ஆனந்தியின் அப்பா -கடிதங்கள் 2

chilks

ஆனந்தியின் அப்பா கதை

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

“ஆனந்தியின் அப்பா” சிறுகதை முதலில் படிக்கும்போது புரியவில்லை.ஒரு நான் லீனியர் காதல் திரைக்கதையை வாசித்தது போல் இருந்தது. பிறகு திரும்ப படித்தபோது அனைத்தும் உள்ளிருந்து ஒரு நீரூற்றுபோல் கிளம்பியது. அப்பாவுக்கும் மகளுக்கும் நடந்த ஒரு காதல் கதை என தாராளமாக் சொல்லலாம். அப்பாவை மகள்போல் நேசிப்பது வேறு யாரும் இல்லை என நினைக்கிறேன். மகளை கொஞ்சும்போது மகள் போலவே வயதான ஒருத்தி வேண்டும் என்றுதான் அனைத்து ஆண்மகன்களும் மகளைப்போல உள்ள வேறொரு பெண்ணிடம் தொடர்பு வைத்து கொள்கிறார்கள் போல.மகள் வளர்ந்து பெரியவள் ஆகி வேறொருவனோடு புறப்பட்டபிறகு அவர்கள் அந்த பெண்ணோடு ஐக்கியமாகி விடுகிறார்கள்.ஆனால் மகள் தன்னை வாழ்வின் எதோ ஒரு கட்டத்தின் சட்டகத்தில் அப்படியே பிரீஸ் பண்ணியது போல் வைத்துகொள்கிறாள்.

 

ராம் சாக்லேட் பாய். எடிட்டரே தனது அம்மா அவரின் பெரும் ரசிகை என கூறும்போது மாதவ் ஒரு மாதிரி பார்த்து மீள்கிறான். ரசிகைகள் அவர் பிம்பம் மீது பைத்தியமாய் அலைந்து விட்டு வேறொரு பிம்பம் வந்த உடன் தாவி சென்று விடுகிறார்கள்.ஆனால் ஆனந்தி அவரை பிம்பமாய் ரசிக்கவே இல்லை.அவள் அவரை ரத்தமும் சதையுமாய் நேசித்திருக்கிறாள்.சூட்டிங்கில் தந்தை கதாநாயகியோடு காதல் பண்ணுவதே அவளை கடுப்பாக்குகிறது.திருமணம் முடித்து,மகன் வளர்ந்து,தனது கணவன் இறந்து மனது வெறுமையை நோக்கி செல்லும் முதுமையில் அவளின் நினைவில் தனது முதல் காதலனை தேடுகிறாள். எல்லா பெண்களும் அப்படிதானா? பிறகு கணவன், மகன் எல்லாம் எதற்காக? பெண்களை பெற்ற அப்பாக்கள் பாக்கியவான்கள். ஆனால் முதுமை அவளுக்கு மறதியை அளிக்கிறது. அனைத்தையும் மறந்தாலும் தனது தகப்பனை அவள் மறக்க தயாராக இல்லை.

 

தொகுப்பு. இதுதான் இந்த சிறுகதையின் மையம். நல்ல எடிட்டர் யாருக்கு இந்த படம் என்பதை புரிந்து தொகுக்கவேண்டும். அதேபோல் காலம் மிகவும் முக்கியம். முதல் சட்டகத்தில் இருந்து பார்வையாளனை பரவசபடுத்தி இருக்கையில் இருந்து தூக்கி திரைக்குள் இழுக்க வேண்டும்.கோதண்டம் மிக நுட்பமாய் ஆனந்தியின் மனதை படித்து அவளுக்கு தேவை கடந்த காலம் அல்ல நிகழ்காலம்,இல்லை ஒரு கனவின் காலம் என உணர்ந்து தொகுக்க ஆரம்பிக்கிறார்.ஆனால் அது அனைத்தும் கடந்த காலத்தின் 69 படங்களுக்குள் ஒளிந்திருக்கிறது.அறுபத்தாறு வாழ்க்கை.அறுபத்து ஆறு வாழ்க்கையை இரண்டாயிரம் நிமிடமாக ஒரே வாழ்க்கையாக தொகுத்தால்  எப்படி பார்ப்பது? தான் நேசித்த ஒருவரை,அவரின் அனைத்து தளத்திலும் அவர் சந்தித்து கொண்ட ஆட்களையும் அவராகவே கொண்டு, எதிரில் பேசிக்கொண்டு இருப்பவர்,காதல் கொண்டவர்,சண்டை போட்டவர் என அறுபத்தாறு வாழ்க்கைக்குள்ளும் அடங்கி இருக்கும் மனிதர்களை அவராகவே கொண்டு தொகுத்து பார்க்கும்படி கூறினால் மகேசை போல் நமக்கும் பைத்தியம் பிடித்துவிடும்.

