ஊடுருவல்கள்,சூறையாடல்கள்

John-Chau-750_2

அவ்வப்போது சந்தித்துப் பேசும் மார்க்ஸியவாதியான மலையாள நண்பர் சென்டினில் பழங்குடிகளைச் சந்திக்கச் சென்ற அமெரிக்க திருட்டு மதமாற்றக்க்குழு உறுப்பினரான ஆலன் சௌ [Allen Chau] வை  ‘தீரன்’ என்றார். நண்பர் ஆழமான கிறித்தவ நம்பிக்கை கொண்டவரும்கூட. அவர் பார்வையில் கிறிஸ்தவம் கம்யூனிசத்தின் மேம்பட்ட வடிவம்.

ஆலன் சௌ இந்திய அரசின் சட்டங்களை மீறியவர், ஆகவே குற்றவாளி என்று நான் சொன்னேன். மேலும் உலகமெங்கும் கட்டாய மதமாற்ற முயற்சிகள் வழியாக மாபெரும் மானுடப்பேரழிவை உருவாக்கிய ஒரு அமைப்பின் பிரதிநிதி, அந்த சென்றநூற்றாண்டு வெறியை இப்போதும் தன்னுள் கொண்டவர் என்றமுறையில் மேலும் பெரிய குற்றவாளி என்றேன். அவரை அங்கே கொண்டுசென்றவர்கள், அதற்கு மறைமுகமாக உதவிய அதிகாரிகள், அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டிய அதிகாரிகள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும், .

ஆனால் அதை ஒரு போதும் இந்திய அரசு செய்யாது, அவர்களிடமிருந்து சில்லறை தேற்றவே எந்த அரசியல்வாதியும் முயல்வார்கள் என அறிவேன். [இப்போதுகூட அந்த ஆசாமியின் மதநம்பிக்கையின்படி அவனுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக அந்தச் சடலத்தை மீட்க பெரும்பணச்செலவில் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது இந்திய அரசு] அன்னியர்களை அங்கே கொண்டுசென்று விடும் ஒரு ‘அமைப்பு’ அங்கே  செயல்படுகிரது என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. இந்த ஆள் செத்துப்போனதனால் இது செய்தியாகியிருக்கிறது.

நண்பர் கொந்தளித்துவிட்டார். ஆலன் சௌ நவீன உலகை உருவாக்கிய ஒரு பெரிய மரபின் நீட்சி என்றார். அவர் அந்த மக்களுக்கு ‘ஒளியை’ கொண்டுசென்றவர். அந்த மக்கள் அறியாமையின் இருட்டில் வாழ்பவர்கள். இந்தியாவின் அரசாலும் மக்களாலும் கைவிடப்பட்டவர்கள். அவர்கள் அந்த ஒளியை ஏற்றிருந்தால் பிறரைப்போல வசதியான வாழ்க்கைக்கு அவர்களும் வந்திருக்க முடியும். அவர்களை நோக்கி சென்றுகொண்டே இருப்பதுதான் நவீன உலகத்தின் கடமை. அவர்கள் மேல் சிறிய அளவில் வன்முறையைச் செலுத்தினாலும் அதனால் பிழையில்லை. அவர்களை நாகரீகப்படுத்தியாகவேண்டும் என்றார்.அதாவது அந்த பழைய white mans burden!

நான் ஒரே ஒரு கருத்தை மட்டும் கேட்டேன். அவர்களை நோக்கி இங்கிருந்து இந்துமைய மதத்தைச் சேர்ந்தவர்கள் சென்று அவர்களை மாற்றமுயன்றால் ஏற்றுக்கொண்டிருப்பீர்களா? பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியால் முன்னெடுக்கப்பட்ட ஒரு கருத்தரங்கில் இந்து மதம் எப்படியெல்லாம் பழங்குடிப்பண்பாட்டை அழிக்கிறது என்று நீங்கள் பேசியிருக்கிறீர்கள் அல்லவா? நண்பருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. இந்துமதம் அவர்களைச் சென்றடைந்தால் அது அவர்களை சுரண்டலுக்கு ஆளாக்கும், அவர்களின் தனிப்பண்பாட்டை அழிக்கும் என்றார்.

