வங்காளத்தில் திருமதி.அனிதா அக்னிஹோத்ரி
ஆங்கிலத்தில் – திரு.அருணிவா சின்ஹா
தமிழில் சா.ராம்குமார்.
விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு சிறப்புவிருந்தினராக வருகைதரும் வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய கதை
வீட்டிற்கு திரும்பியவுடன் நேராக உணவு மேசைக்கு சென்றான். அருகே இருந்த நீர்குழாயை திறந்துவிட்டு சோப்பு கலவையைக் கொண்டு கையை திரும்ப திரும்பக் கழுவினான். அவன் மனைவி ஸ்மிதா இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த சோப்புக் கலவையை வாங்கிவந்திருந்தாள். இதுதான் கைகழுவுவதற்கு சரியான முறை என்று கூறினாள். ஸ்மிதா இன்று காலை சென்றுவிட்டாள்-சோப்புக் கலவை பாதிதான் இருந்தது. திரும்பத் திரும்பக் கைகழுவும் இந்த பழக்கம் ஓராண்டிற்கு முன்பிருந்து அவனுக்கு தொடங்கியது. பார்க்கும்போது துருத்திக் கொண்டு இருப்பதால், கண்சமிக்ஞையில் இதைத் தவிர்க்க உத்தரவிடுவாள் ஸ்மிதா. இப்போது அவள் இல்லாததால் வேண்டிய அளவுக்கு கைகழுவிக் கொள்ளலாம்.
சப்-இன்ஸ்பெக்டர் காஃபூர் கான் கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்பு இறந்துபோனார். சற்றே முதியவர். கொஞ்சம் பெருத்த உடலுடன், நரைத்த மீசை கொண்டு வலம்வருவார். தலைமை கான்ஸ்டபிளாக பல ஆண்டுகள் வேலை பார்த்தவர். குற்றம் என்று ஒன்றும் இல்லாத அந்த இடத்தில் பணியில் இருந்து பல ஆண்டுகள் கழித்து உதவி-ஆய்வாளராக பணி உயர்வு பெற்றிருந்தார்.அந்த மாவட்டத்தில் பல மைல்கள் பயணம் செய்தால் கூட அடர்ந்த காடுகள், இடையிடையே தளிர்களும் பூக்களும் விளையாடும் பள்ளத்தாக்குகள், வானம் விரிந்த பூமி என்பதைத் தாண்டி மனிதர்களை பார்ப்பது அரிது. கொடிய வறுமை, பள்ளிகள் மருத்துவமனைகள் இல்லாத அரசாங்கம், எப்போதாவது வரும் மின்சாரம், இவை தான் அந்த இடத்தின் இயல்பு. மாவட்டத் தலைநகரில் கூட மின்சாரத் தட்டுப்பாடு உச்சத்தில் இருந்தது. இரவில் கிராமங்களில் தீவிரவாத அமைப்புகள் மக்களை மூளைச்சலவை செய்து வருவதாக உளவுத்துறை அடிக்கடி ரகசிய செய்திகளை மட்டும் அனுப்பிக் கொண்டிருந்தது.
சிறுவர் சிறுமியருக்கு பணத்தையும், விளையாட்டுப் பொருட்களையும், அமைப்புசார் புத்தகங்களையும், கையடக்க அச்சுப்பிரதிகளையும் கொடுத்தனர். விரைவில் அவர்களை தங்களுடன் சேர்க்க திட்டமிருப்பதாகவும் தகவல்கள் வந்தன. அந்த அச்சுப்பிரதிகளும் உளவுத்துறை செய்திகளும் காவல் நிலையத்தில் இருக்கும் மேசையில் உறங்கின. யாரும் அவற்றை வாசித்திருக்கவில்லை. சிவாஜி அங்கு வந்து பணியில் சேரும் வரை அதுதான் நிலைமை. அப்போதெல்லாம் அவனுக்கும் நேரம் போதவில்லை. மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஒருவாரம் முன்புதான் அங்கு வந்திருந்தான். அப்படி வந்த சேர்ந்தபோதுதான் சாலையில் புதைக்கப்பட்டிருந்த கன்னிவெடி வெடித்து தில்டா காவல் நிலையத்தில் பணியில் இருந்த காஃபூர் கானும் இரு கான்ஸ்டபிள்களும் உயிர் இழந்தனர். இரு கான்ஸ்டபிள்களின் முகங்களும் சிதையுண்டு, அவர்களின் உடல்கள் அருகில் இருந்த பங்களாவிற்கு பக்கவாட்டில் தூக்கி எறியப்பட்டிருந்தன. அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. சிவாஜி சம்பவ இடத்திற்கு வந்தவுடன் பார்த்தது கானின் உடல்தான். மதியநேர வெயிலில் அவரின் உடல் கைகள் விரித்த நிலையில் கிடந்தது.
அந்த இடத்தில் அவரின் உடல் மட்டுமே சற்றேனும் நிம்மதியை அளிப்பதாக இருந்தது. ஜீப்பின் பாகங்களும் உடல் பாகங்களும் கலந்து சிதறிக் கிடந்தன.கானை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் சிவாஜி தனது கான்ஸ்டபிள்களுடன் அவனுக்கு துணையாக வந்த ஜீப்பில் ஏறிக் கொண்டு சென்றான். எதிர்பார்த்திராதபோது நடக்கும் தாக்குதல் போல அவர் உடலில் இருந்து இரத்தம் பீய்ச்சி அடித்தது. அது அவன் கைகளை சிவப்பாக்கியது. கானின் முதுகில் அவ்வளவு பெரிய காயம் ஏற்ப்பட்டிருப்பதை யாரும் கவனிக்கவில்லை.
அன்று மதிய உணவு மாலைவரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஸ்மிதாவின் வற்புறுத்தலின் பெயரில் காய்கறிச் சாறும் இரு சப்பாத்திகளும் சாப்பிட்டான். சாப்பிட அமர்ந்திருந்தபோது கூட கைகளில் இன்னும் இரத்தமும், இரத்த வாடையும் நிரம்பியிருப்பதாக உணர்ந்தான். உடனே எழுந்து பாத்ரூமில் சோப்பு போட்டு கைகழுவினான். அன்று முதல் இந்த பழக்கம் தொடங்கியிருந்தது. குண்டுவெடிப்பு, காயம், மரணம் என்ற செய்தி கேட்கும்போதெல்லாம் கைகழுவ வேண்டும் என்று உணர்வு அவனை ஆட்கொண்டது. ஓ.சி.டி வந்துவிட்டதா என்று கூட நினைத்தான்.
இதற்கு முன் அவன் வேறு ஒரு மாவட்டத்தில் கூடுதல் கண்காணிப்பாளராக நான்கு ஆண்டுகள் பணியில் இருந்தான். மாவட்ட கண்காணிப்பாளராக ஏற்றம் பெற்றால் மாநிலத் தலைநகரில் இருந்து சற்றே விலகி செல்ல வேண்டியதிருக்கும். மாவட்டத்தில் ஒருவருக்கு கீழ் பணி செய்வதில் இருக்கும் சுவாரசியமின்மை அவனை உறுத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த மாற்றம் அவனுக்கு கிடைத்தது. உத்தரவு வந்த அன்று இரவு முன் எப்போதும் இல்லாத மாதிரி நேரம் கடந்து வீட்டிற்கு சென்று உறங்கிக் கொண்டிருந்த அவன் மனைவியை கட்டி அணைத்து அழுத்தமாக முத்தமிட்டான். புதிய பணியில் சேரும் முன்பு, தில்லிக்கு சென்று இருவரின் பெற்றோரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று அவனும் மனைவியிம் கலவிக்கும் உறக்கத்திற்கும் மத்தியில் பயணத்தை திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலையில் உள்துறை அமைச்சகத்திடமிருந்து ஆணை வந்தது. சிவாஜி ஆச்சரியத்துடன் ஆணையை பார்த்து மகிழ்ந்தான். உள்துறைச் செயலரைக் காண சென்றபோது அவனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பளிங்கு போல் இருந்த பீங்கான் கோப்பையில் தேனீர் வழங்கப்பட்டது. செயலருடன் ஐ.ஜி யும் இருந்தார்.
‘இவன் தான் அந்த இளஞ்சிங்கம்’ என்று அறிமுகப்படுத்தினார் செயலர். மேலும், ‘இவனுக்கு பெயர் கூட சிவாஜி’. இதை கேட்டவுடன் சிவாஜி பெரும் அதிர்ச்சியடைந்தான். வீரத்தைப் பற்றிய பேச்சுக்களால் திடீரென்று மனம் துவண்ட சிவாஜியிடம் செயலர் மாவட்டத்தில் அவனுக்குத் தேவையான அனைத்தையும் செய்ய அரசு முழு ஒத்துழைப்பளிக்கும் என்றார்.
