துண்டிகன் விழித்துக்கொண்டபோது தன் ஊரில், கோதுமை வயல்களின் நடுவே கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தின் வைக்கோல் படுக்கையில் படுத்திருந்தான். முற்றத்தொடங்கியிருந்த கோதுமை மணிகளின் மணமும் சிலுசிலுவென்ற ஒலியும் காற்றில் கலந்து வந்தன. கூகையின் ஓசையும் மிக அப்பால் காட்டுக்குள் காற்று கடந்துசெல்லும் இரைச்சலும் கேட்டன. அவன் எழமுயன்றபோதுதான் தன்னிலை உணர்ந்தான். மருத்துவநிலையில் தரையிலிட்ட ஈச்சைப்பாயின்மேல் அவன் படுத்திருந்தான். அவன் கால்கள் இரண்டிலும் எடைமிக்க மரவுரிக் கட்டுகள் இருந்தன. வலதுதோளிலும் மரவுரிக்கட்டு மெழுகிட்டு இறுக்கப்பட்டிருந்தது. கழுத்து மரச்சிம்புகள் வைத்து கட்டப்பட்டு உரல்போலிருந்தது.
மெல்ல அவன் அந்த இடத்துக்கு திரும்பிவந்தான். பெருமூச்சுகள் விட்டுக்கொண்டு அசைந்தான். உடல் அசையவில்லை. எடைமிக்க கற்சிலைபோல் அது கிடந்தது. அதனுடன் அவனை இணைத்த தன்னிலையின் சரடுகள் மெல்லியவையாக இருந்தன. ஆனால் வலி இருக்கவில்லை. அது விந்தையாக இருந்தது. வலிமரப்புக்கான மருந்துகள் எதையேனும் அவனுக்கு அவர்கள் அளித்திருக்கக் கூடும். அவன் விழிகளைச் சுழற்றி சுற்றும் பார்த்தான். நிரைநிரையாக படுத்திருந்த புண்பட்டோர் ஆழ்துயிலில் இருந்தனர். அவர்களின் மூச்சுகள் நாகக்கூட்டங்களின் சீறல்கள் என சூழ்ந்து ஒலித்தன.
துண்டிகன் திடுக்கிடலுடன் பீஷ்மரின் நினைவை அடைந்தான். அவர் உயிருடனிருக்கிறாரா எனும் வினா எழுந்ததுமே ஒன்றன்மேல் ஒன்றென காட்சிகள் வந்து அவன்மேல் பொழிந்து மூடிக்கொண்டன. அவன் விழிகள் அதிர்ந்துகொண்டே இருந்தன. கைவிரல்களில் ஒன்று மட்டும் மெல்ல துடித்தது. அன்றைய அரைநாள் போரில்தான் அவன் முழுமையாக வாழ்ந்தான். கொண்டுவந்தனவும் சேர்த்தனவுமாகிய ஆற்றல்கள் அனைத்தும் திகழும் கணங்கள். கண்டடைதலும் திகழ்தலும் கடந்துசெல்லலும் ஒரே நேரத்தில் நிகழும் கணங்கள். பெருகி எழுந்து ஒரு கணத்தில் நுழைந்து மேலும் பெருகி அதைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தான். பலநூறாண்டுகள் வாழ்ந்தவன்போல, பல பிறவிகளினூடாகச் செல்பவன்போல.
போர்க்களத்தில் முரசுக்காகக் காத்திருக்கையில் அவன் கைகளில் பதற்றத்துடன்தான் கடிவாளத்தை பற்றியிருந்தான். எத்தனை நீர் அருந்தினாலும் தீராத விடாய் என நெஞ்சு தவித்தது. அவனுக்கு இருபுறமும் தேர்நுகத்தில் பதிக்கப்பட்டவையாக தீட்டிய இரும்பாலான குமிழியாடிகள் இருந்தன. அவற்றில் பீஷ்மரின் முகம் தெரிந்தது. அவர் ஆழ்ந்த அமைதியில், விழியிமைகள் பாதிசரிய உதடுகள் இறுகக்குவிந்து மூடியிருக்க, இடக்கையில் வில்லும் வலக்கையில் நீளம்புமாக நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் ஆவக்காவலர்கள் இருவர் அரைத்துயிலில் என அமர்ந்திருந்தனர். அவருடைய தேர்த்தூண்களின் வளைவில் படைகள் வண்ணத்தீற்றல்களாக படிந்திருந்தன.
