வடகேரளம்- ஒரு நண்பர்கூடல்

pksa-761344

 

காஞ்ஞாங்காடு முற்போக்கு கலையிலக்கிய சங்கம் [புரோகமன கலாசாகித்ய சங்கம்] சார்பில் நிகழ்த்தப்பட்ட கலாச்சார மாநாடு ஒன்றை தொடங்கிவைத்து உரையாற்ற முடியுமா என அழைத்திருந்தார்கள். அவ்வளவு தொலைவுக்குச் செல்லும் கூட்டங்களை நான் பொதுவாக ஏற்பதில்லை. மூன்றுநாட்கள் என் கணக்கில் செலவாகிவிடும். ஆனால் வடக்கு மலபாருக்குச் செல்வதென்பது இனிய அனுபவங்களில் ஒன்று. மேலும் அழைத்தவன் என் நண்பன் வி.பி.பாலசந்திரன்.

 

நானும் பாலசந்திரனும் 1984 முதல் 1988 வரை காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் வேலைபார்த்தோம். அன்று நாங்கள் எம்.ஏ.மோகனன், நந்தகுமார், கே.வி,சந்திரன், ராதாகிருஷ்ணன், ரசாக், புருஷோத்தமன் என ஒரு கும்பலாக இருந்தோம். சோவியத் உடைவுக்கு முந்தைய காலகட்டம். ஆகவே இடதுசாரி இலட்சியவாதம் உச்சத்திலிருந்தது. கம்யூன்களில் வாரந்தோறும் கோட்பாட்டு வகுப்புகள். வெறிகொண்ட வாசிப்பு. விவாதங்கள். தொழிற்சங்கச் செயல்பாடுகள். ஒரு கனவுபோல கடந்துசென்ற காலகட்டம் அது.

3

பொதுவாக அலுவலக நட்புகள் அலுவலகத்துடன் முடிவதே வழக்கம். ஓய்வுபெற்றதுமே நமக்கு அலுவலகத்துக்குமான எல்லா தொடர்புகளும் அற்றுவிடுகின்றன. பெரிய தொழிற்சங்கவாதிகளுக்குக் கூட இதுவே நிலை. ஆனால் முப்பதாண்டுகளாக எனக்கும் காசர்கோடு நட்புவட்டத்துக்குமான தொடர்பு அறுபடாது நீடிக்கிறது. நான் அனேகமாக ஆண்டுதோறும் அங்கே செல்கிறேன். சென்றமுறை நீலேஸ்வரம் சென்றபோது ரயில்நிலையத்துக்கு பத்துபேர் வந்திருந்தார்கள். ‘இங்கே ஈ.கே.நாயனார் வரும்போதுதான் இத்தனைபேர் ரயில்நிலையம் வருவார்கள்’ என ஒருவர் கிண்டலாகச் சொன்னார்

 

நண்பர்களில் பலர் ஓய்வுபெற்றுவிட்டனர். சிலர் கம்யூனிஸ்டுக்கட்சியின் பணிகளில் நீடிக்கிறார்கள். மற்றவர்கள் வெவ்வேறு ஊர்களிலாகப் பரவிவிட்டனர். நான் செல்வதை ஒட்டி பல இடங்களிலிருந்து வந்திருந்தனர். பாலசந்திரன் புகழ்பெற்ற கம்யூனிஸ்டுத்தலைவரான மறைந்த டி.கே.சந்தன் அவர்களின் மகன். அவன் வீட்டுக்குச் சென்றபோது பலமுறை தோழர் சந்தன் அவர்களைச் சந்தித்திருக்கிறேன். காவல்துறை சித்திரவதையால் அவர் கைவிரல் எலும்புகள் ஒடிந்து வெவ்வேறுவகையில் வளைந்திருக்கும். அந்த விரல்களால் அவர் பீடிபிடிக்கும் காட்சி நினைவுக்கு வருகிறது. 2014ல்  அவர் பெயரால் திறக்கப்பட்ட கிராமிய நூலகத்தை நான் தொடங்கி வைத்தேன்.

