«

»


Print this Post

புயல் -கடிதங்கள்


kaja

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வணக்கம், நான் உங்கள் வாசகன், பட்டுகோட்டை பகுதியயை  சேர்ந்தவன் ,   பேரழவில் சிக்கி  வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும்  எளிய  விவசாய  மக்கள்  படும் துயர்  உங்களுக்கு  தெரிந்துருக்கும் .  டெல்ட்டா  மக்களின் துயர் இன்னும்  தமிழக மக்களை முழுமையாக சென்றடையவில்லை என்பது என்  கருத்து .

 

உங்கள் தளத்தில் இதை பற்றி  எழுத  வேண்டும் என்பதே  என் வேண்டுகோள் . இது அவர்களுக்கு கிடைக்கும் உதவியை அதிகரிக்க செய்யலாம் . அருண்மொழி  அக்கா  அவர்கள் பகுதியின் எளிய மக்களை நன்கு அறிவார்கள் என நம்புகிறேன் .

 

அன்புடன்

சு.சண்முகம்

 

 

அன்புள்ள சண்முகம்

 

இந்தத் தளத்தின் வீச்சு குறுகிய வட்டத்துக்குள்தான். அவர்கள் பெரும்பாலும் நாளிதழ்களை வாசிப்பவர்கள். அவர்கள் அறியாத எச்செய்தியையும் இதில்  நான் வெளியிட்டுவிட முடியாது. இன்றைய செய்தியூடகப் பெருக்கத்தில் செய்திகள் மிகமிக விரிவாகவே பதிவாகிக்கொண்டிருக்கின்றன

 

விஷ்ணுபுரம் குழுமம் என்பது பொதுவாக இலக்கியம் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கானது. அதனுடன் வேறுசெயல்களைச் சம்பந்தப்படுத்திக்கொள்வதில்லை. அதற்கு வேறு அமைப்புக்கள் நம் நண்பர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருமே தீவிரமாக இப்புயலில் பணியாற்றிக்கொண்டுள்ளனர்.

 

ஜெ

 

அன்பிற்குரிய ஆசிரியருக்கு,

 

கஜா புயல், அதற்கு முன் மற்றும் பின்னான அரசு மற்றும் மக்களின் செயல்பாடுகளைப் பற்றி சிந்திக்கும் போது உருவான என் எண்ணங்களை தொகுத்து ஒரு கட்டுரையாக எழுதி உள்ளேன்.

 

உங்களின் பார்வைக்கு:

 

“கஜா புயலால் பாதிக்கப்படட மக்களையும், அவர்களுக்கு கிடைக்கும் உதவிகளையும் கொச்சைப்படுத்தும் எண்ணத்தில் இதை எழுதவில்லை.

மழை மறைவு பிரதேசமான தமிழகத்திற்கு, வட கிழக்கு பருவமழை என்பது ஒரு வரம். இயற்கையான இந்த நிகழ்வில், சமயங்களில்  குறைந்த மழையையும், சமயங்களில் புயல் போன்ற காரணங்களால் பெரும் மழையையும் பெறுகிறோம். காலங்காலமாக நடந்து வரும் இந்த இயற்கை நிகழ்வை, தற்காலத்தில் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு முன்கூட்டியே கணிக்க முடிகிறது. ஏன், உருவாகும் புயல்களுக்கு பெயர்வைத்து பார்க்கும் அளவுக்கு நேரம் இருக்கிறது. 1968-ம் ஆண்டு வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் இப்படி சொல்லுவதாக ஒரு காட்சி வரும் “நாகப்பட்டிணத்துல புயல் வருதா? அதுதான் வருசா வருஷம் வருதே. அதுக்கென்ன”.

தமிழக கிழக்கு கடற்கரை, குறிப்பாக காவேரி டெல்டா பகுதியை புயல் தாக்குவது அரிதான நிகழ்வு அல்ல. இந்த வருடம் கஜா புயல். அடுத்த ஆண்டு? இந்த நிலையில்,அப்பகுதி இத்தகைய கடினமான சூழலை எதிர்கொள்ள சுயமாகவோ, அரசாலோ பயிற்றுவிக்கப்பட்டு உள்ளதாக தெரியவில்லை.

ஏன் ஆடு, மாடுகள் மரம் விழுந்து செத்துக்கிடக்கிறன? சுனாமி மாதிரியான திடீர் இயற்கைப்பேரிடர் இல்லை இந்தப் புயல். கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு முன்பே கணிக்கப்பட்டு மக்களிடம் தகவல் கொண்டு சேர்க்கப்பட்டுவிட்டது. இருப்பினும் அவர்களால் தங்கள் வாழ்வாதரமான ஆடு, மாடுகளைக்கூட பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. கால்நடைகளை இயற்கைப் பேரிடரின் போது பாதுகாக்கத் தேவையான இட அமைப்பு இல்லாமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு கிராம மக்களும் குறைந்த பட்சம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்று கூடி புயல் தாக்குவது தொடர்பான தகவல்களை பொது வெளியில் விவாதித்து உடனடியாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம், தேவையான உணவுப் பொருட்களை சேமித்தல் (எறும்புகள் செய்வதைப் போல), நீர் தேக்கத் தொட்டியில் முழு கொள்ளளவுக்கு நீரை நிரப்பி வைத்துக் கொள்ளுதல், தேவையான அளவுக்கு முடிந்த வகையில் குடி நீரை சேமித்து வைத்துக்கொள்ளல், கால் நடைகளை ஒன்றாக பாதுகாப்பான இடத்தில் அடைத்து வைத்தால் என இன்னும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க நிறைய நேரம் இருந்தது. கும்பல் மனப்பான்மையை எளிதில் அடையும் நமக்கு ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு குழுவாக இணைவது அவ்வளவு எளிமையாக கைகூடுவது இல்லை.

தற்போது கிடைக்கும் உதவி பாராட்டத்தக்கதாக இருந்தாலும் கூட அது யானைப் பசிக்கு சோளப்பொரி தான். மக்களின் ஆக்கப்பூர்வமான முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் தான் சிறப்பாக உதவக்கூடிய ஒன்றே தவிர, அரசோ, பிறரோ தரும் புயலுக்கு முன் மற்றும் பின்னான தற்காலிக உதவிகள் அல்ல என்று நினைக்கிறேன்.

இந்த அரசாங்கம் எல்லாம் உருவாவதற்கு முன், நம் பிரச்சனைகளை நாம் தானே கவனித்துக் கொண்டோம்? இங்கு புதிதாக சிந்தித்து செயல்பட ஒன்றும் இல்லை. காலங்ககாலமா நாம் எப்படி நமக்காக இணைத்து செயல் பட்டோமோ, அந்த உணர்வை மறு ஆக்கம் செய்து நடைமுறைப்படுத்தினால் போதும். அதற்கான காரணமும்,அவசியமும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

மக்கள் இயற்கை பேரிடருக்குப் பின்பு கும்பலாக சேர்ந்து அரசைக் குறைகூறுவதால் பெரிதாக ஒன்றும் மாறிவிடாது. இத்தகைய பெரும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு குறுகிய காலத்தில் மீள் உருவாக்கம் செய்யம் அளவிற்கு நம் அரசாங்கங்களிடம் தொழில் நுட்பமும், வசதியும் இல்லை என்பதை உணர வேண்டும். முதலில் நாம் ஒன்றிணைத்து முடித்த வரைக்குமான சேதாரங்களை குறைக்கப் பாடுபடவேண்டும். பின் அரசாங்கம் வந்து அவர்களின் வேலையை செய்யட்டும்.

பொது வழி சாலைகளை மறிக்கலாம். அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் திட்டி திருப்பி அனுப்பலாம். அங்கே அடித்து உடைக்கப்பட்ட இன்னோவா கார் அமைச்சரின் சொந்தக்கார் அல்ல. அது பொது சொத்து. நம் சொத்து. இந்த உணர்வு ஏற்படும் நாள் தான் நம் நாள்.

பி.கு: இது என் சொந்த கருத்து. இதற்கான மறுப்பு மற்றும் எதிர்வினைகளை பின்னூட்டமிடவும். தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறேன்.

நன்றி!
தினேஷ் ராஜு”

 

https://eneluthu.blogspot.com/2018/11/blog-post.html?fbclid=IwAR2GWKipeK3vuHedsr4UtuECRnIbMJ39IXYZCEbfhFnm7BRUJFl1tg3mIfw

 

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

 

அன்பும், நன்றியும்,

தினேஷ் ராஜு

 

 

அன்புள்ள தினேஷ்ராஜ்

 

தஞ்சை பகுதிதான் அனேகமாக தமிழகத்திலேயே குடிசைகள் நிறைந்த பகுதி. கல்வியறிவு, சுகாதாரம் அனைத்திலும் பின்னால் நிற்பது. மக்கள்செறிவு மிக்கது

 

ஆகவே தமிழகத்திற்கே உரிய பொதுவான பிரச்சினைகள் அனைத்தும் அங்கே இருக்கும். சாதிப்பிரிவினை, தன்னல் எல்லாம். ஆனால் அதையெல்லாம் ஒரு பேரழிவை முன்வைத்துப் பேசுவது சரியல்ல

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/115473