படைகள் முதல்நாள் போரில் பல வண்ணங்களில் இருந்தன. நாள் செல்லச்செல்ல வண்ணங்கள் ஒளியிழந்தன. குருதியும் புழுதியும் படிந்து அனைத்து வண்ணங்களும் மறைய மண்நிறம் எஞ்சியது. யானைகள், புரவிகள், தேர்கள், மானுடர் அனைவரும் ஒரே நிறம். வானில் சற்று எழுந்து கீழே நோக்கினால் அங்கே மண் கொந்தளிப்பதாகவே தோன்றும். அவன் புழுக்களை நோக்கியிருக்கிறான். அவை தனி உயிர்களல்ல, ஒற்றைப்பொருளின் கொதிப்புதான் என்று தோன்றியிருக்கிறது.
அவனுடைய புரவிகளில் இரண்டு அப்போதும் அவனை புரிந்துகொள்ளவில்லை. இரண்டுமுறை அவன் ஆணையிட வேண்டியிருந்தது. தேரின் சகடங்களில் ஒன்று சற்றே வலப்பக்கமாக இழுபட்டது. அவனுக்கு பீஷ்மரின் ஆணைகளை தன்னால் புரிந்துகொள்ளமுடியுமென்று தோன்றவில்லை. இறுகிய முகம், எதையும் சொல்லாத விழிகள், தாடிக்குள் புதைந்த உதடுகள். அவருடைய ஆணைகளுக்காக விழிகொடுத்தால் களத்தை நோக்கமுடியாமலாகும். அவன் மூச்சுத்திணறுவதுபோல் உணர்ந்தான். போர் தொடங்கியதுமே அர்ஜுனனின் பேரம்பு தன் நெஞ்சு துளைத்ததென்றால் நன்று என எண்ணினான். புரவிகள் சிலிர்த்துக்கொண்டு கால்மாற்றின. எதை உணர்ந்தன என அவன் எண்ணிக்கொண்டிருக்கையிலேயே முரசுகள் முழங்கலாயின.
பீஷ்மர் இடையிலிருந்து தன் சங்கை எடுத்து ஓங்கி ஊதிவிட்டு ஏவலனிடம் அளித்தார். அவன் மெய்ப்புகொண்டான். அந்த வலம்புரியின் பெயர் சசாங்கம். முழுநிலவின் நிறம்கொண்டது. நிலவு நோக்கி துதிக்கை தூக்கி முழங்கும் இளங்களிறின் ஒலிகொண்டது. அன்றுதான் அவன் முதன்முறையாக அதை கேட்டான். அது சங்கொலி எனத் தோன்றவில்லை. அனைத்துச் சங்குகளும் கடலில் இருந்து தங்கள் ஒலியை பெற்றுக்கொள்கின்றன. கடல் அலைகளில் கணந்தோறும் எழுந்து மறைந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் கோடி சொற்களில் ஒன்று சங்குக்குள் நிலைகொண்டுவிடுகிறது. பீஷ்மரின் சங்கில் உறையும் சொல் என்ன? அது மானுடரை நோக்கி சொல்லப்படவில்லை.
