புறப்பாடு வாசிப்பு

purapaadu0001-550x600

புறப்பாடு வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவா்களுக்கு,

நலமா ?

வெகு நாட்களாக வாசிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த ”புறப்பாடு” வாசித்து முடித்துவிட்டேன். அனேஜன் பாலகிருஷ்ணன் ”புறப்பாடு” குறித்து எழுதியிருந்தச் சிறு குறிப்பு, புத்தகத்தை உடனே வாசித்தாக வேண்டும் என்ற எண்ணத்திற்க்கு வலு சோ்த்தது.

புறப்பாடு – அறம்

புறப்பாடு – ஒரு தன்வரலாறு புத்தமாக வாசிக்கலாம், மையப்பாத்திரத்தின் தன்மை மற்றும் அப்பாத்திரம் எதிர்கொள்ளும் சம்பவங்களால் அதை ஒரு நாவலாகவும் வாசிக்கலாம், ஒரு தேர்ந்த சிறுகதைத் தொகுதியாகவும் வாசிக்கலாம். புறப்பாடு அத்தியாய அமைப்பு – அதை ஒரு சிறுகதை தொகுதியாகவே வாசிக்கத் துாண்டியது. புறப்பாடு வாசிக்கும் போது எனக்கு அறம் குறித்து எண்ணம் எழுவதைத் தவிா்க்க முடியவில்லை. அறம் குறித்த விவாதங்கள் மற்றும் ”அறம்” சிறுகதைகள் முன்வைக்கும் கருத்துருக்களால் ஒரு சாராா் அதை பிரச்சார நுாலாக கருதலாம். அவா்கள் புறப்பாடு வாசிக்க நோ்ந்தால், அதையும் அதே பெட்டிக்குள் அடைக்க நேரிடும். “புறப்பாடு“ தன்னுள் ஒரே மையப்பாத்திரத்தை கொண்டு அப்பாத்திரம் தன் வாழ்க்கையில் தான் சந்தித்த மனிதர்கள் – எதிர் கொண்ட சம்பவங்களால் – தன்க்குள் ஏற்படும் மாற்றத்தை வாசக இடைவெளி மூலம் நிரப்பிக் கொள்ளும் ஒரு வெளியை அளிக்கிறது. மாறாக ”அறம்” அவ்வெளியை அளிப்பதில்லை. ”அறம்“ சிறுகதைகளில் மையப்பாத்திரங்கள் அவ்வெளியை குறைத்துக் கொண்டே வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.

புறப்பாடு

புறப்பாடு அத்தியாயங்களை நீங்கள் எழுதத் துவங்கும் போது, ஒரு மையக் கருத்தை எடுத்துக் கொண்டு – அதனுாடே கதை பின்னப்பட்டதாக தெரிகிறது. அதனால் ”புறப்பாடு” ஒரு தேர்ந்த சிறுகதை தொகுதியாகவே எனக்கு தோன்றியது. தளத்தில் சிறுகதை குறித்த விவாதங்களை தொடர்ந்து கவனித்து வந்தமையால், ஒரு சிறுகதை வாசகனுக்கு அனுக்கமானதாக இருக்க வேண்டுமென்றால் அதில்

அ. ஒருமை – சிறுகதையின் நோ்த்தி (தேவையில்லாத கதாப்பாத்திரங்கள் குறித்த மிகு வர்ணணை கூடாது)

ஆ. வாழ்க்கையின் ஏதேனும் ஒரு புள்ளியை மட்டும் முன்வைத்தால் போதும் – வாழ்கையின் அனைத்து புள்ளிகளையும் – தரிசனத்தையும் இணைக்கும் வேலை நாவலுக்குறியது.

இ. திருப்பம் – துப்பறியும் கதைக்கள் மட்டுமே திருப்பங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. வாழ்கையின் ஒரு நிகழ்வை எந்தவிதத் திருப்பங்களும் இன்றி ஒரு சிறுகதையாக எழுதினால் – அதில் அனுபவம் கூட இருக்காது. வெறும் சொற்களால் நிரப்பி வைக்கப்பட்டப் பெட்டியாக இருக்கும். The Pleasure of a Short Story owns by the twist, it holds. “புறப்பாடு” வில் அனைத்து அத்யாயங்களும் திருப்பங்களுடனேயே முடிகிறது.

ஈ. வாசக இடைவெளி – “புறப்பாடு” ற்க்கும் ”அறம்” த்திற்க்கும் இருக்கும் துாரமாக இது அமைகிறது. வாசகனாக நான் புறப்பாடு வாசிக்கும் போது, கதையின் நடுவே என் அனுவபத்தை நிரப்பிக் கொள்ள இடைவெளி இருப்பதாகத் தோன்றியது. அறம் சிறுகதையில் அந்த இடைவெளியை மையப் பாத்திரங்கள் நிரப்பிக் கொள்கின்றன.