 

எடிட்டர் கூறுகிறார் “சினிமாவுல பெரும்பகுதியை நம்ம கான்சியஸ் வடிகட்டிருது..நாலஞ்சு பிரேம்தான் கனவுக்கு போகுது…மொத்த சினிமாவும் கனவுக்குள்ளே போயிடுற மாதிரி ஒரு முயற்சி பண்ணலாம்னு நினச்சேன்”, எவ்வளவு உண்மை. நாம பார்க்கிற அனைத்து விசுவல்களையும் கனவுக்குள் கொண்டு போனால் எப்டி வாழ்றது?.ஆனால் இது ஆனந்தியின்  கனவுக்குள் சென்ற அப்பா என்னும் நான்கே நான்கு ஃப்ரேம். ஆனால் அதற்கு அவர் பார்த்தே இராத அறுபத்தி ஆறு வாழ்க்கை தேவைபடுகிறது.

 

இரண்டாயிரத்தை சுருக்க முயன்று கொண்டிருக்கும் கோதண்டத்திடம் “இத கொஞ்சம் மாத்தி வெட்டி வெட்டி அடுக்கணும்னு தோணுது சார், சினிமா எடிட்டர் மட்டும் இல்ல.எவன் பார்த்தாலும் அதைதான் நினைப்பான்” என மகேஷ் கூறும்போது கோதண்டம் “ஆமா …அதான் சினிமா.ஒவ்வொருவரும் அதில் தங்களோட கனவை பார்க்கணும் என கூறுகிறார்.[ இப்போது எனக்கு நமது யூடியூப் விமர்சகர்கள் நியாபகம் வந்தது,அனைவரும் கூறுவது: எடிட்டர் நன்றாக எடிட் பண்ணியிருக்கிறார் அல்லது இன்னும் நீளத்தை குறைத்திருக்கலாம் என] இப்போது எடிட்டர் தனக்காக தொகுக்க ஆரம்பிக்கிறார்.ஆனால் டிரைவிங் போர்ஸ் எதிரில் உட்காரபோகும் ஆனந்தி என்னும் பார்வையாளன்தான்.

 

எவ்வளவு வாழ்வாங்கு வாழ்ந்தாலும் அனைவரும் தனது வாழ்க்கையை அறுபது நிமிடத்திற்குள் தொகுத்துகொள்ளலாம் போலதான் தோன்றுகிறது.ஆனால் பைனல் புட்டேஜ் அவர்கள் எந்த பிரிவில் வாழ்ந்தார்கள் என்பதை பொறுத்தது.மொத்த வாழ்க்கையில் இருந்து முக்கியமான சட்டகங்களை எடுத்து ஆக்சன், காதல்,காமெடி, திரில்லர்,டிராமா என ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கையை அல்லது ஒவ்வொருவரும் தங்களின் மனதுக்கு ஏற்ப தொகுத்து ஒரு வகையை ஆனந்தியை போல் உருவாக்கிக்கொள்ளலாம்.

 

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்

 

 

அன்புள்ள ஜெ

 

ஆனந்தியின் அப்பா ஒரு விசித்திரமான கதை.  அந்தக்கதையை அதன் கிளைமாக்ஸ் தான் மையம் என நினைத்து வாசித்தால் இழக்கவேண்டியிருக்கும். அது தவிர்க்கமுடியாத கிளைமாகஸ். அதை கதைக்குள்ளும் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக்கதை இருப்பது ஒரு மனிதவாழ்க்கையை எந்த அளவுக்குச் சுருக்கி எடிட் செய்யமுடியும் என்ற கேள்விதான். மனிதவாழ்க்கையின் காரணகாரியத் தொடர்பையும் ஒழுக்கையும் இல்லாமலாக்கி அதன் சாரத்தை மட்டுமே அளவுகோலாகக்கொண்டு எப்படித் தொகுப்பது. தொகுத்தால் என்னவரும்? எவ்வளவுதான் எஞ்சும்?

 

ஆனந்தியின் அப்பாவின் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் சினிமா. ஆனால் அவர் எஞ்சவிட்டுச் சென்றது அது. அதை அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் என்ற எடிட்டர் மறுதொகுப்பு செய்துகொண்டேதான் இருக்கிறார். அவருடைய கத்திரிபட்டுச் சுருங்கி கடைசியில் கொஞ்சம்தான் எஞ்சும். அந்தவேலையைத்தான் இன்றைக்கே எடிட்டர் செய்துவிடுகிறார். இப்படி மனிதவாழ்க்கையை வரலாற்றை எப்படிச் சுருக்கும்வது?

 

நான் இதை வேறுவழியில் யோசித்திருக்கிறேன். குபரா திஜா எல்லாம் நிறைய எழுதியவர்கள். அவற்றில் எஞ்சுவது எவ்வளவு? அவற்றிலிருந்து யார் அந்த சாராம்சத்தைப் பிரித்து எடுக்கிறார்கள்? பாலில் வெண்ணை கடைந்து எடுப்பதுபோல அந்த மையம் எப்படி திரண்டு வருகிறது?

 

அந்த ஃபிலிம் எடிட்டிங் ஒரு அபாரமான படிமம் ஜெ. அதைமீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். அது ஒருநவீனக்கவிதைபோல உள்ளது

 

எஸ்.,ராஜாராம்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79
அடுத்த கட்டுரைராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்