நாள்நிறைவை அறிவிக்கும் முரசுகள் முழங்கிக்கொண்டிருக்க சுபாகு கௌரவப் படைகளின் நடுவிலூடாகச் சென்றான். கௌரவப் படைவீரர்கள் தொடர்ந்து பலநாட்களாக உளச்சோர்வுடன்தான் அந்தியில் பாடிவீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அன்று அச்சோர்வு மேலும் பலமடங்காக இருக்கும் என அவன் நினைத்திருந்தான். முதலில் பொதுவான நோக்குக்கு அப்படி தோன்றவும் செய்தது. ஆனால் உண்மையில் அவ்வாறல்ல என்று பின்னர் தெரியலாயிற்று. வீரர்கள் ஊக்கமும் மகிழ்வும் கொண்டிருக்கவில்லை. ஆனால் எதிலிருந்தோ போராடி விடுபட்டவர்கள்போல களைப்பும் தளர்வும் கலந்த ஆறுதலை உடலசைவுகளில் வெளிப்படுத்தினார்கள்.
அது தன் எண்ணம் மட்டும்தானா என ஐயம் கொண்டவனாக அவன் ஒவ்வொரு முகங்களாக நோக்கியபடி சென்றான். அவர்கள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள். கைகளை நீட்டி சோம்பல் முறித்தனர். சிலர் வாய்திறந்து கோட்டுவாய் இடுவதுபோலத் தெரிந்தது. பின்னர் ஒட்டுமொத்தமாக படையை பார்த்தபோது உறுதியாயிற்று, அவர்கள் அதுவரை இருந்த இறுக்கம் ஒன்றை இழந்துகொண்டிருந்தனர். அன்று அவர்கள் விரைவிலேயே துயின்றுவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டான்.
அது ஏன் என அவன் உள்ளம் துழாவலாயிற்று. பிதாமகர் பீஷ்மர் இனி எழமாட்டார் என்பதில் எவருக்கும் ஐயமிருக்க வாய்ப்பில்லை. அவருடைய இறப்பு கணம்கணமாக அணுகிக்கொண்டிருக்கிறது. அது அவர்களுக்கு துயரளிக்க வேண்டும். குருகுலத்திற்கு மட்டுமல்லாது அஸ்தினபுரியின் குடிகளுக்கே அவர் தந்தைவடிவம். அவரை அவர்கள் வெறுத்திருக்கிறார்கள், பழித்திருக்கிறார்கள். ஆகவே குற்றவுணர்வு கொண்டு அத்துயரை பெருக்கிக்கொண்டிருக்கவேண்டும். அவர்தான் அன்றுவரை பாண்டவர்களால் ஒருகணம்கூட வெல்லமுடியாத அரணாக நின்றிருந்தவர். அவரை வென்றதுமே பாண்டவர்கள் வென்றுமேற்செல்வார்கள் என்று ஆகியிருக்கிறது. அவர்கள் அஞ்சியிருக்கவேண்டும். அந்த விடுதலையுணர்வை புரிந்துகொள்ள முடியவில்லை. எத்தனை எண்ணி எண்ணி நோக்கியும் அதை வகுத்துக்கொள்ள இயலவில்லை.
துரியோதனனின் பாடிவீட்டுக்கு அவன் சென்றபோது அங்கே துர்மதனும் துச்சகனும் துச்சலனும் துர்முகனும் நின்றிருந்தனர். அவர்கள் கவசத்தை கழற்றியிருக்கவில்லை. சுபாகுவைப் பார்த்ததும் துச்சகன் வெறுமனே தலையசைக்க மற்றவர்கள் வெற்றுவிழிகளுடன் நோக்கியபின் தலைகுனிந்தார்கள். அவன் அங்கே சென்று ஓரமாக நின்றான். அவனிடம் ஏதேனும் கேட்பார்கள் என எதிர்பார்த்தான். தேர்ச்சகடங்களின் ஓசை எழுந்தது. சகனும் விந்தனும் அனுவிந்தனும் சமனும் வந்தனர். அவர்களும் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் கழித்து சமன் மெல்ல அசைந்து “எங்கிருக்கிறார்?” என்றான்.
“துரோணரையும் கிருபரையும் பார்த்துவருவதாகச் சொல்லி சென்றுள்ளார்” என்றான் துச்சகன். “அவர்கள் பிதாமகரை பார்க்கச் செல்லவேண்டும் என விழைகிறார்கள்” என்றான் துச்சலன். ஆனால் அப்பேச்சு மேலும் நீடிக்கவில்லை. சற்று நேரத்தில் மீண்டும் சகட ஓசை எழுந்தது. அது எவருடையது என அனைவருக்குமே தெரிந்திருந்தது. மெல்லிய உடலசைவுகளாக அவர்கள் நிமிர்ந்து நின்றனர். தேர் அணுகி நின்று அதிலிருந்து துரியோதனன் மெல்ல இறங்கினான். நோயுற்றவன்போல் தேரின் கைப்பிடியைப் பற்றியபடி நிலத்தில் கால்வைத்து உடல் நிமிர்ந்தபின் திரும்பி பின்னால் இறங்கிவந்த துச்சாதனனை பார்த்தான். துச்சாதனன் முன்னால் வர அவனைத் தொடர்ந்து எடைமிக்க காலடிகளை எடுத்துவைத்து மெதுவாக வந்தான்.
துச்சாதனன் இருக்கையை எடுத்துப் போட்டான். துரியோதனன் நடந்து வந்து தம்பியரை நோக்கிவிட்டு கையை பீடத்தில் ஊன்றி முனகியபடி உடலை அதில் அமைத்தான். முழங்கால் மூட்டுகளில் கைமுட்டுகளை அமைத்து தலைகுனிந்து அமர்ந்தான். அவன் உடலில் நீர் வற்றிவிட்டிருக்கிறதோ என்று சுபாகு எண்ணினான். கண்களுக்குக் கீழே மென்தசைவளையங்கள். உதடுகளைச் சுற்றி ஆழ்ந்த மடிப்புகள். கழுத்துத்தசை சுருங்கி தொய்ந்திருந்தது. விரல்கள் நடுங்கிப்பதறி கோத்துக்கொண்டும் விலகிக்கொண்டுமிருந்தன. நிலம் நோக்கி விழிதாழ்த்தி அசையாச் சிலை என அமர்ந்திருந்தான்.
துச்சகனும் துச்சலனும் சென்று துரியோதனனின் கவசங்களை கழற்றத் தொடங்கினர். சமனும் விந்தனும் துச்சாதனனின் கவசங்களை கழற்றினர். உலோகங்கள் உரசிக்கொள்ளும் ஓசை மட்டும் கேட்டது. துச்சகன் மெல்ல தொண்டையை கமறிக்கொண்டது பேரொலியாக எழுந்தது. கவசங்களை கழற்றிவிட்டு மர யானத்தில் நீர் கொண்டுவந்து அதில் துரியோதனனின் கைகளை எடுத்துவைத்து சிறிய நார்ச்சுருளால் தேய்த்துக் கழுவினான் துச்சலன். துச்சகன் மரவுரியால் துரியோதனனின் உடலை துடைத்தான். சமனும் விந்தனும் துச்சாதனனின் கைகளை கழுவினர்.
துரியோதனன் “மாதுலர் எங்கே?” என்றான். அங்கிருந்த அனைவருமே திடுக்கிட்டனர். அது அவ்வினாவால் அல்ல, அக்குரலால் என்று தோன்றியது. நோயுற்று நலிந்த முதியவரின் குரல் போலிருந்தது. துச்சகன் “இங்கு வரக்கூடும்” என்றான். துரியோதனன் சுபாகுவை நோக்கி “எப்படி இருக்கிறார்?” என்றான். சுபாகு “இருமுறை தேனும் பழச்சாறும் அருந்தியிருக்கிறார். நீர் பிரிந்திருக்கிறது. பீதர்நாட்டு மருந்து மூக்கு வழியாக செலுத்தப்பட்டுள்ளது. துயில்கிறார்” என்றான். துச்சாதனன் “எழுந்துவிடுவாரா?” என்றான். அப்போது அவ்வினாவை கேட்குமளவுக்கு துச்சாதனன் அறியாமை கொண்டிருப்பது சுபாகுவை எரிச்சலடையச் செய்தது. அதை அங்கிருந்தோர் அனைவரும் உணர்ந்தனர். துச்சாதனன் அதை அறியாமல் “அவர் எழுந்துவிடுவார் என்றால் நாம் அஞ்சவேண்டியதில்லை” என்றான்.
என்ன சொல்வதென்று தெரியாமல் சுபாகு தலையை திருப்பிக்கொண்டான். அந்தப் பொழுதின் இக்கட்டான நிலையை அப்பால் கேட்ட சகட ஓசை கலைத்தது. சமன் “மாதுலர்” என்றான். சுபாகு பெருமூச்சுவிட்டான். தேர் வந்து நிற்க அதிலிருந்து கர்ணனும் துர்கர்ணனும் இறங்கினர். தொடர்ந்து சகுனி இறங்கி அவர்களின் தோளைப் பற்றியபடி புண்பட்ட காலை நீக்கி நீக்கி வைத்து நடந்துவந்தார். சுபாகு ஒரு மரப்பெட்டியை எடுத்து அவர் அமர்வதற்காக போட்டான். துரியோதனன் எழுந்து தலைவணங்க சகுனி முனகலுடன் அணுகி பெட்டியில் அமர்ந்தார். அவர் கைகாட்ட துரியோதனன் அமர்ந்தான். சகுனி “சென்றிருந்தேன்” என்றார். துரியோதனன் வெறுமனே முனகினான். “நாம் தோற்றுவிட்டோம் என அவர்கள் எண்ணுகிறார்கள் என நினைக்கிறேன்” என்றார்.
துச்சலன் “ஆனால் அங்கே வெற்றிக்கொண்டாட்டம் ஏதும் தென்படவில்லை” என்றான். “சற்றுநேரம் அப்படித்தான் இருக்கும். ஒருவகையான இழப்புணர்வும் குற்றவுணர்வும் அவர்களை கவ்விப்பற்றியிருக்கும். மதுவுண்டு உள்ளத்தை இளகச் செய்வார்கள். எங்கிருந்தோ எவரோ தொடங்குவார்கள். மெல்ல மெல்ல களிவெறி எழுந்து இரவெல்லாம் கொண்டாட்டமாக முழங்கிக்கொண்டிருக்கும்” என்றார். துரியோதனன் ஒன்றும் சொல்லவில்லை. துச்சலன் “அவர்களால் தங்கள் மூதாதையின் சாவை வெளிப்படையாக கொண்டாட முடியுமா?” என்றான்.
சகுனி “இத்தகைய தருணங்களுக்கு கைகொடுப்பது இளிவரல். இந்த இக்கட்டின் இரண்டுமற்ற நிலையை நகையாட்டு வழியாக கடந்துசெல்லலாம். பீஷ்ம பிதாமகரையும் யுதிஷ்டிரனையும் சேர்ந்தே இழிசொல்லாடத் தொடங்கினால் இதை கடந்துவிடலாம். மெல்ல மெல்ல பீஷ்ம பிதாமகரை வென்றதன் கொண்டாட்டமாக அதை உருமாற்றிக் கொள்ளலாம். இருள் செறிந்து இரவு சரியும்தோறும் தீமை வளர்கிறது. பின்னர் அது மட்டுமே எஞ்சியிருக்கும். பேருருக்கொண்டு அவர்கள் அனைவரையும் தன் இடையிலும் தோளிலும் சூடியிருக்கும்” என்றார்.
துரியோதனன் “ஆம். இனி என்ன செய்வது, மாதுலரே?” என்றான். அவன் குரல் உடைந்து ஒலித்தமை சுபாகுவை உளமுருகச் செய்தது. விழி கசிய அவன் முகம் திருப்பிக்கொண்டான். “ஒன்றும் ஆகவில்லை. நான் இப்போதுதான் துரோணரை சந்தித்துவிட்டு வருகிறேன். அவர் மேலும் உறுதிகொண்டிருக்கிறார். பிதாமகரின் இறப்புக்கு வஞ்சம் தீர்க்க எழுவதாக என்னிடம் சொன்னார்” என்றார் சகுனி. “நான் அவரை சந்திக்கவே சென்றேன். என்னால் இயலவில்லை. அஸ்வத்தாமரை மட்டும் சந்தித்துவிட்டு திரும்பிவிட்டேன்” என்றான் துரியோதனன். “அஸ்வத்தாமனிடம் நானும் பேசினேன். தந்தையைவிட வஞ்சம்கொண்டு அவன் எரிந்துகொண்டிருக்கிறான். தந்தையை தழல்கொள்ளச் செய்ய அவனே போதும்” என்றார் சகுனி.
துரியோதனன் “என்ன செய்வதென்றே தெரியவில்லை!” என்றான். “இந்த உளச்சோர்வே இப்போது நம்மை வீழ்த்துவது. இதுவரை நாம் வெல்லவேண்டுமென்றே விழைந்தோம். இனி வஞ்சம்கொள்ள வேண்டுமென்று எழுவோம். பிதாமகரின் களம்படுகை அதற்காகத்தான் போலும். துரோணர் இதுவரை முழு விசையுடன் போரிடவில்லை. தன் மாணவர்களை தன் கையால் கொல்ல தயங்கிக்கொண்டிருந்தார். இனி அவ்வாறல்ல, நாளைமுதல் களத்திலெழுபவர் பெருவஞ்சம்கொண்ட பிறிதொருவர்” என்றார் சகுனி.
“பிதாமகர் முழு விசையுடன் போரிடவில்லை என்பதே உண்மை. அவர் எண்ணி முடிவெடுத்து வில்சூடியிருந்தால் பாண்டவப் படை முதல் நாளிலேயே சிதறியிருக்கும். இப்படி களத்தில் தன்னை கொடுப்பதைத்தான் அவர் தொடக்கம் முதலே உள்ளூர விழைந்திருந்தார் என எண்ணுகிறேன். ஏனென்றால் இது அவருடைய போர் அல்ல. கடமைக்காகவே அவர் களம்வந்தார். அவருள் அரசவையில் திரௌபதி ஆற்றிய வஞ்சினம் குற்றவுணர்வை உருவாக்கியிருந்தது. அவருடைய கனவுக்குள் அம்பையின் வஞ்சத்துடன் அதுவும் கலந்துவிட்டிருக்கக்கூடும். பிதாமகர் பீஷ்மர் கொல்லப்படவில்லை, தற்கொலை செய்துகொண்டார். அதனூடாக அவர் தன்னுள் உணர்ந்த ஒரு பழியை நிகர் செய்துகொண்டார்.”
“அறிவின்மைதான்” என சகுனி தொடர்ந்தார். “ஆனால் இந்தப் போரில் இம்முதியவர்களுக்கு பெரிதாக எந்த ஈடுபாடும் இல்லை. போரும் வணிகமும் எப்போதுமே இளையோருக்குரியது. முதியவர்களுக்கு இவ்வுலகில் அடைவதற்கேதுமில்லை, தக்கவைப்பதற்கே சில உள்ளது. அவர்கள் எண்ணுவதனைத்தும் இங்கு நீத்து அங்கு சென்றபின் எய்துவன பற்றியே. பிதாமகரும் துரோணரும் கிருபரும் அவ்வாறே போரிட்டனர். இனி அவ்வாறல்ல, துரோணரும் கிருபரும் இங்கே தீர்த்தாகவேண்டிய கணக்கு ஒன்று உள்ளது. அதை தீர்க்காமல் அவர்கள் இங்கிருந்து செல்லமுடியாது. ஆகவே நடந்துள்ளது நன்றே.” துரியோதனன் முகத்தில் எந்த மாறுபாடும் தெரியவில்லை. துச்சாதனன் “ஆம்” என்றான்.
