பிரதமன்[சிறுகதை]
அன்புள்ள ஜெ
பிரதமன் வாசிதேன். சரளமான ஒழுக்குள்ள கதை. நுட்பமான செய்திகள் வழியாக அங்கே போய் அந்த ஆக்குபுரைக்குள் வாழ்ந்ததுபோன்ற அனுபவத்தை அளிக்கிறது. அந்த ஓட்டம்தான் பெரும்பாலான சிறுகதையாசிரியர்கள் தவறவிடுவதாக இருக்கிறது. அதற்கு நுணுக்கமான எவ்வளவு கவனிப்புகள் தேவையாகின்றன என ஆச்சரியமாக இருக்கிறது. தேங்காயை நடுநரம்பில் தட்டியால் சரியாக உடையும் என்பது ஒரு செய்தி என்றால் நெய்யை மிகமென்மையாக வழித்தெடுப்பதைப்பற்றிய வர்ணனை ஓர் அனுபவம். அதுதான் இலக்கியத்திற்கான அடிப்படை.
கதையின் ஆன்மிகமான மையத்தை பல வரிகள் சுட்டிச்செல்கின்றன. சுவை பற்றி ஆசான் சொல்லும் இடங்கள். அவர்கள் இருவர் நடுவே ஒரு கசப்பு. அதிலிருந்து அவள் மீளவே இல்லை. அவர் அத்தனை கசப்பையும் இனிப்பாக மாற்றிவைத்திருக்கிறார். அத்தனை கசப்பையும் இனிப்பாக மாற்றி உலகுக்குக் கொடுப்பவர்கள்தான் ஆசான்கள். பெரிய கலைஞர்கள், ஞானிகள்.
ஆசான் ஒரு ஞானி
செந்தில்குமார்
பிரதமன்
ஹலோ சார்,
‘வெண்முரசு’ கெடுபிடிக்கு நடுவிலும் இப்படி சில கதைகளையும் எழுதி ஆச்சர்யத்தை அளிக்கிறீர்கள். பிரதமன் பிரமாதம். முற்றிலும் புதிய சூழல். புதிய கதை. படிக்கும் போது ‘பாயசம்’ கதையும் ஞாபகத்திற்கு வந்தது அந்தத் தலைப்பின் காரணமாகவே. அது முற்றிலும் வேறு.
வெளிநாட்டு எழுத்தாளர்கள் நம்பகத்தன்மைக்காக கதை நடக்கும் களங்களுக்கே சென்று தங்கி அங்குள்ள மக்களை, இடங்களை மனதில் வாங்கி எழுதுவது வாடிக்கை. நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால், கொஞ்ச நாள் சாமியாராக இருந்தாற்போல தவசிப்பிள்ளையாகவும் இருந்திருப்பீர்கள் போல. ஆசானைப் பற்றிப் படிக்கும் போது கி.வா.ஜ அவருடைய ஒரு கட்டுரையில் எழுதிய சமையல்காரர் ஞாபகத்திற்கு வந்தார். அவர் எழுதுவார் ”சாம்பாருக்கு உப்பு போடுவார். அதாவது போட வைப்பார். சொளகில் உப்பள்ளிக்கொட்டுவான் பையன். இவர் ஒண்ணு, ரெண்டு என்று எண்ணிக்கொண்டிருப்பார். நிப்பாட்டு என்று கத்துவார். இப்ப சொளகெடுத்து மேல வெச்சுக்கோ. லேசாத்தட்டு, அப்பிடித்தான், ஒன்னு, ரெண்டு, மூணு …நிப்பாட்டு என்பார் மன்னர். அமிர்தம் தயார்” என்பதாக. ருசிக்கான தெய்வங்கள் வாக்கில் எழும் தருணம்.
காலையில் மனதில் தோன்றும் பாடல்களை மனம் அன்று முழுவதும் பாடிக்கொண்டிருக்கும் , சமயத்தில் வாயும். ‘ஏவல் மாதிரியில்ல இருக்கு’ என்று ஏழாம் உலகத்தில் பனி விழும் மலர் வனம் பாடலைக் கிண்டலடித்திருப்பீர்கள். இதில் சில வார்த்தைகளும்(மகா வாக்கியங்கள்?) அடக்கம். காலையில் அந்த வார்த்தைகள் மனதில் தோன்றினால் அன்று முழுவதும் சத்தம் போட்டு சொல்லிக்கொண்டே இருப்பேன். ‘சகஸ்ரகோடி பாஸ்கர துல்யம்’ ‘கதிர் ஆயிரம் இரவி கலந்தார் போல’ (நாலாயிர திவ்யப் பிரபந்தம்) போல. அந்த ஒலி காதில் விழுவது புது விதமான உணர்வுகளைக் கிளர்த்தும். இதில் கிடைத்தது கஜராஜ விராஜிதம்.
வாசகர்களை மடப்பள்ளிக்குள் கொண்டு போய் அரிவைப்புச் செட்டோடு இறக்கி விட்டீர்கள். ஆசான் வெண்கல உருளியை கிளறிய சப்தம் காதையும், பிரதமனின் மணம் மூக்கையும் நிறைத்தது. அந்தப் பெண்ணுக்கும், ஆசானுக்குமான உறவு எதாகவும் இருக்கலாம் என்பதே என் வாசிப்பு.கதைக்கேற்றார் போல, அள்ளிக் குடிக்கத் தோன்றிய பிரதமன் படங்களும் பிரமாதம்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
“பிரதமன்” சிறுகதையின் ஆழம் வியக்கவைக்கிறது. கதை முழுதும் “தேங்காயும் தேங்காய் பாலும்” ஓடிகொண்டே இருக்கிறது. முதலில் என்னை மிகவும் கவர்ந்தது ஆசிரிய -மாணவ உறவு. கதையே “பிரதமன்” என தலைப்பு வைத்துவிட்டு மாணவனின் பார்வையில் சொல்லபடுவது என்ன ஒரு ருசி.இப்படி ஒரு ஆசானும் அவருக்காய் எங்கேயும் சென்று அவர் கூறியதை நம்பிக்கையாய் எடுத்துரைக்கும் ஒரு மாணவன்.
ஆனால் மாணவன் நுண்ணுணர்வு உள்ளவன். சுப்புபிள்ளையின் லீலையை புரிந்து கொள்பவன். வீட்டில் இருந்து அடை செய்து எடுத்துவரும் ஆசானின் செயலை “மெனக்கெட்ட வேலை” என கூறும் ஒருவனிடம் அவர் அப்படி செய்வதனால் தான் சேரில் இருக்கிறார்,நீ இங்கு உட்கார்ந்து தேங்காய் துருவி கொண்டு இருக்கிறாய் என கூறும் போது ஒரு குரு கிடைக்க எவ்ளோ தவம் தேவை என்பதும் ஒரு குருவாய் இருக்க எவ்வளவு மெனக்கெடலும் நம்பிக்கையும் நுட்பமும் தேவை என்பது புரிகிறது.
இதில் வரும் காதல் கணக்கு காதல் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் ஆசான் எல்லாவற்றிலும் கணக்காய் இருப்பவர் என அவரது உதவியாளர்களில் ஒருவர் கூறுகிறார். ஆனால் ஒரு ஆண் தனது தனது தொழிலில் குவிந்து நிமிர தொடங்கும்போது வரும் காதல் எப்போதும் நிலைப்பதே இல்லை. ஆனால் அந்த பெண் இல்லை என்றால் வெற்றியும் இல்லை.ஏனென்றால் அவள்தான் பிரதமன், அவளின் பாராட்டுகளும் குத்தல்களும் தான் முதல் ருசி.ஆனால் அதில் வெற்றி பெற தொடங்கும்போது அவள் நம்மை நோக்கி எதையாவது கூறும் தூரத்தை தாண்டும் போது அவள் இயல்பாய் மறைகிறாள் பிரதமனுக்குள் தேங்காய் பால் என. ஆனால் இதில் வரும் அம்மாள் வேறு ருசி கொண்டவர் என தோன்றுகிறது. கணக்காய் நாடா சேரில் இருப்பவனை காட்டிலும் துள்ளலாய் கொஞ்சம் குழந்தைதனமாய் இருப்பவனை தேடும் ருசி உள்ளவர் போல் .அவரது கணவன் கதைக்குள் இல்லை என்றாலும் அவரது மகளாய் வரும் பெண் மூலம் இது தெரிகிறது.யார் என்றே தெரியாத கதை சொல்லியிடம் வந்து “எங்க அம்மா வந்தாளா? என கேட்கும் போது புன்னைகை வருகிறது.