விடுப்பு பற்றிய எண்ணங்களை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு அடுத்த நாளே ஸ்மிதாவும் துலிகாவும் அந்த நிச்சயமற்ற பயணத்தை அவனுடன் துவக்கினர். அந்த இடத்தை பற்றி தன் நணபர்களிடமும் பிற அதிகாரிகளிடமும் பேசித் தெரிந்து கொண்டிருந்தான். மாவட்டத்தில் இருக்கும் பதற்றமான சூழலையும் அறிந்திருந்தான். தன் செயல்திறனுக்காகவோ, தன் பெயரில் இருக்கும் வீரத்திற்காகவோ தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதையும் பலியாடாகவே செல்கிறான் என்பதையும் பயணத்தின்போது நினைக்காமல் கடக்க முயன்றான்.
அந்த இடம் மலைகளால் சூழப்பட்டிருந்தது. நடுவில் ஒரு நதி. பழைய மாவட்டத்தில் இருந்து புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. தலைமையிடம் என்பது பத்தாண்டுகளுக்கு முன்பு தான் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தலைமையிடத்திற்கான கட்டிடங்களும் ஆட்களும் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. மாநில தலை நகரத்தில் இருந்து பன்னிரெண்டு மணி நேர ரயில் பயணம், அதை தொடர்ந்து சிறிது நேரம் கார்ப்பயணம் என வந்து சேர வேண்டும். சாலை வழி என்றால் சுமாரான சாலைகளில் கிட்டத்தட்ட பதினெட்டு முதல் இருபது மணி நேர பயணம். வெய்யில் காலத்தில் அத்தனை துன்பமில்லை எனினும் குளிர்காலம் கூடுதலாக குளிர்ந்தது. காடுவெட்டும் கும்பல் மரங்களை வெட்டி சாய்த்திருந்தாலும் இன்னும் காடுகள் இருந்தன. மழைக்காலமும் குறைவு என்பதால் மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தானாக வளர்ந்து நின்றன.
துலிகாவிற்கு மூன்று வயதுதான். முன்பு இருந்த நகரத்தில் சிறார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் கற்பிக்கப்படவில்லை. இங்கு வீட்டிலேயே அந்த பாடங்களை நடத்தலாம். வீட்டை சுற்றி இருந்த எழில் மிகுந்த சூழல் கற்பிக்காதது ஒன்றும் இல்லை. அங்கிருந்த நிலக்காட்சிகள் அத்தனை அழகாக இருந்தன. ஸ்மிதா திருமணத்திற்கு பிறகு முனைவர் ஆய்வுக்கு விண்ணப்பித்திருந்தாள். ஆனால் ஆய்வு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இன்னும் களப்பணி தொடங்கியிருக்கவில்லை. இந்த இடத்திற்கு வருவதைப்பற்றி அவளுக்கு எந்த பதற்றமும் இருக்கவில்லை. ஒர் ஆர்வம்தான் இருந்தது. களப்பணிக்கு ஏற்ற இடமாக கூட இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அங்கு சென்று சேர்ந்தபின்புதான் அந்த இடத்தின் வெறுமை அவர்களின் வாழ்க்கையையும் சிவாஜியின் பணியையும் ஆட்கொண்டதை உணர முடிந்தது. அந்த மாவட்டத்திற்கு இன்னும் நிரந்தர கலக்டர் கூட நியமிக்கப்படவில்லை. அந்த இடத்திற்கு யாரும் வரவில்லை, வரவும் விருப்பப்படவில்லை. அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை, ஏராளமான அரசுப் பணியிடங்கள் காலியாகவே இருந்தன. அனைத்து துறைகளிலும், காவல் உட்பட, அதிகாரிப்பதவிகள் காலியாக இருந்தன. அங்கு பணி செய்வதற்கு சலுகைகளும் கூடுதல் சம்பளமும் கொடுத்தபோதும் யாரும் வரவில்லை. அங்கு பணியில் இருப்பவர்கள் அனைவரும் பல வருடங்களாக அங்கேயே பணியிட மாற்றம் இன்றி இருப்பவர்கள். யாரும் பணியிட மாற்றம் ஏற்று இங்கு வராததால் அங்கேயே அவர்கள் எந்த மாற்றமும் இல்லாமல் சிக்கிக்கொண்டிருந்தார்கள்.
சிவாஜி கடுமையாக உழைத்தான். ஊர் ஊராக சென்று மக்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். தன்னுடன் பணி செய்தவர்களின் திறனை அதிகரிக்க பல முயற்சிகள் மேற்கொண்டான். புதிய ஆயுதங்களை பெற்றான். இருப்பினும் ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு பெரிய சோர்வு அவனை அழுத்தி உட்காரவைத்தது. தன் சுற்றுப்பாதையில் இருந்த தூக்கி எறியப்பட்டு ககனவெளியின் முடிவில்லா சூனியத்தில் மூழ்குவது போல உணர்ந்தான். காஃபூர் கானின் மறைவிற்கு பின் ரோந்து பணிக்கும் காவலுக்கும் கூடுதல் ஆட்களை கேட்டான். பல கதவுகளை தட்டிய பிறகு, மூன்று மாதங்கள் கழிந்து மூன்று கம்பெனி படைகள் வந்தன. அவர்களுக்கு அந்த இடம் மிக அன்னியமாக இருந்தது. காடுகள், மலைகள், அந்த மக்களின் வாழ்விடங்கள் எதுவும் பிடிபடவில்லை. பல மாதங்களாக உறங்கி, எந்த நோக்கும் இல்லாமல் சுற்றித்திரிந்து, மலேரியாவால் அடிக்கடி பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட மனமுடைந்து அவர்களும் வெளியேறினர். சிவாஜியும் அந்த மாவட்டத்தில் பணிசெய்யும் பிறரை போல் மாறிக்கொண்டிருந்தான். எதிர்காலம் என்பது அருகில் இருக்கவில்லை. அவனுக்கு மாற்றாக யாரும் வருவார்களா என்று கூட தெரியாமல் தவித்தான். அவ்வாறாக தைரியத்துக்கும் தியாகத்துக்கும் பெயர் போனவனானான் இந்த சிவாஜி.
கோடை முடிந்து இலையுதிர் காலம் தொடங்கியிருந்தது. நதியின் கரையில் புதிய மலர்கள் பூத்துக் குலுங்கின. மஞ்சள் நிற உண்ணிச்செடி பூக்கள் இரவெல்லாம் கண்விழித்து வெளிச்சம் தந்தன. இளம்பிறை இரவில் தோன்றி தன் வர்ணங்களை மாற்றிக் கொண்டிருந்தது. வீட்டின் முன் அமர்ந்து இதை தினமும் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்மிதா. சில நேரம் துலிகாவை மடியில் வைத்து பார்த்துக் கொண்டிருப்பாள். அக்காட்சிகள் யாவும் அவளை சற்றும் தொடவில்லை. உருவங்களை மட்டும் பிரதிபலிக்கும் கண்ணாடியை போல அமர்ந்திருந்தாள். சிவாஜி இன்னும் அலுவலகத்தில்தான் இருந்தானா இல்லை வேறு எங்கும் சென்றுவிட்டானா? பலமுறை சொல்லியிருக்கிறாள், எங்கு சென்றாலும் வெளிச்சம் இருக்கும்போதே வந்துவிட வேண்டும் என்று. மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். ‘ஆமா…அப்படியே பகல்ல மட்டும் பாதுகாப்பா?’ என்று நமட்டு சிரிப்புடன் பதிலளித்தான் சிவாஜி. அந்த சிரிப்பை பார்த்து நடுங்காமல் என்ன செய்வது? துலிகாவை அனுப்ப இங்கு ஒரு பள்ளி இல்லை. அப்படியே இருந்தாலும் அனுப்பியிருக்க போவதில்லை. வீட்டிலும் அவளுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க முடியவில்லை. துலிகாவுக்கான புத்தகங்களும் விளையாட்டு சாமான்களும் அழகழகான உடைகளும் ஸ்மிதாவின் நல்ல புடவைகளைப் போல அலமாரியில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. அதை எல்லாம் அணிய வேண்டிய எந்த தருணமும் அங்கு வாய்க்கவில்லை. அங்கு வாய்த்தவை பதற்றமும் அடங்காத பயமும் மட்டுமே. அவள் மனதில் மகிழ்ச்சியோ நிம்மதியோ இருக்கவில்லை. உணவுமேசை மேல் போடப்பட்டிருந்த துணியை கூட உள்ளே யாரேனும் அமர்ந்திருக்கக் கூடும் என்ற பயத்தில் அதை அவள் முழுவதுமாக தரையை தொடும் அளவு இறக்கிவிடுவதில்லை. இரவு உறங்குவதற்கு முன்பு அறையை முழுவதும் ஒருமுறை சோதனை செய்துவிட்டுத் தான் உறங்கினாள். அவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஓ.சி.டி இருப்பது போல தோன்றியது. செய்த ஒவ்வொரு செயலையும் திரும்பத் திரும்ப சோதித்தனர்.
அந்த கட்டிடம் ஆய்வு மாளிகையாக இருந்தது. மாவட்டமாக அப்பகுதியை மாற்றிய பின்னர் கண்காணிப்பாளருக்கு என ஒதுக்கப்பட்டது. வீட்டின் முகப்புக்கு நேராக இருந்த வரவேற்பறையின் இரண்டு பக்கங்களிலும் இரு அறைகள். அடர்த்தியான சாளரத் திரைகள், சிறிய ஜன்னல்கள் என ஒரு அடைப்பட்ட உணர்வு இருந்து கொண்டே இருந்தது
.
வீட்டில் இரண்டு மூன்று பழங்குடிகள் சமையலுக்கும் சுத்தம் செய்வதற்காகவும் அமர்த்தப்பட்டனர். சிவாஜியின் அலுவலகத்தில் இருந்து ஒரு வயதான பெண்ணை துலிகாவை பார்த்துக் கொள்வதற்காக அனுப்பிவைத்தனர். ஆனால் ஸ்மிதா துலிகாவை அவர் அருகில் கூட அனுமதிக்கவில்லை. இருப்பினும் அதையே ஒரு எதிர்மறையாக எண்ணி அவர்கள் ஏதோ செய்துவிடக் கூடும் என்று பயத்தினால் அவரிடம் எதையாவது பேசி சிரித்துக் கொண்டிருப்பாள். அனைத்து உரையாடலிலும் அவர்களிடம் மிகுந்த கவனத்துடன் இருந்தாள். எப்படியும் தீவிரவாதிகளின் ஏதாவதொரு சதிதிட்டத்தை அவர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அப்பாவித்தனமாக திட்டமிட்டாள்.
சூனியத்தில் கழுத்துவரை மூழ்கியும் சிவாஜியும் ஸ்மிதாவும் எப்படியோ இரவில் சாப்பிடும்போது சிரித்துக் கொள்வதை நிறுத்தவில்லை. விழித்திருந்த சமயங்களில் துலிகாவும் அவர்களுடன் சேர்ந்து கொள்வாள். ஸ்மிதா பணியாட்களுடன் சிரித்துப் பேசும் தன் திட்டத்தை சொல்லும்போது சிவாஜி சிரித்தான்.
“என்னப்பா திட்டம் இது? சிறுபிள்ளைத்தனமாக இருக்கு? அவங்கெல்லாம் பாவம்பா. ரொம்ப கஷடப்படறவங்க. ஏதோ கொஞ்ச சம்பளத்துக்கு இங்க வர்றவங்க. எங்க கிட்டயும் அடி வாங்கனும், அவங்க கிட்டயும் அடி வாங்கனும். அவங்க மவுனமா இருக்கனும்னு நினைக்கிறவங்க. அவங்கள நீ பேசவெக்க நினைக்காத. நிறைய பார்த்துட்டேன். என்னை நம்பு” என்றான்
ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு உறங்கினர். துலிகாவை தனிப் படுக்கையில் உறங்க கூட ஸ்மிதாவின் மனம் இடமளிக்கவில்லை. ஸ்மிதாவும் சிவாஜியும் அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை இங்கு வந்தவுடன் புதிப்பித்து கொண்டனர். ஆனால் தீண்டலுக்கான விருப்பம் மறைந்துவிட்டிருந்தது. பயத்தினால் மட்டுமே ஒருவரை ஒருவர் விடாமல் பிடித்துக்கொண்டனர்.
வீட்டின் முகப்பை தொடர்ந்து அமைந்திருந்த அந்த பரந்த புல்வெளி துளிர்விட்டிருந்த மரங்களை தாங்கிப்பிடித்து நிலாவின் வெளிச்சத்தில் அற்புதமான அழகை தூவியது. அந்த மண்ணும் காடும் ஸ்மிதா எதிர்ப்பார்த்தது போலத்தான் இருந்தம. அவற்றின் அடங்கா தாகம்தான் அங்கிருந்த மற்ற அனைத்தையும் விழுங்கிவிட்டிருந்தது.
