வாக்கும் தாரையும்

somnathpur-temple

சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு…
சினிமா பற்றி நீங்கள் கேட்டவை
கீழ்மையின் சொற்கள்

ஜெ,

வசவையே ஆயுதமாகக் கொண்டு தொடர்ந்து எல்லாவிதமான விழுமியங்களையும் அடித்து நொறுக்கினால் என்ன நிகழும் என்பதை தமிழகம் கண்டது. அதுவே இப்போது அமெரிக்காவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருமை நிலைக்கு சென்றுவிட்டது. இந்த நிலையை தடுப்பதற்கு ஏற்படுத்தி வைக்கப்பட்ட அனைத்து அரண்களும்(checks and balances) அதீத ஜனநாயகத்தையே ஆயுதமாக்கி(primary elections) தாக்கும் லும்பன்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வாய்மூடி கிடக்கின்றன அல்லது ஓடி ஒளிந்து கொள்கின்றன.

பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்.

ராஜேஷ் கோவிந்தராஜன்

***

அன்புள்ள ராஜேஷ்,

இத்தகைய சூழல் இன்று உலகமெங்குமே உருவாகிவிட்டிருக்கிறது என நினைக்கிறேன். அது உலகமெங்கும் ‘மக்கள்’ தங்கள் கருத்துக்களை பரப்ப இணையம் வாய்ப்பளித்ததனாலா என்ற ஐயம் எனக்கு உள்ளது. மக்களுக்குத் தேவையானவற்றை அளிப்பதற்குப் பதிலாக மக்களைத் தூண்டிவிடும் செய்தியூடகங்கள்  அதற்கான முன்னோட்டமாக அமைந்தன.

இன்றையசூழலில் கூட பிடிவாதமாக நிதானமாக, நடுநிலையான, கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருப்பதே ஒரே வழி என தோன்றுகிறது. பெரும்பாலான நாடுகளில் போருக்கோ உள்நாட்டுக்கலவரத்துக்கோ முந்தைய சூழல்களில்தான் இத்தகைய உச்சகட்ட இருமுனைக் கெடுபிடி நிலவுகிறது.  நம்பிக்கையின் சமரசத்தின் குரல் ஒன்றே அதற்கான வழி. தோல்வியடைந்தாலும் அதுவன்றி வேறுவழி இல்லை

ஹளபீடிலும் சோம்நாத்பூரிலும் உள்ள சரஸ்வதி கையில் அமுதகலமும் மின்படையும் கொண்டிருக்கிறாள். சொல் என்பது அவற்றுக்கு நடுவே உள்ள நிகர்நிலை

ஜெ

dara

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நெல்லையில் சந்தித்தோம், நான் டார்த்தீனியம் வாசித்துவிட்டு எழுதிய கடிதத்தின் மூலம் என்னை, ஊர் பெயருடன் நினைவு வைத்திருந்தமை ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியயையும் அளித்தது. பின்னர் இரவு உரையாடலிலும், மறுநாள் பயணத்திலும் உடன் இருந்தேன் ஆனால் ஒரு வார்த்தை பேசவில்லை(தயக்கம்). கோவையில் மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிட்டும் என நினைக்கிறன்.

என் தொழில் சிறிது மூளை உழைப்பை கோருவது, அதன் கூட இலக்கியமும் சேர்ந்து மூளை உழைப்பு அதிகரித்த சமயம்(நான் ஒரு முழு சோம்பேறி) முகநூல் மிகவும் தொந்தரவாக மாற நான் முகநூலில் இருந்து வெளிவந்தேன், மீண்டும் செல்லாமல் இருக்க கணக்கை அழித்து விட்டேன்(1 வருடம் முன்பு). நான் முகநூலில் இருக்கும் போது உங்கள் மீதுள்ள வன்மத்தை கவனித்திருக்கிறேன். நான் பெரும்பாலும் இந்த வம்புகளில் பங்கெடுத்து கிடையாது. உங்கள் வாசகர்கள் சிறிய முகமூடியுடனே (நான் ஜெயமோகனை வாசிக்கிறேன் தான் ஆனால்) அங்கு பங்கேற்பார்கள், அது ஒரு தற்காப்பு தான். “நான் ஜெயமோகனை வாசிக்கிறேன் தான் ஆனால்” இந்த ஆனால் நான் ஜெயமோகன் அடிமை (இன்னும் பல வார்த்தைகள் அங்கு உலவும், நினைவில்லை) இல்லை என்பதை குறிக்கும்,

ஆனாலும் கொஞ்சநேரத்தில் உங்கள் வாசகர்கள் அங்கு இருக்க முடியாமல் ஓடி விடுவார்கள், எதிர் தரப்பிடம் பேசி ஜெயிக்க முடியாது, உண்மையில் இவர்களிடம் பேசவே முடியாது (ஒரு ஆங்கிலம் அறியாத சீன பயணியிடம் கூட பேசிவிடலாம்). இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒன்றின் அல்லது பலவற்றின் அடிமைகள். சுய சிந்தனை அற்றவர்கள், அதனால் ஏதேனும் ஒரு தட்டையான கருத்துக்கு, அரசியலுக்கு அடிமையாய் இருப்பார்கள். சமூக வலைத்தளங்களில் வரும்போது தன்னை சுதந்திர சிந்தனையானலாக(நான் எவனையும் மதிக்கமாட்டேண்டா) காட்ட முயல்வார்கள். உங்கள் வாசகர்கள் இங்கு உங்கள் அடிமைகள் என்று வசை பாடுபடுவார்கள்.

