பிரதமன்[சிறுகதை]
அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
‘பிரதமன்’ கதையை வாசித்தவுடன், உங்களின் குறுநாவல் தொகுப்பின் முதல் கதையான ‘கிளி்க்காலம்’ கதையை வாசிக்கத் தோன்றியது. இந்த மறுவாசிப்பில் இரு கதைகளும் ஒன்றின் தளத்தினை, கருவினை மற்றொன்னு, ஊடுபாய்ந்து ஈடிட்டு நிரப்பிய உணர்வினைத் தந்தது.
திருமண விழாவின் பின்புலத்தில் இரண்டு கதைகளும் நிகழ்கின்றன. கிளிக்காலத்தில் காமத்தின் வாயிலில் குறுகுறுப்புடன் நிற்கும் மறவோன் பருவத்திலிருக்கும் மூன்று சிறுவர்களிடையே நிகழும் இயல்பான உரையாடல்களால் கதை நகர்த்துகிறது. ஆம்பல் மலர் போன்ற சாந்தியுடனான உரையாடல்கள், உஷா சித்தியின் சிவப்பு நூல் தழும்பு, கன்னத்து சிவப்பு பருக்களும், உள்ளாடையின் நுணுக்க விவரங்கள் என பெண்களைப் பற்றிய விவரணைகளே அதிகம். அதில் ராதாகிருஷ்ணனை கதைகூறி ‘பயலே’ என வியக்கும் தருணத்தினை புன்முறுவாமல் கடக்க வாய்ப்பில்லை, உப்பில் மல்லிகையைத் தொட்டு , குருதியில் தோய்த்து எடுத்த வாடை போல, உடலோடு சேர்த்து மனதிலும், குற்றவுணர்வுடன் கதைகூறி தன் முதல் பரவச உணர்வினை கண்டடைகிறான்.
‘பிரதமனில்’ வேலு ஆசானிடம் அதிகம் உரையாடாமல் ஆனால் அவரின் ஒவ்வொரு செய்கைகளையும் அணுக்கமாக அவதானிக்கும் மாணவனின் கோணத்தில் கதை அமைந்திருந்தது. இஞ்சியில் வெல்லத்தின் பங்கிற்கும். அந்த வெல்லம் சுண்ணாம்பு கலவாமல் இருக்கும் தேவையையும் ஆசானின் மூலம் அறிகிறான். அருணாச்சலம் ஒரே தட்டில் தேங்காயைப் பிளந்த போதும், விறகடுக்கின் சூட்சுமத்தை அறியும் போது அவைகளின் மீது ஈர்ப்பில்லை. மூலப்பொருட்களின் பங்கின் அளவையும் மனக்கணக்காக அறிந்திருக்கும் ஆசான் மூலம் ‘ருசி’ என்றால் என்ன ? ருசியில் தெய்வமர்வது எப்படி. என எந்தவிதமான கற்பித்தலுமில்லாமல் கதையின் நிகழ்கையிலேலே அறிந்து கொள்கிறான். ஆசானுக்கு செயலே ருசி, அதன் பலனின் ருசியில் அவனுக்கு எந்த விதமான மனத்தொடர்பும் இல்லை. ஆகவே தான் சமைத்த பிரதமனை தான் ருசிக்கவில்லை என்பது வியப்பலிக்கவில்லை.
முதல் வெள்ளைத் தாளின் முதலெழுத்து போல முதல் ருசியை அறிகிறான் கிளிக்காலத்தின் கதைகூறி. எண்ணில்லா பக்கங்கள் எழுதினாலும், அடுத்த பக்கம் எழுதுவதற்கான ருசியை தக்க வைத்துக் கொள்வதற்கான தெய்வத்தின் அணுக்கத்தினை உணர்கிறான் ‘பிரதமனின்’ கதைசொல்லி.
என்றும் அன்புடன்
சிவமணியன்
அன்புள்ள ஜெ
பிரதமன் கதையை இருமுறை வாசித்தேன். சமீபமாக வாசித்த பல கதைகள் உலகியல்துன்பங்களைப் பற்றிய பொதுவான கதைகள். பல கதைகள் வெறுமே காமப்பிறழ்வுகளை பற்றியவை. ஒரு நல்ல வாசகனுக்கு உடனே தோன்றுவது, ஆமாம் இதெல்லாம்தான் தெரியுமே, மேலே என்ன என்பதுதான். அந்த மேலே என்பது சரியாக அமைந்த கதை என்று பிரதமனைச் சொல்வேன். சமையலின் அழகியல் என்று இதைச் சொல்லமுடியும். சமையல் என்றால் என்ன ? சம்பந்தமில்லாத பொருட்களைக்கொண்டு இணைத்துச் சுவையை உருவாக்குவதுதானே? அதுதான் உறவுகளும். ஆகவே ஆசான் பேசுவதெல்லாம் உறவுகளைத்தான். அவர் உருவாக்கும் அமுதமும் உறவுகளின் கனிவுதான்.
பலகோணங்களில் யோசித்துக்கொண்டே இருந்த கதை இது. எனக்குத்தெரிந்த மாஸ்டர்ஸ் பலபேரை நினைத்துக்கொண்டேன். எனக்கு உடனடியாக நினைவு வந்தவர் லால்குடிதான். அந்தக்காலத்தில் பல கச்சேரிகளை கேட்டிருக்கிறேன். என் அப்பா மகாராஜபுரம் விஸ்வநாதய்யரைச் சொல்வார். இவர்களெல்லாம் அமுதத்தைச் சமைத்த கலைஞர்கள் அல்லவா? அவர்கள் எந்த அளவுக்கு உணர்வுகளில் அலைக்கழிந்தார்களோ அந்த அளவுக்கு அந்தக்கலை இனித்தது
ஸ்ரீனிவாஸ்