தேர் கிளம்பிய கணமே அவன் முழுமையாக தன்னை இழந்தான். தேர் அவன் ஒரு பகுதியாயிற்று. அவன் பீஷ்மருடன் இரண்டறக் கலந்தான். அவர் எண்ணியவை அத்தேரில் நிகழ்ந்தன. அவர் எண்ணுவதற்கு முன்னரே அதற்காக ஒருங்கின அனைத்தும். பறவையின் சிறகுகளில் வந்தமைகிறது அதன் உள்ளம். பீஷ்மர் தேரை நிறுத்தி சிகண்டியின் முன் திகைத்து நின்றபோதுதான் அவன் மீண்டான். அவர் வில்லை கீழே வைத்துவிட்டு கைகளை விரித்து நின்றபோது அவன் திகைப்புடன் தலைதிருப்பி நோக்கினான்.
அவர் உடலில் முதல் அம்பு பாய்ந்தது. சிறிய நாகக்குழவி போன்ற புல்லம்பு. அது கீழிருந்து எழுந்து கவசத்தின் இடைவெளிக்குள் வால் புளைய நுழைந்தேறியது. நரம்பு முடிச்சு ஒன்று தாக்கப்பட்டது என தெரிந்தது. பீஷ்மர் நிலையழிந்ததை உணர்ந்ததும் அவன் தேரைத் திருப்பும்பொருட்டு கடிவாளத்தை சுண்டினான். ஆனால் புரவிகள் கால்நிலைத்து நின்றன. அதன் பின்னரே தன் கைகள் கடிவாளத்தை சுண்டவில்லை என உணர்ந்தான். அவருடைய எண்ணங்களை மட்டுமே அவனும் புரவிகளும் ஆற்றமுடிந்தது.
அர்ஜுனனின் நீளம்பு வந்து அவர் கவசத்தை உடைத்ததை அவன் அண்மையிலெனக் கண்டான். கவசத்துண்டு தேர்த்தட்டில் உலோக ஒலியுடன் விழுந்த கணம் அடுத்த அம்பு வந்து அவர்மேல் பாய்ந்தது. தசையில் அம்பு தைக்கும் ஓசையை கேட்க முடிந்தது. பின்னர் நேர்முன்னால் அம்புகள் எழுந்து வந்துகொண்டிருந்தன. அவர் உடலில் அம்புகள் தைத்துக்கொண்டிருக்கும் ஓசை கேட்டது, சேற்றுப்பரப்பில் புன்னைக் காய்கள் விழுவதுபோல. மழைத்துளிகள் போல அவருடைய குருதி அவன் மேல் தெறித்தது.
நீளம்பு ஒன்றால் சரிக்கப்பட்டபோது மட்டும் பீஷ்மர் சற்றே முனகினார். அவன் தன்னியல்பாக திரும்ப தன் கழுத்தில் குளிர்ந்த தொடுகையை உணர்ந்தான். இழுத்த மூச்சு இரண்டாக வெட்டுப்பட்டது. விசிறியால் வெட்டப்பட்ட புகை என மூச்சு இரு துண்டுகளாயிற்று. ஒன்று அவன் உடலுக்குள்ளேயே நின்றது. தேரிலிருந்து புரண்டு நிலத்தில் விழுந்தான். விழித்த கண்களால் நோக்கிக்கொண்டிருந்தான். பீஷ்மர்மேல் அம்புகள் வந்து தைத்துக்கொண்டே இருந்தன.
அவன் விழிதிருப்பி நோக்கியபோது அப்பால் சிகண்டியை கண்டான். வெறித்த கண்களும் வளைந்த புருவங்களும் சினத்தால் குவிந்த உதடுகளுமாக அவர் அம்புகளை தொடுத்தார். அவருக்குப் பின்னால் அதே முகத்துடன் அர்ஜுனன். அவருக்குப் பின்னால் பீமனும் சகதேவனும் நகுலனும் அதே வெறிப்புடன் அம்புகளை அவர்மேல் எய்துகொண்டிருந்தனர். திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் அம்புகளை தொடுத்தனர். அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் சதானீகனும் சுதசோமனும் சர்வதனும் சுருதசேனனும் நிர்மித்ரனும் அம்புகளை ஏவியபடி சூழ்ந்திருந்தனர். யௌதேயனும் பிரதிவிந்தியனும் அம்புகளை விடுத்தனர். பாண்டவப் படை மொத்தமாகத் திரண்டு அம்புகளால் வானை நிறைத்தது. புயல்காற்றில் சருகுகளும் புழுதியும் வருவதுபோல அங்கிருந்து அம்புகள் வந்துகொண்டிருந்தன.
பீஷ்மர் புழுதியில் விழுந்து அம்புகளால் உருட்டப்பட்டார். நீரில் விழுந்து மீன்களால் கொத்திப் புரட்டப்படும் ஊன் துண்டுபோல. அவன் எங்கோ ஓர் ஊளையை கேட்டான். அல்லது அழுகையோசை. தொலைவில் இடியோசை முழங்கி எதிரொலிகளாக மாறி நீண்டுசென்றது. கூரிய சிறு மின்னல்கள் இடைவெளியில்லாமல் வெட்டின. போரிடும் களிறுகளின் ஓசை என கொம்புகள் முழங்கின. அவ்வோசை வானிலிருந்து எழுந்து மழையென இழிந்தது. அம்புப்பெயல் நின்றது. பாண்டவப் படையினர் விலகிச்செல்ல கௌரவர்கள் திகைப்புடன் அகன்றனர். விரிந்து பரவி உருவான முற்றத்தில் பீஷ்மரின் உடல் நாற்றுவயல் என அம்புகள் மேவியதாக மல்லாந்து வான்நோக்கி கிடந்தது. அவர் வாயின் கடையோரம் குருதி வழிந்தது. விழிகள் திறந்து நிலைகொண்டிருந்தன.
அவன் எழுந்து அமர்ந்து சுற்றிலும் நோக்கினான். வானம் மாபெரும் யானைத்தோல் கொட்டகையின் உட்பகுதி என கருமைகொண்டிருந்தது. அப்பால் போரிட்டுக்கொண்டிருந்த படைவீரர்கள் அனைவரும் ஒளிமங்கி நிழலுருக்களாக ஆனார்கள். பாண்டவப் படைக்குள் இருந்து விரிந்த நீள்குழல் அலையலையாக எழுந்து பறக்க செம்பட்டாடை அணிந்த பெண் ஒருத்தி ஓடிவந்தாள். நெஞ்சிலும் வயிற்றிலும் அறைந்து கதறியபடி அவள் வந்த விசையில் முழங்கால் மடிந்து நிலத்தில் அறைய விழுந்து கைகளால் பீஷ்மரின் கால்களை பற்றிக்கொண்டாள். அவர் பாதங்களில் தன் தலையை அமைத்துக் கொண்டு கதறியழுதாள்.
கௌரவர்களின் பக்கமிருந்து இன்னொருத்தி நீல ஆடையும் நீள்குழலும் எழுந்து அலைபறக்க கைகளை வீசி கதறியழுதபடி ஓடிவருவதை அவன் கண்டான். அவளைச் சூழ்ந்து எட்டு இளைமைந்தர்கள் வந்தனர். அவள் பீஷ்மரின் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டாள். அவர் குழல்கற்றைகளை கோதியபடி குனிந்து நோக்கி அழுதாள். அவர் பெயரை அவள் சொல்லிச் சொல்லி அழைக்கிறாள் என்பது உதடுகளின் அசைவிலிருந்து தெரிந்தது. அவர்களைச் சூழ்ந்து எண்மரும் ஒளிகொண்ட உடல்களுடன் நின்றனர். அவர்கள் ஒற்றைக் கருவிலெழுந்ததுபோல் ஒரே முகமும் உடலும் கொண்டிருந்தார்கள். அவன் அந்த அழுகையை சொல்மறைந்த உள்ளத்துடன் நோக்கிக்கொண்டிருந்தான். அவர்களின் அழுகை பெருகிப்பெருகி வந்தது. அப்படியோர் அழுகை பெண்களின் உடல்களிலேயே நிகழமுடியும். அன்னையரென அவர்கள் உணர்கையிலேயே எழ முடியும்.
