‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

anitha

 

அனிதா அக்னிஹோத்ரி

 

விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை.

 

தமிழில் சா ராம்குமார்

 

அலுவலகத்தை விட்டு வீட்டுக்கு திரும்ப வேண்டிய நேரமாயிற்று என்று தோன்றியவுடன் முதலில் வெளியேறியது தண்ணீர் போத்தலும் உணவு அடுக்கும்தான். திரு. கல்லோலின் மனைவி உலகில் வேறு எங்கு கிடைக்கும் தண்ணீரையும் நம்பவில்லை. போத்தலில் அடைக்கப்பட்ட நீர் கூட ஏதாவது குளத்தில் இருந்து தான் எடுக்கப்படுவதாக நம்பிய அவருக்கு மனிதர்கள் மீதும் நம்பிக்கை இருக்கவில்லை. ஆதலால் வீட்டிலேயே காய்ச்சிய நீரை மட்டுமே கொடுத்து அனுப்பினார்.

 

இவற்றை  பின்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் நடக்கவிருக்கும் முக்கியச் சந்திப்புகளுக்கான காகிதங்கள் வெளியேறின. சில நாட்களில் சந்திப்புகளை தாண்டி கோப்புகளை பார்க்க நேரம் கிடைக்காது. ஆதலால் வாரத்தில் கிட்டத்தட்ட மூன்று முறையாவது சிவப்பு ரிப்பனில் கட்டப்பட்ட இரண்டு கட்டு கோப்புகளும் அவருடன் வீட்டுக்கு செல்லும்.

 

கல்லோலுக்கென்று இரண்டு பியூன்கள் இருந்தார்கள். அவர்கள் தான் இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு வண்டியில் வைத்தார்கள். அய்யா இருக்கையில் இருந்து எழுந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் அவர்களில் ஒருவர் வண்டி ஓட்டுனரிடம் உடனடியாக தகவல் தெரிவிப்பார். வண்டி வாயிலுக்கு முன்வந்து நிற்கும். இவர் அளவிற்கு மதிப்பு  கொண்ட அதிகாரியை காக்கவைப்பதென்பது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று.

 

தில்லியில் இதைப்பற்றி எல்லாம் யாரும் கவலை கொள்ளவில்லை. ஆனால் மாநிலத்தில் அப்படி இல்லை.

 

“வெளிய போறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை சொல்லிடுங்க, சார். எல்லாம் தயாரா இருக்கும்” என்று அந்த பொறுப்பிற்கு வந்து சேர்ந்த நாளன்றே அவரின் தனி செயலர் லலித் குமார் அவரை அந்த பொறுப்புக்குரிய  ஒப்பனைகளை அணிவித்து பழக்கினார்.

 

இது போன்ற தருணங்களில் அதை சொல்பவர் “பெர்சனல் அசிஸ்டெண்டா”க இருந்தால் கூட அவரால்  மீற முடியாது. விருப்பம் இல்லாவிட்டாலும்கூட. ஏனென்றால் இத்தகைர தோரணைகள் இன்றி இங்கு அனைவரையும் கட்டிமேய்ப்பதென்பது அத்தனை எளிதல்ல.

 

அன்று கூட கல்லோல் தன் வீட்டிற்கு கிளம்ப எத்தனித்து எழுந்து நின்றார். மணி 7.15 என்று காட்டியது. லலித் குமார் அறைக்குள் நுழைந்ததும் முகம் இருண்டிருந்தது.

 

“ஜி.எம் அகிலேஷ் குமார் வந்திருக்கார்”

 

“இப்போவா?”

 

“ஏதோ ரொம்ப முக்கியம்னு சொல்றார்”

 

கல்லோல் சற்றே கவலையுடன் இருக்கையில் மீண்டும் அமர்ந்தார். தன் பதவியின் காரணமாக கிட்டத்தட்ட பத்து நொடிந்துபோன அரசாங்க நிறுவனங்களுக்கு அவரே தலைவர். அகிலேஷ் குமார் அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் பொது மேலாளர். அனுபவமும் திறமையும்  நடைமுறைத் தந்திரமும் கொண்டவர்.

 

அவரின் இந்த அறிவிக்கப்படாத வரவு ஏதோ சிக்கல் என்று சொல்லியது. என்ன நடந்ததென்று என தெரியவில்லையே! ஏதாவது கிடங்கில் தீவிபத்தா? இல்லை, வங்கிகள் எதாவது கணக்கை முடக்கிவிட்டனவா? இல்லை பங்குச்சந்தை ஊழலா? எல்லா யோசனைகளும் மனதிற்குள் ஓடித்தீர்த்தன. மறு நாள் சனிக்கிழமை. வெள்ளிக்கிழமை மாலை ஒரு விபத்து என்றால் இந்த வாரக்கடைசி அவ்வளவுதான்.

 

சட்டமன்றம் வேறு கூடியிருக்கும் நேரம். செய்திக்கான சந்தை எப்போதும் இது போன்ற விஷயங்களுக்காக நாக்கைத்தொங்கப்போட்டுக் காத்திருப்பது. எந்த செய்தி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வரும் என்று தெரியாது. அல்லது எது கேள்வியாக எழுப்பப்படும் என்பதும் சொல்வதற்கில்லை.

 

“என்னாச்சு, மிஸ்டர். வர்மா?”

 

இனிமையான மனநிலையில் இருந்தால் முதல் பெயரை கொண்டும், சிடுசிடுப்பாக இருந்தால் இரண்டாம் பெயரை கொண்டும் அழைப்பார் என்பது வழக்கம்.

 

எதுவும் சொல்லாமல், வர்மா, கையில் எடுத்துவந்திருந்த ஒரு காகித உறையை நீட்டினார்.

 

“என்ன இது?”

 

வர்மா எதையும் சொல்லவில்லை. உறைக்குள் இருந்த காகிதத்தை எடுத்து மடிப்பு களைத்து கல்லோல் பார்க்கும்படி நீட்டினார்.

 

சம்மன்.

 

வெள்ளைத்தாள் தான். சட்ட மொழியில் திரு.கல்லோலை ஏப்ரல் 7ம் தேதி காலை 10.30 மணிக்கு அனைத்து ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஆஜராகும்படி தகவல் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. வர மறுத்தாலோ தவறினாலோ ஆணையம் அதற்கு தனக்கு சரி என்று தோன்றும் எந்த நடவடிக்கையையும் ஒருதலைப்பட்சமாக எடுக்கும்.

 

கல்லோல் அந்த சம்மனை சில நிமிடங்கள் படித்து அதன் முழு அர்த்ததையும் உள்வாங்கினார். சாதாரணமாக அவர் ஒரு நாளில் கிட்டத்தட்ட நூறு கடிதங்களுக்கு மேலாகவே வாசித்தார். அதில் கிட்டத்தட்ட இருபதாவது நீதிமன்ற வழக்குகள் சம்பந்தப்பட்டவை. இருப்பினும் இதை எப்படி தவறவிட்டோம் என்று தெரியவில்லை. தகவல் ஆணையம் திரு.கல்லோல் ராய்சவுத்ரியை நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியதை அவர் மெதுவாக உள்வாங்கி ஜீரணித்து கொண்டிருந்தார்.

 

எதைப்பற்றி என்று தெரியாமல் சிந்தித்து கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டு, அந்த அமைதியான அறையில் சரியான நேரத்தில் வர்மா உள்ளே நுழைந்தார், “அந்தம்மாவோட கேசு, சார். அதான் அந்த தாஸோட மனைவி…. தனிமா தாஸ்”

 

அவளைப்பற்றி அவருக்கு நினைவுறுத்த எந்த அவசியமும் இருக்கவில்லை என்று தோன்றியது. அவளின் இருப்பும் கோரிக்கை மனுக்களும் அத்தனை எளிதாக மறக்கக்கூடியவை அல்ல. ஒரு குற்றவாளியின் போராளி மனைவி. அட்டெண்ட்டராக பணியில் இருந்த அவள் கணவன் மீது நான்கு வருடங்களாக ஒரு விசாரனை நடந்து கொண்டிருந்தது.

 

திரு.கல்லோல் வந்தபிறகு நிறுவனத்தில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் கோபால் தாசின் மீது தொடரப்பட்ட நிர்வாக விசாரனை. மேலும் அவர்மீது  நிர்வாகத்திற்கு நஷ்டம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதற்காகவும் காவல்துறையில் வழக்கும் தொடரப்பட்டது. தூற்றுவோர்கள் இதை எல்லாம் கண்துடைப்பு என்று கூறினர். வேலையில் இருக்கும் ஆட்களை குறைப்பதென்று நிர்வாகம் முடிவெடுத்திருந்தது.

 

அப்படி எடுத்தால்தான் உலக வங்கி போன்ற நிறுவனங்களில் இருந்து நிதி உதவி கிடைக்கும். எல்லோருக்கும் ஒரே இரவில் விருப்ப பணி ஓய்வு கொடுக்க முடியாது. அப்படியே கொடுத்தாலும் அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. ஆதலால் இரும்புக்கரம் கொண்டு சில முடிவுகளை எடுத்தனர். ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், பணியில் கவனம் தவறியவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டு நடவடிக்கை எடுத்தனர்.

 

ஆட்களை பணியில் இருந்து நீக்குவதில் ஒழுக்கத்தின் சாயம் பூசிக்கொண்டதனால் தொழிலாளர் சங்கங்களுடன் எந்த மோதலும் இல்லை. விருப்ப ஓய்வுக்கான பணச்செலவும் இல்லை.

 

கோபால் தாஸ் நிலையில் இருந்த பணியாட்கள் மாதத்திற்கு 4500 ரூபாய் சம்பளமாக பெற்றனர். ஒரு நகரத்தில் வீட்டு வேலைக்காரர்கள் கூட ஒரு வீட்டிற்கு இதில் பாதியை சம்பளமாக வாங்குகின்றனர். இந்த சம்பளத்தை கொண்டு எப்படி குடும்பம் நடத்தி, பிள்ளைகளை படிக்கவைத்து, தினமும் சவரம் செய்து அலுவலகத்திற்கு வர முடியும்? பலருக்கும் கோபால் தாசின் நிலைமைதான்.

 

சிலர் வேறு தொழில் செய்தனர். சிலர் நிர்வாகத்திடம் இருந்து திருடுவது என்ற முடிவுக்கு வந்தனர். ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு தணிக்கை அறிக்கையில் கோபால் தாஸ் இருபத்தி ஏழாயிரம் ரூபாய் திருடிவிட்டதாக எழுதப்பட்டிருந்தது. கோபால் தாசின் பாதுகாப்பில் இருந்த பொருட்களின் மதிப்புக்கும் அவரிடம் கையில் இருந்த பொருட்களின் மதிப்புக்குமான வித்தியாசம் இருபத்தி ஏழாயிரம் ரூபாய். பொருட்களை விற்று நிர்வாகத்தை ஏமாற்றினார் என்பதே குற்றச்சாட்டு.

