பிரதமன் கடிதங்கள் 5

ada-pradhaman-article

 

பிரதமன்[சிறுகதை]

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

இந்த கதையை படித்து முடித்ததும் ஒரு கல்யாண சமயல் பந்தலில் நின்ற கற்பனை. பிரதமன் இதுவரை உண்ணதில்லை, ஆனால் ஒருவாறு அதன் ருசியையும் வாசனையையும் கற்பனை செய்து கொண்டேன்.. அதிக விவரணை உள்ள கதை இது. ஒரு வாசகனுக்கு இந்த கற்பனை உணர்வை உண்டாக்க இவ்வளவு விவரணை தேவைப்படும் என்று தான் நினைக்கிறேன்.

இந்த கதை எனக்கு மூன்று முக்கிய காட்சிகளாகத்தான் என் நினைவில் அமர்கிறது.

 

1) பழைய காதலியுடனான பேச்சு

2) ஆசான் சிஸ்யர்களுக்கு காட்டும் குரு தரிசனம்.

3) ஆசானுடய ஆழ்ந்த தொழில் ஞானமும் நேர்மையும்.

 

 

பழைய காதலியை பார்க்கும் ஆசான் ‘ நல்லாருக்கிய ‘ என்று கேட்கிறார், வேறு என்ன கேட்க முடியும். வெகு தூரம் வந்த ஆசான் கல்யாணம் செய்திருந்தது நலபாகத்தைதான். ருசியை மையமாக கொண்டு நடக்கும் சம்பாசனை, பற்று என்பது பழக்கத்தில் வருவது போல சொல்கிறார். நம் மனதில் அது  நிற்கிறது.

 

கிருஷ்ணர் தன் விஸ்வரூப தரிசனத்தை ஒரு சிலருக்கே காட்டினார் எனினும், அவரது இருப்பு எந்த சபையிலும் பேசும்.ஆசனுடய இருப்பு அதை போன்றது. பிரதமன் கனிந்து வரும் நேரம் அவருடைய ஞான உச்ச கணங்களில் ஒன்று. அவருடைய சிஸ்யர்கள் ஒரு புலி இரையின் மீது வைத்துள்ள கவனத்திற்கு ஈடாக கவனம் தருகிறார்கள். மாணவன் உருவாயீருந்தால் ஆசிரியர் வாய்த்தே ஆக வேண்டும். கதையின் இறுதியில் ஆசான் காட்டுவது மெல்லிய விஸ்வரூப தரிசனமே. தொழிற்கல்விகள் தொற்குமிடன் இது. இவ்வாறான ஞானத்தை சொல்லித்தரவோ பகிரவோ முடியாது. காட்டவோ கடத்தவோ தான் முடியும். அந்த சிறுவன் அதை கண்டுகொண்டான். அவனுக்கு இந்த ஞானம் வாய்க்கும்.

 

 

ஆசான் கண்ணிலும் மூகிலும் மட்டும் பார்த்து செய்யும் பிரதமனில் ருசியை தவிர வேறு ஒன்றை நிகழ்த்துகிறார், அதில் தெய்வத்தை இறக்குகிறார். அவருடைய  தொழில் ஞானமும் சமரசமற்ற நேர்மையும் பார்க்கும் போது சில எண்ணங்கள் எனக்கு தோன்றுகிறது. நவீன தனி மனிதன் உடல் உழைப்பில் இருந்து தன்னை விடுவித்து பண்பாட்டு நடவடிக்கைக்கு வரவேண்டும் என்று மர்க்சியம் சொல்வதாக நான் படித்திருக்கிறேன். உழைப்பிற்கும் பண்படுவதிர்க்கும் அப்பால் சில உன்னதமான விசயங்கள் இருக்கத்தான் செய்கிறது. இதை கோட்பாடுகளாலோ போதுமைபடுத்துவதாலோ நிருவிவிடமுடியாது. அது தன் அகத்தே தான் மட்டும் கண்டடையும் ஞானம்.

 

உமையொருபாகன், திருவலக்குற்றி , கஜராஜ விராஜிதம் போன்ற சொற்கள் எனக்கு புதியதாய் இருந்தது. குறித்து வைத்துக்கொண்டேன்.

 

நன்றியுடன்

விஜயகுமார்.

 

அன்புள்ள ஜெ

 

பிரதமன் கதையை ஒரு அருமையான காதல்கதையாக வாசித்தேன். அதன்பின்னர்தான் அதற்கு வந்த கடிதங்களில் இருந்து அதை ஒரு வாழ்க்கைச்சித்திரமாக வாசிக்கமுடியும் என்பதைக் கண்டுகொண்டேன். ஒரு வாழ்க்கைச்சித்திரம் என்றால் சமையலை வாழ்க்கையாக காண்பது. உப்பு புளி காய்கறிகள் என எல்லாவகையான சுவைகளைக்கொண்டும் ஒரு மிகப்பெரிய சமையல். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நுட்பம் உள்ளது. அங்கே பேசுபவர்கள் வாழ்க்கையை சமையலுடன் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். குழம்பு கொதிக்கும்போதே இறக்கவேண்டும் என்பதை 13 வயது பெண்ணை காதலிப்பது என்கிறார்கள். அந்த வாழ்க்கையெனும் சமையலின் உச்சம்தான் பிரதமன். அனைத்தையும் இனிப்பாக்குவது

 

இதை இனிமையோகம் என்றுதான் சொல்லவேண்டும். முன்பு கிருஷ்ணமதுரம் என்று இந்தத்தளத்தில் ஒரு கட்டுரை வந்தது [புறப்பாடு] அந்தக்கட்டுரை அல்லது கதை ஞாபகம் வந்தது. அயினிப்புளிக்கறியும் ஞாபகம் வந்தது. இரண்டுகதைகளும் வாழ்க்கையின் இனிமையைச் சொல்பவைதான். இனிமையை கடைசியில் சென்றடைவதைப்பற்றித்தான் அவை பேசுகின்றன

 

சங்கரநாராயணன்

 

 

ஜெ

 

இந்தப் பிரதமன் கதை ஓர் உண்மைக்கதையை நீங்கள் கொஞ்சம் மாற்றிமாற்றிச் சொல்லிக்கொண்டிருப்பதுதான் என நினைக்கிறேன். கிளிக்காலம் என்ற கதை நீங்கள் 30 ஆண்டுகளுக்கு முன் கணையாழியில் எழுதியது. அதில் இந்த கதை உள்ளே வந்துசெல்கிறது. அந்தக்கதையை இப்போதுதான் ஜெயமோகன் குறுநாவல்கள் கதைத்தொகுதியில் வாசித்தேன். சமையல்கட்டுப்பின்னணியில் நீங்கள் எழுதிய இரண்டாவது கதை இது. அந்தக்கதை முதல் இதுவரை ஏறத்தாழ ஒரே மனிதர்கள்தான் இருக்கிறார்கள்

 

எஸ்.அருண்

 

பிரதமன் -கடிதங்கள்1

பிரதமன் -கடிதங்கள்2

பிரதமன் கடிதங்கள் 3

பிரதமன் கடிதங்கள் 4

 

முந்தைய கட்டுரைவெள்ளையானை -சிவமணியன்
அடுத்த கட்டுரைசிறுகதைகள் -கடிதங்கள்