வெறுப்பின் வலை -கடிதங்கள்

reboot23

சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு…

சினிமா பற்றி நீங்கள் கேட்டவை

கீழ்மையின் சொற்கள்

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

வெறுப்பும் சமுக ஊடகங்களும் நமது வக்கிரம் பற்றிய சூர்யாவின் கட்டுரையில் அவரின் ஆதங்கம் புரிகிறது. அவர் வாய் திறக்காத ஓன்று என்னவென்றால் இதற்க்கு மூலமாய் இருப்பது,இருந்தது பிரபலங்கள், பிரபல அரசியல் கட்சிகள், அனைத்து மத தீவிரவாத கும்பல்கள், ஜாதி வெறி பிடித்த கும்பல்கள் சங்கங்கள்,வியாபார கார்பரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் ஐ.டி செல்கள்தான். தன்னை தனது கொள்கையை புகழ் பாடவும் எதிரி என நினைப்பவர்களை அவர்களின் கோத்திரங்களில் இருந்து கட்டில் வரைக்கும் திட்டி அசிங்க படுத்தவும் உண்டாக்கி வைத்திருப்பதுதான் இந்த தகவல் தொழில்நுட்ப செல்கள்.

 

அரசியல் ரீதியாக இதை முன்னோக்கி எடுத்தது முதலில் பாரதீய ஜனதா கட்சிதான். திக்விஜய் சிங் மற்றும் ஒரு வயதான காங்கிரஸ் தலைவர் அந்தரங்கமாய் இருப்பதை ஊடகங்களில் வெளியிட்டது.அதன் பிறகுதான் அந்தரங்கத்திற்க்கான சந்தை அனைத்து கட்சிகளுக்கும் தெரியவந்தது.பிறகு காங்கிரஸ், சமிபத்தில் திவ்யா ஸ்பந்தனா என்னும் நடிகையின் தலைமையில் இருந்த காங்கிரஸ் ஐ.டி செல் பிரதமர் மோடியை விமரிசித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்துகள் எவ்வளவு வக்கிரம் என்பதை இப்போதும் பார்க்கலாம். அதற்காக அவரை ஐ.டி செல்லில் இருந்தே தூக்கி விட்டார்கள். தமிழகத்தை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் வெளிப்படையாய் இப்படி நடந்தது கிடையாது. ஆனால் அனைத்து ஜாதி சங்கங்கள், இந்து,கிருஸ்துவ, முஸ்லிம் தீவிரவாத கும்பல்கள் வைத்திருக்கும் ஐ.டி செல்களும் தங்களின் ஜாதி,மத புனிதத்தை காப்பாற்ற எந்த கொடுரத்திர்க்கும் சென்றார்கள். நெற்றியில் குங்குமம் வைத்த பெண்ணை முஸ்லிம் தொப்பி அணிந்த ஆண் புணர்வது போலவும், புர்கா அணிந்த பெண்ணை நெற்றியில் குங்குமம் வைத்த ஆண் புனர்வதுபோலவும்,சிலுவை அணிந்த பெண்ணை மற்ற இரு மதத்தினர் அடையாளங்களோடு புணர்வது போலவும். மற்ற இருமதத்தினரின் அடையாளங்களோடு இருக்கும் பெண்ணை சிலுவை அணிந்த ஆண் புனர்வதுபோலவும் இருக்கும் படங்களை வெளியிட்டார்கள். இது என்ன மத மனநிலை என்று அதிர்ச்சியோடு கவனித்திருக்கிறேன். அவர்கள்தான் எந்த எல்லைக்கும் போகலாம் என்பதை முதலில் இணையம் வந்த உடனே கற்றுகொடுத்தார்கள்.