துண்டிகன் ஒரே உந்தலில் எழுந்துகொண்டான். எழுந்து நின்றபின்னர்தான் அத்தனை எளிதாக எழமுடியும் என்பதை அவன் வியப்புடன் உணர்ந்தான். குளிர்ந்த சேறாலானதுபோல குழைந்து எடைகொண்டு கிடந்த அந்த உடலை அவன் அதுவரை அஞ்சிக்கொண்டிருந்தான் போலும். கைகளையும் கால்களையும் விரித்தான். எடையின்மையை உணர்ந்தபின் அவன் வெளியே சென்றான். காவலன் பீடத்தில் அமர்ந்து வேலை ஊன்றிய கையில் தலையை வைத்து துயின்றுகொண்டிருந்தான். அவன் கடந்துசெல்கையில் திடுக்கிட்டு விழித்து அவனை பார்த்தான். ஆனால் காய்ச்சல் படிந்ததுபோலிருந்த அவன் விழிகளில் எந்த உணர்வும் உருவாகவில்லை. துண்டிகன் நின்று அவனை நோக்கினான். அவனும் வெறுமனே அவனை நோக்கிக்கொண்டிருந்தான். “இவ்வழிதானே?” என்று துண்டிகன் கேட்டான். “ஆம்” என்று காவலன் மறுமொழி சொன்னான்.
துண்டிகன் வெளியே சென்று பந்தங்களின் ஒளி அசைந்துகொண்டிருந்த மரப்பாதையினூடாக நடந்தான். அதில் வழிந்து உறைந்து மிதிபட்டுச் சேறாகி உலர்ந்த குருதி கால்களை வழுக்குமென எண்ணி மெல்ல நடந்தான். ஏழு பெண்கள் எதிரில் வந்தனர். அவர்கள் கரிய மேலாடையால் முகம் மறைத்திருந்தார்கள். அவன் நின்று அவர்களை நோக்கினான். அருகே வந்தபோது மேலாடைகள் விலக அவர்கள் தலைதூக்கி அவனை பார்த்தனர். எழுவருமே வெண்பல்நிரைகள் தெரிய புன்னகைத்தனர். துண்டிகன் அவர்கள் ஏதேனும் சொல்வார்கள் என எதிர்பார்த்தான். அவர்கள் மருத்துவநிலைக்குள் சென்று மறைவதை நோக்கி நின்றபின் அவன் மீண்டும் நடந்தான்.
படைகளுக்குள் இருந்து பல்லாயிரம்பேர் நிழலுருக்களாக எழுந்து செல்வதை அவன் பார்த்தான். ஏரியிலிருந்து புலரியில் நீராவி எழுவதைப்போல. அவன் அவர்கள் ஒவ்வொருவரையும் முகம்முகமாக நோக்கியபடி நின்றான். அவர்கள் முகங்கள் ஆழ்துயிலில் இருப்பவைபோல் அமைதிகொண்டிருந்தன. திறந்து இமைநிலைத்த விழிகளிலும் துயில் இருந்தது. அவர்கள் இயல்பாக இணைந்து ஊற்றுக்கள் ஓடையாவதுபோல நிரைகொண்டனர். நிரைகள் மேலும் இணைந்து ஒழுக்காயின. அந்தப் பெருக்கு படைமுகப்பு நோக்கி செல்கிறது என்று தெரிந்தது.
அவன் அவர்களுடன் நடந்தான். அவர்கள் அனைவருமே அவனை நோக்கினர், அடையாளம் கண்டனர், ஆனால் ஏதும் சொல்லவில்லை. அவர்கள் நடந்தபோது கால்கள் பட்ட சில வீரர்கள் முனகியபடி புரண்டு படுத்தனர். சிலர் விதிர்த்து எழுந்து அமர்ந்தபின் தலையை சொறிந்துகொண்டு மீண்டும் படுத்துக்கொண்டார்கள். எங்கோ மெல்லிய முரசொலி கேட்டது. கொம்போசை இணைந்துகொண்டது. வானில் மின்னல்கள் துடித்தணைந்தன. அவன் செல்லும் வழியில் உயர்ந்த மேடை ஒன்றில் அமர்ந்திருந்த பார்பாரிகனை பார்த்தான். மிகப் பெரிய உடல்மேல் அமைந்த பெருந்தலை. அவன் முன் இன்னொருவன் அமர்ந்திருந்தான்.