காஃபூர் கான் இறந்த நான்கு மாதங்களுக்கு எதுவும் நடக்காதது போல ஒர் அமைதி நிலவியது. குளிர்காலத்தின் மத்தியில் ஒரு புறக் காவல் நிறுத்ததின் மீது தாக்குதல் நடைபெற்றது. ஒரே ஒரு காவலாளி மட்டும் பணியில் இருந்தான். மற்றவர்கள் அனைவரும் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். குண்டுகள் பாய்ந்து இரத்தம் உறைந்த நிலையில் அவர் உடல் அடுத்த நாள் காலையில் கிடைத்தது. அந்த இடத்தில் இருந்து தகவல் தெரிவிக்க தொலைபேசியோ செல்பேசியோ இல்லை. தகவல் வர நெடு நேரமாகியது. யார் தாக்கியிருபபார்கள் என தெரியவில்லை. சில ஆட்கள் மட்டுமே வந்திருக்கிறார்கள். நிறுத்தத்தை சூரையாடவோ தீமூட்டவோ இல்லை. ஏதோ ஒரு செய்தியை தெரிவிக்கவே இந்த கொலை.
இவர்களுக்கெல்லாம் என்ன தான் வேண்டும்? அவன் கண்கள் இதே கேள்வியைத்தான் புதிதாக திருமணமான தம்பதியரிடமும் கேட்டன, குழந்தைகளிடம் கேட்டன, முதிர்ந்தவரிடமும் கேட்டன. அனைவரிடமும் கேட்டன. உங்களுக்கு எது தேவை என்று எனக்கு தெரியும். ஆனால் அதை செய்யக்கூடிய அதிகாரம் என்னிடம் இல்லை. ஆம், உங்கள் வனத்திற்குள் செல்ல உங்களுக்கு அனுமதியில்லை, வீட்டிற்கு சரியான கூரைகள் இல்லை, கிணற்றில் நல்ல நீர் இல்லை, சரியான பள்ளிகள் இல்லை, வாத்தியார்கள் இல்லை, பிரசவத்தில் உங்கள் பெண்கள் இறக்கிறார்கள், பிள்ளைகள் இறந்து பிறக்கிறார்கள். எல்லாம் எனக்கும் தெரியும். ஆனால் நான் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஏன் எதுவும் பேசுவதில்லை? எல்லோரும் ஊமையா? இந்த பிரச்சனையை தீர்க்க நீங்கள் கொண்டு வந்திருக்கும் ஆட்களுக்கு ஆயுதத்தை தவிர வேறு என்ன தெரியும்? எத்தனை காவலர்கள், ஆய்வாளர்கள் இனி சாக வேண்டும்? அவர்கள் இறந்ததற்கு யார் பொறுப்பென்றாவது தெரியுமா? இந்த காடுகள் எல்லாம் அடர்த்தியானவை. மலை முடுக்கில் வசிக்கும் இந்த கிராம மக்களை நெருங்கவோ ஆட்களை தேடவோ போதிய காவலர்கள் இல்லை. கொலை செய்தவர்களை எப்படி கண்டுபிடிக்க? தேடி என்ன பயன்? இங்கு இருக்கும் யார் வேண்டுமானாலும் கொன்றிருக்கலாம். இதை எல்லாம் திரும்ப திரும்ப சிவாஜி தனக்கு தானே சொல்லிக் கொண்டிருந்தான். இவன் மேல் எப்போதும் ஒரு பார்வை கொண்டிருந்தாள் ஸ்மிதா. இப்படி முணுமுணுப்பதும் அடிக்கடி கைகழுவுவதும் அவளுக்கு சொல்லொணா பயத்தை உருவாக்கியது. இறக்கும் வரை இந்த வனவாசம் தானா?
அங்கு வந்து ஒருவருடம்தான் கடந்திருந்தது. ஒரு சிறிய பெட்டிக்குள் அடைக்கப்பட்ட உணர்வை தவிர்க்கமுடியவில்லை. அங்கிருந்து வெளியேற சிவாஜி தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தான். ஒவ்வொரு முறையும் தலைநகருக்கு செல்லும் நெடிய பயணம் மூலம் எதையும் சாதிக்க முடியவில்லை. மந்திரியை சென்றமாத்திரத்தில் பார்க்க முடியவில்லை. உள்துறைச் செயலரின் பணி அட்டவணையில் சிவாஜிக்கு இடம் இருகக்வில்லை. டி.ஜி.பி யுடன் மட்டும் இரண்டரை நிமிடங்கள் கிடைத்தன. அந்த இரண்டரை நிமிடத்தில் பணிமாற்றம் என்பது தற்போதைக்கு நிச்சயம் முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் அங்குள்ள ஆயுதக்கிடங்கு நிச்சயம் மேன்மைபடுத்தப்படும். ஆயுத கிடங்கா? அந்த அரைகுறை கூரை கொண்ட, இடுப்பளவு மட்டுமே சுவர் கொண்ட கட்டிடம் போன்ற கூடமா? புதிய ஆயுத கிடங்கிற்கு பத்து மாதங்களுக்கு முன்பே வரைவு திட்டம் அனுப்பப்பட்டது. இன்னும் வந்தபாடில்லை. ஆனால் ஆயுதங்கள் வந்திறங்கின.