 

நிர்வாக விசாரனையும், காவல்துறையில் வழக்கும் தனித்தனியாக போடப்பட்டது. இதுபோல கிட்டத்தட்ட பதினைந்து பேர் பல வழக்குகளில் சிக்கினர். ஆனால் இதில் ஒருவருக்கு கூட கோபால் தாஸ் போல குரூர மனமோ அல்லது அவன் மனைவி போல தந்திர எண்ணங்களோ இருக்கவில்லை என்று கல்லோல் நினைத்தார்.

 

அதை கல்லோல் பெரும் ஆச்சர்யத்துடன் பார்த்ததற்கான காரணம் எப்படி வறுமையின் கொடிய பிடியில் சிக்கியிருக்கும் வேலை இல்லாத ஒருவனுக்கு இப்படிப்பட்ட பதிபத்தினி என்பதுதான். அதை சமூகக் கட்டமைப்பில் இருக்கும் ஒரு பெரும் சுரண்டலாகவே கல்லோல் பார்த்தார். கல்லோல் போன்ற பெரும் பதவியில் இருப்பவரின் மனைவியான பிரதத்தி கூட அவருக்காக தினமும் காத்திருகக்வில்லை. பசித்தால் சாப்பிட்டு உறங்கிவிடுவாள்.  அவருக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டால் “இந்தா….இத வச்சுக்குங்க. அவ்வளவுதான் இருக்கு” என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவாள். ஒருவேளை கல்லோலின் மேலதிகாரி அவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்தால், அவர் மனைவி வங்கி கணக்கை பிரித்துக் கொண்டு தனிக்குடித்தனம் போய்விடுவாளா? நிச்சயமாக போய்விடுவார் உண்மயில் அதில் தவறொன்றும் இருப்பதாக கல்லோல் நினைக்கவில்லை.

 

ஆனால் கோபால் தாசின் மனைவி தனிமா கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லோலின் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு சனிக்கிழமையும் இரண்டு மணி நேரம் குறைதீர்ப்பு நேரமாக் ஒதுக்கப்பட்டிருந்தது. கரிய நிறமும் திடகாத்திரமான உடலுமாக திருமதி. தனிமா தன் மனுக்களுடன் ஒவ்வொரு சனிக்கிழமையும் வருவாள். கசங்கிய கைத்தறி புடவையை உடுத்திக்கொண்டு, தலையை பின்னுக்கு வாரி, நெற்றியில் பெரிய குங்குமத்துடன் வந்து நிற்பாள்.

 

அவளிடம் பல முறை லலித் குமார் பேசியிருக்கிறார். அவள் தன் மனுவை பொதுமேலாளரிடமோ அல்லது இயக்குனரிடமோ கொடுத்தால் போதும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் தனிமா கல்லோலின் பதவி மீதோ பரிவாரங்கள் மீதோ எந்த பயமும் கொள்ளாமல் உறுதியாக மறுத்தாள். “இவர் மட்டும் தான் எனக்கு நியாயம் வழங்க முடியும்” என்று கூறினார்.

 

தொடக்கத்தில் திருமதி. தனிமாவின் நேரம் எல்லாம் தொழிலாளர் சங்க ஆட்களாலும் பிற முதலாளிகளாலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவள் எழுதிக் கொடுத்த சீட்டுக்கள் எங்கு சென்றதென்றே தெரியவில்லை. அந்தச் சீட்டுடன் ஐந்தோ பத்தோ சேர்த்து பியூனிடம் கொடுத்திருந்தால் அது திரு.கல்லோலின் மேசைக்கு சென்றிருக்கக் கூடும். அதை அவள் அறிய சிறிதுகாலம் ஆகியது

 

மூன்று மணி நேரமாக எவரும் தன்னை அழைக்காவிடினும் திருமதி தனிமா அங்கேயே அமைதியாக அமர்ந்திருந்தாள். மாலையில் கல்லோல் கிளம்பும் நேரத்திற்கு முன்பு அவருடைய செயலர்களும் ஊழியர்களும் தனிமாவை அங்கிருந்து கிளப்ப முயன்றனர். ஆனால் அவள் எழவில்லை. வேறுவழியின்றி கல்லோல் மாடிப்படி இறங்கும்முன் அங்கு நின்றிருந்த அவளைப் பார்த்தார்.

“யார் இந்தம்மா? ஏன் இவ்ளோ நேரம் உள்ளவிடாம உக்காரவச்சிருக்கீங்க?” என்றர். அங்கு நின்றவாறே தனிமாவின் மனுவை வாசித்து முடித்தார். அன்று முதல் அவரின் மனுவில் இருந்த விஷயங்கள் ஒரே மாதிரிதான் இருந்தன. கோபால் தாஸ் எந்த பொருளையும் அனுமதியின்றி விற்கவில்லை. தணிக்கை அறிக்கையில் சொன்னதுபோல எந்த பொருட்களும் அவரிடம் இருந்திருக்கவில்லை. ஆகவே அவர்மீது இருக்கும் குற்றச்சாட்டுகள் அத்தனையும் ஆதாரமற்றவை.

 

கல்லோலுக்கு உறுத்தலாக இருந்தது. அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்று மறுக்கப்பட்டிருந்தது. அந்த மனு நல்ல ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மனுதாரரும் பல மணி நேரம் காக்கவைக்கப்படாயிற்று.

 

“சரிம்மா…பார்த்திட்டு சொல்றேன்”

 

பொதுவாக எளியோருக்கு கனம் பொருந்திய கல்லோலின் இந்த சொற்களே போதுமானதாக இருந்தது. ஆனால் தனிமாவிற்கு அது போதவில்லை.

 

“எப்படி சொல்வீங்க? லெட்டர் போடுவீங்களா? எப்போ?”

 

“ஏம்மா அய்யா உனக்கு ஒரு தேதி வேற கொடுக்கனுமா?” என்று இடைமறித்து கடுப்பாக கேட்டார் லலித் குமார்.

 

“சரிங்க. நான் எப்ப வந்து தெரிஞ்சிக்க? அடுத்த சனிக்கிழமையா?”

 

“அதுக்கு அடுத்த சனிக்கிழமை வாங்க” என்று கல்லோல் அந்த நிமிடத்தில் அங்கிருந்து நழுவினார்.

 

பொதுவாக ஒரு மனுவுக்கு இரண்டுவாரங்கள் என்பது நெடுங்காலம். ஆனால் தனிமாவின் மனுவுக்கோ அது அவ்வளவு நெடியதாக இருக்கவில்லை. அவள் நிறையவே அலைந்திருந்தாள். இரண்டு வாரங்களுக்கு பின்னர் திருமதி. தனிமாவின சீட்டு மேசைக்கு வரும்போது அதை ஒரு மறைமுக எச்சரிக்கையாகவே கருதினார் கல்லோல்.

 

“அந்த அப்ளிகேஷன் என்னாச்சுன்னு பார்த்தீங்களா?” என்று லலித் குமாரிடம் கேட்டார்.

 

“அதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை, சார்” என்று புன்முறுவலுடன் கூறினார் லலித். “அந்த நிறுவனத்தின் இயக்குனர்தான் அதுக்கு பதில் சொல்லனும்  சார். அங்கிருந்து இன்னும் பதில் வரலை”

 

“எதுக்கும் பாருங்க. இங்கிருந்துதானே அங்கே அனுப்பியிருப்பாங்க? நமக்கும் ரெக்கார்ட் ஆகியிருக்கும்”.

 

சம்பந்தப்பட்ட அலுவலர் விடுப்பில் சென்றிருப்பார் அல்லது வேறு ஒரு மேசையில் அது உறங்கியிருக்க கூடும். திருமதி.தனிமாவிற்கு எந்த பதிலும் இல்லை. எப்போதும் அதேதான் நிகழ்ந்தது

 

ஆனால் தனிமா திரும்ப திரும்ப வந்து அமைதியாக நிற்பாள். கல்லோல் சிடுசிடுப்பார். நிர்வாணமாக,  நிராயுதபாணியாக தன்னை உணர்வார். “இன்னும் என் மேசைக்கு வரலம்மா….வந்ததும் சொல்றேன்” என்பார்

 

“நான் எப்போ வரட்டும்,சார்? அடுத்த வாரமா?”

 

“சரி.வாங்க”

 

அடுத்த வாரமும் அதே கதை தான்.

 

இந்த குறைகேட்கும் நாளை தொடங்கும்போது இவ்வளவு மனுக்கள் வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தனை மனுக்கள் கட்டுகட்டாக அவர் முன் குவிக்கப்பட்டன. எதுவும் சரியான ஒரு கோப்பில் போடப்பட்டு கொண்டுவரப்படவில்லை. குறைகள் மட்டுமே தெரிந்தன. அதற்கான தீர்வுகள் தென்படவில்லை.

 

சில வாரங்களில் தன் மேஜை குறைகளால் குவிக்கப்படுவதை கண்டு அவர் ஆத்திரமானார். தனிமா, தனிமா, தனிமா….ஒவ்வொருவாரமும் திருமதி.தனிமாவின் முகம் வேறு. தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

 

மீண்டும் மீண்டும் நினைவூட்டல்கள் சென்றன. பொறுமையிழந்து அந்த நிறுவனத்தின் இயக்குனருக்கும், பொது மேலாளருக்கும் தொலைபேசியில் அழைத்து “இன்னும் ஏன் ஒரு பதில்கூட போட மறுக்கிறீர்கள்” என்று தன் வருத்தத்தை தெரிவிப்பார்.

 

அவர்களோ எந்த சலனமும் இல்லாமல், “எதாவது அனுப்பியிருக்கீங்களா,சார்? நான் பார்க்கிறேன், சார். இன்னும் எனக்கு வரவில்லையே? தாஸ் மீது வழக்கு தொடர்ந்து நாலு வருசமா போயிட்டிருக்கே?” என்பார்கள். எப்போதும் அதே சொற்கள்தான்

 

ஒரு நாள் திரு. கல்லோல் தனிமாவை நோக்கி முகம் சிவந்து கண்களை உருட்டி  “திரும்பத் திரும்ப இங்கேயே வராதம்மா. விஷயம் கோர்ட்டில இருக்கு. நான் எதுவும் சொல்றதுக்கில்லை” என்றார்

அவரை ஆச்சர்யமாக பார்த்த தனிமா, “நான் கோர்ட் கேசுக்கே வரலங்க. நிர்வாகத்தில நடக்கும் விசாரனைக்காக வர்றேன். அதுல மனு கொடுக்கலாம் இல்லையா?” என்றார்.