நான் “அதை கிறித்தவம் அழிக்காதா?” என்றேன்.  “இந்துமதம் நாட்டார் பண்பாட்டை அழிக்கிறது என்பதை நம் மார்க்ஸிய அறிவுஜீவிகளுக்கும் பெரியாரியர்களுக்கும் எடுத்துச்சொல்ல பலகோடி ரூபாய் செலவில் மாநாடுகளை நடத்திய பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியும் , திருச்சி தூய வளனார் கல்லூரியும், சென்னை இலயோலா கல்லூரியும் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புண்டா ?”என்றேன்.  “கிறித்தவம் உலகளாவிய நவீனப்பண்பாடு” என்று நண்பர் பதில் சொன்னார்.

அன்று மாலையே இன்னொரு நண்பரைச் சந்தித்தேன். அவர் திராவிட இயக்கத்தவர். இன்றையமொழியில் சொல்லப்போனால் பெரியாரியர். நகல் எடுத்ததுபோல அவரும் கிறித்தவ கம்யூனிஸ்டு நண்பரின் கருத்தையே சொன்னார். “அந்தமக்கள் காட்டுமிராண்டிகள். ஆடையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு நெருப்பே தெரியவில்லை. அவர்களை நாகரீகப்படுத்த முயல்வது சரிதான். இந்தியாவின் சாதியமைப்பால் ஒடுக்கப்பட்டு தீவில் வாழ்பவர்கள் அவர்கள்” என்றார்.

அவர்களுக்கு செண்டினில் மக்களைப்பற்றி ஒன்றும் தெரியாது. தெரிந்துகொள்ள ஆர்வமும் கிடையாது. செண்டினீல் பழங்குடிகள் ஆப்ரிக்காவிலிருந்து  இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைசிப்பனிக்காலத்தில் அங்கே சென்று குடியேறியவர்கள். பனியுருகியபின் வெளித்தொடர்பே இல்லாமல் அங்கே வாழ்பவர்கள். அதற்கான தகவமைப்பையும் பண்பாட்டையும் உருவாக்கிக்கொண்டவர்கள். உலகின் மிகமிக அரிதான பழங்குடி இனங்களில் ஒன்று அவர்கள்.

இந்தியாவின் பழங்குடிகளின் பண்பாட்டு வரலாறு, தனித்தன்மைகள், அவர்களின் சமகால வாழ்க்கைச்சித்திரம், அவர்கள் மீதான அடக்குமுறைகள், அழிவுகள் அனைத்தைப்பற்றியும் நம்மூர் அறிவுஜீவிகள் தங்களுக்குரிய ஒரு சித்திரத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தங்கள் வழக்கமான பாட்டான ‘ஆதிக்கம்X எதிர்ப்பு என்னும் இருமைக்குள் எதையும் போட்டு எடுத்துக்கொள்வார்கள்.  ஆதிக்கம் என்பது எப்போதும் இந்து ஆதிக்கம்தான். தங்கள் பேச்சுக்களுக்கு எந்த நேரடி ஆதாரமும் அவர்களிடமிருப்பதில்லை.

அவர்களில் ஆய்வாளர்கள் அந்த முற்கோளுடன் இந்தியா வந்து இந்தியப்பழங்குடிகளைப் பற்றி மிகத்தவறான ஒருதலைப்பட்சமான சித்திரத்தை உருவாக்கிய ஐரோப்பிய மானுடவியல் ஆய்வாளர்களின் நூல்களை  மேற்கோள் காட்டுவார்கள். இந்தியப்பழங்குடிகள் குறித்த ஐரோப்பிய ஆய்வுநூல்கள் அனைத்தையும், ஒன்றுகூட மிச்சமில்லாமல், மதமாற்ற அமைப்புகளின் நோக்கத்திற்கு ஏற்ப எழுதப்பட்ட சதிச்செயல்கள் என ஐயமில்லாமல் சொல்லமுடியும்.  பெரும்பாலும் அவர்கள் இங்குள்ள மதமாற்ற அமைப்புகளின் உதவியுடன்தான் அம்மக்களை அணுகுகிறார்கள். அந்த மக்களைப்பற்றிய மதமாற்றவாதிகளின் குறிப்புகளை மேற்கோளாகவும் கொள்வார்கள்.