“உண்மையில் பிதாமகர் களம்பட்டது அவர் நமக்கிழைத்த பெருந்தீங்கு. நம்பிக்கைவஞ்சம்” என்றார் சகுனி. அவரை நோக்கியபடி கௌரவர் வெறும்முகங்களுடன் சூழ்ந்து நின்றிருந்தனர். “அவர் ஏன் வில்தாழ்த்தி நெஞ்சு காட்டினார்? புகழுக்காக. ஆணிலியிடம் பொருதினார் என்னும் பழி நிகழாதமைவதற்காக. நம்மைவிட, நாம் கொண்டுள்ள அறத்தைவிட அவருக்கு தன் புகழே பெரிதென்று தோன்றியிருக்கிறது.” துச்சாதனன் “அவர் அம்பையன்னைக்கு தன்னை கொடுத்தார் என்கிறார்கள்” என்றான். அதை அவன் சொல்லியிருக்கக் கூடாதென்பதுபோல் அனைவரும் முகம் சுளித்து நோக்கினர்.
அவ்வுணர்வுகளை உணராதவனாக துச்சாதனன் “ஆம், அவ்வாறுதான் சொல்லிக்கொள்கிறார்கள். அவர் இந்த வாக்குறுதியை சிகண்டிக்கு மிக நெடுங்காலம் முன்னரே அளித்திருக்கிறார், களத்தில் அவர் கையால் இறப்பேன் என்று” என்றான். சகுனி சில கணங்கள் துச்சாதனனை நோக்கிவிட்டு தன் உணர்ச்சிகளை கடந்துசென்று புன்னகைத்தார். அதை தனக்கான ஏற்பு என்று எண்ணி துச்சாதனன் “அவரிடம் எட்டு வசுக்கள் இருந்தமையால் அவரை அம்பையால் வெல்ல இயலவில்லை. எட்டு வசுக்களும் அவர் அன்னை கங்கையால் அவருக்கு அளிக்கப்பட்ட காப்பு. அவர்கள் எண்மரும் இங்கே களத்திலிருந்து விலகிச்சென்றனர். அதன்பின் அவர் தன்னை அம்பைக்கு பலியாக அளித்தார். அவ்வாறு தன்மேல் படிந்த தொல்பழியிலிருந்து விடுபட்டார். இனி அவர் தடையில்லாது விண்ணேகமுடியும். அம்பையன்னையும் விண்ணேகுவார்” என்றான்.
“யார் வாய்ச் சொற்கள் இவை?” என்றார் சகுனி. “இங்குள்ள அத்தனை சூதர்களும் இதைத்தானே பாடிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான் துச்சாதனன். “அதற்குள்ளாகவா?” என்றார் சகுனி. துச்சாதனன் ஊக்கம் பெற்று “ஆம், போர்முடிந்து செல்லும்போதே கைகளைக் கொட்டியபடி பாடத்தொடங்கிவிட்டனர். ஆவக்காவலராகவும் தேரோட்டிகளாகவும் வந்த பலர் உண்மையில் இசைச்சூதர்களும்கூட. அவர்களிடமிருந்தே அந்தியில் களம்பாடும் சூதர்கள் களமெய்யை அறிகிறார்கள். அதைச் சார்ந்தே அவர்கள் பாடல்களை புனைகிறார்கள்” என்றான். சகுனி வாய்விட்டு நகைத்து துரியோதனனிடம் “அரிய நுண்திறன் கொண்ட இளையோன். மருகனே, நீ விண்புகுந்தபின் இவன் அஸ்தினபுரிக்கு அரசன் ஆனால் பாரதவர்ஷமே வந்து பணிந்து திறையளிக்கும்” என்றார். துச்சாதனன் ஐயத்துடன் பிறரை நோக்கினான்.
“நாம் இனி என்ன செய்வது, மாதுலரே?” என்றான் துரியோதனன். “நாம் செய்யவேண்டியது சில உண்டு” என்றார் சகுனி. “அதை சற்றுமுன் துரோணர் சொன்னார். பூரிசிரவஸும் அதையே சொன்னான். எண்ணிக்கொண்டே வந்தேன்” என்றார். துரியோதனன் நிமிர்ந்து நோக்க “நாம் பிதாமகரின் உடல்நிலை குறித்து இந்திரப்பிரஸ்தத்தின் அரசனுக்கும் தம்பியருக்கும் முறைப்படி செய்தி அனுப்பவேண்டும். யாதவ மூதரசிக்கும் பாஞ்சாலத்து அரசிக்கும் முறைமைச்சொல்லுடன் தூது செல்லவேண்டும்” என்றார். துச்சாதனன் “என்ன பேசுகிறீர்கள்? கொன்றது அவர்கள்… அவர்களுக்கு நாமே செய்தி அறிவிப்பதா?” என்று கூவினான். “இளையோனே!” என்று தளர்ந்த குரலால் துச்சாதனனை அடக்கியபின் துரியோதனன் “அதன் பயன் என்ன?” என்றான்.
