நிழல் யுத்தம் -கடிதங்கள்

anitha

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் தளத்தில் வெளியிட்டிருந்த “நிழல் யுத்தம்” இப்போது தான் படித்தேன்[கதையாசிரியருக்கும், மொழிபெயர்பாளருக்கும் நன்றிகள்]. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுடன் மிகவும் நெருங்கி இருந்தது கதை, அதனால் மிக அணுக்கமான வாசிப்பை அளித்தது. அனைத்து  வன்முறைகளும் ஒரே மாதிரியை கொண்டுள்ளது ஆச்சர்யத்தை அளிக்கிறது. கதை ஒரு பெண் கதாபாத்திரம் மூலம் சொல்லப்படுவது அற சிக்கலை வெளிப்படுத்த தோதாக உள்ளது. ரித்வி ஒரு அரசு அதிகாரி, அதனால் தன்னுள் எழும் அற சிக்கலை எளிமையாக சட்டம் என்னும் பெயரில் கிடக்கிறான், ஆனால் சாதாரண மனிதனால் அதை தாண்டவே முடிவதில்லை. அதிகாரியின் மனைவி அந்த சிக்கலில் தவிக்கிறாள், அது கணவனின் மனைவி இடையில் மொத்தத்தில் இடைவெளியை அதிகரிக்கிறது. ரித்வியின் குற்ற உணர்ச்சியால் அந்த சம்பவத்தை அவளிடம் சொல்ல முடியவில்லை, அவன் கடந்து செல்கிறான், அதை கடந்து சென்றாலே அவனால் வேலையை செய்ய முடியும். ஆனால் அந்த குடியிருப்பு முழுக்க ஒரு சூன்யத்தை உண்டாக்குகிறது, அது குடும்பங்கள் வசிக்கும் இடம், சாதாரண மனிதர்கள் வசிக்கும் இடம். திதியின் மனவலி அந்தக்குடியிருப்பு முழுக்க நிறைந்திருக்கிறது. “புதிதாக நியமிக்கப்பட்ட காவலாளி தன் ஊதுகுழலை சத்தமாக ஊதினார். அங்கு வரக்கூடாதவர்களை மானசீகமாக விரட்டவும் தன் பயத்தை போக்கவும் இதை தினமும் செய்து கொண்டிருந்தார். ” இந்த வரிகள் கதையின் பின்பகுதியில் பெரும் திறப்பை அளிக்கிறது. இந்த கதை தொடங்குவதே அவன் ஊதுகுழல் எழுப்பிய சத்தத்தில் எழுந்து சிந்திக்க தொடங்கும் திதியின் என்ன ஓட்டத்தில் தான்.  ‘ஆள் புதுசு. இன்னும் பழகவில்லை. தூங்கு’ என்று ரித்வி சொல்லி அதை கடந்து விடுகிறான் அவனுக்கு அதற்கு மேல் பதட்டம் கொள்ள ஒன்றுமில்லை, அந்த சத்தம் வெறும் தூக்கத்தை கலைக்கும் ஒலி மட்டுமே அவனுக்கு. ஆனால் திதிக்கு அந்த சூழலின் சமநிலை தெற்றியதின் சப்தம். இனி அவளால் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு வடு, அவள் வாழ்வில் அவள் அன்புக்குரிய கணவனால் ஏற்பட்டு விட்டது. பின்பு அரசாங்கம் அந்த விஷயத்தை மிக கவனமாக கையாள்கிறது. அந்த செய்தி மறக்கடிக்க செய்யப்படுகிறது, மறக்கடிதல் இயல்பாக நடந்தேறுகிறது. மனிதன் சாதாரணமாக இத்தகைய அற சிக்கலை மனதில் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. இங்கு ரித்வியின் தரப்பு அவன் மட்டுமே அறிந்ததாக ஒளிந்திருக்கிறது, ஒருவேளை அவனும் அதை அறியாமல் இருக்கவே முயற்சிக்கிறான், “நீ நம்புறியா?” என்று அவன் கேட்கும் போது அவனுள் எழும் சோகம் புரிகிறது. இவள் அறிந்த செய்தி ஊடாகத்தால் அறிந்து கொண்டது. அங்கு அரசியல், லாபம், அரசாங்கம் என பல சக்திகளை தாண்டியே செய்தி வந்து சேரும். ரித்வி அரசாங்கத்தின் சதுரங்க ஆட்டத்தின் ஒரு காய் மட்டுமே, அவனுள் உண்டாகும் குற்ற உணர்ச்சியை அவன் கடக்க அந்த ஆட்டம் தான் உதவியும் செய்கிறது. கையறுநிலை என்ற ஒற்றை வார்த்தை மனிதனுக்கு அளிக்கும் விடுதலை அது. மனிதர்கள் சிரமப்பட்டேனும் அந்த நிலையில் தன்னை நிறுத்திக்கொள்ளவே முயலுகிறார்கள், அது விடுதலைக்கான அல்லது தப்பிப்பதற்காக முயற்சி.
இங்கு இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ‘ஜூலியஸ்’, நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பின் ஒரு துளி. ரித்வி அந்த துளி விஷமாகலாம் என பதறுகிறான், அவன் தொழில் அந்த பதட்டத்தை அளிப்பது இயல்பு தான். அனால் திதிக்கு அந்த பதட்டம் இல்லை, பின்னால் சிறு பதட்டம் கணவனால் அவளுக்கு வழங்கப்படுகிறது.

“அது ஒரு சிறு கறை, அவ்வளவே. காலப்போக்கில் சிறு கறைகள் நீக்கப்படும், உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் சமன் செய்யப்படும்.” இந்த பகுதி எதிபார்த்ததே, படுக்கையில் அவர்கள் மீண்டும் நெருக்கம் கொள்வதும் எதிர்பார்த்தேன், சாதாரண சிறுகதைகள் இந்த புள்ளியில் முடியும்(எளிய வாசகனின் கணிப்பு). இங்கே கதை முடிந்திருந்தால் வாசகனும் இதிலிருந்து ரித்வி போல வெளியேறிருப்பான். அங்கு முடிக்காதது கதையின் தரத்தை கூடுகிறது. அந்த ரத்த கறை அவளை துரத்துகிறது. ஊதுகுழல் சத்தத்திற்கு வர்கள் பழகிவிட்டார்கள், ஆனால் நாய், பூனையின், காக்கையின் சத்தத்தங்கள் அவளை எழுப்புகிறது. படுக்கையில் கிடக்கும் கணவன் முகத்தில் ரத்த கறை உள்ளதா என்று பார்க்கிறாள்.

ஜூலியஸ் மீண்டும் ஓட்டுநராக மணிக்கு சேர்கிறான், அவள் குழந்தைகைளுடன் சிறிது நேரம் நனைய நேர்ந்த கணத்தில் அதற்க்கு காரணனான ஜூலியஸ் மீது கோபம் கொள்கிறாள். துளி விஷமாகுமென்ற பதட்டம் மீண்டும் தொற்றி கொள்கிறது. “கத்தி கூப்பாடு போட எண்ணினாள். நீ வேண்டுமென்றே தான் வரவில்லை, இல்லையா? என்னையும் பிள்ளையையும் இந்த மழையில் முழுவதுமாக நினையவிட்டு அழையவைத்தாய் என்று அவனை மனதில் கடிந்து தூற்றினாள்.” ஜூலியஸ் முகம் இறுகி இருப்பதை  காண்கிறாள். பின்னர் பதட்டம் விடுபட்டு காரில் ஏறி கொள்கிறாள். ஜூலியஸிடம் எதிர்பார்த்த விஷம் தன்னுள் இருப்பதை தன் கைகளில் இருக்கும் ரத்த கறை வழியாக காண்கிறாள், கணவன் முகத்தில் தேடிய ரத்த கறை. இங்கு நீருடன் சேர்ந்து இருக்கிறது. அறம் அறமீறல்(நீரும் ரத்தமும்) இரண்டும் நம் சமூகம் நமக்கு அளிக்கிறது, அறத்தை நோக்கி செல்லும் எவரும் அறமீறலையும் செய்கிறார்கள். மனம் கொந்தளித்து மேலான அறம் நோக்கியே நம்மை கொண்டு செல்கிறது. உங்கள் இறுதி விஷம் கதையில் ‘ஆஸ்திகன்’ காப்பாற்றி கொடுத்த அந்த விஷம், நம் அனைவரிலுமாக நிறைந்திருக்கும் அந்த விஷம், வியாசனால் இன்றியமையாது என்றருளப்பட்ட விஷம்.  மனிதருள் இன்றும் நிலை கொண்டு நம்மை ஆட்டி படைக்கிறது. என்றுமாக நிலைகொண்டு உலகை இயக்கிக்கொண்டிருக்கிறது. அவளும் ஜூலியசும் ஒரே காரில் செல்கிறர்கள், சமூகம் இங்கே அனைவரையும் ஒரே குடையின் கீழ் இருக்க(ஒதுங்க) கற்று கொடுத்திருக்கிறது.

நன்றி,
அருள், கொச்சி.

ramkumar

[மொழிபெயர்ப்பாளர் ராம்குமார்]

அன்புள்ள ஜெ

 

நிழல்யுத்தம் அருமையான கதை. சரளமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்  ராம்குமார். ஒரு பெண்ணின் பயம் வழியாக கதை சொல்லப்பட்டுள்ளதனால் வெறும் அரசியல் சித்தரிப்பாக இல்லாமல் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கதை செல்கிறது. அந்த அரசியலில் அவளுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவள் கணவனுக்கும்கூட பெரிய பொறுப்பு ஏதும் இல்லை. ஆனால் மறைமுகமாக அனைவர் கையிலும் ரத்தம் என்று கதை சொல்கிறது

 

இந்த சமூகக் கூட்டுப்பொறுப்பு போன்ற விஷயங்களைப்பேசும் கதைகளில் சாதாரணமாக நுண்ணுணர்வு மிக்க ஒரு கதாபாத்திரத்தைத்தான் மையமாக்குவார்கள். அந்த கதாபாத்திரம் மனசாட்சியின் குரலால் அவதியுறும். இதில் அந்தக்கதாபாத்திரம் தன்னலம் மட்டும் கொண்ட சராசரி மனைவி. அதிகாரத்திற்குப் பழகியவள். ஆனால் அவளும் அந்த ரத்தத்தை உணர்கிறாள்

 

ஜூலியஸின் மௌனம் கதையை கனமானதாக ஆக்குகிறது. அவனுக்குள் வெளிப்படுத்தமுடியாத வஞ்சம் இருக்கலாம். அல்லது அவனும் இந்த வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு வேறுவழியில்லாமல் எல்லாவற்றையும் ஜெரிமானம் செய்துகொள்ளும் அப்பாவியாக இருக்கலாம்

 

பிரபாகர்

 

நிழல்யுத்தம் -கடிதங்கள்

முந்தைய கட்டுரைஊடுருவல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை