ராஜ் கௌதமன் ‘கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக’- கடலூர் சீனு

_MG_7203

இராமலிங்க வள்ளலார்

மாற்றி வையகம் புதுமையுறச்செய்து ,மனிதர்கள்தம்மை அமரர்கள் ஆக்கவே

சி.சுப்பிரமணிய பாரதி.

மேற்கண்ட வரிகளை எழுதிய இந்த பாரதி ,வேறொரு இடத்தில்  எல்லோரும் அமரநிலை எய்தும் நன்னெறியை இந்தியா உலகினுக்கு அளிக்கும் என்று எழுதுகிறார் . உலகப்பண்பாடு எனும் கருதுகோள் முகிழ்ந்துவரும் சூழலில் ,உலக்குக்கு இந்தியா அளிக்கும் கொடை இதுவாக இருக்கும் என்பது பாரதியின் கனவு . அதாவது அவரது முன்னோடி சிதம்பரம் ராமலிங்கம்பிள்ளை எனும் வடலூர் வள்ளலார் கண்ட கனவின் நீட்சி . இன்றைய கவிஞர் இசையின் இப்பிறப்பு கவிதை தொடங்கி ,ஜெயகாந்தனனின் ஆளுமை உருவாக்கம் தொடர்ந்து ,பாரதியில் துவங்கும் [மனதில் உறுதி வேண்டும் ] நவீனத் தமிழ் இலக்கிய ஓட்டத்தில் , இவ்வழியில் ஆங்காங்கே  வள்ளலாரின் தாக்கம் உண்டு . ஜெயகாந்தனுக்குப் பிறகு, மரபை உதறி மேலெழுந்த நவீனத்துவ புனைவுகளால் சற்றே பின்வாங்கிய வள்ளலாரின் தாக்கம் ,நவீனத்துவத்துக்குப் பிறகான போக்குகளின் உரையாடல்களில் மீண்டும் எழுந்து வந்தார் . அந்த வகையில் வள்ளலார் குறித்த பொதுசமூகத்தின் கற்பனைகளால் உறைந்துவிட்ட  கதையாடல்களை கலைத்தடுக்கிய பிரேம் ரமேஷின் மூன்று பெர்னார்கள்  தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதையாக அமைந்தது . புனைவுக்கு வெளியே அருட்ப்பா மீதான பக்திப்பூவமான கற்பனைகளை கலைத்தடுக்கி  உரையாடலுக்கு வழிவகை செய்த நூலாக பா சரவணன் அவர்களின் அருட்பா மருட்பா விவாதம்  சார்ந்த ஆய்வு நூல் அமைந்தது . இந்த வரிசையில் சமூக நோக்கில் வள்ளலாரை அவரது படைப்புகளையும் களப்பணி சூழலையும் விமர்சனபூர்வமாக அணுகும் வேலையை செய்தது ராஜ் கௌதமன் அவர்களின் கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக  [ முதல் பதிப்பு .தமிழினி . 2001] எனும் விமர்சன நூல் .

 

 

