ரயிலில்,பிரதமன் -இரு கடிதங்கள்

ada-pradhaman-article

பிரதமன்

ரயிலில்… [சிறுகதை]

 

திரு ஜெய மோகன் அவர்களுக்கு,

உங்களின் ரயிலில், பிரதமன் இரண்டு சிறுகதைகளையும் படித்தேன். வெண்முரசு போன்ற பிரமாண்டமான ஆக்கதிற்கிடையிலும் இவ்வளவு ஆழமான சிறுகதைகள எழுத முடிகிற உங்கள் படைப்பூக்கம் ஆச்சரியப்படுத்துகிறது. எல்லோரையும் ஏற்றிக்கொண்டு பயணம் செய்கிற ரயில் நல்ல குறியீடு. சாமி நாதன்  குடும்பத்தின் சொத்தை அபகரிக்க முத்து சாமியின் குடும்பம் செய்கிற முயற்சி அநீதிதான். ஆனால் முத்துசாமியின் மகள்களுக்கு நடந்தது மகா கொடுமை. அது நடக்க காரணமாய் இருந்தது பற்றிய குற்ற உணர்வு சாமி நாதனுக்கு இருக்கிறது. மன நிலை பிறழ்ந்த மகளை சொல்லாமலே திருமணம் செய்து கொடுக்க முத்து சாமி முயல்வது தவறுதான். ஆனால் அதை பெரும்பாலோர் செய்யக்கூடும். அது சாமி நாதனின் மனதிலிருக்கும் குற்ற உணர்வை மட்டுமல்ல , வாசகர் மனதில் இருக்கும் அநீதி இழைக்கப்பட்ட உணர்வையும் அகற்றி விடுகிறது. அவனுக்கு வேண்டியதுதான் என்று தான் பெரும்பாலான வாசகர் கடிதங்கள் சொல்கின்றன. பீஸ்மரை வீழ்த்த கிருஷ்ணன் கூறுகிற உத்தியை ஸகாதேவன் நியாயப்படுத்துகிற வெண்முரசுவின் அத்தியாயத்தையும் உடனே படிக்க நேர்ந்தது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அநீதி இழைக்க வேண்டிய  அல்லது அநீதிக்கு துணை போகிற நிர்ப்பந்ததிலிருந்து  யாருமே தப்ப முடியாதோ.

ரயிலில் ஏற்படுத்திய மன நெருக்கடியிலிருந்து ஒரு விடுதலை  பிரதமன். பிரதமனின் மணத்தை, சுவையை இன்னும் உள்ளம் ருசிக்கிறது. தான் படைக்கிற எந்த உணவையும் வாயில் இட்டுப் பார்க்காமலே , அற்புத ருசியை சிருஷ்டிக்கிற ஆசானின் ருசியைப் பற்றிய புரிதல் ஒரு பெரிய தரிசனம். ”மனசுக்கப் பழக்கமாக்கும் ருசி.  நினைச்சா மனசைப் பழக்கி எடுக்கலாம். அல்லாமெ ஒத்த ருசியில் நின்னா பலதும் நமக்கு இல்லாம ஆகும். இந்த உலகம் ருசிகள் கொண்டு நிறைஞ்சதாக்கும்.   நாக்க மனசு  பிடிச்சு நடத்தக்கூடாது. நாக்க அது பாட்டிற்கு விட்டால் அது பாட்டிற்கு எல்லா ருசியையும் கண்டுகிடும்.” இந்த ஞானம்  அவ்ருக்கு இருந்த தால் தான் அந்த பிரதமன்  அவ்வளவு ருசியாய் இருக்கிறது. ஒரு வகையில் அவர் ஞானம்  சாமி நாதன்களுக்கும், முத்து சாமிகளுக்கும் பதில்.

அன்புடன்

ராமகிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ

 

ரயிலில், பிரதமன் ஆகிய இரு கதைகளையும் ஒருங்கே வாசித்தேன். இரண்டு கதைகளையும் ஒப்பிட்டு இப்படி நான் விவரிப்பேன்.  ‘ரயிலில்’ தங்கள் துயரங்களின் நஞ்சை செரித்துக்கொள்ள முடியாதவர்களின் கதை. ‘பிரதமன்’ அந்த நஞ்சை அமுதமாக ஆக்கிக்கொண்ட ஒருவரின் கதை.

 

என்னுடைய அனுபவத்தைக்கொண்டே இதைச் சொல்கிறேன். என்னை ஒருவர் பங்குத்தொழிலில் இழுத்துவிட்டு 1986 வாக்கில் 45 லட்சம் கடனாளியாக்கினார். நமக்கு ஒருவர் துரோகம் செய்யும்போது நாம் தான் அதன் எல்லா துக்கத்தையும் அனுபவிக்கிறோம். பண இழப்பு மட்டும்தான் அப்போது தெரியும். என் மனம் குமுறிக்கொண்டே இருந்தது. பத்தாண்டுகளில் நான் கொஞ்சம் மீண்டபிறகு நினைத்துக்கொண்டேன். அப்போதே அதை மறந்திருந்தால் பத்து ஆண்டுகளாவது மிஞ்சியிருக்குமே என்று.

 

ஆசான் அத்தனை உலகச்சிறுமைகளையும் இனிப்பாக ஆக்கி உலகுக்கு அளிக்கிறார். அந்தக்கதை ஆரம்பம் முதலே இனிப்பு நோக்கித்தான் செல்கிறது. தேங்காயும் வெல்லமும் மிகச்சரியாக இருக்கவேண்டும் என அவர் நினைப்பதில் தொடங்கி கடைசியில் அந்த உருளியில் ஓரத்திலிருந்து சுழற்றி நடுவே இளக்குவதுவரை அவர் சமையலின் உச்சமாகவே பிரதமனை நினைத்திருக்கிறார் எனத் தெரிகிறது

 

நன்றி ஜெ

ஆர்.கிருஷ்ணன்

 

பிரதமன் -கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75
அடுத்த கட்டுரைநட்புக்கூடல் -கடிதங்கள் 2