தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா?

IMG_20181124_213034

அன்புள்ள ஜெ,

திருச்சி st. Joseph கல்லூரியில் வரும் 07-dec-2018 அன்று நடைபெற உள்ள ” தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன் கொடுமைகள்” என்ற கருத்தரங்கம் பற்றி உங்கள் கருத்தென்ன?

விவாத தலைப்புகள் பற்றி தனியாக இணைத்துள்ளேன்.

இதை தமிழ்நாடு bjp யின் H.ராஜா எதிர்க்கிறார். இதனை இந்து மதத்தின் மீதான தாக்குதல் என்கிறார்.

  • இது இந்து மதத்தின் மீதான தாக்குதலா?
  • இதை ஒரு கிறிஸ்தவ நிறுவன தில் (அ) நிறுவனத்தால் செய்யலாமா? இது இலக்கணம் என்ற பெயரில் மறைமுகமாக இந்து மதம் அல்லது non-abrahamic மதத்தை விமர்சிக்கும் போக்கா?

தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

-கோகுல்

IMG_20181124_213037

அன்புள்ள கோகுல்

இந்தத் தலைப்புக்கள் எந்த வகையிலும் தவறானவை அல்ல. ஒரு கல்வித்துறை ஆய்வுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. தலித் ஆய்வுகள் மற்றும் விளிம்புநிலை ஆய்வுகள் பொதுவாகவே மரபை எதிர்நிலையில் வைத்துப் பார்ப்பவைதான். இது பெண்ணிலை நோக்கிலான ஆய்வுநோக்கு. அந்த வகையான ஆய்வுகள் புதிய திறப்புகளை அளிப்பவை. தமிழில் ராஜ் கௌதமன் போன்றவர்கள் முழுமையான மரபு எதிர்ப்பு நோக்குகளை முன்வைத்தவர்கள்

மரபின்மீதான, சூழலின் மீதான விமர்சனம் இல்லாமல் கலை இல்லை. இலக்கியம் இல்லை. சமூகசீர்திருத்தம் இல்லை. சமூக ஆய்வே நிகழமுடியாது. அதில் கலைத்துறைக்கும் இலக்கியத்துறைக்கும் கல்வித்துறைக்கும் வெளியே இருந்து எவரும் கட்டுப்பாடுகள் விதிக்கமுடியாது. அத்தகைய கட்டுப்பாடுகள் பண்பாட்டின் கடிவாளத்தை சிலரிடம் அளிப்பதாகவே முடியும். அது மிகப்பெரிய தேக்கநிலையை, அழிவை உருவாக்கும்.

கட்டற்றதோ உள்நோக்கம் கொண்டதோ ஆன ஆய்வுகள் கூட தடுக்கப்படக்கூடாது. அவற்றின் உள்நோக்கமோ அல்லது கட்டின்மையோ அடையாளம் காணப்படலாம். சுட்டிக்காட்டி விமர்சிக்கப்படலாம். கறாரான ஆய்வுரீதியான மறுப்புகள் உருவாக்கப்படலாம். ஆனால் பண்பாட்டுத்தளத்தில் எந்த விமர்சனத்திற்கும் இடமிருக்கவேண்டும். ஆகவே இந்த விமர்சனக் கருத்தரங்கு நிகழ்வதன் மீது எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

ஆனால் இச்செயலை அறிவுலகம் அடையாளம்காண வேண்டும் என விழைகிறேன். இந்த நிறுவனம் – தூய வளனார் கல்லூரி , ஆழமான மதப்பரப்பு நோக்கம் கொண்டது. அதன் பார்வையில் அறிவார்ந்த சமநிலையும் எப்போதும் இருப்பதில்லை. அதாவது இது கல்விநிறுவனம் என்றபேரில் இயங்கும் மதநிறுவனம். அந்நிலையில் இதன் ஆய்வுநோக்கை உள்நோக்கம் கொண்டதாக மட்டுமே எடுத்துக்கொள்ளமுடியும்..

இப்படி இவர்கள் நாட்டார் தெய்வங்களைப் பற்றியும் இந்துமதங்களுக்கு இடையே உள்ள கருத்துப்போர்களைப் பற்றியும் சென்றகாலங்களில் உருவாக்கிய திரிபுக்கொள்கைகள்தான் பின்னர் அறிவுஜீவிகளால் அனைத்து ஊடங்களிலும் பேசப்பட்டன. இன்று சமூக வலைத்தளங்களின் மையக்கருத்தியலாக உள்ளன. இவர்கள் திட்டமிட்டுச் செயல்படும் ஒரு ஆற்றல்மிக்க கருத்துமையம்.

ஆகவே எந்தவகையான நேர்மையான ஆய்வு நோக்கமும் இவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. சமயங்களில் என இவர்கள் கூறும்போது அது இந்திய மதங்களை மட்டுமே சுட்டும் – இந்துமதத்தை விட பெண்ணடிமைக் கருத்துக்களின்  தொகையாக இருந்துகொன்டிருக்கும் கிறித்தவ மதப்பிரிவுகளை அல்ல.ஆதாமின் விலாவில் இருந்து ஏவாள் உருவானாள் என்னும் தொன்மமே உலக அளவில் பெண்ணடிமைத்தனத்தின் அச்சாக இன்றும் இருப்பது என ஒரு கட்டுரை இந்த கல்லூரியில் எவரேனும் வாசித்துவிட முடியுமா?

இத்தகைய கருத்தரங்குகளின் அமைப்பையே நீங்கள் கவனிக்கலாம். கருத்துச் சுதந்திரம், விவாதம் என்றெல்லாம் இவர்கள் சொல்வார்கள். ஆனால் இங்கே சுட்டப்பட்டிருக்கும் கட்டுரைகள் அனைத்துமே ஒரே கோணம் கொண்டவை, ஒரே குரலில் பேசுபவை என்பதைக் காணலாம். இத்தனை ஆய்வாளர்கள் இப்படி ஒற்றைக்கருத்தை எப்படி வந்தடைந்தார்கள்? அவர்கள் எப்படி இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டார்கள்? மாற்றுத்தரப்பே இல்லாமல் நிகழும் இதை விவாதம் என்றுகொள்ள முடியுமா? இது நேரடியான பிரச்சாரம் மட்டுமே.

இத்தகைய அரங்குகளில் அந்த அரங்கை ஒருங்கிணைப்பவர்களின் நோக்கத்தைப்புரிந்துகொண்டு மேலும் மேலும் ஒரே குரலில் பேசுபவர்களையே காணமுடியும். பலவகைப்பட்ட தலைப்புகள் இருக்கும். பலவகையான பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பேசுவார்கள். ஆனால் முடிவுகள் ஒன்றே. வேறெங்கும் இத்தகைய ஒற்றைக்கோணத்தை நம்மால் பார்க்கமுடியாது. சிறிய மாற்றுக்குரல்கள் கூட கடுமையாக ஒடுக்கப்படுமென்பதனால் அவை எழுவதே இல்லை.

பண்பாட்டு இயக்கத்தின் நுண்ணிய முரணியக்கம் பற்றியோ,  பண்பாட்டுக்கும் சூழலுக்குமான உறவுகளைப்பற்றியோ இத்தகைய ஒற்றைப்படையான டமாரப்பிரச்சாரத்தில் எவருமே பேசிவிட முடியாது. மேலும் இவர்களுக்கு தேவை விவாதம் அல்ல, இவர்கள் உருவாக்கும் ஒற்றைப்படைக்கருத்தைப் பெற்றுக்கொண்டு மேலே கொண்டுசெல்லும் நோய்பரப்பிக் கொசுக்களையே. தமிழகநாட்டார் தெய்வங்களைப்பற்றி தூய சவேரியார் கல்லூரி உருவாக்கிய அரைகுறைக்கருத்துக்களும் திரிபுகளும் இப்படித்தான் இருபதாண்டுகளில் நம் பொதுப்புத்தியில் நிலைநிறுத்தப்பட்டன. இடதுசாரிகள் அந்தப்பரப்பலைத் தலைமேற்கொண்டு செய்தார்கள்.

இது இந்து மதத்தின் மீதான தாக்குதல் அல்ல. தொல்காப்பியமும் புறநாநூறும் சிலப்பதிகாரமும் இந்து நூல்கள் அல்ல. இது தமிழ்மரபு மீதான தாக்குதல்தான். இவர்கள் சென்றகாலங்களில் இந்து மரபை எதிர்க்க தமிழ்மரபை எதிர்விசையாகக் கட்டமைத்தனர். அந்தக் கருத்துநிலை வலுவாக வேரூன்றியபின் தமிழ்மரபுக்கு எதிராக நாட்டார் மரபை முன்னிறுத்தினார்கள். ஏற்கனவே நாட்டார்மரபு பிசாசுவழிபாடு என இவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது இப்போது தமிழ் மரபை தீயது, இருள்நிறைந்தது என சித்தரிக்கிறார்கள். இந்தப்பட்டியலில் தேம்பாவணியோ  இரட்சணிய யாத்ரீகமோ சீறாப்புராணமோ குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களோ இல்லை என்பதைக் கவனியுங்கள்.இவர்கள் பார்வையில் கீழைநாட்டு நூல்கள்  அனைத்துமே சாத்தானின் சொற்களால் ஆனவைதான்.திருக்குறளாக இருந்தாலும் சரி.