 

“உங்க இஷ்டம்”

 

”இதுவரை பதினைந்து மனு கொடுத்திருக்கேன். நீங்கதான் அந்த நிறுவனத்தோட தலைவர். உங்களால ஒரு பதில் சொல்ல முடியலைன்னா, உங்களுக்கு கீழ இருக்கிறவங்களால மட்டும் என்ன பண்ண முடியும்?”

 

“எனக்கு தெரியாது. உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கில்லை. தினமும் வந்து என்னை தொந்தரவு பண்ணாதீங்க. தலைக்குமேல வேலை இருக்கு” என்று தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறு தன் இயல்பான குரலை மீறி சத்தமாக் சொன்னார்.

 

குரலை கேட்டு அவரின் பியூன் மேசைக்கு பின்னால் இருந்த கதவை திறந்து அவசரமாக உள்ளே வந்தார். வந்த அவசரத்தில் கையில் இருந்த கனமான பொருளை நழுவவிட்டார். அது நேராக கதவிற்கு அருகே இருந்த டீபாய் மீது விழுந்து கண்ணாடியை நொறுக்கியது.

 

தனிமா பதறினாள். அதன் பிறகு அவர் எந்த சனிக்கிழமையும் வரவில்லை. கல்லோல் அது நெருடலாக இருந்தாலும் சற்றே நிம்மதியாக உணர்ந்தார். ஒவ்வொரு வாரமும் தனிமாவின் கோரிக்கையை தள்ளிப்போடும்போதோ நிராகரிக்கும்போதோ அதில் ஒரு தோரணையும் ஆண்மைத்தன்மையும் இருப்பதாக தோன்றியது.

 

ஆனால் விஷயம் வேறுவடிவம் எடுக்கும் என்பதை கல்லோல் அப்போது உணர்ந்திருக்கவில்லை. நிறுவனத்தின் இயக்குனர் திரு. சௌபே அழைத்திருந்தார். மேலாளர் அகிலேஷ் வர்மாவைப்போல கெட்டிக்காரர் இல்லை. அமைதியான, பயந்த எளிமையான மனிதர். அவராக எப்போதும் அழைத்ததில்லை. ஆனால் இம்முறை, திரு. கல்லோலிடம் பதற்றமாக பேசினார்.

 

“அந்தம்மா தனிமா தாஸ் பல டாகுமெண்ட்ஸை கேட்டு மனு போட்டிருக்காங்க, சார். புது தகவல் அறியும் உரிமை சட்டதுல அப்ளை பண்ணிருக்காங்க”.

 

கல்லோல் அதிர்ச்சியானார். அந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இன்னும் ஒருவருடம் கூட ஆகவில்லை. இப்போதுதான் அலுவலர்களுக்கெல்லாம் இதைப்பற்றி பயிற்சியே வழங்கப்பட்டிருக்கின்றது. இவர் கூட நாளிதழ்களில் இரண்டு கட்டுரை எழுதினார். அனைவரிடத்திலும் தகவல் அறிவது எப்படி ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று மூளைச்சலவை செய்தார். மக்களாட்சியின் அடிப்படை தத்துவங்களில் ஒன்று என கூறினார். இருப்பினும் அப்படி ஒரு மனுவை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

 

”அந்தம்மாவ சும்மா சொல்லக்கூடாது,சார்” என்றார் லலித் குமார். ”அந்த கோபால் பின்னாடி இருந்திட்டு இதை எல்லாம் வேடிக்கை பார்க்கிறான். அவன் எதுக்கும் லாயக்கில்லை”

 

”என்னென்ன கேட்டிருக்காங்க? அந்த அப்ளிகேஷனை பார்க்கனுமே” என்றார் கல்லோல்.

 

சௌபே மனமுடைந்திருந்தார். “எல்லா டாக்குமண்டையும் கேக்கறாங்க, சார். மொத்தமா இருபத்தி ஒன்னு. ஆடிட் ரிப்போர்டில் இருந்து எல்லாமே….. எப்படி,சார் கொடுக்கிறது?” கல்லோலுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

 

”அதெல்லாம் ஒன்னும் கவலப்படாதீங்க,சார்”, என்றார் லலித்குமார். “சட்டத்துல சில தகவல்கள் கொடுக்க வேண்டாம்னு இருக்கு. மிஸ்டர் சௌபே தான் முதல் மேல்முறையீட்டு அதிகாரி. அவரே இந்த காரணத்தை சொல்லி நிராகரிக்கலாம்”

 

அதை கேட்டு சற்று தயங்கிய கல்லோல்,”அப்படியே கொடுத்தா மட்டும் என்னவாம்? அந்த சட்டத்தோடு காப்பி இருக்கா?”

 

ஒரு மேசையை சுற்றி அனைவரும் அமர்ந்தனர். நிறுவன வக்கீலும் அமர்ந்திருந்தார். சட்டத்தின் பல நகல்கள் சிதறியிருந்தன. அவர்களுக்கு தேவையான குறிப்புகளை அடிக்கோடிட்டுக் கொண்டிருந்தனர்.

சட்டத்தின் 8வது பிரிவு எந்த தகவல்களை எல்லாம் மறுக்கலாம் என்பதை விவரித்தது.

 

தேசத்தின் பாதுகாப்பிற்கு பாதிப்பாக அமையும் தகவல்கள் கொடுக்கப்பட வேண்டியதில்லை

 

ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்கள் கொடுக்கப்பட வேண்டியதில்லை

 

அரசின் ரகசிய ஆலோசனை கூட்டங்களில் விவாதிக்கப்படும் விஷயங்கள் வேண்டியதில்லை

 .

