திருவட்டார், கோயில்கள் – கடிதங்கள்

krish (1)

ஜெ அவர்களுக்கு

வணக்கம்.. கடந்த இரு நாட்கள் உங்கள் ஊர்ப்பக்கம் பயணம்.. குமரி மாவட்டத்தின் பச்சையம் கண்களுக்குள் ஊடுருவி நிற்கிறது. இன்னும் சில நாட்களுக்கு மனதில் படபடக்கும். மழை மிரட்டினாலும், திருவட்டாறு சென்றிருந்தேன். உங்கள் வார்த்தைகளில் அது சித்திரமாய் இருந்தாலும், அத்தனை உயரமான கோவில் வேறு இருக்காது என்றே தோன்றுகிறது. நீளமான பிரகாரம் முடிவற்று விரிகிறது. சுத்தமான பராமரிப்பில் இருந்தது மேலும் அழகூட்டியது. மன்மதன் சிறுகதையில் வந்த கோவில் கிருஷ்ணாபுரம் என்று என் சிற்றறிவுக்கு புலப்பட்டாலும், அதே போன்ற ரதி-மன்மதன் சிலையை இங்கு பார்த்தது ஆச்சரியம்.

“பெண்ணழகோட உச்சம்னா ரதி. ஆணாழகோட உச்சம் மன்மதன். பாருங்கசார், ரதி என்ன ஒயிலா அன்னப்பறவை மேலே அமர்ந்திருக்கான்னு. அவ உடம்பிலே எத்தனை நகையிருக்கு தெரியுமா? கழுத்திலே ஆரம் மட்டுமே பதினெட்டு போட்டிருக்கா சார். கைவளையும் கடகமும் தோள் வளையும் எல்லாம் உண்டு…நம்ம சாஸ்திரத்திலே சொல்லியிருக்கிற எல்லா நகையும் போட்டிருக்கா”

செல்பேசியில் மன்மதன் சிறுகதை இணைப்பை திறந்து, வரிக்கு வரி காட்சியாய் பார்த்தேன்.. அழகான அனுபவம்.. வேறு பரபரப்பான பயணிகள் யாரும் அங்கு நடமாடவில்லை என்பது கூடுதல் சிறப்பு..

ரதி -மன்மதனைப் பார்த்து விட்டு, அந்தப் பிரகாரத்தை தாண்டும் போது கண்ணில் பட்டது , கதவில் செதுக்கியிருக்கும் இந்தச் சிற்பம்.. கிருஷ்ண லீலையை இத்தனை நுணுக்கமாய் இரண்டடி அகல பாதிக் கதவில் செதுக்கியிருந்தது படைப்பின் உச்சம். அதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.. அழகாய் இருந்தது..கிருஷ்ணர் வஸ்திரங்களை விசிறிய கோலத்தில் அலட்சியமாகவும், கோபியர்கள் அதைக்கேட்டு இறைஞ்சியபடியும் ஒவ்வொருவரும் வேறுபட்ட நிற்றல் கோலத்திலும், அழகு.. அழகு..

புகைப்படம் எடுக்கலாமா தெரியவில்லை.. ஆனால், எடுக்காமல் வர மனதில்லை..

பவித்ரா..

tv1

அன்புள்ள ஜெயமோகன் சார்,

எனக்கு கட்டிடங்களின் மீது மிகப்பெரும் ஈடுபாடு உண்டு . மாபெரும் வீட்டை கட்டுவதையும் பின் அது உறவை அறுத்துவிடும் ஆதலால் மரங்கள் அடர்ந்த சோலைக்குள் ஒரு சிறிய நானே வடிவமைத்த வீட்டை கட்டி வாழ்வதாய் கனவு காண்பது எனது பகல் கனவுகளில் ஓன்று. ஆனால் பெரிய வீட்டிற்கோ சிறிய வீட்டிற்கோ வடிவம் என் ஏதும் மனதில் வருவது இல்லை.என்னவிதத்தில் கட்டவேண்டும் என கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு முடியாமல் அப்படியே விட்டுவிடுவேன். எந்த கட்டிடத்தை காணும்போதும் அதன் சிறப்பான பகுதிகளை மனதில் குறித்துக்கொண்டு அதை வீடுகட்டும்போது உபயோகித்து கொள்ளவேண்டும் என சுற்றி சுற்றி வருவேன். நான் படித்த காலேஜில் உள்ளது போன்ற நேர்கோட்டில் நிற்கும் உருண்டை உருண்டையான வெள்ளை நிற தூண்கள் நிரம்பிய வரண்டா, நாடாளுமன்றத்தின் வட்டவடிவமான முகப்பு, சென்னை சென்ட்ரலில், தென்னக ரயில்வே அலுவலகத்தின் உள்ளே இருக்கும் தேவாலயத்தை போன்ற நீளமான நிறைய படிகள் கொண்ட படிக்கட்டு என அதில் சில.

இன்று உங்கள் தளத்தில் “நமது கட்டிடங்கள்” என்ற கட்டுரையை படித்தேன். ஏன் எனது மனதில் ஒரு கட்டிடத்தின் வடிவமும் வருவது இல்லை என்பதற்கான விடை கிடைத்தது. பல ஆயிரம் வருட கட்டிட பாரம்பரியம் கொண்ட இந்த மண்ணில் பிறந்த எனக்குள், எனது முன்னோர்கள் கண்ட,நடந்த, புழங்கிய, வியந்த, தொழுத இடங்களின் அத்தனை உணர்வுகளும் கொஞ்சமாவது கடத்தப்பட்டிருக்கும். ஆனால் எனக்கு எந்த கட்டிடத்தின் மீதும் உண்மையான ஒரு ஈடுபாடு இருந்ததில்லை என்பதை இப்போது உணர்கிறேன். வெறுமே ஒரு ஈகோவிற்காக,அதன் பிரமாண்டத்திற்க்காக, “நமக்கும் தெரியணும்ல” என்பதற்காகவுமே அதை பார்த்திருக்கிறேன்.

எகிப்திய பாணியின் பாதிப்பில் உருவான தூண்கள் கொண்ட அஜந்தா, மரகட்டிடங்களின் பாதிப்பில் கல்களை குடைந்து உண்டான கட்டிடம், முகலாய, பிரிட்டிஷ் பாணி கட்டிடங்கள் எல்லாமே கட்டிட ஞானங்களின் கலவை என்பதே புரிகிறது.

நீங்கள் கூறியது சரிதான் பகற்கனவில் வீடு கட்டுவதற்கும் கூட முதலில் நாம் யார் என தெரிந்து இருக்க வேண்டும்.

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்

***

முந்தைய கட்டுரைகவிதையின் பாதைகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுத்தாளனாகவே வாழ்வது என்பது…