புத்தகக் கண்காட்சி, வாசகர்கள், எழுத்து…

சென்ற சிலநாட்களாகவே பேச்செல்லாம் புத்தகக் கண்காட்சி பற்றி. நான் பயணம் எழுத்து என பல திசைகளில் இருந்தாலும் என்னிடம் பேசுபவர்கள் கிளர்ச்சியடைந்த நிலையில் இருந்தார்கள். வருடத்திற்கு ஒருமுறை சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டித்தான் இந்தப் பரபரப்பு இருக்கிறது. இது நம் பண்பாட்டுச்சூழலுக்கு உதவக்கூடிய ஒரு பரபரப்பு.

ஹரன் பிரசன்னா சொன்ன விஷயம், புத்தகக் கண்காட்சிக்கு கூட்டம் அவர் எதிர்பார்த்ததை விட குறைவு என்று. ஆனால் கிழக்கு பதிப்பகத்திற்கு எப்போதும் வழக்கம்போல, அல்லது மேலாகவே கூட்டம் இருந்தது என்றார். விற்பனையிலும் சென்ற வருடத்தை விட முன்னேற்றம். புத்தகக் கண்காட்சியில் முதலிடம். காரணம் அவர்களுக்கென ஒரு வலைப்பின்னலும் விளம்பரங்களும் உள்ளன. கடைசிநாளில் சிறந்த கூட்டம் நல்ல விற்பனை என்று பொதுவாகச் சொன்னார்கள்.

மதுரை போன்ற ஊர்களில் புத்தகக் கண்காட்சிகளுக்கு கூட்டம் குறைந்து விற்பனை அதிகரித்திருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நூல்களை வாங்கும் எண்ணமே இல்லாதவர்கள் வேடிக்கைபார்க்க வருவது மிகவும் குறைந்து விட்டது. இது என்ன என்று பலருக்கும் தெரிந்து விட்டது.

தமிழினி, விடியல், காலச்சுவடு போன்ற பதிப்பகங்களுக்கு கூட்டம் பிரச்சினை இல்லை. அவர்கள் கூட்டம் சார்ந்த விற்பனை கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்கான வாசகர்கள் தேடிவருவார்கள். கூட்டம் இல்லாத மதியங்களில் அதிகம் விற்கவும்கூடும். அதேபோல உள்ளே நுழையும் வழியில் ஆரம்பத்திலேயே அமையும் பதிப்பகங்களும் நன்றாக விற்றன.

கூட்டம் குறைவதனால் பாதிக்கப்பட்டவர்கள் நடுவே மாட்டிக்கொண்ட, பொதுவான பதிப்பகங்கள். அவர்களின் நூல்களுக்கு விளம்பரம் இல்லை. மக்கள் அந்நூல்களை பார்ப்பது கண்காட்சிகளில்தான். அதுவே உண்மையில் விளம்பரம். அதிகமானபேர் உள்ளே வந்தால்தான் அவர்களுக்கு வியாபாரம் ஆகும். கூட்டம் குறைவதனால் பாதிக்கப்படுபவர்கள் அவர்களே

கூட்டம் குறைந்தமைக்குக் காரணங்களில் ஒன்றாக வாசலிலேயே பட்டிமன்றங்கள் வைத்து மக்களை முடக்கியதைச் சொன்னார்கள். பல நிகழ்ச்சிகள் புத்தகக் கண்காட்சி முடிவதுவரை நீடித்தன. அதனாலொன்றும் கூட்டம் குறையாது என்று இன்னொரு தரப்பு. உண்மையில் கூட்டம் குறையும் என்றே நினைக்கிறேன். காலச்சுவடுக்கோ விடியலுக்கோ வரும் கூட்டம் எப்படியும் உள்ளே வரும். சும்மா சுற்றிப்பார்த்து கவரும் நூலை வாங்கும் வாசகர்களில் ஒருசாரார் கண்டிப்பாக வாசலோடு சென்றுவிடுவார்கள்.வரும்வருடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை ஏழுமணிக்குள் முடிக்கும்படி அமைத்தாகவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