உண்மையில் கருத்தளவில் எனக்கு இத்தலைப்புக்களுடன்கூட எந்த முரண்பாடும் இல்லை. பழைமையை விமர்சனம் செய்யவே நானும் முயல்வேன். நானும் சங்க காலத்து வாழ்க்கையின் பெண் ஒடுக்குமுறைகள் பற்றி, பழந்தமிழ் இலக்கியத்தின் பெண்கள் மீதான அணுகுமுறைபற்றி விமர்சனங்களை எழுதியிருக்கிறேன். இதற்கு ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்கவேன்டியவர்கள் தமிழ் தமிழ் என பொற்காலக் கதைகள் பேசுபவர்கள். திருக்குறளுக்கும் தொல்காப்பியத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் மாய்ந்து மாய்ந்து உரை எழுதியவர்கள்.தமிழ்த்தேசியக்கூப்பாடு போடுபவர்கள். ஆனால் அவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலான அமைப்புகள், சிந்தனையாளர்களின் அன்னதாதா இந்த அமைப்புதான்

இவர்களின் பார்வையும் ஓர் ஆய்வாளனின் பார்வையும் எங்கே முரண்படுகின்றன? ஆய்வாளன் இறந்தகாலத்தின் கருத்தியல்போதாமைகளை, பிழைகளை ஒரு நீண்ட பரிணாமத்தின் பகுதியாக அணுகுவான். இவர்கள் அதை தங்கள் மதப்பிரச்சாரத்தால் மீட்கப்படவேண்டிய’ காட்டுமிராண்டிக்கூட்டத்தின் பண்பாடு என அடையாளப்படுத்துவார்கள். அடித்தளத்தில் அந்த அடையாளப்படுத்தலை வைத்துக்கொண்டு மேலே பெண்ணியம் தலித்தியம் விளிம்புநிலைக் கதையாடல்கள் என கல்வித்துறை பாவலாக்களை காட்டுவார்கள். இவர்களின் இந்த முன்வரைவை ஒட்டி பெரும்பாலும் இந்துப் பேராசிரியர்களைக் கொண்டே கட்டுரைகளை எழுதி முன்வைப்பார்கள். மேலோட்டமாக கல்வித்துறை ஆய்வாகத் திகழும், நடைமுறைவிளைவில் தமிழர்கள் தங்கள் பண்பாடு காட்டுமிராண்டிப்பண்பாடு என நினைக்கச்செய்யமுடியும்

இன்னும் ஐந்தாண்டுகளில் இதே குரல்  ‘பொதுவான’ ‘முற்போக்கான’ ஆய்வாளர்களின் குரலாக ஆவதைக் காண்பீர்கள். மேலும் பத்தாண்டுகளில் சமூக வலைத்தளங்களின் மையக்கருத்தியலாகவும் இது ஆகும். தமிழகம் இப்படித்தான் சிந்திக்க வழிகாட்டப்படுகிறது

ஆனால் இந்த வகையான செயல்பாடுகளுக்கு எதிரான செயல்பாடு என்பது இவர்களைப் புரிந்துகொள்வதும் புரிந்துகொள்ள வைப்பதும் தானே ஒழிய இதை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு முச்சந்தி அரசியலில் இறங்கி இவர்களை நியாயப்படுத்தும் நிலையை உருவாக்குவதல்ல என்பதே என் எண்ணம். ஏனென்றால் விமர்சனத்தை புண்படுத்தலாக பார்ப்பது எந்த அமைப்பையும் தேக்கமுறச் செய்யும். சிந்தனையின் அடுத்தபடிகள் நிகழாமலேயே ஆக்கும். நாம் இருநிலை வெறுப்பியல்களின் நடுவே நின்றுகொண்டிருக்கிறோம். உண்மை எப்போதும் தனித வழிகொண்டது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

ஜெ

தாமஸ் ஒரு கருத்தரங்கு

தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தாமஸ்
முந்தைய கட்டுரைவாக்கும் தாரையும்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: ஐராவதம் மகாதேவன்