இப்படியாக விவரிக்கப்பட்ட பிரிவில், ஒர் இடத்தில்,

 

“ஒரு விசாரனையின்போது ஏதேனும் தகவல் அந்த விசாரனையை பாதிக்கும் என்றால் அதை கொடுக்க அதிகாரம் உள்ளவர்கள் அவற்றை தவிர்க்கலாம்.  

 

–என்று இருந்தது. லலித்குமார் அதைச்சுட்டிக்காட்டினார்.

 

திரு.கல்லோல் தொண்டையை சீர்செய்து கொண்டு ,”ஆனா வேண்டுமெனில் கொடுக்கலாம்னுதானே இருக்கு? கொடுக்க வேண்டாம்னு இல்லை.  தவிர்க்கலாம்னு தானே இருக்கு?” என்றார்

 

வர்மா, சௌபே, லலித் குமார் அனைவரும் பேசாமலிருந்தார்கள். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எப்படி தெரியும்? எதையாவது சொல்லி மாட்டிகொள்ளக் கூடாது என்று வாய்திறக்கவில்லை.

 

அந்த எட்டாவது பிரிவை படிக்கும்போது கல்லோல் மனதில் தோன்றியது களப்போராளி திருமதி. அருணா ராயின் முகம் தான். இந்த மொத்த சட்டத்தை முன்னெடுத்து சென்றது அவர்தான்.

 

இடதுசாரிகளுடன் மிக நெருக்கமாகப் பழகி அந்த இயக்கத்தில ஒர் அங்கமாக மாறியிருந்த காலத்தில்தான் திரு.கல்லோல் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் ஆனார்.

 

“அரசாங்கத்துக்கு உள்ள இருந்து வேலை செய்யாம எப்படி நாம மாற்றத்தை கொண்டுவர்றது?” என்று கேட்டார்.  அதைக் கேட்டு அவர் நண்பர்கள் அனைவரும் வெடித்துச் சிரித்தனர். அந்த சிரிப்பில் கையில் இருந்த சூடான தேனீரை கால்மேல் சிந்தி கிட்டத்தட்ட அவரின் மூட்டுப்பகுதி வெந்துபோனது.

 

சிரிக்கும் இவர்கள் எல்லாம் முட்டாள்கள். கடைசிவரை குமாஸ்தாவாக இருந்துவிட்டு செத்துப்போவார்கள். வாழ்க்கையில் இலட்சியம் என்றால் என்னவென்று புரியாதவர்கள். அந்த 1978 ல் வேறு என்ன வாய்ப்பு இருந்தது? தொழிலும் இல்லை. தனியார் தொழிற்சாலைகளும் இல்லை. திறமை இருப்பவன் முன்னேறிச் செல்வதில் என்ன தவறு?

 

இடதுசாரிகள் வங்காளத்தில் ஆட்சிக்கு  வந்து ஓராண்டு ஆன காலகட்டம் அது. கல்லோலும் அவர் நண்பர்களும் உற்சாகத்துடன் வெற்றி ஊர்வலங்களில் கலந்து கொண்டனர். இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர காலக்கட்டத்தில் தலைமறைவாகிப்போன தலைவர்கள் எல்லாம் எட்டிப்பார்த்தனர். மக்களின் ஆதரவோடு கம்யூனிஸ்டுக் கட்சி ஒரு பேரியக்கமாக மாறியிருந்தது. பேருந்து ஓட்டுனர் முதல் தண்ணீர் வண்டிக்காரர்வரை அனைவரும் “தோழர்”களாக மாறிய காலம்.

 

அந்த கனவுகளில் திளைத்திருந்த கல்லோல் அப்போது அகில இந்திய தேர்வில் வெற்றிபெற்று ஐ.ஏ.எஸ் ஆக பணியில் சேர்ந்தார். ஒரு சிறிய ஊரில் சார் ஆட்சியராக தன் வாழ்க்கையை தொடங்கினார். ஒரு இளம் சிங்கத்தின் ஆற்றலுடன் பணிபுரிந்தார். அந்த சமயத்தில் தான் திருமதி. அருணா ராய் அவரை சந்திக்க வந்தார்.

 

அன்றொரு நாள் மாலையில் வீட்டுக்கு திரும்பிய போது அவருடைய காவலர்கள் சிலர் கசங்கிய வெள்ளைச்சேலை அணிந்த ஒரு பெண்ணுடன் எதையோ பேரி வாதிட்டுக் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து கண்டார். “திரும்ப போங்கம்மா…. அய்யா இந்த நேரத்தில எல்லாம் யாரையும் பார்க்கமாட்டார்”

 

அந்த கசங்கிய புடவை, சரியாக சீவி வாரப்படாமல் இருந்த தலை மயிர், தோற்றத்தின் மேல் எந்த அக்கறையும் இல்லாத உடல்மொழியை கண்டு கல்லோல் உற்சாகம் அடைந்தார். அருணா ராயின் அந்த சுற்றுப்பயணத்தில் அங்கு அவரைச் சந்திப்பதே ஆச்சர்யமாக இருந்தது. அவரைப்பற்றி அவ்வளவு படித்திருந்தும் தீவிரமாக தேடி தகவல்கள் திரட்டியும்கூட அதுவரை நேரில் சந்தித்ததில்லை.