இவர்களுக்கு பணிவிற்கும், அடிமைத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாது, அவர்கள் ஏதோ ஒருவகையில் அடிமைகளாகவே வாழ்பவர்கள். தன் அகத்தை சீண்டி தன்னை தானே உணர செய்து தன்னை மேம்படுத்திய உங்களை வாசகன் ஆசிரியராக காண்கிறான், மாணவனாகவே தன்னை உணர்கிறான் அது இயல்பாக அவனிடம் பணிவாக வெளிப்படும். இந்த உணர்வை எந்த வகையிலும் உணராத ஒருவன் அதனை அடிமைத்தனம் என்கிறான். இதில் முற்போக்கு அறிவிலிகளே அதிகம், பின்பு அரசியல், மதம், இலக்கியம் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இந்த கடிதம் எழுத காரணம் உங்கள் தளத்தில் சர்க்கார் குறித்து உங்கள் வாசகர்கள் எழுதி வெளிவந்த கடிதங்கள் உண்டாக்கிய சலிப்பு. சர்க்கார் பிரச்சினை இந்த மேற்சொன்ன எல்லா தரப்புக்கும் எத்தகைய கொண்டாட்டமாக இருந்திருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது. நான் சர்க்கார் பிரச்சனையை உங்கள் தளம் வாசித்த அறிந்து கொண்டேன், உங்கள் வாசகர்கள் இந்த கும்பலிடம் சிக்கி மனவேதனை அடைந்துள்ளார்கள். நானும் முகநூலில் இருந்திருந்தால் உங்களுக்கு இத்தகைய கடிதம் அனுப்பிருப்பேன். இதை தாண்டி செல்வதே ஒரே வழி, ஆனால் என் விருப்பத்திற்குரிய ஆசிரியர் சீண்டப்படும் போது அதை தாண்டி செல்வது அத்தனை எளிமை இல்லை(எனக்கு வெறும் கணிதம் சொல்லி கொடுத்த சக்திவேல் சாரை நண்பர்கள் என் முன்னால் அவச்சொல் பேச தயங்குவார்கள்).

என்னுடைய கேள்வி, இதனை எவ்வாறு எதிர்கொள்வது? எவ்வாறு தாண்டி செல்வது?

நன்றி,
அருள், கொச்சி.

***

அன்புள்ள அருள்

கொச்சியிலிருந்து நெல்லைக்கு வந்திருக்கிறீர்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது

இந்தவகையான சூழல் எவரை சோர்வுறச் செய்கிறது, அல்லது எதிர்நிலைகளை நோக்கித் தள்ளுகிறது? தான் செய்வதென்ன, தன் இலக்கு என்ன என்று தெளிவில்லாதவர்களைத்தான். தன்னை இன்னவிதமாக முன்வைக்கவேண்டும் என்று தெளிவுள்ளவர்கள் சிறிய மனத்தொந்தரவுகளுடன் இதைக் கடந்துசென்றுவிடலாம்.

முரண்படுதல் என்பது பெரிய வார்த்தை. ஒர் இலக்கியவாதியுடனான நம் முரண்பாடு நம்முடைய கருத்துக்களால் மட்டுமே நிகழவேண்டும். ஆணவத்தாலோ தாழ்வுணர்ச்சியாலோ நிகழக்கூடாது. நாம் கொண்டிருக்கும் சாதி, மத, கட்சிப் பற்றுகளால் நிகழக்கூடாது. அந்நிலையில் இழப்பு நமக்குத்தான்.

நாம் இங்கே கற்கவே வந்துள்ளோம், கண்டடைவதொன்றே நம் இலக்கு என்னும் தெளிவிருந்தால் இவற்றை எளிதில் கடந்துசென்றுவிடலாம். விஷ்ணுபுரம் நண்பர்கூட்டத்தைப் பொறுத்தவரை ஒரு விதியையே கொண்டுள்ளோம். இலக்கியவிவாதம் முரண்பாடு எல்லாமே இரண்டாவதாகத்தான். உள்ளக்கூடி மகிழ்தலே முதன்மையானது. மகிழ்ச்சி இல்லாத கல்வி கல்வியே அல்ல. பௌத்த மரபில் மகிழ்ச்சிக்கும் கல்விக்கும் ஒரே தெய்வம்தான் -தாராதேவி

ஜெ

முந்தைய கட்டுரைஆனந்தியின் அப்பா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழர்களின் வரலாறு இருண்டகாலமா?