நான் தெற்குக்கேரளப் பழங்குடிகளைப்பற்றிய ஆய்வேடுகளை பெரும்பாலும் படித்திருக்கிறேன். இரக்கமே அற்ற பண்பாட்டுத்திரிபுகள், எந்த கூச்சமும் இல்லாத அறிவுமோசடிகள் அவை. அவற்றில் ஒருநூலை மேற்கோள்காட்டியிருந்தால்கூட அந்த ஆய்வாளரையும் மோசடியாளர் என சொல்லமுடியும். ஐரோப்பாவின், அமெரிக்காவின் நடுநிலை ஆய்வாளர்கள், முற்போக்கு ஆய்வாளர்களின் பார்வை இன்னும் இங்கே வந்து தொடவே இல்லை என்பதே உண்மை.

இந்தியாவின் பழங்குடிக்கொள்கை எல்வின் பாலிசி என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பழங்குடிகள் நடுவே ஆய்வுசெய்தவரான வெரியர் எல்வின் காந்தியவாதி. எல்வின் கிறித்தவ அமைப்பின் பிரதிநிதியாகத்தான் இந்தியா வந்தார். அவர்களால்தான் மத்தியப்பிரதேசப் பழங்குடிகளிடம் சேவைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் மிக விரைவிலேயே அவர்களின் நோக்கம் மதமாற்றம் மட்டுமே என்றும், சேவை அதற்கான சாக்கு மட்டுமே என்றும் புரிந்துகொண்டார்.

அவர்களின் மதமாற்றத்தால் பழங்குடிகள் தங்கள் பல்லாயிரமாண்டுக்காலப் பண்பாட்டை முற்றாக இழப்பார்கள் என்றும் அவர்களின் வாழ்க்கைச் சடங்குகள், கலைகள், அவர்களுக்கே உரிய மகிழ்ச்சிகள் அனைத்துமே இல்லாமலாகும் என்றும் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகினார். எல்வினின் குறிப்புகளில் மதமாற்றிகள் பழங்குடிகளுக்கு அழிவுச்சக்திகளாக ஆவது எப்படி என விரிவாகவே எழுதியிருக்கிறார். மதமாற்றிகள் ஒற்றைப் பண்பாட்டை மதம் என்னும் போர்வையில் அம்மக்கள்மேல் வன்முறையாகத் திணிக்கிறார்கள். அதற்குமேலாக தங்கள் உலகளாவிய ஆதிக்க அரசியலின் ஒரு பகுதியாக பழங்குடியினரின் வாழ்க்கையை மாற்றிவிடுகிறார்கள். [எல்வின் கண்ட பழங்குடி மக்கள், தமிழில் ]

உலகமெங்கும் பழங்குடிகள் நவீன வாழ்க்கையினால் சூறையாடப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். தென்னமேரிக்காவில் ஐரோப்பியர்கள் சென்றபோது ஏறத்தாழ ஒருகோடிப் பழங்குடியினர் அங்கிருந்தனர். அவர்கள் ஐரோப்பியர்களால் கொன்றே அழிக்கப்பட்டார்கள். போர்தொடுத்தும் திட்டமிட்டு தொற்றுநோய்களைப் பரப்பியும் அவர்களை அழிக்க கிறித்தவ மதகுருக்கள் அனைத்து வகைகளிலும் துணைநின்றனர். மிகச்சிலர் மட்டும் மதமாற்றத்திற்கு உள்ளாகி தப்பிப்பிழைத்தனர்.  ஆஸ்திரேலியாவில் ஐரோப்பியர் நுழையும்போது அங்கே ஏறத்தாழ இருபதுலட்சம் பழங்குடிகள் இருந்தனர். ஆக்ரமிப்புப் போரினாலும் பரப்பப் பட்ட தொற்றுநோய்களினாலும் அவர்கள் கொன்று அழிக்கப்பட்டு இன்று ஆறுலட்சம்பேர் எஞ்சியிருக்கிறார்கள். அங்குள்ள மக்கள்தொகையில் 3 சதவீதம்.  [ஜாரேட் டையமண்ட்  துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு  என்ற நூலில் விரிவாகவே இதைப்பேசியிருக்கிறார்]