“அவர்கள் வெற்றிக்களிப்பு கொள்வதை அதனூடாக தடுக்கிறோம்” என்று சகுனி சொன்னார். “அவர்கள் முறைமைப்படி துயர்கொண்டாடியே தீரவேண்டுமென்ற நிலையை உருவாக்குகிறோம்.” துச்சாதனன் “அதனாலென்ன பயன்? வென்றோம் எனும் களிப்பை அவர்களின் உள்ளங்களில் இருந்து அகற்றமுடியுமா என்ன?” என்றான். சகுனி “முடியும்” என்றார். “படைகளின் உள்ளம் உள்ளிருந்து எழும் உணர்வுகளால் இயங்குவதல்ல, வெளியிலிருந்து உள்ளே செல்லும் ஆணைகளால் இயங்குவது. படை என்பதே ஆணைக்கேற்ப உணர்வுகளையும் எண்ணங்களையும் கொள்வதற்காக பயிற்றுவிக்கப்பட்ட மானுடத் திரள்தான்.”
“அவர்கள் வெற்றிகொண்டாடினார்கள் என்றால் அக்கொண்டாட்டத்தை ஒவ்வொருவரும் பெற்று பெருக்கிக்கொள்வார்கள். நாளை காலை பெரும் நம்பிக்கையும் ஊக்கமும் கொண்டு எழுவார்கள். மாறாக அரசாணைப்படி துயர்காத்தனர் என்றால் மேலும் சோர்ந்து தொய்வடைவார்கள்” என சகுனி தொடர்ந்தார். “அவர்களிடம் நாம் குற்றவுணர்ச்சியை நிலைநிறுத்தவேண்டும். அதற்கு அதை அவர்களின் அரசரிடமும் தலைவர்களிடமும் உருவாக்கவேண்டும். அதற்கான வழி அவர் நமக்கு மட்டுமல்ல, அவர்களுக்கும் பிதாமகரே என அறிவிப்பதே. மூத்தாருக்கான எல்லா முறைமைகளிலும் சடங்குகளிலும் அவர்களுக்கும் பங்குள்ளது என்று சொல்வதே.”
“அவர்கள் அதை மறுக்கலாமே?” என்றான் துச்சலன். “யுதிஷ்டிரன் எந்தத் தொல்முறைமையையும் மறுக்கக்கூடியவனல்ல” என்றார் சகுனி. “யாதவர் மறுக்கலாம்” என்றான் துச்சலன். “அவர் இதன் அரசியலையே நோக்குவார். பீஷ்மருக்கு முறைமைத்துயர் காத்ததன் வழியாக அவரை நெறிமீறி களத்தில் வீழ்த்திய பழியிலிருந்து விலகிக்கொள்ள முடியும். நாளை ஒருவேளை அவர்கள் வென்று அஸ்தினபுரியில் அரசமைப்பார்கள் என்றால் பீஷ்ம பிதாமகருக்கு அங்கே மாபெரும் நடுகல் விழவை எடுக்கவும் பள்ளிப்படை அமைக்கவும் அது தொடக்கமாக அமையும். நாளடைவில் மக்களின் உள்ளங்களில் இருந்து பிதாமகரை விலக்கிவிடலாம். தெய்வமென மானுடரை ஆக்குவதே அவர்களை அகற்றுவதற்கான எளிய வழி.”
துரியோதனன் பெருமூச்சுடன் “இவை எவற்றையும் என்னால் எண்ணக் கூடவில்லை, மாதுலரே. நீங்களே வேண்டுவனவற்றை எண்ணி இயற்றுக!” என்றபின் எழுந்துகொண்டான். சகுனி “ஆம், நானே பார்த்துக்கொள்கிறேன். அரசியரிடம் செய்தி சொல்ல பூரிசிரவஸை அனுப்புவோம். கௌரவரிடமிருந்து யுதிஷ்டிரனுக்கான தூதுடன் அரசகுடியினன் ஒருவன் செல்வதே உகந்தது. சுபாகு செல்லட்டும்” என்றார். சுபாகு தலைவணங்கினான். “என்ன சொல்லவேண்டுமென நீ அறிவாய். அவர்களிடம் அவர்களுக்கிருக்கும் கடன்முறைமைகளை சொல்க! அவர்களுடன் இணைந்து அவற்றைச் செய்ய அஸ்தினபுரியின் அரசனுக்கு தயக்கமில்லை என்று உணர்த்துக!” சுபாகு “ஆம்” என்றான்.
சகுனி எழுந்துகொண்டு “நான் சற்று ஓய்வெடுக்கவேண்டும். படைநிலைகளைப் பற்றிய செய்திகளுடன் தூதர்கள் வந்திருப்பார்கள். அவர்களிடம் கலந்துரையாடவேண்டும். படைசூழ்கையை நாளை அஸ்வத்தாமன் வகுக்கட்டும்” என்றார். துரியோதனன் அப்பால் நின்று தலைவணங்கினான். சகுனி சுபாகுவிடம் “அங்கே செல்வதற்கான படையொப்புதல் கோரி முரசு முழங்கும். நீ படைமுகப்பை சென்றடைவதற்குள் அவர்களின் ஒப்புதல் வந்துவிடும் என எண்ணுகிறேன்” என்றார். சுபாகு தலைவணங்கிவிட்டு சென்று தன் புரவியில் ஏறிக்கொண்டான்.
படைமுகப்புக்குச் செல்வதற்கு முன்பு மருத்துவர்களிடம் பேசிவிட்டுச் செல்லலாம் என்று அவனுக்கு தோன்றியது. அதைவிட மீண்டும் பீஷ்மரைப் பார்க்க அவன் உள்ளம் விழைந்தது. அவன் புரவியில் அமர்ந்து சூழ்ந்திருந்த படைகளைப் பார்த்தபடி சென்றுகொண்டிருந்தான். நாற்றுப்படுகையில் காற்றுபோல படைகளுக்குள் உணவுவண்டிகள் செல்லும் அசைவுகள் தெரிந்தன. அந்தி மங்கி வான் இருள்கொண்டிருந்தது. எங்கோ யானை ஒன்று உரக்க குரலெழுப்பியது. அவனைக் கடந்துசென்ற புரவிவீரர்கள் இருவர் தலைவணங்கி வாழ்த்துரைத்தனர்.
பீஷ்மர் கிடந்த பகுதி படையிலிருந்து மிக விலகி காட்டின் எல்லைக்கு அருகே இருப்பதை அவன் அப்போதுதான் வியப்புடன் உணர்ந்தான். மொத்தப் படைகளும் அங்கிருந்து தெற்கு நோக்கி மிகவும் இறங்கி வந்துவிட்டிருந்தன. படைகளின் வடக்கு எல்லையில் அமைந்த காவல்மாடத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒப்புதலைப் பெற்று அப்பால் கடந்து மேலும் புரவியில் சென்றடைய வேண்டியிருந்தது அங்கே. பீஷ்மர் அந்த இடத்தை தெரிவுசெய்தாரா? அது முழுக்க முழுக்க தற்செயல் என்பதை அவனே களத்தில் கண்டான். ஆனால் களத்திற்கு வெளியே அவர் களம்பட்டார் என்பது எப்படி தற்செயலாக அமைய முடியும்? அந்த இடம் இரு படைகளுக்கும் பொதுவான ஒன்றாக, இருசாராருக்கும் அயலானதாக இயல்பாகவே மாறிவிட்டிருந்தது.
அவன் தொலைவிலேயே புரவியை இழுத்து அந்தப் படுகளத்தை பார்த்துக்கொண்டு நின்றான். அதைச் சுற்றி தேர்களின் உடைந்த நுகங்களையும் நெடுவேல் கட்டைகளையும் காட்டிலிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்ட மரக்கிளைகளையும் ஊன்றி கழிகளாலும் மூங்கில்களாலும் பிணைத்து வட்டமாக வேலியிட்டிருந்தார்கள். வடக்கே அரைவட்டமாக அரணிட்டிருந்த காட்டின் உயர்ந்த மரங்களுக்கு மேல் பரண் அமைக்கப்பட்டு வில்லவர்கள் காவலுக்கு அமைக்கப்பட்டிருந்தனர். வேலிக்குள் மருத்துவ ஏவலரும் பணியாளர்களும் காவலர்களும் தெரிந்தனர்.
அவன் அணுகிச் சென்றபோது காட்டின் விளிம்பில் நடப்பட்டிருந்த கழிகளில் பந்தங்களைக் கட்டி மீன்நெய் ஊற்றி பற்றவைத்துக்கொண்டிருந்தனர் ஏவலர். பந்தங்கள் ஒவ்வொன்றாக எரியத் தொடங்கின. தழலாட்டத்தின் ஓசையில் காட்சி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. அவன் வேலிக்கு வெளியே புரவியை நிறுத்திவிட்டு இறங்கி வாயிலில் காவல் நின்ற வீரனிடம் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றான். உள்ளே வஜ்ரர் இருந்தார். சாத்தன் அவனைக் கண்டு தலைவணங்கினான். ஆதன் ஏவலருடன் இணைந்து மண்கலங்களில் அனல் நிறைத்து அவற்றில் மூலிகைகளை இட்டு புகைப்படலத்தை எழுப்பிக்கொண்டிருந்தான்.
வஜ்ரர் அவனை பார்த்தார். “விழித்துக்கொள்ளவில்லை” என்றார். சுபாகு தலையசைத்தான். “இறப்பு நிகழுமென்பதில் ஐயமே இல்லை. எப்போதென்று சொல்லவியலாது. ஒவ்வொரு கணமும் அதற்கான வாய்ப்புள்ளதே. ஆனால் நாடிகள் நிலையாக உள்ளன. உடலின் உள்ளனல் தணியாதிருக்கிறது. தன்னுணர்வால் உயிர் கவ்வி நிறுத்தப்பட்டுள்ளது. அது விடும்கணம் உயிர் அகலும்” என்றார். அவன் அனலாட்டத்தில் அதிர்ந்துகொண்டிருந்த பீஷ்மரின் உடலை பார்த்தான். நிலத்திலிருந்து எழுந்து காற்றில் மிதந்து நிற்பதுபோலத் தோன்றியது.
வேலிக்குள் நெய்விளக்குகள் ஏற்றப்பட்டன. “அவர் எதன்பொருட்டு காத்திருக்கிறார் என்று தெரியவில்லை. போர் முடிவை அறிந்துகொள்ளவா?” என்று வஜ்ரர் சொன்னார். அப்பால் நின்றிருந்த சாத்தன் “அதை அவர் அறியாரா என்ன?” என்றான். சுபாகு திடுக்கிட்டவன்போல திரும்பிப் பார்த்தான். சாத்தன் புன்னகைத்தான். ஒருகணத்துக்குப் பின் சுபாகுவும் புன்னகைத்தான். சாத்தன் “அவர் மேலும் பெரிய ஒன்றுக்காக காத்திருக்கக்கூடும்” என்றான். “எதற்காக?” என்றான் சுபாகு. “உரிய பொழுதுக்காக. விண்திறக்கும் நற்பொழுதுகள் சில உண்டு. அவர் அவற்றை கணித்திருக்கக் கூடும்.”
“அத்தகைய பொழுது அருகணைகிறதா?” என்றான் சுபாகு. “கதிரவனின் வடக்குமுகம் அணுகுகிறது. விண்புகுந்தோர் மீளாதமைவதற்குரியது அந்த நாள் என்பார்கள்” என்றான் சாத்தன். “உத்தராயணம் அணுக இன்னும் ஐம்பத்தெட்டு நாட்கள் உள்ளன” என்று ஆதன் சொன்னான். “ஆம், வடக்குமுகப் பொழுதில் உயிர்விடவேண்டுமென்றால் இவ்வுலகில் எஞ்சிய அனைத்தையும் முற்றாக கைவிட்டிருக்க வேண்டும். ஒரு விழைவோ ஒற்றைச் சொல்லோ எஞ்சலாகாது. முதல் ஒரு மண்டலப்பொழுது அவர் தன்னைக் கடக்க தவமிருக்கலாம். பின்னர் அரைமண்டலப்பொழுது அங்கு செல்லும் ஊழ்கத்தில் அமையலாம்.”
சுபாகு வஜ்ரரிடம் “அத்தனை காலம் அமையுமா இவ்வுடல்?” என்றான். “அவருடைய தன்னுணர்வுதான் அதை முடிவு செய்கிறது…” என்றார். ஆதன் “குருதிவழிவு முற்றிலும் நின்றுவிட்டிருக்கிறது” என்றான். அவனை நோக்கியபின் சுபாகு “பிதாமகர் விண்புகுக! அவர் விண்புகுந்தாரென்றால்தான் பெருநோன்புகளும் பயனுள்ளனவே என மானுடம் கற்கும்” என்றான். வஜ்ரர் “நோன்புகளால் மானுடர் தங்களை இறுக்கிக் கொள்கிறார்கள். ஊசிக்காதில் நுழையும்பொருட்டு நூல் முறுகி கூர் கொள்வதைப்போல” என்றார். “அவருடைய உடலின் இறுக்கம் நம்ப இயலாததாக உள்ளது. தசையால் ஆனதே அல்ல என்று ஐயம்கொண்டேன்” என்றான் ஆதன். “இத்தனை அம்புகளுக்குப் பின்னரும் தசைநார்கள் விசை தளரவில்லை.”
சுபாகு அவர்களிடம் விடைபெறாமல் கிளம்பினான். வேலியைவிட்டு வெளியே செல்லும்போதும் காலடியில் நாகங்கள் நெளிவதாக விழிமயக்கு ஏற்பட உடல் நடுங்கி நின்றுவிட்டான். அதன் பின்னரே பீஷ்மரை தாங்கிநின்றிருந்த அம்புகளின் நிழல்கள் அவை என உணர்ந்தான். மீண்டும் இளங்காற்றில் பந்தச்சுடர்கள் அசைய அம்புநிழல்கள் நாகக்கூட்டங்கள்போல் அசைந்தன. அவன் திரும்பி நோக்கியபோது நெளியும் நாகங்களின் மீது அவர் படுத்திருப்பதாக உணர்ந்தான். கண்களைக் கொட்டி நோக்கை கலைத்து மீட்டுக்கொண்டு புரவியில் ஏறிக்கொண்டான்.
மீண்டும் கௌரவப் படைகளுக்குள் நுழைந்தபோது மிக அப்பால் அவனுக்கான ஆணை ஒலிப்பதை கேட்டான். பாண்டவர்களிடம் அவன் நுழைவுக்கான ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. காவல்மாடத்தை அவன் கடந்தபோது அங்கே முழவுடன் நின்றிருந்த முதிய சூதர் சிரித்தபடி அவனை நோக்கி ஓடிவந்தார். “அரசே, அரசே, நில்லுங்கள்!” என்றார். காவலர்தலைவன் “இழிமகனே, உன்னிடம் இங்கிருந்து செல்லும்படி சொன்னேன். கசையடி வாங்குவாய்” என்று கூவியபடி பின்னால் வந்தான்.
சூதர் “அரசே, நான் அங்கே செல்ல ஒப்புதல் அளிக்க ஆணையிடுங்கள்… நான் பிதாமகரை உடனே பார்க்கவேண்டும்” என்றார். “ஏன்?” என்றான் சுபாகு. “அவன் மூக்குவழிவார குடித்திருக்கிறான், அரசே” என்றான் காவலன். “யார்தான் குடிக்கவில்லை? சூதர்கள் குடித்தேயாகவேண்டும் என்பது தெய்வங்களின் ஆணை. குடிக்காத சூதன் படைக்கலம் பயிலாத ஷத்ரியனைப்போல” என்றார் முதிய சூதர். “அனங்க குடியினனாகிய என் பெயர் சுப்ரஜன். நான் பாடிய காவியங்கள் பல!” கரிய பற்களைக் காட்டி சிரித்து “அவற்றை ஏற்கெனவே பலர் பாடிவிட்டிருந்தமையால் நான் சொல்லிக்கொள்வதில்லை” என்றார்.
எரிச்சலுடன் அவரை விலகிப் போகும்படி கையசைத்துவிட்டு சுபாகு முன்னால் சென்றான். அவர் பின்னால் ஓடிவந்தபடி “நான் பீஷ்ம பிதாமகரைப் பற்றி காவியங்கள் புனைபவன். எங்கள் காவியங்கள் வேறுவகையானவை. அவற்றை அவருடைய எதிரிகளும் கேட்டு மகிழலாம். எளியோர் வெடித்து நகைக்கலாம். பெரியோர் தனிமையில் எண்ணி புன்னகைக்கலாம். அரசே, பீஷ்மரின் புகழ்பாடுவது எங்கள் குடித்தொழில்போல” என்றார். “செல்க!” என்று சுபாகு சவுக்கை எடுத்தான்.
அவர் அஞ்சியதுபோல தெரியவில்லை. சிரித்தபடி “நாங்கள் எங்கள் புகழ்பாடலுக்காக பொன்னைப் போலவே சவுக்கடிகளையும் பெறுவதுண்டு. முன்பொருமுறை என் பாட்டனார் ஒரு விடுதியில் இரவு முழுக்க பீஷ்மரைப் பற்றி புகழ்பாடிக்கொண்டிருந்தார். அங்கே குடியிருந்த தெய்வம் ஒன்று அந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்துகொண்டிருந்தது. அவர் துயின்றதும் அவர் காலடியில் பொன்னை குவித்துவிட்டுச் சென்றது. அவர் அந்தப் பொன்னைக் கொண்டு மேலும் வெறிகொண்டு குடித்து காசிப் படிக்கட்டில் இறந்தார். அவரைப் போலவே தெய்வங்களுக்கு உகக்கும்படி பாடி குடித்துச் சாவதையே நானும் இலக்காகக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
சுபாகு முன்னால் செல்ல அவர் பின்னால் வந்தபடி “அந்த தெய்வத்தின் பெயர் அவிரதை. அனைத்து நோன்புகளுக்கும் எதிரானது. நோன்புகொள்வோரை அணுகி அவர்களை கலைத்து வீழ்த்திவிட்டுச் செல்வது. கள்ளுண்ணா நோன்பு கொண்டவர்களிடம் அது விருப்பாக எழுகிறது. அரசே, காமஒறுப்பு நோன்பு கொண்டவர்களிடம் அது கடும் வெறுப்பாக திரள்கிறது. பீஷ்ம பிதாமகர் அரசவையில் தன் குலமகள் இழிவுசெய்யப்பட்டபோது தலைதாழ்த்தி ஏன் அமர்ந்திருந்தார்? அருகே அமர்ந்திருந்தாள் அவள். அவிரதை. சூழ்ச்சியும் வஞ்சமும் நிறைந்தவள். மானுட உள்ளங்களின் ஆழத்து இருளில் கரிய மீன் என நீந்திக்கொண்டிருப்பவள்” என்றார்.
அவன் புரவியை நிறுத்திவிட்டான். தன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். “அரசே, அவளுடைய அருளால்தான் நாங்கள் வாழ்கிறோம். எந்த நோன்பையும் எங்களால் மேற்கொள்ள முடியாது. கள்ளுண்டு சாவது என்னும் நோன்பை மேற்கொண்டால் கள்ளே வாய்க்கு சிக்குவதில்லை” என்றார். “செல்க!” என மூச்சொலியாக அவன் சொன்னான். “நான் அவரை பார்க்கவேண்டும். அவர் அம்புப்படுக்கையில் படுத்திருக்கிறார் என்றார்கள். ஆயிரத்தெட்டு அம்புமுனைகள் அவரை தாங்கியிருக்கின்றனவாம். அது உண்மைதானா என்று பார்க்கவேண்டும்.”
“ஏன்?” என்றான் சுபாகு. இது ஏதோ பாதாளத்து தெய்வம். இதன் சொற்களை செவிகொடுக்கலாகாது என அவன் அகத்தை விலக்கிக்கொண்டிருந்தாலும்கூட நா அதை கேட்டுவிட்டது. “அரசே, நீங்கள் அறிவீர்கள். அவருடைய அம்புகளில் பல்லாயிரத்திற்கு ஒன்றே இலக்கு பிழைக்கிறது. அவ்வாறு இலக்கு பிழைத்த அம்புகள்தான் இப்போது அவரை தாங்கிக்கொண்டிருக்கின்றன என்றார்கள்.” சுபாகு சீற்றத்துடன் “யார்?” என்றான். “அவிரதை… அவளுடைய தமக்கை ஒருத்தி இருக்கிறாள். அவள் பெயர் அதர்மை.”
சுபாகு அவரை உற்று நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். பெருச்சாளிகளுக்குரிய சிறிய ஒளிகொண்ட கண்கள். அவர் உடலில், முகத்தில், உதடுகளில், நோக்கில் எங்கும் ஒரு கோணல் இருந்தது. அவன் புரவியிலிருந்து இறங்கி அவரை அணுகி கால்தொட்டு வணங்கி “அருள்க, மெய்ச்சொல்கொண்டவரே!” என்றான். “நிறைவுறுக! தெய்வங்கள் உடன் நிலைகொள்க!” என அவர் வாழ்த்தினார். சுபாகு திரும்பி அப்பால் நின்றிருந்த காவலர்தலைவனிடம் “இவரை பிதாமகர் பீஷ்மரிடம் கொண்டுசெல்க!” என ஆணையிட்டபின் புரவியில் ஏறிக்கொண்டான்.