4
கருணாகரன் புருஷோத்தமன் பாலசந்திரன்

 

பாலசந்திரனின் வீட்டிற்குச் சென்றேன். அவன் மனைவி பிரதமன் வைத்திருந்தார். நான் பிரதமன் கதை எழுதியபோதே அருண்மொழியிடம் பிரதமன் வைத்துத் தரும்படி பலவாறாக மன்றாடிப் பார்த்தேன். பிடிவாதமாக மறுத்துவிட்டாள், சைதன்யா விடுமுறைக்கு வந்தபின்னர்தான் என்று. இந்த சீசனில் வெளியே எங்கும் கிடைக்காது.நான் சாப்பிட்டு ஓராண்டு இருக்கும் என நினைக்கிறேன். இப்போதெல்லாம் திருமணங்களுக்குச் செல்வதில்லை. ஆகவே சாப்பிட வாய்ப்பில்லை. ஓணம் போன்றவற்றுக்கு வீட்டில் வைக்கும் வழக்கம் பிள்ளைகள் வெளியூர் சென்றதும் நின்றுவிட்டது

 

பிரதமன் கொண்டுவரப்பட்டதுமே மலர்ந்துவிட்டேன். “இவர் சொன்னார், உங்களுக்கு பிரதமன் பிடிக்கும் என்று” என்றார். நான் காசர்கோட்டில் இருக்கையில் பாலசந்திரனின் அம்மா பிரதமன் செய்தால் கூஜாவில் கொடுத்தனுப்புவதுண்டு.அருண்மொழிக்கு “பாவப்பட்ட எழுத்தாளர்களின் குரலைக்கேட்க வானத்தில் தெய்வம் என்று ஒருவர் உண்டெடே புல்லே’ என தமிழ்மலையாளத்தில் ஓரு குறுஞ்செய்தி அனுப்பினேன்

q4

பாலசந்திரனின் வீடு வயலோரமாக இருக்கிறது. அவனுடைய அப்பா நினைவாக ஒரு வாசகசாலை இயங்குகிறது. அதனருகிலேயே ஒரு நினைவுச்சின்னமும் ஒரு கட்சி அலுவலகமும் கட்டப்படுகின்றன. நிலம் அவர்கள் கொடுத்ததுதான். பாலசந்திரனின் அம்மாவை அவர்களின் தறவாட்டு வீட்டுக்குச் சென்று பார்த்தேன். என்னை நினைவிருக்காது என நினைத்தேன். துல்லியமாக நினைவிருந்தது. நான் முந்தைய முறை வந்தபோது சாப்பிட்டது உட்பட. அன்னையரின் நினைவாற்றல் – இந்த விஷயங்களில் – ஆச்சரியமானது. பாலசந்திரனின் அப்பா இறந்ததைப்பற்றிச் சொன்னார். அவர் இறந்தது முப்பதாண்டுகளுக்கு முன்பல்ல, நேற்று என்று தோன்றும். அவர் அந்த நாளிலேயே உறைந்துவிட்டிருந்தார்

 

தேசாபிமானி, மாத்ருபூமி நிருபர்கள் வந்தனர். சற்றுநேரம் பேசினேன். மறுநாள் ஒரு செய்தியாக வெளியிட்டனர். அது கேரளத்தின் மரபுகளில் ஒன்று. இன்றுவரை நான் கேரளத்தின் ஓர் ஊருக்கு அதிகாரபூர்வமாகச் சென்றதைப்பற்றி நாளிதழ்ச்செய்திகள், பேட்டிகள் வராமலிருந்ததே இல்லை. மதியம் ஆடு கோழியுடன் உணவு. உண்பது சார்ந்த என் நிபந்தனைகள் அனைத்தையும் வீசிவிட்டேன்.

oyster-opera-island-resort (1)