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பழங்குடி மக்கள் மேல் நேரடியான வன்முறை செலுத்தப்பட்டது. அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு மானுடவியல் மாதிரிகளாகக் கொண்டுசெல்லப்பட்டார்கள். நேரடிப்போரில் பல்லாயிரம்பேர் கொன்றழிக்கப்பட்டார்கள். செண்டினீல் தீவு மீதும் பிரிட்டிஷார் கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தினர். அவர்களிடமிருந்து மானுடவியல்மாதிரிகளாகச் சிலரைப் பிடித்துச்சென்றனர். ஆனால் அந்த மக்கள் உடனடியாகவே இறந்தமையால் அம்முயற்சி கைவிடப்பட்டது அதன் விளைவாகவே இன்று அவர்களிடமிருக்கும் அந்த கடுமையான அச்சமும் எதிர்ப்பும் எனப்படுகிறது.

பழங்குடிகள் கொல்லப்படாத சூழலில் கூட அவர்களால் நவீன வாழ்க்கையின் அமைப்புக்குள் ஒத்திசைய முடியவில்லை என்பதையும், அவர்கள் நவீனவாழ்க்கையின் கல்வி, தொழில் ஆகியவற்றின் சவால்களை சந்திக்கமுடியாமல் தோற்றுப்போன சமூகங்களாகவே எஞ்சுகிறார்கள் என்பதையும் காணலாம். இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலமான கேரளத்திலேயேகூட மிகமிகக்கொடிய வறுமையும் நோயுமாக வாழ்பவர்கள் பழங்குடிகளே.  ‘நாகரீகம்’ வந்தபோது அவர்களின் காடுகள் விளைநிலங்கள் ஆயின. அவர்களுக்கு ‘கல்வி’யும் ‘வாய்ப்புக’ ளும் அளிக்கப்பட்டன.அவர்களால் அவற்றை எவ்வகையிலும் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவர்கள் தோற்றுப்போன மக்களாக, நாகரீகத்தின் எச்சங்களாக காடுகளை அடுத்த ‘காலனிகளில்’ வாழ்கிறார்கள்.

இதில் ஒரு நுட்பமான மோசடி உள்ளது. இந்தியப் பழங்குடிகளில் நவீன வாழ்க்கையுடன் இணைந்து வளர்ச்சி அடைந்த பழங்குடிகள் என சில உண்டு. ஆனால் அவர்கள் உண்மையில் பழங்குடிகளே அல்ல. அவர்கள் ஏற்கனவே பழங்குடி வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து பிறரைப்போலவே பொதுநாகரீகத்துடன் இணைந்து ஓடத் தொடங்கிவிட்டவர்கள். அவர்களை மலைவாழ்மக்கள் என்று சொல்லலாமே ஒழிய பழங்குடிகள் என்று சொல்லக்கூடாது.அவர்கள் பழங்குடிகளுக்கு அளிக்கப்படும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உதாரணம் தமிழகத்தில் படுகர்கள். இங்கே பழங்குடிக்குரிய எல்லா சலுகைகளையும் அவர்களே பெறுகிறார்கள்.தமிழகத்து உண்மையான பழங்குடிகளான இருளர்கள், தோடர்கள் போன்றவர்கள் இன்றும் பழங்குடிவாழ்க்கை வாழமுடியாமல் இருக்கும் பழங்குடிகளாகவே நீடிக்கிறார்கள்.

பழங்குடி மாநிலங்களிலும் நிலைமை வேறல்ல. அங்கே பழங்குடி அடையாளத்தைச் சூடிக்கொண்ட மலைமக்கள்அனைத்தையும் பெற்று ஆட்சி செய்கிறார்கள்.. பழங்குடி வாழ்க்கையில் இருந்தவர்கள் அப்படியே நீடிக்கிறார்கள், அல்லது பிறரால் சுரண்டப்பட்டு நவீனவாழ்க்கையில் தாக்குப்பிடிக்க முடியாமல் நோயும் வறுமையுமாக அடிமைக்கூட்டமாக வாழ்கிறார்கள். பல பழங்குடிப் பகுதிகளில் பழங்குடி என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மக்கள் பேரரசுகளையே அமைத்து ஆட்சி செய்தவர்கள். அவர்களின் சற்றே வேறுபட்ட இயல்புகளால் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பழங்குடிகளாக வரையறைசெய்யப்பட்டார்கள். அங்குள்ள உண்மையான பழங்குடிகளின் நேரடியான ஒடுக்குமுறையாளர்கள் உண்மையில் இவர்களே.

எல்வின் இந்த களயதார்த்தத்தை முன்னரே கண்டறிந்தார். அதுவே எல்வின் கொள்கை ஆகியது. அதன்படி பழங்குடிகள் அவர்களே விரும்பி மையப்பண்பாட்டுக்கு வந்தாலொழிய அவர்களை மாற்றியமைக்க அரசும் மையச்சமூகமும் முயலக்கூடாது. அவர்களின் நிலம் பேணப்படவேண்டும், அதை பிறர் ஆக்ரமிக்க அனுமதிக்கக்கூடாது. வளர்ச்சித்திட்டங்கள் அவர்களின் வாழ்க்கைச்சூழலுக்கு பாதிப்பில்லாதனவாகவே நிகழவேண்டும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை நிறைவுடன் வாழ்வதற்கான பாதுகாப்பை அரசு வழங்கவேண்டும்.

elvin
வெரியர் எல்வின்

எல்வின் கொள்கை அவருடைய நண்பரான நேருவால் ஏற்கப்பட்டது. உலக அளவிலேயே அது ஒரு முற்போக்கான, முன்னோடியான, கொள்கை. இன்று பலநாடுகள் அக்கொள்கையை ஏற்றுள்ளன. ஆனால் இந்தியாவில் அக்கொள்கை காலப்போக்கில் கொள்கையளவில் இருக்க, நடைமுறையில் கைவிடப்பட்டது.பல இடங்களில் வணிக ஆக்ரமிப்பு அவர்களை அடிமைகளாக்கியது. பழங்குடி நிலங்களில் மதமாற்ற ஊடுருவல் அனுமதிக்கப்பட்டது.  கேரளத்தின் பெரும்பாலான பழங்குடி நிலங்களில் மாபெரும் கிறித்தவ அமைப்புகள் இன்றுள்ளன. அணைக்கட்டு போன்ற வளர்ச்சித்திட்டங்கள் காரணமாக பழங்குடிகள் நிலங்களிலிருந்து துரத்தப்பட்டார்கள். அவ்வாறு ‘பெயர்த்துநடப்பட்ட’ பழங்குடிகள் மிகக்கொடுமையான வறுமைக்கும் கட்டற்ற குடிப்பழக்கத்திற்கும் ஆளாகி நகர்ப்புற நாடோடிகளாக மாறி அழிந்தனர்.

இன்று காடுகள் சரணாலயங்களாக மாற்றப்படும்போது பழங்குடிகளை வெளியேற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. இந்த உள்நோக்குடன் சென்ற இருபதாண்டுகளாக எல்வின் கொள்கை பழங்குடிகளை அழிப்பது என்றும், பழங்குடிகள்  ‘நாகரீகப்படுத்தப்படவேண்டும்’ என்றும் தொடர்ச்சியாக அறிவுஜீவித்தரப்பு ஒன்று எழுதியும் பேசியும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. இந்த பிரச்சாரத்துடன் இங்குள்ள இந்துத்துவர்களின் ஒரு தரப்பும் இணைந்துகொண்டது. அவர்களுக்கு அது நேருவை இழிவுபடுத்துவதற்கான வாய்ப்பு. மட்டுமல்ல வனவாசி கல்யான் கேந்திரா போன்ற அமைப்புக்கள் வழியாக பழங்குடிகளை இந்துத்துவ அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான தடை எல்வின் கொள்கைதான்.இன்று சூழியலாளர்களும் உண்மையான மானுடவியலாளர்களும் பழங்குடிகள் இடம்பெயர்க்கப்படலாகாது, அவர்கள் காடுகளிலேயே வாழ அனுமதிக்கப்படவேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்