இன்று பிரதானமாக இருக்கும் இரு வள்ளலார்களில் ஒருவர் பக்தர்கள் உருவாக்கி எடுத்த வள்ளலார் . இந்த வள்ளலார் பசித்திருக்கும் போது,அந்த சிவபெருமானே வந்து உணவு புகட்டினார் ,இந்த வள்ளல்ளார் மீது எதிரிகள் பாம்பை வீசும் போது,அந்த பாம்பு அப்படியே ஜோதிக்காக மாறி விடுகிறது , இந்த வள்ளலார் தொட்டளித்த திருநீறு பக்தர் கைக்கு வருகையில் பொன் துகளாக இருக்கிறது ,இந்த வள்ளல்ளார் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்குக்காக நீதிமன்றம் புகும்போது ,வள்ளலாரை கண்டு நீதிபதி உட்பட , பிராது கொடுத்தவரும் வக்கீல்களும் எழுந்து வணங்க ,அவர் மீதான வழக்கு விசாரணையே இன்றி தள்ளுபடி ஆகிறது . இவற்றை எல்லாம் ஓவியங்களாக வள்ளலார் ஏற்றிய அணையா அடுப்பு திகழும் வளாகத்தில் இன்றும் பார்க்கலாம் .  மற்றொரு வள்ளலார் மரபார்ந்த சைவர்களால்,மடங்களால் மறக்க விரும்பும் ,அல்லது மாற்றீடு செய்ய விரும்பப்படும் வள்ளலார். சில வருடங்கள் முன்பு ஒரு சிறிய குழு , வன்முறையாக வடலூரில் வள்ளலார் இயங்கிய இடங்கள் ஒன்றினில் , லிங்கம் ஒன்றினை பதிட்டை செய்து பூஜைகள் , பௌர்ணமி கிரிவலம் ,அன்று அன்னதானம் என்றெல்லாம் துவங்கியது ,இந்த இரண்டாவது வள்ளல்ளார் எதிர்ப்பாளர்களை முறியடித்து முதல் வள்ளலாரின் பக்தர்கள் வென்றது அன்றைய முக்கிய செய்தி . இந்த இரண்டு தரப்புக்கும் வெளியே நின்று,இவர்கள் உருவாக்கி நிலைநிறுத்த விரும்பும் கற்பிதங்களை கலைத்தடுக்கி  வள்ளலாரை விமர்சனபூர்வமாக அறிவு பூர்வமாக  அணுகி அறிய,துணை நிற்கும் மிக சொற்பமான நூல்களில் முக்கியமான நூல் ,ராஜ் கௌதமன் அவர்கள் எழுதிய இந்த நூல் .

 

 

ஏழு அத்யாயங்கள் கொண்ட இந்த இந்த நூல் நான்கு அலகுகளாக ,முதலாவது வள்ளலார் பணியாற்ற வந்த பத்தொம்பதாம் நூற்றாண்டில் தமிழ் நிலத்தில் நிலவிய சமூக சூழலின் குறிப்பிட்ட பகுதி .இரண்டாவது அருட்பாவின் பாடல்களில் வள்ளலாரின் கருத்து நிலை,உணர்வு நிலை இவற்றுக்கு அடிப்படை வகுத்துக் கொடுத்த , திருமூலர் ,மாணிக்கவாசகர் ,தாயுமானவர் இவர்களின் தாக்கம் . மூன்றாவது அருட்ப்பா பாடல்கள் வழியே துலங்கிவரும் வள்ளலாரின் ஆத்மீகமான வளர்ச்சி ,அதன் பயனாக அவரது கருத்துநிலைகள் மீதான மாற்றம் ,புறவயமாக வள்ளலாரின் ஆளுமை .நான்காவதாக சுத்த சன்மார்க்க சங்கத்தின் தோற்றமும் முடிவும்.  ஆகியவற்றை மையம் கொண்டது .  முதல் இயலின் துவக்கமே பத்தம்போதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிலவிய பஞ்சங்களின் கணக்கில்தான் துவங்குகிறது. சிறிதும் பெரிதுமாக நூற்றாண்டின் துவக்கம் தொட்டு முடிவு வரை முப்பத்திஇரண்டு பஞ்சங்கள் [அதில் வள்ளலார் வாழ்ந்து மறைந்த காலத்தில் மட்டும் ஐந்து பஞ்சங்கள் ,அதன் பிறகு பல கோரமான பஞ்சங்கள் கண்டது தமிழ் நிலம்]  இந்த சூழல் உருவாக்கிய புலம்பெயர்தல்கள் வழியே உருவாக துவங்கிய மாற்றங்கள் , ஆங்கிலேயர்கள் வழியே  நவீன கல்வி உள்ளே நுழைந்து உருவாக்கிய தாக்கம் ,மரபார்ந்த கல்வி அது என்னவாக எவர் வசம் இருந்தது ,அதை அடைய ஆகும் செலவீனங்கள் , அன்று வலிமை கொண்டிருந்த சைவமடங்களின் ஆதரிப்பில் செழித்த வித்துவான்கள் , இதுவே இவர்களின் இறுதி காலம் என்பதால் இதன் மறுதலையாக டாம்பீகம் கொண்ட வெற்று ஜமீன்களில் சிக்கி ,அவர்களின் அரசவை புலவராக சிக்கி சீரழியும் புலவர்கள் , புதிய கல்வி வழியே ,புதிய அரசில் உத்தியோகத்தில் அமர்பவர்கள் ,புதிய அரசில் ஒப்பந்தங்கள் வழியே புதிய வணிகத்தில் ஈடுபடுவோர் , புதிதாக வந்த அச்சுக் கலை வழியே , ஆதீனங்கள் வழங்கும் பெரும் ஊதியம் கொண்டு அவர்களின் கோவில் ஸ்தல புராணங்களை எழுதி ,சம்பாத்தியத்தில் மரியாதையில் முன்னணியில் நிற்கும் வித்துவான்கள் , இவர்களுக்கு வெளியே எளிய மக்கள் வரை சென்று சேர்ந்து ,புரவலர்களால் புறக்கப்ப்பட்டு ,செல்வத்தோடும் புகழோடும் வாழ்ந்த பல கதாகாலாட்சேப ஆளுமைகள் என அக் காலக்கட்டத்தில் வள்ளலார் நிற்கும் சூழலை மிக விரிவாக பல்வேறு மூல ஆதார நூல்களின் துணை கொண்டு ஒரு கதை சொல்லி போல சொல்லிச்செல்கிறார் ராஜ் கௌதமன் .