அன்று நிகழவிருந்த விழா பாரதிய ஜனதாக் கட்சியின் முழுஅடைப்புக் கோரிக்கையால் மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.சபரிமலை போராட்டத்தின் பகுதியாக பாரதீய ஜனதாவின் கே.பி.சசிகலா டீச்சரின் கைது. அந்த அம்மாள் ஓர் ஆசிரியை. ஆசிரியை என்னும் தகுதிக்கே ஒவ்வாதது அவருடைய மேடைப்பேச்சு. நேரடியான சாக்கடை உமிழல். அ.தி.மு.கவின் வண்ணை ஸ்டெல்லா எல்லாம் அருகிருந்து பாடம் கேட்கவேண்டும். வன்முறை, வஞ்சம், அவதூறு, வசைகள் என கொந்தளிப்பார். இப்படி ஓர் அரசியல் ஆபாசம் கேரளமண்ணில் நிகழ்ந்ததைப்போல வரலாற்றுமுரண் ஏதுமில்லை.

 

நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அன்று மாலை காஞ்சாங்காடு அருகிலுள்ள ஆய்ஸ்டர் ஓப்பரா [Oyster Opera] என்னும் சுற்றுலாமையத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார்கள். சித்தாரி ஆற்றின் அழிமுகத்தின் பின்கடல் சூழ்ந்த தீவு இது. நீருக்குள்ளேயே மண் கொட்டியும் கல்நாட்டியும் உருவாக்கப்பட்ட மூங்கில் மாடங்களில் தங்கலாம். வசதியான மாடங்கள். இரண்டு படுக்கையறைகள்கொண்ட இரண்டு அடுக்கு மாடங்களும் உண்டு. சுற்றிலும் நீலநீர்வெளி. படகுப்பயணம், கடல்நீச்சல் போன்றவற்றுக்கு மிக உகந்தது.

6

சி.சி.பிரதீப், ராதாகிருஷ்ணன், கருணாகரன், பாலசந்திரன்,புருஷோத்தமன்,எம்.ஏ.மோகனன் ஆகியோர் இரவில் அங்கே தங்கினோம். சமீப காலத்தில் உண்ட மிகச்சிறந்த உணவு. இறால்,சிப்பி,கரிமீன்,சிக்கன், வெள்ளையப்பம்,பத்திரி. இரவு இரண்டரை மணி வரை நிலவு எழுந்து நின்றிருந்த காயல்வெளியின் விளிம்பில் அமர்ந்துபேசிக்கொண்டிருந்தோம். கேரளத்தில் சந்திப்பரங்குகளில் குடி தவிர்க்கமுடியாதது. ஆனால் சலம்புபவர்களை நான் பார்த்ததே இல்லை. தமிழகத்தில் சலம்பாதவர்களை அரிதாகவே பார்த்திருக்கிறேன். [அந்தச் சிறிய பட்டியலை முன்னர் ஒருமுறை வெளியிட்டிருக்கிறேன்]

 

பழைய மலையாளப்பாடல்களை புருஷு பாடினான். பழைய தொலைபேசி நிலைய நினைவுகள். பழைய தொழிற்சங்கநினைவுகள். நண்பர்களில் ராதாகிருஷ்ணன் தவிர அனைவருமே வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் முன்பிருந்த வேகம் இல்லை என்றார்கள். ரசாக் குற்றிக்ககம் என்றபேரில் எழுதிய ரஸாக் எனக்கு மிக அணுக்கமானவராக இருந்தான். நான்காண்டுகளுக்கு முன் இறந்தான். அதன்பின் இறந்தவர்கள் ஏழெட்டுபேர். ஒவ்வொருவரையாக நினைவுகூர்ந்து மெல்ல சொல்லடங்கி துயருற்று மீண்டும் பாடல்.

in-the-lap-of-god-s-own

காலை ஆறுமணிக்கே எழுந்து ஒரு படகுப்பயணம் சென்றோம். மீண்டும் இலக்கிய அரசியல் விவாதம். நினைவுகளை அலசிக்கொண்டே இருப்பதில் இனிதான ஒன்று இருந்தது. “நீ வேற ஆளா இருக்கேடா. நீ வேற ஒருத்தனா இருக்கே. ரொம்ப தூரத்திலே இருக்கே” என்று பிரதீப் சொன்னான். “ஏன்?” என்றேன். “நீ வாசிச்சதும் எழுதினதும் உன் உடம்பிலேயும் இருக்கு…. அது வேறமாதிரி ஒரு சொத்து” என்றான்.