கேரளத்தில் மலைப்பண்டாரம் என பிறரால் அழைக்கப்படும் பழங்குடிகள் இன்றும் ஆடைகளில்லாதவர்களாக, அடர்காடுகளுக்குள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு என ஒரு வாழ்க்கைமுறை உள்ளது. ஆனால் தொடர்ச்சியாக அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அவர்கள் துரத்தியடிக்கப்படுகிறார்கள். கஞ்சாவியாபாரிகளாலும் அவர்களுடைய ஊதியம்பெறும் அதிகாரிகளாலும் வேட்டையாடப்பட்டு பெரும்பாலும் அழியும் நிலையில் இருக்கிறார்கள். நான் கேரளத்தில் பழங்குடிகள் செத்துமறைந்துகொண்டிருப்பதை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இச்சூழலில்தான் நாம் செண்டினீல் பழங்குடிகளைப் பார்க்கவேண்டும். ஏற்கனவே அந்தமானின் ஜாரவா பழங்குடிகளை சுற்றுலாக்கவற்சிப் பொருட்களாக ஆக்குவதற்கு எதிராக இந்தியாவின் சூழியலாளர்களும் மானுடவியலாளர்களும் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எளிய பரிசுப்பொருட்களை அளித்தும், மது புகையிலை போன்ற போதைப்பொருட்களுக்குப் பழக்கியும் காடுகளிலிருந்து வரவழைத்து சாலையோரமாக நிற்கவைத்து வேடிக்கைப்பொருட்களாக ஆக்குகிறார்கள். அவர்களை நடனமாடச் செய்து ஐரோப்பியப் பயணிகளை மகிழச்செய்கிறார்கள். போதைப்பழக்கத்தால் அந்த மக்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள்

மானுடவியலின் பெயரால் சென்டினீல் பழங்குடிகளுடன் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கும் ‘பரிசுகளை’ அளித்து ஆய்வுப்பொருளாக ஆக்கவும் முயற்சிகள் நடந்தன.டி.என்.பன்டிட் என்பவரின் தலைமையில் நிகழ்ந்த ஆய்வு ஓரளவுக்குப் பயனையும் அளித்துள்ளது. ஆனால் பின்னர் இந்திய அரசு அம்முயற்சியை கைவிடும்படி ஆணையிட்டது. அவர்களை தொடர்புகொள்ள முயல்வது சட்டவிரோதமாக ஆக்கப்பட்டது. நடுக்காலங்களில் அம்முயற்சிகள் நிகழவில்லை. இன்று ஜாரவாக்களின் பூர்விக நிலம் முழுமையாகவே வெவ்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமாக ஆக்கப்பட்டுவிட்டது. அவர்கள் கிட்டத்தட்ட தெருப்பிச்சைக்காரர்களாக ஆகிவிட்டனர். கார்களில் செல்பவர்கள் உணவுப்பொருட்களை அவர்களை நோக்கி வீசி எறிய அவர்கள் பொறுக்கித் தின்று வாழ்கிறார்கள்

இன்று மீன்டும் சென்டினீல் தீவு மக்கள் மேல் உருவாகியுள்ள ஆர்வம் எந்த வகையிலும் இறையியல் சார்ந்தது அல்ல. அதன் உண்மையான நோக்கம் அப்பகுதி நிலம், குறிப்பாக கடலடி இயற்கை எரிபொருள் படிவுகள். சென்ற இருபதாண்டுகளாகவே ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களும் அயல்நிறுவனங்களும் இந்தியாவின் தென்னகக் கடற்பகுதியின் படிவ எரிபொருள்களுக்கான நிலத்தடி ஆய்வுகளை செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியே இந்த ‘ஆய்வு’ அந்நிறுவனங்களின் நிதி பற்கலைக் கழகங்களுக்கும் மதநிறுவனங்களுக்கும் செல்லும். அங்கிருந்து ஆய்வாளர்களுக்கு பொசியும்.

இவர்களின் செயல் ஒரு மாபெரும் மானுடக்குற்றம். தங்கள் சுயநலத்தால், தாங்கள் நம்புவதே நல்லது என்னும் ஆணவத்தால், பிறரை இழிவாக நினைக்கும் அறியாமையால் ஒரு மக்கள்குழுவை முற்றாக அழிக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை சீரழித்து பிச்சைக்காரர்களாக ஆக்குகிறார்கள் அப்பட்டமான இந்தக்குற்றத்துக்கு எதிராக இந்தியாவின் அறிவுஜீவிகளிடமிருந்து  கொந்தளிப்பான எதிர்ப்பு எழுந்திருக்கவேண்டும், ஆனால் மிக மெல்லிய முனகலாகக்கூட எதிர்ப்புகள் வரவில்லை. ஏனென்றால் நான் மேலே சொன்ன மனநிலைகளில் நம் அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். இவர்களின் சிந்தனைகள் மேற்கத்தியச் சார்புநிலை கொண்ட அமைப்புகளால் மறைமுகமாக வடிவமைக்கப்படுபவை

தொடர்ச்சியாகப் பழங்குடிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். புனைகதைகளையும் எழுதியிருக்கிறேன். என்னதான் பிரச்சினை? நாமும் பழங்குடி வாழ்க்கையிலிருந்து வந்தவர்களே. ஆனால் அது பல்லாயிரமாண்டுக்கால பரிணாமம். அதை ஒரே தலைமுறையில் அவர்களிடம் சுமத்துகிறோம். அவர்கள் அதை எதிர்கொள்வதற்கான உளநிலையோ பண்பாட்டுச்சூழலோ இல்லாமல் அப்படியே அழிகிறார்கள்.

இரண்டாவதாக, நாகரீகப்பொருட்கள் அவர்களுக்கு நோயை அளிக்கின்றன. எப்போதுமே தொற்றுநோய்கள் பழங்குடிகளைத்தான் சூறையாடுகின்றன. இன்னமும்கூட கேரளத்தில் காலரா பழங்குடிகளிடம் உள்ளது. மேற்குமலையின் பழங்குடிக் காலனிகளில் ஏதேனும் நோய் இல்லாதவர்களைப் பார்ப்பது மிக அரிது. அத்துடன் பழங்குடிகளால் நாகரீகம் உருவாக்கும் எந்தப் போதைப்பொருளையும் கட்டுப்பாட்டுடன் கையாள முடிவதில்லை. கட்டுப்பாடற்ற குடியால் அவர்கள் இந்தியா முழுக்க அழிந்துகொண்டிருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் இந்தியா முழுக்க பழங்குடிகளில் பெரும்பகுதியினர் நம் ‘நாகரீகத்தின்’ அடிமைகளாகவோ பயனற்ற குப்பைகளாகவோதான் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே உள்ள இடங்களில் அவர்களுக்கு இடையே உள்ள தொன்மையான குடிப்பகைமை மிகப்பெரிய அரசியல் சிக்கல். அவர்களின் பழங்குடி உள்ளம் பிறனை எதிர்ப்பதனால் அவர்களால் ஒன்றுசேர்ந்து சிவில்சமூகமாக ஆக முடியவில்லை. ஆதிக்க ராணுவத்தால் அவர்கள் தங்களுக்குள் போரிடாமல் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் அவர்களை என்னதான் செய்வது என்பது என்பது இன்று எவராலும் சொல்லமுடியாத ஒன்றாகவே உள்ளது. நவீன நாகரீகம் என்ற கருணையற்ற போட்டியில் எவர் வெல்கிறார்களோ அவர்கள் நீடிக்கட்டும், எஞ்சியோர் அழியட்டும் என்று விட்டுவிடுவதே இன்று நிகழ்கிறது.

நடைமுறையில் அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் கூட அவர்களை அழிக்கின்றன. அவர்களை மிகுந்த கவனத்துடன், நிபுணர்களின் உதவியுடன் மட்டுமே கையாள முடியும். ஒவ்வொரு தருணத்திலும் விளைவுகளைக் கண்காணித்துப் படிப்படியாக அவர்களின் வாழ்க்கை மாற்றம் நிகழ உதவவேன்டும். மாறுவது அவர்களின் விருப்பம் சார்ந்த ஒன்றாகவே இருக்கவேண்டும்

செண்டினீல் பழங்குடிகளின் உடல்களைப் பார்த்தபோது படபடப்பாக இருந்தது. என்ன ஒரு சிற்பவடிவு. என்ன ஒரு மின்னும் கருமை. இந்தியா முழுக்கச் செல்லுங்கள், எங்கும் இத்தகைய ஆரோக்கியமான பழங்குடி உடல்களைப் பார்க்கமுடியாது.  எத்தனை உற்சாகமாக கும்மாளமிடுகிறார்கள். அங்கே அந்த அமெரிக்கக் கிருமி ஏன் நுழைகிறது? அவர்களை முற்றழிக்க. தன் நாகரீகத்தின் பெருஞ்சாலை ஓரத்தில் பிச்சைக்காரர்களாக அள்ளிக்குவிக்க.. அது எந்த மதமாக இருந்தாலும், எந்த நவீனக்கவற்சியாக இருந்தாலும் அவர்கள் விழையாமல் அவர்களை கைப்பற்ற அனுமதிப்பது ஒரு மானுட அழிவு.

அந்த அமெரிக்கக் கிருமியின் கடிதமும் குறிப்புகளும் இருபதாம் நூற்றாண்டின் கீழ்மையின் சாசனங்கள். அந்த எளியமனிதர்கள், எவருக்கும் எத்தீங்கும் இழைக்காமல் வாழ்பவர்கள் ‘சாத்தானின் பிள்ளைகள்’ என்கிறான். இவன் அவர்களை  ‘மீட்க’ செல்லும் புனிதனாம். அந்த கிருமியின் குடும்பம் அவனைக் கொன்ற ’பாவிகளை’ மன்னித்துவிட்டதாம். அந்த கிருமிக்காக இங்கே பல கிறித்தவ தேவாலயங்களில் சிறப்பு ஜெபம் நிகழ்ந்தது என்றார் நண்பர்.  அந்த மக்களை காட்டுமிராண்டிகள், கொடூரமானவர்கள், அசிங்கமான தோற்றம் கொண்டவர்கள் என செய்திகளில் சொல்கிறார்கள். அந்த ஊடுருவல்காரனை புனிதன் என்றும் , அவனுக்கு விண்ணுலகில் கூலி கிடைக்கும், அவனே எங்கள் ஹீரோ என பலர் இணையத்தில் எழுதித்தள்ளுகிறார்கள். மனம்கூசிப்போனேன்.

பழங்குடி மக்களை மீட்கிறோம் என்ற பேரில் அவர்களை அடிமைப்படுத்தியும், அவர்களின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்தும் கிறித்தவ மதமாற்றக்காரர்கள் செய்த கொடுமைகளை இன்று மேற்குலகின் முற்போக்காளர்களே பதிவுசெய்துகொன்டிருக்கிறார்கள்.  The mission , Rabbit proof fence  போல எத்தனை சினிமாக்கள் சென்றநூற்றாண்டில் இழைக்கப்பட்ட  மதவெறியின்  மானுடக்குற்றங்களுக்கு எதிராக அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இன்று மன்னிப்பு கோரிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அமெரிக்கக் குற்றவாளிக்கு  ஆதரவாக எழும் குரல்களைப் பார்க்கையில் பசப்புகளுக்கும் பாவனைகளுக்கும் அடியில் வெள்ளையர்களில் பெரும்பாலானவர்கள்  வெறும் ஆதிக்கவாதிகள் மட்டுமே என்ற எண்ணமே எழுகிறது.

========================================================

ஜான் சௌ ஒரு கட்டுரை 
 டி என் பண்டிட் ஒரு பேட்டி  
======================================================================
கேரளத்தின் காலனி
புல்வெளிதேசம்: 15,மண்ணின் மனிதர்கள்
குகைகளின் வழியே – 10
சூரியதிசைப் பயணம் – 11
அவதார் – ஒரு வாக்குமூலம்
முந்தைய கட்டுரைலக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-80