அதேபோல் ஆசான் சமைக்கும் கொஞ்சம் காரம் குறைவான மரபான சமையலை காட்டிலும்,காரமாய் வேறு கலாச்சாரத்தின் ருசிகளை அறிய ஆவல் கொண்ட ஒரு பெண். வேறு கலாச்சாரத்தில் இருந்து வரும் அமெரிக்க மாப்பிளையை தேடி இன்று அமெரிக்க பொண்ணுகளாக ஒவ்வொரு விமான நிலையத்திலும் வந்து இறங்குபவர்களில் ஒருத்தியாய். அயனிப்பழம் என்ற சிறுகதையிலும் இதேபோல் ஒருகாதல் உண்டு .அதில் புளிப்பு சுவை உடைய ஒரு ஆணின் நாக்கு. இதில் இனிப்பு சுவை உடைய ஒரு நாக்கு. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு நாக்கு.
கதையே சுப்புபிள்ளையின் லீலையில் தொடங்குகிறது. இவரைபோல் உள்ள கதாபாத்திரங்கள் இல்லை என்றால் வாழ்க்கையில் எதுவும் நடக்கவே நடக்காதோ. எனக்கு சில நேரங்களில் இவரைபோல் உள்ளவர்களை சந்திக்கும்போது அதிர்ச்சியாய் இருக்கும், எவ்வளவு தைரியமாய் இப்படி செய்கிறார்கள் என ? ஆனால் இது மோட்டார்காரர்களுக்கு தெரியும்போல, பிரதமன் கிண்டும்போது இளகிவரும் தேங்காய்பாலை ஊதி கொஞ்சமாய் ருசி பார்ப்பார்கள் என.ஆனால் இப்போது வேறு ஒன்றும் தெரிகிறது,ஏனென்றால் சுப்புபிள்ளையின் மனைவிக்கு எல்லாம் தெரிகிறது. அவள் சலித்துகொள்கிறார்,அது செல்லமாகவா? இல்லை கோபமாகவா? என தெரியவில்லை.இதனால் தான் தன்னில் பாதியாய் இருக்கும் ஒரு பெண்ணுக்கு தெரிந்தபின் மோட்டார்காரனாவது கடவுளாவது என்ற நிலைமைக்கு சுப்புபிள்ளைகள் வந்திருக்கலாம்.
பிரதமன் கிண்டுவதன் நுட்பம். வாழ்க்கையே பிரதமன் கிண்ட கிடைத்த தருணம் அல்லவா. ஆனால் நீங்கள் அதை ஒட்டுமொத்தமாய் விவரிக்கும்போது அந்த விரிவை காட்சி படுத்த ஒரு சலிப்பும் எரிச்சலும் பயமும் வருகிறது.இவ்வளவு சலிப்பும் எரிச்சலும் பயமும் உள்ளவனா நான் ? என இரண்டு நாளாய் தவிக்கிறேன்.நான்குபேர் ருசி பார்த்து நன்றாய் இருக்கிறது என கூறவும் தனது நாக்கே ருசி பார்த்து புன்னகை பூக்கவும் ஆன ஒரு சிறந்த பிரதமனை கிண்ட எவ்வளவு பக்குவமும் நம்பிக்கையும் தேவைப்படுகிறது.
நன்றி சார்.
ஸ்டீபன்ராஜ் குலசேகரன்