பிட்ட நேரத்தில் ,குறிப்பிட்ட படி ,ஏணியை வைத்து ,குறிப்பிட்டபடி கட்டை விரல் நுனி நின்று எக்கி , வெளியே பார்த்தேன் .குறிப்பிட்ட நேரத்தில் அந்த இளம்பெண் வந்து , குறிப்பிட்ட  ….உணர்ச்சிவசப்பட்டு நான் இன்னும் சற்று ஏக்க முயன்றதில் , மொசைக் தரையில் நட்டுக்குத்தலாக நின்ற ஏணி கோணம் தவற…பாவத்தின் சம்பளம் மரணம் என்றார் கர்த்தர் ,ஒரு கணம் முன்பே ஏணி வழுவி விட்டதால் ,கபாலத்தில் அடி விழுந்தும் ,அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைவதில் இருந்து தப்பித்தேன் .  அது கூட பரவா இல்லை அன்று மதியம்தான் உண்மையான பிரச்னை துவங்கியது . வாத்தியார் மனைவி உணவு பரிமாறினார் . முதல் சோறே ரசம் சோறுதான் .சுமாரான ரசம்தான்  இருந்தாலும் என்ன ,பாராட்டி வைத்தால் மறுநாளும் சோறு கிடைக்குமே எனும் நப்பாசையில் , பிரமாதமா இருக்கு ரசம் ,இன்னும் கொஞ்சம் ஊத்துங்க ,எங்க வீட்ல கூட இப்டி வைக்க மாட்டாங்க  என்றேன் .அநியாயம் அதுதான் அந்த வீட்டில் எங்களுக்கு இறுதி சோறு .

மறுநாள் வயித்து பசி தாங்காமல் வந்து முதன் முதலாக எட்டிப் பார்த்த இடம்தான் இந்த ஆழ்வார் திருநகரி கோவில் .இன்றும் சோறு போட்டுக்கொண்டு இருந்தார்கள் . மணவாள மாமுனிகள் பிறந்த தினமாம் . மணவாள மாமுனிகள் பள்ளிப்படுத்தப்பட்ட கோவில் என ஒன்று கடலூர் திருவந்திபுறத்தில் உண்டு.  பழைய நினைவுகளுடன் கோவிலை சுற்றி வந்தேன் .  ”ஏலே அவம் பொண்டாட்டிய ஓரண்டைக்கு இழுத்தது நீ ,என்ன ஏம்ல அடிக்கான் அவன்”  கேட்ட தம்பியை பார்க்க சிரிப்பாக வந்தது . நானே எம் பொண்டாட்டி வெக்கிர சாம்பார குறை சொன்னதில்ல யாருல அந்த குன்னப் பய எனக் கேட்டு வாத்யார் அடித்தார் என்று அவன் சொன்னபிறகே அது சாம்பாராகவும் இருந்திருக்கலாமோ என்றொரு சந்தேகம் எனக்கு எழுந்ததது .

முடித்து திரும்புகையில் நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பேருந்து ஆதிச்சநல்லூர் திரும்பியது .  மூவாயிரம் வருடத்து பானைகளின் உடைந்த சில்லுகள் ஒரு அறைக்குள் ஓரமாக குவிந்து கிடந்ததது . அரை முழுக்க குடித்து முடித்து வீசி எறிந்த சாராய பாட்டில்கள் . மரபை பின்நவீனத்துவம் எதிர்கொள்ளும் களத்தை சற்றுநேரம் சுற்றி வந்தோம் .வெண்பா ஒரு ஓட்டு சில்லை பொறுக்கிக் கொண்டாள்.வீட்டுக்கு பேய் வரும் என்று சொன்ன பிறகும் .

face

வெளியேறி நெல்லை நோக்கி திரும்பினோம். இந்த கடிதத்தின் முதல் பத்தியை சிவதமா இப்போதும் மணிமாறனுக்கு அனுப்பினார் . நெல்லைக்கு பதிலாக புதுவை அது மட்டுமே மாற்றம் .  விடுதிவாசல் வந்திறங்கி மாறி மாறி விடைபெற்றுக்கொண்டோம் .  உங்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட வெண்பா ,ஜெயமோகனுக்கு நிறைய கண்ணு பட்டுரிச்சி என்றாள்.  கண்ணேறு கழிக்க அவளறிந்த வழி உங்களை செல்பி எடுப்பது போல , கிடக்கட்டும் கன்னத்தில் திருஷ்டிப் போட்டு வைத்து அனுப்பாதவரை சரிதான் .

வழமைபோல சிவாத்மாவால் கைவிடப்பட்டுருந்த மணிமாறன் சொன்ன மாற்று ஏற்பாட்டின் படி அரசு பேருந்து ஏறி கண்களை மூடினோம் . அதிகாலை புதுவை வரை இளையராஜா தாலாட்டிக்கொண்டு கொண்டுவந்து இறக்கினார் . வந்து இறங்கியதும் மணிமாறனின் செல் குமுறிக் குலுங்கியது .இன்னும் நான்கு நாட்களில் புயல் .அனேகமாக பாண்டி கடலூரை தாக்கும் .உடனடியாக வந்து பணியில் அமர்க என்றது குறுஞ்செய்தி . நான் சுதீந்திர சாஸ்த்ரிகளை    நினைத்துக் கொண்டேன் .மீண்டும் பஞ்சாங்கத்துக்கு வேலை வரப்போகிறதா என்ன ?….

கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-54
அடுத்த கட்டுரைநூறுநாற்காலிகள் -கடிதங்கள்