கண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்

வணக்கம் ஜெ.,

நண்பர் ஒருவர் அவரது யோகா ஆசிரியர் கூறியதன் பேரில் பாரதி மெய்ஞ்ஞானம் உணர்ந்தவர் என்றும் அவரது கண்ணன்/கண்ணம்மா பாடல்கள் அனைத்தும் ஆன்மீகம் பேசும் பக்திப் பாடல்களே என்று என்னிடம் வாதிடுகிறார். எங்கள் விவாதத்தின் மையம், ‘சுட்டும் விழிச்சுடரே’ என்ற பாடல். அது பக்திப்பாடல் என்று சொல்லுவதற்கு போதுமான அடித்தளம் இல்லை என்கிறேன் நான். குறிப்பாக அதன் கடைசி நான்கு வரிகள், திருமணத்தையும் திருமணத்திற்கு முன் சற்றே காதலியை தீண்டி விளையாடுவதைப் பற்றியும் சொல்கிறது.

நண்பர் தனது வாதத்திற்கு முன்வைக்கும் இன்னொரு ஆதாரம் அப்பாடல், ’கண்ணன் பாடல்கள்’ என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப் பட்டுள்ளது என்பது. பார்க்க

ஆனால், அதே வலைத்தளத்தின் அடுத்த பக்கத்தில்(http://www.chennailibrary.com/bharathiyar/kannanpattu17.html), கீழ் வரும் பாடல் உள்ளது.
இதுவும் கூட பக்திப் பாடலா? இல்லை இது தொகுத்தவர்களின் தவறா?

சாணக்கியன்

அன்புள்ள சாணக்கியன்

பாஞ்சாலி சபதத்தை எப்படி அரசியல் உள்ளடக்கம் கொண்டு பாரதி எழுதினாரோ அதேபோலத்தான் அவர் கண்ணன்பாட்டு குயில்பாட்டு இரண்டையும் வேதாந்த உள்ளடக்கம் கொண்டு எழுதினார். அதற்கான எல்லா வாசிப்புச்சாத்தியங்களும் அந்த படைப்புகளில் உள்ளன.

கண்ணன் பாடல்கள் அந்த தலைப்பில் பாரதியாரின் முயற்சியால் பரலி சு நெல்லையப்பர் அவர்களால் வெளியிடப்பட்டன. கண்ணன் பாடல்கள் நூல் வ.வெ.சு அய்யரின் முன்னுரையுடன்வெளிவந்தது. அந்த முன்னுரையிலேயே அய்யர் கண்ணன் பாடல்கள் தமிழின் பக்தி இலக்கிய மரபைச் சேர்ந்தவை என்று வரையறுக்கிறார். இறைவனை பல பாவனைகளில் காதலியாகவும் காதலனாகவும் ஏவலனாகவும் பார்த்து பக்தி செலுத்தும் மரபு உலகெங்கும் உள்ளது. எல்லா உறவையும் இறை உறவாக பார்க்கும் மனவிரிவை நோக்கிச் செல்வதற்காக அது கையாளப்படுகிறது. இதையே ஃபாவபக்தி என்கிறார்கள்.

தமிழில் ஆழ்வார்பாடல்களில் உள்ள இந்த பாவனையின் நேரடியான தொடர்ச்சியே பாரதியின் கண்ணன் பாடல்கள் என்று அய்யர் சொல்கிறார். இன்றுவரை அது அந்த நோக்கிலேயெ வாசிக்கப்பட்டும் வருகிறது. ஜயதேவர், சைதன்யர் ஆகியோரின் பாடல்களிலும் இந்த முறை உள்ளது என்று சொல்லும் அய்யர் அந்த வழிமுறை மிக ஆபத்தானது, அழகியல்குலைவு உருவாகும், ரசக்குறைவும் நிகழும் என எச்சரிக்கிறார். அந்தக் கம்பிமேல் நடையில் ஜயதேவர் சறுக்கிய இடங்கள் உண்டு, பாரதி வென்றிருக்கிறார் என்கிறார்