துண்டிகன் கூர்ந்து நோக்கி அவன் யார் என புரிந்துகொள்ள முயன்றான். எங்கோ பார்த்த முகம். அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து எதிரே நோக்கிக்கொண்டிருந்தார்கள். கூத்துமேடையில் திரை விலக காத்திருப்பவர்கள்போல. துண்டிகன் வடக்கே சென்றான். நெடுந்தொலைவுக்கு விலகிச்சென்றுவிட்டான். இருதரப்புப் படைகளும் ஆயிரக்கணக்கான பந்தங்களுடன் அப்பால் தெரிந்தன. பாவைநோன்பு நாளில் அகல்சுடர்கள் ஒழுகும் கங்கைபோல. அவன் பீஷ்மரின் படுகளம் நோக்கி சென்றான். சங்கொலி ஒன்றைக் கேட்டு இயல்பாக திரும்பி நோக்கியபோது பார்பாரிகனுடன் அமர்ந்திருந்தவன் அரவான் என உணர்ந்தான். மேலும் மேலுமென சங்கொலிகள் எழுந்தன. செவிநிறைக்கும் போர்முழக்கம் பெருகி அலைகொண்டது. பல்லாயிரம்பேர் ஒருவரோடொருவர் வெறிக்கூச்சலுடன் பாய்ந்து போரிடத் தொடங்கினர்.
அவன் படுகளத்தின் எல்லையை அடைந்தான். அவன் உள்ளே நுழைந்த அசைவைக் கண்டு அங்கிருந்த முதிய மருத்துவர் நிமிர்ந்து நோக்கிவிட்டு இயல்பாக கண்களை மூடிக்கொண்டு மீண்டும் துயிலத் தொடங்கினார். இரு இளைஞர்கள் அப்பால் கைகளைக் கட்டியபடி தரையில் போடப்பட்ட மரவுரிகளில் அமர்ந்து துயின்றுகொண்டிருந்தனர். பீஷ்மர் அம்புப்படுக்கைமேல் படுத்திருந்தார். அவர் இமைகள் அசைவற்றிருந்தன. உதடுகளில் மட்டும் ஏதோ சொல் நிகழ்ந்துகொண்டிருந்தது.
அவர் அருகே அவன் அந்த இரு பெண்களையும் பார்த்தான். நீலஆடை அணிந்த பெண் குழல்பெருக்கு நிலத்தில் விழுந்து ஓடையென ஒழுகி இருளில் சென்றிருக்க கையூன்றி அமர்ந்திருந்தாள். அவள் மடியில் முகம்புதைத்தவளாக செவ்வாடை அணிந்தவள் படுத்திருந்தாள். அன்னையும் மகளும் என துண்டிகன் எண்ணினான். மகளின் சுரிகுழலை அன்னை கைகளால் நீவிக்கொண்டிருந்தாள். மகள் மெல்லிய விசும்பலுடன் புரண்டு படுத்தபோது அவள் கன்னங்களில் நீரின் ஒளியை துண்டிகன் கண்டான். அன்னை குனிந்து ஆறுதல் சொன்னாள். அவன் அறியாத மொழி. நீரலைகள் மென்மணலில் எழுப்பும் ஓசைபோல மென்மையானது.