இந்த புத்தகக் கண்காட்சியில் மட்டுமல்ல பொதுவாகவே பபாசியின் கண்காட்சிகளில் எல்லாம் இப்போது கண்டுவரும் ஒரு முக்கியமான பிழை ஆங்கிலபதிப்பகங்களையும் குறுவட்டு வணிகங்களையும் அனுமதிப்பது. எல்லாமே அறிவியக்கம் சார்ந்தவை அல்லவா எனலாம். ஆனால் இந்தபுத்தகக் கண்காட்சி தமிழ் வாசிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு உருவானது. தமிழ் வாசிப்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது இது. இவ்வாறு ஆங்கிலபதிப்பகங்களையும் குறுவட்டுகளையும் அனுமதிப்பது அந்த மறுமலர்ச்சியை கடத்திக்கொண்டுசென்று அழிப்பதிலேயே முடியும்.

காரணம் தமிழ்மக்களின் மனநிலைதான். ஒருகோடிபேராவது வசிக்கும் சென்னையில் தமிழ்நூல்கள் அனைத்தும் கிடைக்கும் புத்தகக்கடை என்பது தி நகரில் உள்ள நியூ புக்லேண்ட்ஸ் என்ற சிறிய கடை மட்டுமே. ஆனால் ஆங்கில நூல்களை விற்கும் பெரும்கடைகள் பல உள்ளன. மாபெரும் குறுவட்டு கடைகள் உள்ளன. சென்னையில் ஆங்கிலநூல்களும் குறுவட்டுகளும் வாங்கப்படும் தொகையில் இருபதில் ஒருபங்கு தமிழ்நூல்களுக்கு வந்தாலே தமிழின் சூழலில் பெரும் மாற்றம் ஏற்படும்

ஹாரிபாட்டர் வரிசை நூல்கள் சாதாரணமாக சென்னையில் வருடம் ஐம்பதாயிரம் பிரதிகள் விற்கின்றன என்றார்கள். தமிழில் எந்த நூலுமே அப்படி விற்றதில்லை. என்ன காரணம் என்றால் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் பிள்ளைகளை ஆங்கிலம் வழி படிக்க வைக்கிறார்கள். ஆங்கிலம் வழிபடிப்பதை வாங்கும்வசதிகொண்ட உயர்நடுத்தர வர்க்கத்தினர் பெருமையாக நினைக்கிறார்கள். ஆங்கிலத்தில்தான் நல்ல நூல்கள் உள்ளன என நம்புகிறார்கள். வாசிக்கிறார்களோ இல்லையோ ஆங்கிலத்தில் வாங்குகிறார்கள். வாங்கிக் குவிக்கப்பட்ட ஹாரிபாட்டர் நாவல்களில் கால்வாசிகூட வாசிக்கப்பட்டிருக்காதென்றே நான் நினைக்கிறேன்.

அதேபோல தமிழ்மக்களுக்கு காட்சி ஊடகம் மீதான பிரேமை அதிகம். அதில்தான் அவர்களுக்கு ஒரு தொடக்கம் உள்ளது. ஒரு நூலை வாசிக்கும் மனப்பயிற்சி கொண்டவர்கள் சிலரே. ஒரு நூலும் குறுவட்டும் கண்ணில்பட்டால் குறுவட்டையே சாதாரணமாக தமிழனின் கை தேர்ந்தெடுக்கும். ஆகவே தமிழ்நூல் விற்பனை என்பது உண்மையில் ஆங்கிலநூல்களுக்கும் குறுவட்டுகளுக்கும் எதிரான ஒரு போர்.

புத்தகக் கண்காட்சி சென்ற காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களையும் குறுவட்டுகளையும் வாங்குபவர்களை தமிழ்நூல்களின் உலகுக்குக் கொண்டுவந்திருக்கிறது. சென்னை உயர் நடுத்தரர் சிலர் தமிழ்நூல்களை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இத்தனை தளங்களில் இவ்வளவு நூல்கள் தமிழில் உள்ளன என்ற சித்திரம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் ஓங்கவேண்டியிருக்கிறது

இந்நிலையில் இவ்வாறு ஆங்கிலப்பதிப்பகங்களை அனுமதிப்பது என்பது தமிழ்நூல்களுக்கு எதிரானதாகவே இருக்கும். பெரும்பாலான வருகையாளார்களுக்கு எந்த நூலை வாங்கவேண்டுமென்றும் முன் திட்டம் இல்லை. வேடிக்கை பார்க்கவந்து, தற்செயலாகக் கவர்ந்த ஒன்றை வாங்கி, அதனூடக உள்ளே நுழைபவர்களே அதிகம். ஆங்கிலநூல்களையும் குறுவட்டையும் கண்டால் அவர்களின் கை அங்கேதான் நீளும். அதற்குமேல் வாங்குமளவு பணத்துடனும் எவரும் வருவதில்லை.

மேலும் ’புத்தகக் கண்காட்சிக்கு போனேன். தமிழ்ப்புத்தகம் ஒண்ணும் சுரத்தா இல்லை. நாலஞ்சு இங்கிலீஷ் புக்ஸும் ஒரு சிடியும் வாங்கிட்டு வந்தேன்’ என பீத்திக்கொள்ளும் ஒரு மனநிலை உருவாயிற்றென்றால் புத்தகக் கண்காட்சியில் தமிழ்நூல்களை ஓரமாக ஒதுக்கிவிட நேரும். தமிழர்களின் டம்பம் எப்போதுமே ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மோகமாகவே வெளிப்படும் என்பதனால் அதற்கான வாய்ப்புகள் அதிகம். பப்பாசி சொந்த செலவில் சூனியம் வைக்கிறது.

ஆங்கில நூல்களுக்கான சர்வதேச கண்காட்சி ஒன்று தனியாக உருவாகுமென்றால் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் ஆங்கில நூல்கள் தமிழுக்கென இருக்கும் மிகச்சிறிய இந்த தளத்தை அழிக்க அனுமதிக்கக் கூடாது. பபாசியிடம் இதைப்பற்றி பத்ரி சேஷாத்ரி போன்றவர்கள் பேசவேண்டுமென நினைக்கிறேன்.

புத்தகக் கண்காட்சி பற்றி பேசியவர்கள் அதிகமும் சொன்ன இரு கருத்துக்கள் . ஒன்று, ’புத்தகக் கண்காட்சிக்குப் போய் புத்தகங்கள் வாங்குவது வீண் அலைச்சல். நாங்கள் புத்தகக் கடைகளுக்குச் சென்று ஆற அமர வாங்குவதையே விரும்புகிறோம்’ . இன்னொன்று, ‘வாங்கிய புத்தகங்களை வாசித்த பிறகு புதிதாகப் புத்தகம் வாங்கலாமென நினைக்கிறேன்’

முதலில் சொன்னது வெறும்பேச்சு மட்டுமே என நம் சூழலை அறிந்தவர்கள் சொல்லமுடியும். நான் எந்த தமிழ்ப்புத்தகக் கடையிலும் பத்துபேருக்குமேல் நின்று புத்தகங்கள் வாங்குவதை பார்த்ததே இல்லை. துணிக்கடைக்குச் செல்வதுபோல புத்தகக் கடைக்குக் கிளம்பிச் செல்லும் வழக்கமே நம்மிடம் இல்லை. போக எண்ணுபவர்கள் கூட ஏதேனும் காரணங்களால் ஒத்திப்போடுவதே இயல்பு.

’கடைசியாக எந்த புத்தகக் கடைக்குச் சென்று எந்த தமிழ்ப்புத்தகங்களை வாங்கினீர்கள்?’ என்று கேட்டதுமே ‘இனிமே போகணும்’ என்றுதான் பதில் சொல்கிறார்கள். புத்தகக் கடைகளுக்குச் செல்லும் வழக்கம் சிறுவயதிலேயே ஒரு பழக்கமாக ஆகவேண்டும். நம் பண்பாட்டுச்சூழலில் அது இல்லை. உள்ளே போய் நின்று விரிவாக வாசித்து புத்தகங்களை வாங்க ஏற்ற புத்தகக் கடைகள் சென்னையில்கூட இல்லை.

புத்தகக் கண்காட்சி என்பது ஒரு நிமித்தம். அதன் கோலாகலமே புத்தகங்களை நோக்கி நம்மை இழுக்கிறது. அங்கு செல்வதனால் மட்டுமே நாம் பல புத்தகங்களைப் பார்க்க நேர்கிறது. வாங்கவும் நேர்கிறது. புத்தகக் கண்காட்சியை தவிர்த்த்தால் அந்த வருடம் நாம் புத்தகங்களையே வாங்கப்போவதில்லை என்றுதான் பொருள்.

கண்காட்சியில் நெரிசலும் தூசியும் உண்டுதான். ஆனால் தமிழ்ப்புத்தகங்களை கடைகளில் வாங்கவேண்டுமென்றால் அதைவிட அதிக நெரிசலில் அதிக புழுக்கத்தில் திநகரிலோ பாண்டிபசாரிலோ அலைந்து சிறிய கடைகளில் பிதுங்கி நின்றுதான் வாங்கவேண்டும். ஒவ்வொரு கடையும் நகரின் ஒவ்வொரு சந்தில் இருக்கும்.

ஆகவே தமிழ்ப் புத்தகச் சூழல் பற்றி அறியாதவர்கள்தான் ஒரு கெத்துக்காக அந்த வசனத்தைச் சொல்கிறார்கள். அறிந்தவர்கள் இத்தனை பதிப்பகங்களை இத்தனை வசதியாக அணுகி புத்தகம் வாங்க சென்னை கண்காட்சியை விட்டால் வேறு இடமே இல்லை என்றுதான் சொல்வார்கள். கூட்டம் பிடிக்காதவர்கள் ஒரு மதியநேரத்தில் வந்தால் மிக ஓய்வாக மிக வசதியாக நூல்களை வாங்கமுடியும்.

அனைத்துக்கும் மேலாக இத்தனை நூல்களை ஒரே இடத்தில் பார்ப்பதென்பது தமிழ் அறிவியக்கத்தையே தூலமாக பார்ப்பதற்கு நிகர். அந்த பரவசம் ஒருவருக்கு இல்லையென்றால் அவருக்கு அறிவியக்கத்திலேயே ஈடுபாடில்லை என்றுதான் பொருள் . மாபெரும் புத்தகக் கடைகள் கொண்ட நாடுகளிலேயே புத்தகக் கண்காட்சிகள் நிகழ்வது இதனால்தான்

என்னைப்பொறுத்தவரை புத்தகக் கண்காட்சிகளில் சுற்றுவது ஒரு உக்கிரமான மனக்கிளர்ச்சியை அளிப்பதாகவே உள்ளது. விதவிதமான நூல்களினூடக செல்வது ஒரு கனவுபோல இருக்கும். வெறுமே தலைப்புகளை மட்டும் பார்ப்பதன் மூலம் எனக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்தப் பண்பாட்டுப் புரிதல் மதிப்பு மிக்கது.

’வாங்கிய நூல்களை வாசித்தபின்னர் புதிதாக வாங்கலாம்’ என்ற கூற்று சுஜாதா எங்கோ எழுதியதில் இருந்து பெற்றுக்கொண்டது. சுஜாதா அதை எழுதியது முதிய வயதில். அது அவருக்குச் சரி. ஆனால் ஒரு நல்ல வாசகன் என்ற முறையில் அதை ஒருபோதும் சிபாரிசு செய்ய மாட்டேன். படிப்படியாக வாசிப்பே இல்லாமலாகும் நிலைதான் அதனால் உருவாகும்.

வாசிப்பு ஆர்வம் மூலம் நூல்களை தேடுவது இன்றைய அவசரச்சூழலில் மிக அபூர்வம். நூல்கள்தான் வாசக ஆர்வத்தை தூண்டுகின்றன. கவரக்கூடிய அனைத்து நூல்களையும் முடிந்தவரை வாங்கி கைவசம் வைத்துக்கொள்வதே நல்ல வாசகனாவதற்கான அடிப்படை. நான் இன்றுவரை சந்தித்த நல்ல வாசகர்கள் அனைவருமே அப்படித்தான். எங்கும் நூல்கள் கண்ணில் படவேண்டும். அவை நம்மைச்சூழ்ந்திருந்து வாசி வாசி என்று கட்டாயப்படுத்தவேண்டும். அப்போதுதான் நாம் வாசித்துக்கொண்டே இருப்போம்

வாங்கிய நூல்களை அடுக்குகளில் வைப்பது ஆபத்தானது என்பது என் எண்ணம். ஒரே நூலை தொடர்ந்து வாசித்து முடித்து அதன்பின் அடுத்த நூலை எடுக்கலாம் என்பது அதைவிட ஆபத்தானது. காரணம் இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் மூளை உழைப்பு செய்பவர்கள். ஓய்வுநேரங்களில் களைத்த மூளையுடன் நாம் வந்து அமர்கிறோம். மூளையை இளைப்பாற்றும் எளிய கேளிக்கைகளை நோக்கி நம் ஆர்வம் செல்கிறது. மூளைக்கு மேலும் வேலைகொடுக்கும் வாசிப்பை தவிர்க்க மனம் உந்துகிறது.

ஆகவே ஒரு நூலை வாசிக்க விரும்பி நம் நூலக அடுக்குகளில் இருந்து நாம் தேடி எடுப்பது பெரும்பாலும் நிறைய ஓய்வுள்ள, கொஞ்சம் அலுப்பான நாட்களில் மட்டும்தான். அது அடிக்கடி நிகழ்வதில்லை. கையெட்டும் தூரத்தில் டிவி ரிமோட் இருக்கிறது. காத்திருக்கும் நூல்களை நாம் அதைவிட கையருகே வைத்திருக்கவேண்டியது இன்றைய அவசியம்

என்னைப்பொறுத்தவரை வீட்டிலும் அலுவலகத்திலும் நான் இருக்கச் சாத்தியமான எல்லா இடங்களிலும் நூல்களை வைத்திருக்கிறேன். இதோ கணிப்பொறி மேஜையைச்சுற்றி ஒரேபார்வையில் அசோகமித்திரன் முழுத்தொகுப்பு, ராமன்ராஜாவின் ’சிலிக்கான் கடவுள்’, சாந்திநாத தேசாயின் ’ஓம் நமோ’ , தரம்பாலின் ’காந்தியை அறிதல்’, A. B. Facey யின் ’A Fortunate Life’, Gabriel Josipovici எழுதிய ’What Ever Happened to Modernism?’ என பல நூல்கள். நானிருக்கும் மனநிலையைச் சார்ந்து எந்த நூலையும் எடுத்து படிப்பேன். ஒரேசமயம் பலநூல்களை படிப்பவர்களாகவே நல்ல வாசகர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள்.

இந்த புத்தகக் கண்காட்சி சார்ந்துதான் முதல்முறையாக விற்பனை பற்றிய விவாதங்கள் அதிகமாக நிகழ்ந்தன. காரணம் ’உலோகம்’ விற்பனை பற்றி பத்ரி சேஷாத்ரியும் பா.ராகவனும் எழுதிய வரிகள். என் நூல்களுக்கு சீரான ஒரு விற்பனை என்றுமுண்டு. நானறிந்தவரை மிகச்சிக்கலான கவிதை விவாதநூலான ’உள்ளுணர்வின் தடத்தில்’ கூட இரண்டு வருடங்களுக்குள் விற்று தீர்ந்திருக்கிறது. அதேசமயம் ஒரு வருடத்திற்கு ஒரிரு நூல்கள் அதிகமாக விற்கும். சென்ற வருடம் இன்றைய காந்தி. இவ்வருடம் உலோகமும் இன்றையகாந்தியும்.

ஆனால் அந்த விற்பனையில் ஓர் அளவு உண்டு. அது என் எழுத்திற்குச் சாத்தியமான வாசகர்களின் தரத்தின் அளவும்கூட. அந்த எல்லையை உலோகம் மீறியதனால்தான் விற்பனை விவாதமாக ஆகியது.அந்த விற்பனை ஒரு வணிகநிகழ்வு மட்டுமே. அதற்கு காரணம் கிழக்கின் வணிக உத்திகள் .வேகப்புனைவு என்ற வடிவம் இன்னொரு காரணம். இந்த கண்காட்சியில் அதிகம் விற்ற நாவல் அது என்று அறிந்தேன். பன்னிரண்டாம் நாளே 600 பிரதிகள் விற்று தீர்ந்து கடைசிநாட்களில் பிரதிகள் இல்லை.

2011 புத்தகக் கண்காட்சி நாஞ்சில்நாடனுக்குரியதென்பதில் ஐயமில்லை. ’நாஞ்சில் நாடனின் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுதி 2560 பிரதிகள் கண்காட்சியிலேயே விற்றுத் தீர்ந்தது ஒரு சரித்திர சாதனை. எந்த ஓர் இலக்கியவாதியின் புத்தகமும் இத்தனை வேகத்தில் இதுவரை விற்றதில்லை’ என்று பா.ராகவன் பதிவுசெய்கிறார்

நாஞ்சில்நாடன் பெற்ற வரவேற்புக்கு பல காரணங்கள். அவர் அனைவருக்கும் பிடித்தமானவர். தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்கும் போக்காலும் இணக்கமான மனநிலையாலும் ஏராளமான நண்பர்களைப் பெற்றிருக்கிறார். அவரது எழுத்து எப்போதும் சுவாரசியமானது. இன்னும் படைப்பூக்க அனல் அவியாதது. அனைத்துக்கும் மேலாக சமீபமாக அவர் விகடனில் எழுதியதன்மூலம் பெருவாரியாக அறியப் பட்டிருக்கிறார். சாகித்ய அக்காதமி விருதை ஒட்டி நக்கீரன் உட்பட எல்லா இதழ்களிலும் அவரது பேட்டிகள் வந்திருக்கின்றன. அவரை அறியாத வாசகன் இன்று இல்லை.

உதாசீனமான வாசிப்புப் பழக்கம் கொண்ட தமிழ்ப் பெரும்பான்மையினரைப் பொறுத்தவரை ஒருவர் இடைவெளியில்லாமல் பிரபல ஊடகங்கள் மூலம் கவனத்தில் இருந்து கொண்டிருப்பதுதான் அவர்கள் அந்த எழுத்தாளரை தேர்வுசெய்ய காரணமாக அமைகிறது.தமிழில் எந்த எழுத்தாளரை விடவும் ‘நீயா நானா’ கோபிநாத்தின் நூல்கள் விற்பதன் ரகசியம் அதுவே. ஆனால் இது உலகமெங்கும் இப்படித்தான். ஓப்ரா வின்ஃப்ரே ஓர் ஆசிரியரை சும்மா குறிப்பிட்டாலே அவரது நூல் விற்பனை உச்சத்துக்குச் செல்கிறது.

இந்த புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள் நன்றாக விற்றமைக்கும் சில மறைமுகக் காரணங்கள் உள்ளன. கமலஹாசன் சொல்லியிருக்காவிட்டால் ‘இன்றையகாந்தி’ இவ்வாறு விற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். ஆகவே இந்த விற்பனையை ஒரு வளர்ச்சியாக நான் பார்க்கவில்லை. இது ஒரு தற்காலிக கவன ஈர்ப்பு நிகழ்வுதான். அடுத்த வருடம் நாஞ்சில்நாடனின் நூல்கள் மீண்டும் சாதாரணமாக ஆகிவிடலாம். பத்துசதவீத வாசகர்கள் அதிகரித்திருப்பார்கள் அவ்வளவுதான்.

தரமான நூல்கள் நுகர்பொருட்கள் அல்ல. நுகர்பொருட்களுக்கான பயன்பாடு ஏற்கனவே சமூகத்தில் உள்ளது. வினியோகமும் விளம்பரமும் விலையும் ஒத்துழைத்தால் விற்பனை உறுதி. ஆனால் நூல்களுக்கான பயன்பாடு பண்பாடு சார்ந்தது. அந்நூல்களை வாசிக்கவும் ரசிக்கவும்கூடிய ஒரு பண்பாட்டுப்புலம் உருவாகாமல் எந்த உத்திகள் மூலமும் நூல்களை வாங்கவைக்க முடியாது. அது கல்வி, பொருளியல் வளர்ச்சிமூலம் மெதுவாகவே உருவாகி வரக்கூடிய ஒரு சமூக மாற்றம். இந்தப்புத்தகக் கண்காட்சிகளேகூட இன்று தமிழகத்தில் ஒரு பொருளியல் வளர்ச்சி உருவாகி மத்தியவர்க்கம் அதிரிகரித்திருப்பதன் விளைவுகளே. ஆகவே சட்டென்று அதீத எழுச்சிகள் ஏதும் நிகழ்வது சாத்தியமல்ல.

உதாரணம் எஸ்.ராமகிருஷ்ணன். அவரை தெரியாத வாசகர்கள் இன்றில்லை. சில வருடங்கள் அவர் விகடன் வழியாக வாசகர்களை சென்றடைந்துகொண்டே இருந்தார்.நானறிந்தவரை சுஜாதாவுக்குப் பின்னர் ராமகிருஷ்ணனின் நூல்கள்தான் உயிர்மையின் விற்பனையில் எப்போதும் முதலிடம். ஆனால் அவருக்கு இருக்கும் புகழை வைத்துப்பார்த்தால் அது மிகமிகக் குறைவுதான். விகடன் பிரசுரத்தில் அவரது நூல்களை வாங்கும் வாசகர் உயிர்மையில் ’துயிலை’ வாங்குவார் என்று சொல்லமுடியாது. அவருக்கு அந்நூலின் பயன்பாடு இன்னும் உருவாகியிருக்காது. அவர் அதை அறிவார். அவரது புகழ்பெற்ற தொடர்கள் விகடனில் வந்தபோதுகூட ’யாமம்’ வழக்கமான கதியிலேயே விற்றது.

சுஜாதாவும் வைரமுத்துவும் விகடன் குமுதம் மூலம் பல வருடங்கள் வாசகர்களுக்கு அறிந்த முகங்கள். தமிழின் கோடிக்கணக்கான வாசகர்களுக்கு அவர்கள் இருவரின் பெயர் மட்டுமே தெரியும். ஆகவே அவர்களை வாங்குபவர்கள் அதிகம். அப்படி வாங்குபவர்கள் அவர்களிடம் ஏற்கனவே இருந்துகொண்டிருக்கும் ரசனைக்கு உட்பட்டவர்களாக அவர்கள் இருப்பதனால் மேலும் வாங்குகிறார்கள். அந்த வாய்ப்பு ராமகிருஷ்ணனுக்கு இல்லை. அவரது நூல்கள் வாங்கப்பட்டால் மட்டும் போதாது, வாசிக்கப்படவும் வேண்டும். அந்த வாசகன் கொஞ்சம் வளர்ந்து முன்னால் வந்தாகவேண்டும்.

ஆனால் விகடனில் எழுதுவதன்மூலம் ராமகிருஷ்ணன் தன் வாசகர்களை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தபடியே இருக்கிறார். உபபாண்டவத்தை அவரே வெளியிட்டு அவரே விற்ற நாள் இல்லை இன்று. அது ஒரு வளர்ச்சியே. அப்படித்தான் வளர்ச்சி நிகழ்முடியும். இன்று விஷ்ணுபுரம் ஏதோ காரணங்களுக்காக அதிக பிரதிகள் செல்லும்போது அதை வாங்குபவர்களில் எத்தனைபேர் அதை வாசிக்கக்கூடிய பொறுமையும் பயிற்சியும் நேரமும் கொண்டவர்கள் என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. அதேசமயம் எப்படியோ அதை எடுப்பவர்களில் பத்துசதவீதம்பேர் அதன் வாசகர்களாகக்கூடும் என்றும் தோன்றுகிறது. அதன் வாசகர்கள் அனைவரும் அப்படி உருவானவர்களே.

என்னுடைய நூல்களுக்கு நிலையான ஒரு வாசகர்வட்டம் உள்ளது. கிட்டத்தட்ட எழுபதுநூல்கள் விற்பனையில் இருந்தாலும் அவை எல்லாமே சீராக விற்றுக்கொண்டிருக்கின்றன என்பதே ஆச்சரியமான விஷயம். அவற்றில் பெரும்பாலானவை இலக்கிய, தத்துவ விவாதங்கள். புனைகதைகள்கூட சிக்கலான அமைப்பு கொண்டவை, கவனமான வாசிப்பை கோருபவை. எந்த வாசகரும் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு அவற்றை வாசித்துவிடமுடியாது. தங்களை கலைத்துக்கொண்டு நகர்ந்து வந்துதான் என்னை வாசிக்கவேண்டியிருக்கும். அதற்கான உழைப்பை கொடுக்கவேண்டியிருக்கும்.

அதற்கு தயாராக உள்ள இந்த வாசகர்குழாமின் தரம் சென்ற நூறு வருடங்களில் எந்த தமிழிலக்கியவாதிக்கும் இருந்த வாசகர்களின் தரத்தை விட அதிகம் என்று நான் நினைக்கிறேன். இவர்களில் நான் நேரில் அறிந்த ஏறத்தாழ ஆயிரம் பேரை வைத்து இவர்கள்தான் தமிழ் அறிவுத்தளத்தின் மையத்தில் உள்ளவர்கள் என்று சொல்வேன். பல்வேறு அறிவுப்புலங்களில் செயல்படும் முதன்மையான ஆளுமைகள் அவர்கள். ஆம், இவர்களில் எப்படியும் நாலில் ஒருவர் என்னை நிராகரிப்பவர்கள். நாலில் ஒருவர் என்னிடம் பாதிக்குமேல் மாறுபடுபவர்கள். அதனாலென்ன?

தமிழ்ப்பண்பாட்டுத்தளத்தில் என்னுடைய பங்களிப்பென்பது இந்த வாசகர்சூழல்தான். இவர்களை நான் இருபதாண்டுக்காலமாக மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். இவர்களிடம் நான் ஓயாது பேசிக்கொண்டிருக்கிறேன். விவாதித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பேசுபொருட்கள் இலக்கியம்,அரசியல்,தத்துவம் , என்று விரிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு தளம் சார்ந்தும் எனக்கு தனி வாசகர்கள் இருக்கிறார்கள். ஒரு புதியநூல் அந்த தளம் சார்ந்த வாசகர்களை கொண்டுவருகிறது. சமீபத்தில் ஏராளமான காந்திய இயக்க வாசகர்களை.

வழக்கமாக புத்தகக் கண்காட்சி ஒன்று முடியும்போது ஒரு நூறு புதிய வாசகர்கள் உருவாகிறார்கள். என்னுடைய ஏதேனும் ஒரு நூலை வாசித்து குழம்பிப்போய் அல்லது எதிர்ப்புணர்வு கொண்டு அல்லது கேள்விகள் மிகுந்து அல்லது பரவசம் கொண்டு மேலும் உள்ளே நுழைபவர்கள். அவர்களில் சிலர் என்னிடம் தொடர்புகொள்கிறார்கள். விவாதிக்கவிரும்புகிறார்கள். அவர்களில் கணிசமானவர்களை நான் மெல்ல மெல்ல என் எழுத்துலகம் நோக்கி இழுத்துக்கொள்கிறேன்.

அதற்கு பல படிநிலைகள். அவர்கள் என் நடைக்கு பழகவேண்டும். இதழியல் நடைக்குப் பழகியவர்களுக்கு அது எளிய விஷயமல்ல. அவர்கள் என் தர்க்க முறைகளுக்கு பழகவேண்டும். இந்த கலைச்சொற்களும் தர்க்கங்களும் ஏற்கனவே நான் பேசிக்கொண்டிருப்பவற்றின் நீட்சிகள். அனைத்துக்கும் மேலாக அவர்களின் அந்தரங்க உலகை நான் அசைக்கையில், அவர்களின் நம்பிக்கைகளையும் அவர்கள் வழிபடும் மனிதர்களையும் நான் விமர்சிக்கையில் , அவர்கள் கொள்ளும் எரிச்சலை அவர்கள் வென்று என்னிடம் மானசீகமாக பேச ஆரம்பிக்கவேண்டும். அவர்களின் தன்னகங்காரமே அந்த எரிச்சலை உருவாக்குகிறது என்று அவர்கள் உணரும்போது அந்த தடை விலகுகிறது

அதன்பின் அவர்கள் எங்கிருந்தாலும் என்னிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆம், உலகம் முழுக்க அவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் என்னை ஏற்றோ மறுத்தோ உரையாடிக்கொண்டிருப்பவர்கள். அவர்களில் மிகச்சிலரே எனக்கு எழுதுகிறார்கள். அவர்களில் ஒருவரை கண்காட்சியில் நேரில் சந்தித்தேன். கைகளைப் பற்றிக்கொண்டு ‘நாம பேசிக்காத நாளே இல்லை. ஆன இப்பதான் ஆளை அறிமுகம் செஞ்சுக்கறேன்’ என்றார்

பதிப்பகங்கள்,நூல்கள்:கடிதம்

முந்தைய கட்டுரைபாளையில் ஒரு நூலகம்
அடுத்த கட்டுரைமெய்ஞானம் சில்லறை விற்பனை