பாவபக்தி என்பது இந்திய பக்தி இயக்கத்தில் மிகப்பெரிய இடம் வகித்தது. ராமகிருஷ்ணர் கூட தன்னை நாயகி பாவனையில் இருத்தி பக்தி கொண்டிருக்கிறார். அப்போது அவர் புடவை அணிவது வழக்கம் என்கிறார் அவரது வரலாற்றாசிரியரான எம். தூயவேதாந்தியாக இருந்த ஆத்மானந்தா அதன் எல்லை உணர்ந்து பாவபக்தியை நோக்கிச் சென்று மீண்டதாக சொல்லியிருக்கிறார். ’நித்ய சைதன்ய யதி’ உணர்ச்சிப்பிரவாகமான பாவபக்தி- காதல் பாடல்களை எழுதியிருக்கிறார். அவை இசையமைக்கப்பட்டு வந்துள்ளன

கிறித்தவ மரபில் சாலமோன், புனிதஜான் ஆகியோரின் பாடல்களில் நாயகி பாவம் உள்ளது. இஸ்லாமியமரபில்கூட குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களில் பாவ பக்தி உள்ளது. இறைவனை மனோன்மணி என்ற பெண்ணாக உருவகித்து தன்னை அதன் பெருங்காதலனாக வைத்து எழுதப்பட்ட அவரது பாடல்கள் புகழ்பெற்றவை.

பாரதியின் கண்ணன்பாட்டை பொறுத்தவரை அதற்கு இரு முகங்கள் உண்டு. உணர்ச்சிகரமான காதல்பாடல்கள். அதேசமயம் பக்தி மற்றும் வேதாந்த பாடல்களும் கூட. அந்த இருமுகங்களும் பிரித்துப்பார்க்கக்கூடியவை அல்ல. ஒன்றை வைத்து ஒன்றை புரிந்துகொள்ளவேண்டியவை. ஒன்றை மட்டும் பார்க்கும் எவரும் பாடலை தவறவிடுகிறார்.

உங்கள் யோக ஆசிரியரைப்போல சிலரை நானும் கண்டுள்ளேன். அவர்களுக்கு காதலும் காமமும் சங்கடம் அளிக்கின்றன. ஆகவே அவர்கள் அந்த தளத்தை முழுமையாக விலக்கி வெறும் பக்தி அல்லது வேதாந்தமாக கண்ணன் பாடல்களை பார்க்க முயல்கிறார்கள். நாணயத்தின் ஒரு பக்கம் மட்டும் போதும் என்பதைப்போல.

உண்மையில் அந்தச் சங்கடம் இருப்பவர்களால் வேதாந்தத்தையும் புரிந்து கொள்ள முடியாதென்றே மரபு சொல்கிறது. இந்த பூவுலகில் உள்ள எல்லா உறவுகளையும் இறையுறவின் பெரும்பரவசமாக உணர்வதற்காகவே இந்த வழிமுறையை ஞானிகள் கைகொள்கிறார்கள். அதாவது காமத்தின் அல்லது காதலின் ஏக்கத்தையும், தவிப்பையும், புணர்தலில் சுயமிழக்கும் பெரும் பரவசத்தையும் உணராத ஒருவரால் பிரபஞ்ச லீலையை உணரவும் இயலாது.

இந்த மானுட உறவுகளில் உள்ள இன்பம் நமக்கு கையெட்டும் தூரத்தில் உள்ளது. இதை தொட்டறிவது எளிது. இதுவும் அதுவே என்று நாம் அதை ஊகிக்கலாம். இதில் இருந்து அதை நோக்கிச் செல்லலாம். நித்யாவின் வார்த்தைகள் . ‘ஒரு சிறிய மலரில் இருந்து இப்பிரபஞ்சமெனும் ஆனந்த வெளியை நாம் சென்றடைய முடியும். பூவை அறிய முடியாதவனுக்கு பிரபஞ்சத்தையும் அறிய முடியாது. ஆம், அது காலவெளியில் பூத்த முடிவிலா இதழ்கள் கொண்ட ஒரு மலர் மட்டுமே’

ஜெ


ஆத்மானந்தர்


புனிதஜான்

குணங்குடியார் பாடல்கள் பற்றி நாஞ்சில்நாடன்

முந்தைய கட்டுரைநான்காவது கொலை!!! -2
அடுத்த கட்டுரைபொங்கல்,பண்பாடு -கடிதங்கள்