அவர்கள் இருவரின் முகங்களிலும் இருந்த ஒற்றுமை வியக்கவைப்பதாக இருந்தது. அன்னையின் விரல்கள் யாழ்விறலியர்களுக்குரியவைபோல மிக மெலிதாக நீண்டிருந்தன. விழிகள் நீலமணிகள். அவள் இமைப்பீலிகளும் பெரியவை. அவள் ஆடை குளிர்ந்திருந்தது. மகள் பற்றிஎரிந்துகொண்டிருப்பவள் போலிருந்தாள். அவள் விரல்கள் நாகக்குழவிகள்போல. எரித்துளிகள் போன்ற கண்கள். அவள் உதடுகளை இறுக்கிக்கொண்டு தன்னை அடக்கினாள். அன்னை அவளிடம் மென்மொழிகளை சொல்லிக்கொண்டே இருந்தாள்.
அவன் அவர்களை நோக்கிக்கொண்டிருந்தான். அப்போது போரின் ஓசை மிக அப்பாலென விலகிச்சென்றுவிட்டிருந்தது. அவன் நோக்குவதை அவர்கள் உணரவில்லை. நீள்மூச்சுடன் அவன் திரும்பியபோது இளைய மருத்துவர்களில் ஒருவன் அவனைப் பார்த்து திடுக்கிட்டான். ஏதோ சொல்லெழுந்த உதடுகளுடன் அவன் கைநீட்டினான். துண்டிகன் அவனை நோக்கியபடி நின்றான். அவன் கைதழைத்து தலையை அசைத்தான். துண்டிகன் வெளியே சென்றான். அப்பால் குருக்ஷேத்ரத்தில் இருளுக்குள் பல்லாயிரம் இருளலைகளாக போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. அவன் சில கணங்கள் அதை நோக்கியபின் எதிர்த்திசையில் நடந்தான்.
குறுங்காடு இருண்ட குவைகளாலான கோட்டைபோல் வளைத்திருந்தது. வானின் பகைப்புலத்தில் இலைவடிவங்கள் கூர்கொண்டிருந்தன. குறுங்காட்டுக்கு அப்பால் வானில் சிதைவெளிச்சம் எழுந்து நின்றிருந்தது. சற்றே விழிகூர்ந்தபோது புகையின் அலைவையும் அதிலேறி மேலே செல்லும் சருகுக்கரித் திவலைகளையும் பார்க்க முடிந்தது. அங்கே நிழல்கள் வானிலெழுந்து ஆடின. காற்று ஓசையெழுப்பியபடி சென்றபோது புதர்களுக்குள் அசைவுகள் எழுந்தன. விலங்குகளா, நாகங்களா, பாதாளதெய்வங்களா?
அவன் அதை நோக்கி செல்கையில் ஒருவனை தொலைவிலேயே கண்டான். முள்மரத்தின் அடியில் அவன் தனித்து நின்றிருந்தான். அணுகும்தோறும் அவ்வுருவின் வடிவம் தெளிந்து சிகண்டியென்று காட்டியது. சிகண்டி அங்கே நின்று தொலைவில் தெரிந்த படுகளத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அவன் அருகே சென்றதையும் அவர் அறியவில்லை. துண்டிகன் அவர் முன் சென்று நின்றான். அவர் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அதிலிருந்தது என்ன உணர்வு என அறியமுடியவில்லை. அது கரிய சிலைபோல இருளில் தெரிந்தது.
அவன் குறுங்காட்டின் விளிம்பு வழியாக அந்தப் பெருஞ்சிதை நெருப்பை நோக்கி சென்றான். நீண்ட நிரையாக உடல்கள் கிடத்தப்பட்டிருந்தன. அவன் உடல்கள் ஒவ்வொன்றாக நோக்கிக்கொண்டு சென்றான். பின்னர் ஓர் உடலை நோக்கியபடி பெருமூச்சுடன் சற்றுநேரம் நின்றான். மிக அப்பால் தாழ்வான சகடங்கள் கொண்ட வண்டிகளில் உடல்களை அள்ளி அடுக்கிவைத்து கொண்டுசென்று சிதையேற்றிக்கொண்டிருந்தனர். வண்டி அந்த உடலை அணுக மேலும் சிலநாழிகைகள் ஆகும் என எண்ணிக்கொண்டான்.
[திசைதேர்வெள்ளம் நிறைவு]