 

மதியம் காஞ்ஞாங்காட்டின் சிற்பியாகிய குஞ்ஞிமங்கலம் நாராயணன் அவர்களின் இல்லத்துக்குச் சென்றேன். அவர் 2012ல் மறைந்துவிட்டார். அவருடைய மகனும் மகளும் சிற்பிகள். மகன் சித்ரன் இன்று சிற்பியாகப் புகழ்பெற்றிருக்கிறார். மறைந்த சி.எம்.ஸ்டீபன் [மத்திய அமைச்சர்] அவர்களின் பதினெட்டு அடி உயரமான வெண்கலச் சிலை ஒன்றைச் செய்திருக்கிறார். ஸ்டீபனின் டிரஸ்டுக்காக. அது வாசலில் காத்திருந்தது. இன்னொன்று ஒரு காந்தி டிரஸ்டுக்காக செய்யப்பட்ட காந்தி சிலை. காந்தியின் இனிய சிரிப்பு தங்கி நின்றிருந்த சிலை

55
பாலசந்திரன் எம் ஏ மோகனன் கருணாகரன்

 

மதியம் இரண்டுமணிக்கு அரங்குக்கு 400 பேர் வந்திருந்தார்கள். அன்றைக்கும் பாரதிய ஜனதா சாலைமறியல் அறிவித்திருந்தது. கிட்டத்த கேரளத்தையே ஒரு கலவரபூமியாக ஆக்கிவிட்டனர். அதனால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் சபரிமலை பக்தர்கள். கூட்டம்கூட்டமாக ஆங்காங்கே சாலைகள் தோறும் அவர்கள் கிடப்பதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

 

நான் பேசினேன். வழக்கம்போல முதல் ஐந்துநிமிடம் மலையாளம் வாயில் எழவில்லை. அதன்பின் சுதாரித்துக்கொண்டேன். மத்தியப்பிரதேசத்தின் பிம்பேத்கா குகைகளில் இருந்து தொடங்கி இந்தியப்பண்பாட்டின் ஒரு பெருஞ்சித்திரம் சமன்வயம் என்று நாராயணகுரு சொல்லும் தனித்தன்மைகள் அழிக்கப்படாத ஒருமை வழியாக உருவாகி வந்த சித்திரத்தை உரைத்தேன். காசர்கோடு, கண்ணனூர், தலைச்சேரி என பல ஊர்களிலிருந்து பல நண்பர்கள் என்னைப்பார்க்க வந்திருந்தனர்.

oysteropera7-big

மாலை ஏழுமணிக்கு எனக்கு ரயில். நண்பர்கள் பன்னிருவர் ரயில்நிலையம் வந்திருந்தனர். ரயில் கிளம்புவது வரை பேசிக்கொண்டே இருந்தேன். ரயிலில் ஏறும்போது நந்தகுமார் சொன்னார் “டேய் உன்னைப் பார்ப்பதற்காகவே ஒரு நண்பர்சந்திப்பு ஏற்பாடு செய்யவேண்டும். பலர் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முன்னர் சொல்லவில்லை என்று சிலர் கோபித்துக்கொண்டார்கள். வேறெந்த நிகழ்ச்சியும் இல்லை. நாம் அமர்ந்து பேசுகிறோம்…தேதி நான் சொல்கிறேன்”

 

நான் ரயிலில் ஏறியபின்னர்தான் நினைத்துக்கொண்டேன், புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கலாம் என்று. எவருக்குமே அந்த நினைவு இல்லை. நாங்கள் கொஞ்சம் பழையகால ஆட்கள் போல. சும்மா எடுத்துக்கொண்ட சில படங்கள்தான் என் செல்பேசியில் இருந்தன. அவற்றில் பலர் இல்லை.

 

பிரியத்திற்குரிய வடக்கு மலபார். நான் கொந்தளிப்புடன் கண்ணீருடன் வாழ்ந்த அந்நாட்களில் என்னை நட்பால் அரவணைத்துக்கொண்டவர்களின் மண்.

 

முந்தைய கட்டுரைஉணவும் உடலும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-73