பிரதமன் – கடிதங்கள்-2

ada-pradhaman-article

பிரதமன் சிறுகதை

அன்புள்ள ஜெ,

 

பிரதமன் கதையின் அனாயாசமான கட்டமைப்பைப் பற்றித்தான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். மாஸ்டர் என்பவர் எந்தச் சிரமமும் இல்லாமல் மிகச்சிக்கலான அமைப்புக்களை உருவாக்குபவர். எந்தச் சிக்கலும் மேலே தெரியாமல் மிக இயல்பான கலையை உருவாக்குபவர். தி.ஜாவின் பல சிறுகதைகளில் அந்த இயல்பான வீச்சைக் காணமுடியும். செக்காவ் முதல் கார்வர் வரை பலரை உதாரணமாகச் சொல்லமுடியும்

 

இந்தக்கதையில் அந்த சின்னப்பையன் ஒரு பெண்ணைப் பார்க்கும் இடம் வருகிறது. அது இல்லாவிட்டால் கதையில் என்ன குறையும் என்று பார்க்கவேண்டும் என்று சொன்னேன். அது இல்லாவிட்டால் கதையில் குறைவது ஒன்று உண்டு. அவன் அப்போதுதான் காதலின் இனிமைக்குள் செல்லப்போகிறான். அது ஆசான் நுழைந்த அதே வாசல். ஆசானின் இளமைக்காலம்தான் அந்தப்பையன். ஆசான் அதேபோல ஒரு சமையல்வேலையில்தான் அவளைச் சந்தித்திருப்பார்.

 

அந்தச்சம்பவத்தின் அடுத்த கட்டங்கள் கசப்பானவை. அந்தப்பையனும் கசப்பைநோக்கிச் செல்கிறான். ஆனால் ஆசான் அந்தக்கசப்பை இனிமையாக ஆக்கிவிட்டார். அவர் கைபட்டாலே வரும் அந்த தனி இனிப்பு என்பது தொழில்நேர்த்தி மட்டும் அல்ல. தொழில்நேர்த்தி இருக்கத்தான் செய்கிறது. அடை, வெல்லம், தேங்காய் மட்டுமல்ல விறகிலேகூட நுட்பமான கவனம் உள்ளது. ஆனால் அந்த நுட்பங்களெல்லாமே எங்கிருந்து வருகின்றன? அவர் மனசு கனிந்திருப்பதனால்தான். அதுதான் அந்தப் பிரதமன்

 

பிரதமன் என்றபேரே முக்கியமானது. முதன்மையானது, மையமானது என்ற அர்த்தம். அதாவது கனிவின் இனிப்பே ஒரு விருந்தின் மையம். அது இல்லாவிட்டால் விருந்தே கிடையாது. அதைத்தான் ஆசான் கதையின் தொடக்கத்திலும் சொல்கிறார்

 

அருண்குமார்

 

ஆசானுக்கு,

 

ரெண்டு தோளுலையும் காலத் தொங்கப்போட்டுட்டு ஆக்குப்புரையில் இருந்து கவனித்தது போல இருந்தது பிரதமனைப் படிக்கும்போது. பங்குனி உத்திரத்துக்கு வரி பிரிச்சு பச்சரிசியும் சர்க்கரையும் தேங்காத்துருவலும் போட்டு ஏலம்-சுக்கு போட்டு பாயசம் இறக்குன வார்ப்பும் சட்டுவமும் இப்பமும் வீட்டில இருக்கு. இதைப்படிக்கும் போது ஓடிப்போய் வார்ப்பைத் தொட்டுப் பார்த்தேன்.

 

1980 களில் அம்மன் கோயில் பாயாசத்துக்காக ஆலாய் பறந்ததுண்டு. கடைவிரித்தேன் கொள்வாரில்லைங்கிறமாதிரி 12 மரக்கால் பாயாசம் வைத்த கோவிலில் நாழி அரிசி போட்டு வைக்கிற சர்க்கரைப் பொங்கலை இப்போதெல்லாம் நாயும் தீண்டுவதில்லை. கல்யாண வீடுகளில் சிறுபயிறு பாயாசமும் சேமியாப் பாயாசமும்தான் என்பது சடங்காகிவிட்டது. கழுதைக்குப் பேரு முத்து மாலைங்கிறது மாதிரி சேமியாப் பாயாசதுக்கு இவனுகளா வச்சுக்கிட்ட பேறு பால்பாயாசம். அடைப்பாயாசம் வீட்டு அடுக்களையைவிட்டுவிலகி 20 வருடங்களுக்கு மேலாகிறது. கடைசியாய் இரு வருடத்திற்கு முன் திக்கணங்கோட்டில் அடை பிரதமன் சாப்பிட்டேன். அவியலில் தேங்காய் எண்ணெய் ஊற்றும் போதே என்னைச் சுற்றி மிதந்த மணம், கடைசியில் ஆசான் குழிநடுவளைவுக்குள் சட்டுவத்தை விட்டுப் புரட்டியபோது கதை பூரணமடைந்த நேரத்தில் பிரதமனின் ருசியும் மணமுமாக நெஞ்செல்லாம் நிறைந்தது.

 

பாலா ஆர்.

பிரதமன் -கடிதங்கள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-77
அடுத்த கட்டுரைகாந்தி- பழியும் ஊழும்