 

இன்று இந்த வக்கிரம் ஜாதி, மத அடையாளங்களை தாண்டி பாலியல் வறட்சியாய், மனநோயாய் பீறிடுகிறது. ஆனால் எனது அனுபவத்தில் இதில் நூற்றுக்கு ஐம்பது பேர் வேறு அடையாளங்களில் உலவும் நடுத்தர வயது, வர்க்க பெண்கள்தான். முக்கியமாய் இல்லத்து அரசிகள். தங்களின் வக்கிரத்திற்கு முதலில் இவர்கள் கொண்டுவருவது மதத்தை கடவுள்களை. காரணம் கேட்டால் அந்த கடவுள்களின் அந்தரங்க லீலைகளிலே உரையாடல் ஆரம்பிக்கும். பிறகு நமக்கே தெரியாத விசயங்களை நம்மிடம் கொட்டி கேட்டு கலங்கடிப்பார்கள்.சமூக ஊடகங்களில் உலவும் பெண்களில் நூற்றுக்கு எண்பது சதவீதத்தினர் மனநோயாளிகளே.

 

மரபை இழந்த இந்திய, கொரியன் சமூகத்திலும், சரியான மரபே இல்லாத அமெரிக்க சமூகத்திலும் தான் இந்த வக்கிரம் அதிகம். இது இனி எப்படித்தான் என்பதை தவிர வேற ஒன்றும் இல்லை

 

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்

 

அன்புள்ள ஜெ

 

வலைத்தளங்களில் பதிவுகள் இட்டுக்கொண்டிருந்தவன் நான். முதலில் எளிமையான இலக்கியச்செய்திகளைத்தான் போட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் ஐந்தாறுபேர் கூட அதைக் கவனிப்பதில்லை என்று தெரிந்தது. பின்னர் ஒருமுறை நிர்பயா விஷயத்தில் மிகக்கடுமையான எதிர்ப்பு ஒன்றைப்போட்டேன். பயங்கரமான எதிர்வினைகள். நாநூறு லைக்ஸ். அது எனக்கு பற்றிக்கொண்டது. அதன்பிறகு அதேபோல பதிவுகளைப் போட ஆரம்பித்தேன். ஏராளமான லைக்ஸ். நிறைய நண்பர்கள். நீங்கள் சொல்வதுபோல பிரபலப்பதிவர் ஆனேன்.

 

இதில் ஒருசில ‘டெம்ப்ளேட்’களைக் கண்டுபிடித்தேன். சமகாலப்பிரச்சினை ஒன்றை எடுத்துக்கொண்டு புரட்சியாளன் மனிதாபிமானி மாதிரி உச்சகட்ட வெறியுடன் பதிவு போடுவது. “இப்படி ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது இவன்களுக்கு இலக்கியம் ஒரு கேடா.த்த்தூ!” இந்தமாதிரி ஒன்று. “இதுக்கு இப்ப கொதிப்பவர்கள் அப்ப அதுக்கு எங்க போனார்கள்? செத்தா போயிருந்தார்கள்?” இந்தமாதிரி ஒன்று. “எங்கேபோனார்கள் நம் கலாச்சாரவாதிகள்?” என்பது இன்னொரு வகை. அப்புறம் வழக்கம்போல “மனிதனாய் இருப்பதற்கே வெட்கப்படுகிறேன்” “கண்டதுண்டமாக வெட்டி காக்காய்க்குப்போடவேண்டும்” “இவன்களெல்லாம் எந்த ஓட்டைவழியாகப்பொறந்தார்கள்?” இப்படி பல மாதிரிகள். நாளும் ஒன்றொன்றாக எழுதிக்கொண்டே  இருக்கவேண்டியதுதான்

 

எனக்கு ரத்த அழுத்தம் வந்தது. எனக்கு வயது முப்பத்தெட்டுதான். பல டாக்டர்களிடம் காட்டியபின் ஒரு ஹோமியோ டாக்டரிடம்  போனேன். அவர்தான் மனசைப்பற்றிப் பேசினார். அவரிடம் ஒருநாள் இதைப்பற்றிப் பேசினேன். நான் பொய்யான ஒரு போதையில் இருக்கிறேன் என்று சொன்னார். ஒரு பத்துநாள் ஒதுங்கிப்பாருங்கள், உங்களை மறந்துவிடுவார்கள். இவர்களுக்காகவா உங்கள் மனதை அழித்துக்கொள்கிறீர்கள் என்று கேட்டார். அப்படியே தலைமுழுகினேன். ஆறுமாதம் பெரிய அவஸ்தை. எல்லாரும் என்னை மறந்துவிட்டார்கள். உலகமே என்னைக் கைவிட்டுவிட்டது. எனக்கு யாருமே இல்லை. நான் மறைந்தே போய்விட்டேன். இப்படியெல்லாம் கற்பனை செய்து கொந்தளித்தேன். பலமுறை மீண்டும் உள்ளேபோய் கடைசிநிமிடத்தில் வெளியே வந்தேன்.

 

அதற்குப்பதிலாக ஒருவருடத்தில் ஐம்பதுநூல்களை வாசிப்பது என்ற வழக்கத்தை மேற்கொண்டேன். ஆரம்பத்தில் கஷ்டமாகவே இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போய்விட்டேன். என் வாசிப்பு பெரும்பாலும் ஆன்மிகநூல்களும் பயண நூல்களும்தான். கொஞ்சம் பயணமும் செய்ய ஆரம்பித்தேன். முழுமையாகவே மீண்டுவிட்டேன். இன்றைக்கு நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று சேர்ந்து பயணம்செய்யும் நண்பர்களின் ஒரு பெரிய குழு உள்ளது. பயணச்செய்திகளை பரிமாறிக்கொள்கிறோம். பல இடங்களில் சந்திக்கிறோம். கிட்டத்தட்ட நூறுபேர். வரும் அர்த்தகும்பமேளாவில் பத்துநாட்கள் அலகாபாதில் இருக்க திட்டமிட்டிருக்கிறோம்

 

இதை எழுதவேண்டுமென்று தோன்றியது

 

கே

 

ஜெ,

 

அநியாயம் ,அதற்குள் சர்க்கார் அடி தடி எங்கோ பழங்காலத்திலிருந்து தூரத்தில் எங்கோ கேட்ட பெயரை நினைவுக்கு கொண்டு வரும் ஆழத்துக்கு சென்று விட்டது .இப்போதுதான் ஒரு தமாஷ் நினைவில் எழுந்து ,இப்போது சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் சிரித்து புரைக்கேறி விட்டத்து .

 

அதாகப்பட்டத்து எங்கெல்லாம் ஜெயமோகன் சார்ந்து அவரை எதிர்த்து புரட்சி வெடிக்கும் சூழல் நிலவிக்கொண்டு இருந்ததோ அங்கெல்லாம் சென்று பின்னூட்டத்தில் யமுனா ராஜேந்திரன் ஜனவரி மாதம் தான் கொண்டு வரப்போகும்  ‘ஜெயமோகன் இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்’ எனும் நூலை முன் மொழிந்து கொண்டிருந்தார் . ஒவ்வொரு அறிவிப்பின் கீழும் தவறாமல் ‘பிரமாதம் தோழர் .வந்ததும் சொல்லுங்க வச்சி செஞ்சிரலாம் ‘எனும் கமென்ட் .

 

வெறுப்பை உமிழ அந்த வெறுப்பு சார்ந்த , ஆதார நூல் எதையும் வாசித்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பது கூட தெரிதாத ஒரு மசத்தோழர் , வெறுமனே வசை பாட எவனும் ஐநூறு பக்க நூலை வாசிக்கமாட்டான் என்பதை கூட அறிய இயலாத பேக்குத் தோழர் ஒருவர் தமிழில் உலவச் சாத்தியம் என்பதை அதை வாசித்திருக்கா விட்டால் நிச்சயம் நம்பி இருக்க மாட்டேன் .

 

கூடவே வேறொன்று ,  தேடியத்தில் பிரேம் முகநூல் பக்கம் வந்தது . உங்களது இன்றைய காந்தி நூலை புரட்டி ஆங்காங்கே எழுத்துக்கூட்டி வாசித்து இருப்பார் போல .  அம்பேத்கரை நீங்கள் அவதூறு செய்திருக்கிறார்கள் . அது ஈ வே ரா அல்ல வெ ரா இது கூட இந்தாளுக்கு தெரியல என இந்த நூலின் மாபெரும் ஓட்டைகளை பத்து வரி எழுதி இருந்தார் .

 

மகாத்மா காந்தியை சுட்டுவிட்ட விஷயத்தை விரைவில் யாராவது இவர் கவனத்துக்கு கொண்டு வந்தால் நல்லது :)

 

கடலூர் சீனு

 

 

முந்தைய கட்டுரைராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்
அடுத்த கட்டுரைலக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள்