பிரதமன் கடிதங்கள் 4

Ada-Pradhaman-

பிரதமன்[சிறுகதை]

அன்புள்ள ஜெ,

பிரதமன் வாசித்தேன்.

ஆசானின் வேலையாட்கள் தொழிலில் நுட்பமானவர்கள். கைத்திறன் மிக்கவர்கள். தேங்காயை தட்டி உடைப்பது ஒரு கணக்கு. காய்ந்த விறகுகளையும் பச்சை விறகுகளையும் கலந்து அடுக்குவது இன்னொன்று. சுண்ணாம்பு கலந்த வெள்ளத்தின் குணம் என பல நூறு கணக்குகள். வித்தைகள் இயங்குகின்றன.

ஆனால் கணக்குகள் வித்தைகளை மீறி கதையில் ஒன்று நிகழ்கிறது. [ஆசான் அந்தப்பெண் உறவு கூட கணக்குடன் மட்டும் முடிந்துவிட்ட ஓர் உறவு எனலாம்.]

சிம்பெனியை இயக்கும் மேஸ்ட்ரோ போல ஆசான் கடைசியில் கொண்டுவரும் மேஜிக். வெவ்வேறு சொற்களின் மூலம் அதைச் சுட்டலாம். ‘அவர் ஒரு ஞானி’. ‘தெய்வீகம்’. ‘Craft கும் கலைக்கும் உள்ள வித்தியாசம்’.

ஆனால் பிரதமனை யாராவது உண்மையில் categorize செய்ய முடியுமா?

அன்புடன்,
ராஜா.

பி.குநீங்களே பல இடங்களில் சொல்லி இருப்பீர்கள். நானே வந்து அடைந்ததால் எனக்கு முக்கியமாகிறது. மனிதன் இதுவரை கண்டறிந்த கற்பனை செய்யும் உச்சங்களின் விவரணை, எதிர்வினையை இலக்கியம் எனலாமா?

 

அன்புள்ள ஜெமோ

 

பிரதமன் சமீபத்தில் வாசித்தவற்றில் மிகச்சிறந்த கதை. ரயிலில் கதையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் அதற்கு ஒரு உலகியல்சார்ந்த கசப்பு உள்ளது. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கலையிலும் அந்தக் கசப்பு ஆமோதிக்கப்படும்போது சோர்வு உருவாகிறது

 

ஆனால் பிரதமன் மீண்டும் இனிப்பை முன்வைக்கிறது. கனிவை முன்வைக்கிறது. வாழ்க்கையில் இருந்து கனிவும் இனிப்பும் திரண்டுவரவேண்டும் என்று சொல்கிறது. அந்தக்கதையின் நூற்றுக்கணக்கான நுட்பங்களைச் சொல்லலாம். நெய்யை வழித்தெடுக்கும் மென்மை அதன் உச்சம் என நினைக்கிறேன்.

 

ஏன் இந்தவகையான கதைகள் படிக்கிறபோது இந்த நிறைவு வருகிறது என்று யோசித்தேன். இந்தவகையான கதைகளில் ஒரு beyond life அம்சம் உள்ளது. வாழ்க்கைக்கு வெளியே நின்றுகொண்டு வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப்பார்ப்பது அது. அந்த அம்சம்தான் கலை. அதைத்தான் பெரிய எழுத்தாளர்களின் கதைகளிலே பார்க்கிறோம்

 

மற்றபடி உறவுச்சிக்கல்கள் அரசியல்பிரச்சினைகள் சமூகச்சிக்கல்கள் ஆகியவற்றைச் சொல்லும் கதைகளுக்கு ஒரு தற்காலிகமான ஆர்வம்தான் உருவாக்கமுடிகிறது. அவை நம் மனதில் நீடிப்பதில்லை. இப்போதெல்லாம் வந்துகொண்டிருக்கும் பெரும்பாலான கதைகளுக்கு இந்த வகையான மேலோட்டமான mundane தன்மை உள்ளது. அது இல்லாமல் அதைக்கடந்துசெல்லும் கதைகளைத்தான் மனசு நாடுகிறது.

 

இது என்னுடைய வாசிப்புத்தன்மையாகவும் இருக்கலாம்

 

ஆனந்த் தேசிகன்

 

அன்புள்ள ஜெ

 

பிரதமன் ஒரு அற்புதமான சிறுகதை. அதன் நேச்சுரலிஸ்ட் அழகியல் வாசிப்பதற்கு மிகமெல்ல கொண்டுசெல்கிறது. வரிவரியாக வாசிக்கவேண்டியிருக்கிறது நூற்றுக்கணக்கான தகவல்கள். செய்திகள். நேச்சுரலிசத்தின் அழகே அதுதான். அது ஃபோட்டோ போல எல்லாவற்றையுமே காட்டிக்கொண்டு செல்லும். கதைசொல்வதில்லை. காட்டிக்கொண்டே செல்கிறது. அந்தக்காட்சியிலிருந்தே நாம் நம் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உருவாக்கிக்கொள்கிறோம். நேச்சுரலிசம் என்பதை the art of data என்பார்கள். அந்த அழகை இந்தக்கதையிலே கண்டேன்.

 

நன்றி

 

ஸ்ரீனிவாஸ்

பிரதமன் -கடிதங்கள்1

பிரதமன் -கடிதங்கள்2

 

முந்தைய கட்டுரைசிறுகதைகள்,கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜ் கௌதமன் – பாட்டும் ,தொகையும் ,தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்-கடலூர் சீனு