நவீன ஆயுதங்கள் வைக்கப்படிருந்த அந்தக் கிடங்கு கொள்ளையடிக்கப்பட்டது. சிறு பெண்களுடன் பழங்குடிகள் கூட்டமாக ஒர் இரவில் வந்து இரவில் தங்கி, சாலையோர கடைகளில் சாப்பிட்டு கொள்ளையடித்து சென்றனர். அவர்கள் பேசிய மொழியை உள்ளூர்வாசிகள் புரிந்துகொள்ளவில்லை. இவை எல்லாம் சம்பவம் நடந்தபிறகே தெரிந்தது. காவலுக்கு இருந்த பத்து காவலர்கள் கொலை செய்யப்பட்டனர். இரத்தமும் குண்டுகளும் கலந்த திருவிழாவாக அதைக் கொண்டாடி சென்றனர். சம்பவம் நடந்த போது மாவட்டத்தின் மறுஎல்லையின் வனத்திற்குள் சிவாஜி இருந்தான். அங்கிருந்து வந்து சேர இரண்டரை மணி நேரம் பிடித்தது. மொத்த சம்பவமும் முப்பத்தைந்து நிமிடத்தில் முடிந்திருந்தது. கழுவாத கைகளுடன் சிவாஜி சம்பவ இடத்திற்கு வந்தான். பிந்து பார்ஜா மட்டும் உயிரோடு இருந்தாள். மற்ற அனைவரும் இறப்பதை பார்த்திருந்தாள். கடைசிவரை துப்பாக்கியுடன் போரிட்டிருக்கிறாள். அவள் கண்முன் பதினெட்டு வயது நிரம்பிய அவளின் மகன் வெந்து இறந்துகிடந்தான். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்திருந்தான்.சிவாஜியைக் கண்டவுடன் அவளுக்கு எந்த அதிகார படிநிலைகளும் நினைவுக்கு வரவில்லை. அழுகை என்று சொல்வதைவிட பெரும் ஓலமிட்டு துயர்மீள முயன்றாள் என்றே சொல்லவேண்டும்.
அன்றிரவு சிவாஜியின் மார்பின் மீது கைவைத்தபடி ஸ்மிதா, ‘இந்த வேலையை விட்டிரு. இந்த வேலை ஒன்னும் தேவை இல்லை. நீ எஞ்சினியர். எதாவது ஒரு வேலை கிடைக்கும். பொழச்சிக்கலாம்’ என்று திரும்ப திரும்ப சொன்னாள். அதுபோன்ற முடிவுகள் அத்தனை எளிதில் எடுக்கக்கூடியவை அல்ல. சம்பவத்தின் மீதான விசாரனை, இறந்தவர்களுக்கான இழப்பீடு, பிழைத்தவர்களுக்கான செலவு என்று ஒன்றரை மாதம் நீண்டது. பல நாட்கள் தொடர்ந்து தேசிய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டன. ஸ்மிதாவின் பெற்றோர் கண்ணீருடன் அழைத்தனர். ‘வந்துரும்மா….எல்லாரும் வந்துருங்க. இது வேண்டாம்’ என்ற அதே கோரிக்கையுடன் அழுதனர்.