 

மக்கள் பணியாற்றும் உண்மையான போராளி தன்னை பார்க்க வந்திருப்பது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.  அன்று இரவு சூடான கிச்சூரியை சாப்பிட்டுக் கொண்டே ஐ.ஏ.எஸ் பணியை துறந்து மக்களுடன் அவர் ராஜஸ்தானில் போராடிய நாட்கள், அவரின் கணவர் திரு.சஞ்சய் பங்கர் ராயின் சமூகப் பணி ஆகியவற்றைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோதுதான் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்காக அவர்கள் மேற்கொண்டிருக்கும் தீவிரப் போராட்டத்தைப் பற்றி சொன்னார்.

 

அதன் தொடர்ச்சியாக பல வருடங்கள் கழித்து 2005ல் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டபோது ஒரு பொதுக்கூட்ட அரங்கில் திரு கல்லோல் “மக்களுக்கான இந்த சட்டம் நிறைவேற்றப்பட காரணமாகிருந்த மக்கள் போராளி யார் என்று எனக்கு தெரியும்……மிகப் பெருமையாக சொல்வேன் அது நான் அறிந்த நபர், திருமதி.அருணா ராய்” என்றார்.கைதட்டல் எழுந்தது. அந்த காலக்கட்டத்தில்தான் அவருக்கு சர்வதேச விருதான ராமன் மகசேசே விருதும் கொடுக்கப்பட்டது.

 

சட்டத்தின் எட்டாவது பிரிவை படிக்கும்போது திருமதி.அருணாவின் முகம் கண்முன்னே வந்து சென்றது. அந்த உரையாடலையும் அவரின் போராட்ட குணத்தையும் அவரால் எண்ணாமல் தவிர்க்கமுடியவில்லை. ஆனால் அவரின் முன்பு மேசையில் அமர்ந்திருந்த மற்றவர்களையும் அவரால் மறுக்க முடியவில்லை.

 

தனிமாவின் மனு எட்டாவது பிரிவின் கீழ் வர்மாவால் நிராகரிப்பட்டது. அது பின்பு மேல்முறையீட்டிற்கு திரு.சௌபேவிடம்  செல்லும்போதும் நிராகரிப்பட்டது. இப்போது திரு.கல்லோல் முன்பு சரியான முறையில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அவர் கண்முன் அந்த மனு வைக்கப்பட்டிருந்தபோது “இதை கொடுத்தால் தான் என்ன? என்னவாகிடும் இப்போ?” என்று சிந்தித்தார். நிர்வாக விசாரனையும் முடிந்திருந்தது. திரு.கோபால் தாசிற்கு இரண்டாம் முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. இந்த தகவலை கொடுப்பதால் இப்போது ஒன்றும் கெடாது.

 

ஆனால் கல்லோல் இப்போது அந்த இளம் சிங்கம் இல்லை. அவர் ஒரு தனி நபர் அல்ல. ஒரு நிறுவனம். நுற்றுக்கணக்கான மக்கள் அவரை நம்பி இருந்தனர். அவரின் சின்னச் சறுக்கல் கூட மொத்த நிறுவனத்தின் பெயரைப் பாதிக்கும். சௌபே, வர்மா, லலித் குமார்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். திருட்டு நாய்களுக்கோ அவர்களோடு துணை நிற்கும் மற்ற நாய்களுக்கோ எந்த கரிசனமும் காட்ட தேவை இல்லை என்றனர். தனிமா தாசின் விண்ணப்பம் மீண்டும் நிராகரிப்பட்டது.

 

மனுவை நிராகரித்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தன. அந்த சம்மனை பார்த்ததும் அவை எல்லாம் நினைவுகளாக வந்து கொண்டிருந்தது. அந்த நினைவுகளில் தன் இருப்பை அவர் தேடிக்கொண்டிருந்தார். நடந்த அனைத்தையும் ஒவ்வொன்றாக தேடினார். ஒவ்வொரு சனிக்கிழமையும் தனிமா தவறாமல் வருவதும், பியூனின் கையில் இருந்து பொருள் தவறி கண்ணாடியை உடைத்ததும். அவரால் ஒருவருடம் முழுமைக்கும் தன்னை விடாமல் பின் தொடர்ந்த தனிமாவை மறக்கமுடியவில்லை.

 

அந்தப் பின்மாலையில், தகவல் ஆணையத்திடம் இருந்து வந்த சம்மனை எடுத்துவந்த அகிலேஷ் வர்மா அவர் முன் அமர்ந்திருந்தார். ஒரு நல்ல பாம்பைப்போல் கல்லோலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். கல்லோலின் உத்தரவுக்காக காத்திருப்பது போல பாவனையுடன் அமர்ந்திருந்தார்.

 

“அப்போ ஏப்ரல் 7ம் தேதி நான் போகணும். இல்லையா?” என்று பெருமூச்சுடன் சொன்னார் கல்லோல். “அப்படியே போகலைன்னா? தன்னிச்சையா முடிவு சொல்வாங்களா?”

 

“சே சே….நீங்க கண்டிப்பா போகனும், சார். உங்க கவுரவத்துக்கு எந்த பங்கமும் இல்லாமல் நாங்க பார்த்துக்குறோம். அதுக்கான ஏற்பாடுகள் எல்லாம் போயிட்டிருக்கு”

 

லலித்குமாரை அழைத்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்த ஆணையத்தின் முகவரியைக் கண்டுபிடித்து தரும்படி சொன்னார். அந்த கோபால் தாஸ் இதுவரை ஒருமுறைகூட நேரில் வரவில்லை. வர்மா சொன்னதைவைத்து பார்த்தால் அவனைப் போன்ற ஆட்கள் எல்லாம் நாம் எண்ண முடியாத ஏதோ சதிதிட்டத்தோடுதான் அதை அணுகுவார்கள். நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்.

 

கல்லோல் சமீபத்தில் நீதிமன்றத்துக்கு சென்றதில்லை. நீதிமன்ற அவமதிப்புக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டுமுறை சென்றிருக்கிறார். ஆணையத்தின் தலைவர் தன்னோடு முன்னர் வேலை செய்தவர்தான். இருப்பினும் ஒரு பதற்றம் இருந்து கொண்டே இருந்தது. தனது மனைவியிடம் கூட அதை வெளிப்படுத்தினார்.

 

அரசு அலுவலகங்கள் நிறைந்த அந்த பகுதி எப்போதும் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தது. ஏப்ரல் 7ம் தேதி சரியான நேரத்திற்கு வீட்டைவிட்டு கிளம்பினார். அவரின் ஓட்டுனர் சதாசிவா அந்த கட்டிடத்தை தேடி சாலையில் முன்னும் பின்னுமாக சுற்றிக் கொண்டிருந்தார். லலித்குமார் அந்த முகவரியை கல்லோலுக்கு கொடுக்காமல் சதாசிவாவிடம் கொடுத்ததால் அந்த குழப்பம். அவனோ முட்டாளைப்போல சுற்றிக் கொண்டிருந்தான். கல்லோல் எரிச்சலுற்றார். தாமதமாகச் செல்வது அவருக்கு பிடிக்காது. அதுவும் இது போன்ற தன்னை விசாரனைக்கு உட்படுத்தும் சமயங்களில் அறவே பிடிக்காது.

 

“காரை நிறுத்து” என்று கத்தினார் கல்லோல்.

 

தனிமா தாஸ் சிலைபோல ஒரு அலுவலகத்தின் வாயிலில் நிற்பது தெரிந்தது. அவள் நின்றிருந்த இடத்திற்கு அருகே “தகவல் ஆணையம்” என்ற பலகை இருந்தது.

 

கல்லோலுக்கு தெரியாமல் ஒரு விஷயம் நடந்திருந்தது. ஏப்ரல் 5ம் தேதியே திரு.கோபால் தாஸ் பணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். திரு.சௌபே கையெழுத்திட்ட அந்த ஆணையை தனிமா வாங்க மறுத்தார். எனவே உள்ளூர் செய்தித்தாளில் அந்த ஆணையையும் திரு.கோபால் தாசின் புகைப்படத்தையும் போட்டு முழு அரசு மரியாதையுடன் அவரை அவமானப்படுத்தினர். இதை கல்லோல் கவனித்திருக்க வேண்டும். ஆனால் அவரின் மனம் ஓர் நிலையில் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்ததால் அதை அவர் பார்த்திருக்கவில்லை.

 

அந்த ஆணையை கையெழுத்திடுவதற்கு முன்பு திரு.சௌபே தயங்கியிருக்கிறார். கோபால் தாஸ் கடந்த ஓராண்டாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாகவே இருந்திருக்கிறார். ஆதலால் அவரால் எதற்கும் வரமுடியவில்லை. அவருக்கு எந்த சம்பளமும் கொடுக்கப்படவில்லை. நிர்வாகத்துக்கும் எந்த நஷ்டமும் இல்லை. அப்படி இருந்தும் இந்த நடவடிக்கை தேவைதானா? வெறும் இருபத்தி ஏழாயிரம் ரூபாய் தான்.

 

பம்பாயில் தெல்கி போன்றோர் செய்த ஊழலில் இது எந்த கணக்கில் வரும்? ஆனால் அகிலேஷ் வர்மா சௌபேவிடம் இது தலைவரின் கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று சொல்லி கையெழுத்திடுவதற்குச்  சம்மதிக்க வைத்தார்.

 

கடைசியாக சௌபே அந்த ஆணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு முன்பு வெளியிடுமாறு செய்தார். இது எதுவும் கல்லோலுக்கு தெரிந்திருக்கவில்லை. சமூகமாற்றத்தை தன்னால் கொண்டு வந்துவிட முடியும் என்று முழுமையாக நம்பிய அந்த பழைய இளஞ்சிங்கத்திற்கு தன்னை இந்த வர்மாக்களும், லலித் குமார்களும் மாற்றிவிடுவார்கள் என்று தெரியவில்லை.

 

தனது காரின் கறுப்பு நிற ஜன்னலை முழுமையாக மேலே ஏற்றிய கல்லோல், சதாசிவத்திடம் ஏ.சியை போடச் சொன்னார். சாலையில் இருந்து அந்த வாயில் அவ்வளவு தூரம் இல்லை. கசங்கிய சேலை கட்டி நின்றிருந்த தனிமாவை கடந்து போனார்.ஆனால் தனிமா அவரை பார்க்கவே இல்லை. ஒரு கல்லாக மாறியதுபோல் நின்றிருந்தார்.

 

அவரை கடந்து சென்றபின் வாயிலில் நின்றிருந்த அவளை சட்டென்று ஒரு நிமிடம் திரும்பிபார்க்க எத்தனித்தார். “அது தனிமாவா….. இல்லை அருணாவா?” தூரத்தில் இருந்து எல்லாம் மங்கலாக தெரிந்தது….

 

 

அனிதா அக்னிஹோத்ரி சிறுகதை நிழல்யுத்தம்

முந்தைய கட்டுரைஐராவதம் மகாதேவன் – கடிதம்
அடுத்த கட்டுரைசென்னையில் பேசுகிறேன்