 

 

அந்தக்காலத்தின் எந்த வித்துவான்களுக்கும் ஈடுசொல்லத்தக்க வகையில்தான் வள்ளலாரும் இருந்திருக்கிறார் . ஆனால் எந்த ஆதீனங்களையும் சாராமல் ,அரசின் எந்த பணியையும் சாராமல் ,தான் கொண்ட அறிவை பணத்துக்காக அன்றி , கற்பித்தல் எனும் நிலைக்காக மட்டும் பகிர்ந்து கொள்பவராக இருந்திருக்கிறார் . மாணவர்கள் மத்தியில் குறள் வகுப்பு எடுப்பதை முதன்மை வழக்கமாக கொண்டிருக்கிறார் . பதிமூன்று வயதிலேயே பாடல்கள் புனையும் தேர்ச்சி அடைந்திருக்கிறார்  . தமிழ் அளவுக்கே சமஸ்க்ருதத்திலும் வல்லமை கொண்டவராக விளங்கி இருக்கிறார் . மூலிகை மருத்துவம் கற்றிருக்கிறார் .  தனம் தரும் கல்வி கையில் இருந்தும் ,அந்தக் கல்வியை தனம் கொண்டு வந்து தரும் கருவியாக பார்க்காமல் , ஈடேற்றத்துக்கு துணை செய்யும் ஒன்றாக பயின்றிருக்கிறார் .  வள்ளலார் காலத்தின் சமூக சூழலை விளக்கி ,அதில் வள்ளலார் ஒட்டாத ஒருவராக ,லௌகீக வாழ்வுக்கு அப்பால் ,விலகி நிற்கும் ஒருவராக தனது வாழ்வை துவங்குவதை   நூலாசிரியர் ஒரு விரிவான பகைப்புலத்தின் பின்னணயில் வைத்து முதல் அலகில் அறிமுகம் செய்கிறார் .

 

 

கோடையிலே இளைப்பாற்றிக்கொள்ளும் வகைகிடைத்த 

குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்தத கனியே 

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே 

உகந்ததன்நீர்  இடைமலர்ந்த்த சுகந்த மணமலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே 

மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே .

 

வள்ளலாரின் இந்தப் பாடலுக்கும் ,திருநாவுக்கரசர் எழுதிய ‘மாசில் வீணையும் ‘பாடலுக்கும் இடையே இருக்கும் ஒப்புமை ,இறை அனுபவத்தை இயற்க்கை அனுபவத்துடன் உவமிப்பது மட்டுமன்று , சொல் தேர்வு , உணர்வு நிலை ஒற்றுமை இவையும் கூடியது .இது போன்ற உதாரணங்கள் வழியே , மாணிக்கவாசகர் ,தாயுமானவர் இவர்கள் பாடல்கள் வள்ளலார் பாடல்களுக்குள்  மரபார்ந்த வகையில் வெளிப்பாட்டு முறையில் எங்கெங்கே தொழில்பட்டிருக்கிறது, ஒன்றே குலம் ஒருவனே தேவன்  என்ற திருமூலரின் குரல் , சித்தாந்தம் வேதாந்தம் இவற்றுக்கு இடையே உறவாடிய தாயுமானவர் குரல் ,இவையெல்லாம் வள்ளலார் பாடல்களில் கருத்துநிலையில் என்ன பாதிப்பை அளித்திருக்கிறது , குறிப்பாக முப்பத்தி இரண்டு கண்ணிகள் கொண்ட [4915 -4946 வரையிலான ] வள்ளல்ளார் பாடல் முற்றிலும் அகவயமான யோக நிலையின் வெற்றிகள் சார்ந்த வெளிப்பாடு , பரிபாஷையில் எவ்வாறு தொழில்படுகிறது , ஜோதி எனும் கருத்துருவாக்கம் வள்ளலார் பாடல்களில் ,மரபில் எந்த விதையில் இருந்து முளைத்து அருட்ப்பாவில் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது ,இந்த ஒற்றுமைகளுக்கு வெளியே வள்ளலார் பாடல்களை,இவற்றிலிருந்து தனித்து காட்டும் , தனித்துவம் கொள்ள வைக்கும் சித்தர் மரபுகூறு இவற்றில் அடிக்கோடிடுகிறது இந்த நூலின் இரண்டாம் அலகு.