விடுப்பு. இன்றை நிலைக்கு அதுதான் விலைமதிப்பற்ற பொருள். விடுப்புக்கான அனுமதி உடனடியாக மறுக்கப்பட்டது. எதையும் அனுமதிக்க அதிகாரமற்ற ஒருவரால் அனைத்தையும் ஒரு நொடியில் மறுக்க முடிந்தது. ‘இப்போ லீவா? புரிஞ்சுதான் கேக்கறியா? மத்திய உள்துறை அமைச்சர் வர்ற நேரம். அங்கிருந்து அரை டஜன் அதிகாரிகளுடன் வந்திறங்கப்போறார். போயி அவருக்கு ஹெலிகாப்டர் இறங்கிறதுக்கான இடத்தை சரிபண்ணு’
கடைசியில் ஸ்மிதாவையும் துலிகாவையும் தில்லிக்கு அனுப்பிவிட்டு மந்திரியின் பயணம் முடிந்ததும் விடுப்புக்கும் மீண்டும் முயல்வது என முடிவானது. ‘இல்லன்னா நான் நிச்சயம் வேலைய விட்ருவேன். சத்தியம். என்னால இந்த டென்ஷன எடுத்துக்க முடியல. தினமும் செத்து செத்து பிழைக்கிற மாதிரி இருக்கு. கொலஸ்ட்ரால் கூட வந்திருச்சு. இப்படி வாழனும்னு என்ன இருக்கு. நான் வந்திடறேன் ஸ்மிதா’
இரவெல்லாம் உறக்கமின்றி அழுதுவடித்தவள் அடுத்த நாள் மனமின்றி விட்டு சென்றாள். பக்கத்து மாவட்டத்தில் இருந்த முக்கிய இரயில் நிலையத்தில் இருந்து சிவாஜி வழியனுப்பினான். துலிகாவும் தன் அம்மாவின் மார்புக்குள் முகத்தை புதைத்து அழுதாள். அப்பாவுடன் கா விட்டதை அவனுக்கு காட்டினாள். இரயில் நிலையம் அவன் மாவட்டத்தில் இருந்து இரண்டு மணி நேரத்தில் இருந்தது. அதற்குள் ஸ்மிதா பல முறை குறுஞ்செய்திகளை அனுப்பினாள். ‘பத்திரமா இருக்கியா?’ ‘ஒன்னுமில்லையே?’ என்று ஏதொவொன்று நடந்துவிடுமோ என்று பதற்றத்தோடு அனுப்பினாள்.
வீட்டிற்கு திரும்பியவுடன் நேராக உணவு மேசைக்கு சென்றான். அருகே இருந்த நீர்குழாயை திறந்துவிட்டு சோப்பு நீரைக் கொண்டு கையை திரும்ப திருமப் கழுவினான்.மேசையின் மீது உணவுவைத்திருக்கப்படவில்லை. மேசைக்கரண்டி, முள்கரண்டி என்று வழக்கமான இருக்க வேண்டிய எந்த பொருளும் இருக்கவில்லை. காலையில் சாப்பிட்ட பாலும் சோளச்செதில்களும் ஆங்காங்கே கிடந்தன. வீட்டில் யாரும் இல்லை. சுகாம், ராம், பந்தாவி என்று யாரையும் காணவில்லை. அவர்களின் இல்லாமையை உணர முடியாத அளவிற்கு அவர்களின் இருப்பு இந்த வீட்டில் இருந்திருக்கிறது என்று நினைக்கும்போது சிவாஜிக்கு ஆச்சரியமாக இருந்தது. சமயல் அறையின் வழியாக பின்னால் இருந்த தோட்டத்திற்கு சென்றான். தோட்டம் என்று சொல்லிவிட முடியாது. சிறிய புல்வெளி அதன்பின் படர்ந்திருந்த காட்டுச்செடிகள். அதற்கு அப்பால் விரிந்திருந்த வனம். அந்த வனம் வீட்டிற்குள் வருவதற்கு திடீரென்று அனுமதிகேட்டு நின்றதுபோல இருந்தது.
ஆள் இல்லாத ஒரு மதியவேளை. வாத்துகளும், பறவைகளும் தூரத்தில் ஓசை எழுப்பின. மரங்களில் இருந்து ஒன்றிரண்டு இலைகள் உதிர்ந்தன. அதன் ஒலிகூட கேட்டதுபோல இருந்தது. சிவாஜி வெளியே காலடிவைத்தவுடன் விரிந்து கிடந்த அந்த வனம் அவனை நோக்கி சீறியது. ஒவ்வொரு அடியாக ஆனால் திடமாக முன்னகர்ந்துவந்தது. பச்சைக் கம்பளிப்பரப்புகள் ஒன்றுகூடி துப்பாக்கியின் குழல்போல மாறிம. பல நூற்றாண்டுகளாக உலர்ந்துகொண்டிருந்த வெடிதூள்கள் அதற்குள் சேர்த்துவைக்கப்பட்டிருந்தன.
சிவாஜியின் செல்பேசி உணவுமேசையின் மீது கிடந்தது. அதற்குள் பல குறுஞ்செய்திகள் காதலுடன், பதற்றத்துடன் கோபத்துடன் குவிந்திருந்தன. அதன்பின் அழைப்புகள் வந்தன. யாரும் இல்லா வீட்டில் அந்த செல்பேசி சப்தமிட்டு அவனை தேடிக்கொண்டிருந்தது.