உ. கடைசி வரி – வாசகப் பரப்பில் ஒரு சிறுகதை தாக்கத்தைச் செலுத்த வேண்டுமானால் அதன் ”கடைசி வரி” மிக முக்கியம். சிறுகதை வாழ்வின் ஏதேனும் ஒரு மையத்தையோ தரிசனத்தையோ கூற முயல்வதால் – வாழ்வில் நடந்த ஏதேனும் ஒரு சம்பவத்தை கதைக்களமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் ”கடைசி வரி” சரியாக அமையாவிடில் அது வெறும் ”அனுபவக் குறிப்பு” மட்டுமே. சிறுகதையாக மாறாது. அனுபவக் குறிப்பிற்க்கும் சிறுகதைக்கும் நடுவே இருக்கும் ஒரு மெல்லிய கோடு இந்த ”கடைசி வரி”

மேற்கூறிய இந்த அனைத்தும் “புறப்பாடு” வில் பொருந்தி வந்தமையால் இதை சிறுகதைத் தொகுதியாகவே எடுத்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு அத்யாயத்தையும் மறுபடியும் வாசித்து – வரிவாக அட்டவணை போல் எழுத எண்ணமிருந்தாலும், சற்றே மிகையாக இருக்கும் என நினைத்து இத்தோடு நிற்கிறேன்.

நன்றி

பலராம கிருஷ்ணன்.

***

அன்புள்ள பலராம கிருஷ்ணன்

அனுபவங்களை எழுதுகையில் காலத்தையே மையச்சரடாகக் கொள்வது வழக்கம். நான் அந்த அனுபவத்தின் ஒரு சாராம்சத்தை மையக்கருத்தாகக் கொண்டேன் . ஆகவேதான் அந்த கதையொருமை உருவாகியது

ஜெ

***

அன்புள்ள ஜெ

புறப்பாடு கதைத்தொகுதியை வாசித்தேன். கதை என்பது அனுபவத்தில் இருந்து ஒரு மெய் வெளிப்படுவது. ஆகவே இவை கதைகள்தான். எல்லா கதைகளுமே ஆழமானவை. கிருஷ்ணமதுரம் ஓர் அழகான கவிதை என்றால் பெருமாள் கால்நீட்டி படுத்திருக்கும் படிமம் [பாம்பணை] ஒரு கொடுமையான கவிதை

ஆனால் எனக்குப்பிடித்தமானது ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் கதைதான். அதில் ஒலிக்கும் பாடல்கள். அந்த நஸ்டால்ஜியா. அந்தக் காலகட்டம் தமிழர்கள் இந்தியா முழுக்க பஞ்சம்பிழைக்கப்போன காலகட்டம். திராவிட இயக்கச் சாதனைகள் பட்டியலிட்டு அறிவுஜீவிகளால் புள்ளிவிவரங்கள் குவிக்கப்படும் இந்தக் பொய்யின் யுகத்தில் இந்த உண்மை ஓர் அனாதை. ஆனால் எண்பதுகளில் எல்லா ரயில்களிலும் தமிழர்கள் கூலிகளாக அகதிகளைப்போல சென்றுகொண்டிருப்பார்கள். மும்பை, பெங்களூர். தமிழர்கள்தான் சாலைபோடுவார்கள். கட்டிடம் கட்டுவார்கள். அவர்கள் சென்ற இடங்களில் வேரூன்றி வளர்ந்தனர். அதன்பின்னர் வெளிநாடு சென்றனர். அந்தப்பணத்தில் தமிழகம் வளர்ந்தது.

அந்த சித்திரம் கண்கலங்கச்செய்யும்படி அற்புதமாக உருவாகி வந்துள்ளது அந்த அத்தியாயத்தில்

எம்.கனகராஜ்

***

அன்புள்ள கனகராஜ்

இன்றைக்கு  செல்பேசி வந்துவிட்டது. ஆளாளுக்கு அவர்களுக்குப் பிடித்தமான பாட்டைக் கேட்கிறார்கள். ரயிலில் விரைந்தோடும் அந்த தெக்குத்திக்கிராமம் இன்று இல்லை

ஜெ

புறப்பாடு – கடிதங்கள் 12
புறப்பாடு ஒரு கடிதம் 11
புறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்
புறப்பாடு கடிதங்கள் 10
புறப்பாடு – கடிதங்கள் 9
புறப்பாடு – வறுமை – கடிதம் 8
புறப்பாடு – கடிதங்கள்
புறப்பாடு பற்றி
புறப்பாடு கடிதம் 7
புறப்பாடு -கடிதம் 6
புறப்பாடு-கடிதங்கள் 5
புறப்பாடு – கடிதங்கள் 4
புறப்பாடு – கடிதங்கள் 3
புறப்பாடு – கடிதங்கள் 2
புறப்பாடு – கடிதங்கள் 1
முந்தைய கட்டுரைரயிலில் கடிதங்கள்-10
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் – கடிதம்