 

 

பன்னிரண்டு வயது துவங்கி ஐம்பது வயதுவரை  வள்ளலார் பாடிய பாடல்கள் வழியே , புறவயமாக சமூகம் சார்ந்தும் ,அகவயமாக ஆத்மீகம் சார்ந்தும் அவர் கொண்ட கருத்துக்களின் உணர்வு நிலைகளின்  மாற்றங்கள் ,ஒரு தாவலாக நிகழ்ந்த மாற்றங்கள் , வளர்ச்சி ,நம்பிக்கை ,பரவசம் இவை அருட்பாவில் துலங்கி வந்த விதம் ,நாணயத்தின் மறுபக்கமாக  புற வாழ்வில் ஒரு ஆளுமையாக வள்ளலார் அடைந்த தவிப்புகள் ,தனிமை , எழுச்சி ,அவர் கொண்ட தூக்கமின்மை வழியே கொண்ட தளர்ச்சி ,பயங்கள் கோபம் கண்டிப்பு இவற்றை அணுகி உடைத்துப்  பார்க்கிறது மூன்றாவது அலகு.

 

 

வள்ளலார் களப்பணியாற்ற வடலூரில் சபை அமைக்கிறார் .அங்கே துவங்கும் வள்ளலாரின் பயணம் யாழ்பாணம் ஆறுமுகநாவலர் உடன் பிரிக்கவொண்ணா வகையில் கலந்த ஒன்று .நவீன கல்வி உள்ளே நுழைகையில் ,இங்குள்ள மரபுகளை கட்டிக்காக்க அன்று எழுந்த ஆசிரியர்களில் முக்கியமானவர் ஆறுமுக நாவலர் . அவரது கல்வி சேவைகள் வழியே இங்குள்ள ஆதீனம் வழியே நாவலர் எனும் பட்டம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் . கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகள் கொண்டவர் . அன்று சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கி ,அங்கே பெரிய பல்கலைக்கழகத்துக்கு இணையான கல்விச் சாலை அமைத்து சைவ மரபு சார்ந்த கல்வியை பரப்பும் எண்ணம் கொண்டிருந்தவர் .இருபது வயதிலேயே தன்னை சிவன் ஆட்கொண்டு விட்டதாக அறிவித்தவர் .இவர் பார்வையில் சிறு வயதிலேயே சிவன் தன்னை ஆட்கொண்டதாக சொன்ன வள்ளலார் , சாதி சமய வேறுபாடுகளை உதற சொன்ன வள்ளலார் .மரபார்ந்த சைவ கருத்தியலின் அடித்தளத்தையே அசைத்து , லிங்கம் எனும் உருவத்தையே உதறி ,தூய ஜோதியாக இறைவனை கட்டமைத்த வள்ளலார் , பசிப்பிணி போக்க சாதி மத பேதமற்று அனைவருக்கும் அன்னம் பாலிக்க விரும்பி ,அனைத்துக்கும் மேலாக பிறவா இரவா யாக்கை பெரியோனாகிய சிவனையே சவாலுக்கு அழைக்கும் வண்ணம் மரணமிலாப் பெருவாழ்வை ஒரு முழக்கமென முன்வைத்து முன் சென்ற வள்ளலார் , என்னவாக தோற்றம் அளித்திருப்பார் ? கிறிஸ்துவம் கூட அல்ல ,வள்ளலார்த்தான் நாவலர் கண்முன் நிற்கும் மூல முதல் சைவ துரோகியாக தெரிந்திருப்பார் . நாவலர் ,டேனிஷ் மிஷனரிகளின் அவதூறுப் பிரச்சாரம் ,தான் துவங்கிய சபையில் ,தனது அனுமதி இன்றி ,அதன் சொத்துக்களை திருடி செல்லும் நிர்வாகிகள் , மரணமிலாப் பெருவாழ்வு எனும் ஆத்மீக லட்சியம் , பசிப்பிணி போக்குதல் ,கொலை புலை தவிர்த்தல் ,சாதி சமய பேதமற்ற சன்மார்க்க நெறி நிற்கும் ஒரு சமுதாயம் எனும் சமூக லட்சியம் , வள்ளலார் கண்ட கனவு அவரை அலைக்கழித்த குரூர யதார்த்தம் இவற்றில் நிலைகொள்கிறது இந்த நூலின் நான்காம் அலகு.

 

 

உண்மையில் இத்தனை பஞ்சங்களிலும் நேரடியாக செத்து மடிந்து மண்ணோடு மண்ணான கோடி ஜனம் எவர் என்று சொல்லவே தேவை இல்லை . வயிற்றில் எரியும் பசி எனும் அந்தத் தீயில் துவங்கி , சுத்த வெளி நிறைக்கும் அருட்பெருஞ்சோதி வரை ஒரு பாதையை போட்டு பார்க்க முனைந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி அவர் காலத்தில் என்னவாக இருந்தார் ,என்னவாக புரிந்து கொள்ளப்பட்டார்,என்னவாக எதிர்க்கொள்ளப்பட்டார் ,அப்படி நிகழ்வதின் பின்னுள்ள சமூக காரணிகள் என்னென்ன என்பதை நோக்கிய வினாக்களுக்கான பாதைகளை ,சகல திசைகளிலும் திறந்து வைக்கிறது இந்த விமர்சன  நூல் . எந்த லட்சியத்தை முன்வைத்து வள்ளலார் சபையை துவங்குகிராரோ ,அதை துவங்கிய நாள் தொட்டு ,சூழ இருக்கும் அனைத்தின் பிடிகளும் வள்ளலாரின் கையை விட்டு நழுவுகிறது ,மிஷனரிக்களின் அவதூறு பிரச்சாரம் ,மரபார்ந்த மடங்களின் , சாதி சைவர்களின் எதிர்ப்பு , சபையின் நிர்வாகிகளே சபையின் சொத்துக்களை கொள்ளையடிப்பது , புறத்திலிருந்து வேறு திருடர்கள் சபைக்குள் நுழைந்து திருடுவது ,சபைக்குள்ளேயே நிகழத் துவங்கிவிட்ட சாதிச் சண்டைகள்  அனைத்தும் கூடி வள்ளலாரை மனம் கசக்க வைக்கின்றன . இறுதியாக தைப்பூச நாளொன்றில் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டார் . [ சபை அனைத்தயும் பூட்டி சாவியையும் வள்ளலாரே எடுத்து சென்று விடுகிறார் .வள்ளலார் மறைந்து ஒரு ஆண்டுக்குப்பிறகே சபை மீண்டும் திறக்கப்படுகிறது என்பது பெரும்பாலும் கவனம் குவிக்கப்படாத வரலாற்று நிகழ்வு] .பின்பு எங்கே போகிறார் ?  வள்ளலாரின் மறைவு குறித்து அன்று வள்ளலார் உடன் இருந்த ஊரன் அடிகள் , அன்று தென்னார்க்காட்டில் இருந்து இந்த நிகழ்வுகள் உடன் இருந்த தயானந்தன் பிரான்சிஸ் ,முப்பது ஆண்டுகள் கழித்து மறைமலை அடிகள் சொன்னது இவற்றை அப்படியே தருகிறார் நூலாசிரியர் .

 

 

இந்த நூல் கொண்ட தனித்தன்மை ஆசிரியர் வசமிருக்கும் விருப்பு வெறுப்பற்ற தன்மை . புதிய நோக்கில் வள்ளலாரை அணுகிப்பாக்க விழைந்ததாக முன்னுரையில் குறிப்பிடும் ஆசிரியர்,அதற்க்கு கையாண்ட நோக்கு விமர்சன நோக்கு . வெறுப்பின்பாற்பட்ட விமர்சனம் அல்ல , ஆக்கப்பூர்வம் நோக்கிய விமர்சனம் .குறிப்பாக இன்றைய வள்ளலார் பக்தர்களை நோக்கி நூலாசிரியர் வினவுகிறார் ‘நூறாண்டுகளாக அணையாத அடுப்பு என்று சொல்லி பெருமிதம் அடைவதில் என்ன இருக்கிறது ? நூறாண்டுகளாக அணையாத அடுப்பு ,அதற்க்கான காரணிகள் இன்று சமூகத்தில் தீர்ந்து விட்டது.இனி இந்த அடுப்பு அணையட்டும் எனும் நிலையை உருவாக்குவதானே வள்ளலார் பக்தர்கள் செய்ய வேண்டியது ‘ என்கிறார் . இந்த நூல் வள்ளலார் எனும் சமூக நிகழ்வில் அறிவுக்கு பொருத்தாமானவற்றை மட்டுமே எடுத்து விவாதிக்கிறது அதே சமயம்  முழுதான உண்மை ‘அறிவால் ‘மட்டுமே அடையத்தக்க ஒன்று என நான் வரையறை செய்யவில்லை எனவும் ராஜ் கெளதம் இந்த நூலுக்குள் வள்ளலாரின் மரணமிலாப்பெருவாழ்வு எனும் கருத்தை விவாதிக்கப்புக நேர்கையில் திட்டவட்டமாகவே சொல்கிறார் .

 

 

ஒரு முறை  மார்கழி மாத  அதிகாலை  வள்ளலார் சபையில் ஜோதி தரிசனம் நிகழும் சன்னிதானத்தில் அமர்ந்திருந்தேன் . இரண்டு முதிய பிச்சைக்காரர்களும் ,வாசலில் சுருண்டு படுத்துக்கிடந்தத நாயும் தவிர யாருமில்லை . ஒரு முதியவர் வலது கையில் ஒரு சிறுவனை வழி நடத்தைய படியும் ,இடது கையில் வழக்கத்தை விட தடிமனும் நீள,அகலமும் கொண்ட புத்தகத்துடன் சன்னதி நுழைந்து ஒரு ஓரத்தில் அமர்ந்தார் . சிறுவனை அமரவைத்து ,அவன் முன்னாள் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கத்தை திறந்து ,சிறுவனின் வலது கையை எடுத்து ,சுட்டுவிரலை பிரித்து புத்தக வரி ஒன்றின் மேல் வைத்தார் .

 

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி 

தனிப்பெரும் கருணை  அருட்பெருஞ் ஜோதி 

 

கணீர் என துவங்கினார் . விழியற்ற சிறுவன் ப்ரைலி புள்ளிகளை வருடி வருடி அறியத் துவங்கினான் .  புலரியின் முதல் ஒளி கொண்டு ,குளிர் ஒளி கொள்ளத் துவங்கியது , தரை பரப்பு , தனிப்பெரும் கருணையை தனது அரிச்சுவடியாக கொண்டு அறிவைத் துவங்கும் சிறுவன் , அந்தக உலகில் இருந்து அருட்பெறும் ஜோதியை நோக்கி வாழ்வை துவங்கும் பாலகன் . தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை என மனத்துக்குள் அரற்றினேன் .இன்று மூட பக்தர்கள்  சகா மருந்து சொல்லும் நூலாகவும் ,மண்ணை பொன்னாக்கும் ரசவாதத்தை பரிபாஷையில் பொதிந்து வைத்திருக்கும் நூலாகவும் எண்ணி கட்டிக்காக்கும் மடமைக்குள் , சாகா வரம் கொண்டு மரணமிலாப்பெருவாழ்வு உண்டு என்று சுட்டி நிற்கப் போவது ,வள்ளல் பெருமானின் வாழ்வின் சாரமென திரண்டு வந்து நிற்கும் அந்த தனிப்பெரும் கருணைதான் .அன்று அந்தரங்கமாக உணர்ந்த அந்த உண்மையை ,அதே உண்மையை அறிவு பூர்வமான விமர்சனம் வழியே வந்து அடைய செய்வதே இந்த முக்கியமான நூலின் தனித்தன்மை .

முந்தைய கட்டுரைகல்லூரியில்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-77