கட்டண உரை -கடிதங்கள்

speech

வணக்கம் திரு. ஜெ.

 

நேற்று நெல்லையில் தங்களது “நமது இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது எவ்வாறு?” உரையை கேட்ட வாசகர்களுள் நானும் ஒருவன். மிகவும் அழகான, ஆழமான உரை. ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள்ளவும், தெரிந்த சிலவற்றை தொகுத்துக் கொள்ளவும் உதவியது.

 

செவ்வியலும்-நாட்டார் கூறுகளும் கொள்ளும் முரணியக்கத்தின் பெரிய சித்திரம் அறிமுகம் கிடைத்தது.

மைய தரிசனம் முதல் வழிபாடுகளை/ ஆசாரங்களை நிர்வகிக்கும் அமைப்புகள் வரை ஐந்து தளங்களிலான மத கட்டுமானம், இனி எந்தவொரு மிகப் பெரிய மத அமைப்பை தெளிவாக பகுத்து புரிந்து கொள்ள உதவும்.

 

இவ்வளவு நாள் வரை, லிபரலிசம்/தாராளவாதம் என்றால் என்ன, அதன் நோக்கு என்ன என்பது மட்டுமே தெரியும். நேற்று அதன் வரலாறு, ஐரோப்பிய மறுமலர்ச்சியில் அதன் பின்புலம், ரோம-கிரேக்க நாகரிகங்களின் தாக்கம் எல்லாம் புதிதாக அறிந்து கொண்டவை. இந்த லிபரலிசம் நமது அன்றாடங்களில், எண்ணவோட்டங்களில், அரசு எந்திரத்தின் நடைமுறைகளில் எவ்வளவு ஆழமாகக் கலந்து விட்டது என்பதை அறிய திகைப்பு.

 

ஒட்டுமொத்தமாக மிகச் சிறந்த உரை. உங்களிடம் புத்தகத்தில் கையெழுத்துப் பெற்றதும் ஓரிரு சொற்கள் பேச முடிந்ததும் நிறைவாக இருந்தது. உரை முடிவில் கேள்வி-பதில் வைக்கலாம் என்று உங்களிடம் சொன்ன ஆர்வக் கோளாறு வாசகன் நான் தான். :-)

 

இது போன்ற உரைகள் நிறைய நிகழ வேண்டும். உங்களுக்கும், இந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு நன்றி.

 

– ஸ்ரீவி சிவா

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

 

தாங்கள் சங்க இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும் நல்ல தேர்ச்சியும் தொடர் இயக்கமும் கொண்டவர்.    தவிர தொடர்ந்து இந்த பொருள் குறித்து உரைகளும் ஆற்றி வருபவர்.   பிற படைப்புகளை அவற்றிற்கு உரிய மதிப்போடு வாசித்தும் வருபவர்.

 

இந்தப் பின்னணியில் தங்களது விரிபான தயாரிப்பும் இயல்பான பதட்டமும் பல வெற்றியாளர்களின் செயல்பாடுகளை நினைவூட்டுவதாக உள்ளது.

 

மிக்க நன்றியையும் தங்கள் வாசகனாக எனது சிறந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

 

இந்த உரையை கேட்பதற்கான ஆசை பன்மடங்கு பெருகுகிறது.

 

வாழ்த்துக்கள் .

 

ச.  பாபுஜி

கரூர்

 

 

அன்புள்ள ஜெ

 

 

வணக்கம்  சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த கட்டணம் செலுத்தி உரை கேட்கும் நெல்லை உரை நிகழ்ச்சி ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சியாகவும்,பலருக்கும் ஒரு தொடக்கமாக இந்நிகழ்ச்சி அமைந்தது என்பது அந்நிகழ்ச்சி இணையத்தில் ஏற்படுத்திய சலசலப்பையும், விவாதங்களையும், வாழ்த்துக்களையும், பெற்றதிலிருந்தே அறியலாம்.

 

 

என் ஆவல் இந்த உரை ஆவணப்படுத்த பட்டுள்ளதா?

காணொளியாக பதிவு செய்ய பட்டதா (முன் அறிவிப்பிலேயே காணொளி இணையத்தில் பதிவேற்றப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது)

 

 

தங்களுடைய உரை 250 பேருக்கானதாக அமைந்து விட்டதால் அயல் தேசத்தில் வசிப்பவனுக்கு ஏக்கம் மட்டுமே மிஞ்சுகிறது.

சிறிது கால இடைவெளியில் இணையத்தில் தங்கள் உரையின் நகலை பதிவேற்றுவீர்கள் என்று காத்திருக்கிறேன்.

 

அன்புடன்.

சக்தி

முந்தைய கட்டுரைரயிலில் -கடிதங்கள்-4
அடுத்த கட்டுரைசினிமா பற்றி நீங்கள் கேட்டவை