ரயிலில் கடிதங்கள்-7

train4

ரயிலில்… [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

ரயிலில் சிறுகதை வாசித்தேன். அதோடு அதைப்பற்றி வந்துகொண்டிருந்த கடிதங்களையும் வாசித்தேன். ஒவ்வொன்றிலும் ஒரு வாழ்க்கை அனுபவம். என் வாழ்க்கையனுபவமும் அதேதான்

 

என் விஷயத்தில் இது உள்ளூர் அரசியல்வாதி. எங்கள் சொந்த நிலம் எட்டு ஏக்கர்/ இன்றைக்கு எட்டுகோடி பெறுமானம் இருக்கும். அதை ஒருவர் ஒருநாள் வந்து வேலிபோட்டு குடியேறி உரிமைகொண்டாடினார். உள்ளூர் அரசியல்வாதியின் ஆள். போலீஸில் போனால் போலி டாகுமெண்ட் ரசீது பட்டா எல்லாம் கொண்டுவந்து காட்டினான். “பாத்தாலே தெரியுதுசார் எல்லாமே போலி. பேசாமல் கோர்ட்டுக்குப்போங்க. நாங்க ஒண்ணுமே செய்யமுடியாது” என்றார் எஸ்.ஐ

 

என் அப்பா கோர்ட்டுக்குப்போனார். அவர்கள் வைத்திருக்கும் எல்லா டாக்குமெண்டும் போலி. ஒரு கிராமப்பஞ்சாயத்தில் பதினைந்து நிமிசத்தில் கேஸ் முடிந்துவிடும். ஆனால் எங்கள் கேஸ் 32 வருடங்களாக நடக்கிறது. இன்றுவரை டாக்குமெண்ட் வெரிபிகேஷனே நடக்கவில்லை. சின்னச்சின்ன ஆதாரங்கள் கேட்டு வாய்தா வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது அப்பா இல்லை. நான் பெங்களூரிலே. ஊரில் எவருமே இல்லை. வக்கீல் அவ்வப்போது வாய்தா வாங்கிவிட்டு கேஸுக்கான ஃபீஸ் வாங்கிக்கொள்கிறார்

 

கடைசியில் சொத்தை அவர்களுக்கே விற்றுவிடலாம் என்று பேசிப்பார்த்தோம். அந்த அரசியல்வாதி செத்துவிட்டார். அவர்களின் பிள்ளைகள் இருக்கிறார்கள். எல்லாருமே கௌரவமான வேலைசெய்பவர்கள். ஆனால் அவர்களுக்கு நியாயமே புரியவில்லை.  “சொத்து இப்பவே எங்க கையிலேதானே இருக்கு. எதுக்கு பணம் தரணும்?” என்று ஒருவர் சொன்னார். அவர் ஒரு ஹெட்மாஸ்டர். சாதிக்கணக்கு பேச ஆரம்பித்தார் ஒருவர். அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியாம். ஆகவே நிலம் அவர்களுடையதாம். இன்னொருவர் உழுபவருக்கே நிலம் சொந்தம் என்றார். அவர்களுக்கு இப்போதே நூறு ஏக்கர் நிலம் இருக்கிறது. நொந்துபோய் வந்துவிட்டேன்

 

அத்தனைபேருக்கும் நியாயங்கள் உள்ளன. நியாயம் பேசி எவரையும் மாற்றமுடியாது. எத்தனை பாதிக்கப்பட்டாலும் மனிதர்கள் சுயநலத்தை ஒட்டியே நியாயங்களை உருவாக்கிக்கொள்வார்கள்

 

ஒருபெருமூச்சுடன் வாசித்த கதை சார்

 

முகுந்தராஜ்

 

அன்புள்ள ஜெ,

வணக்கம். ரயிலில் சிறுகதை வாசித்தேன். படித்து முடித்தவுடன் தோன்றியது ஒன்றே ஒன்றுதான். இவரை தூஷிப்பதை இலக்கியச் செயல்பாடாகவும், அறிவுச் செயல்பாடாகவும் எண்ணிச் சுற்றிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக (பலர் இருக்கிறார்கள்)இவரைப்போல் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் பாதி அளவேனும் எழுதி உங்கள் ஆளுமையைக் காட்டுங்கள். குறைந்தபட்ச தகுதியாவது வந்தபின் பாசிச இந்துத்துவ ஜெ ஒழிக என்று கோசம் போடலாமே என்றிருந்தது. இந்தக் கதைக்கும் இன்று எழுதும் பலரின் ‘கதைக்கும்’ எவ்வளவு வித்யாசம்!. பேஸ்புக்கில் இருப்பதால் நாள்தோறும் உங்களைப் பற்றி பார்க்கும் இடமெல்லாம் உங்களைப் புலம்பும் சிலரைத் தெரியும் எனக்கு. அவர்கள் வேறெதுவும் குறிப்பிடத்தகுந்த படி செய்கிறார்கள் என்றால் ஒன்றும் இருப்பதில்லை. சில இடங்களில் பொறுக்கமாட்டாமல் எதையாவது சொல்வது உண்டு. பிறகு இது என்ன நடிகர்களுக்காக சண்டை போடும் ரசிக மனோபாவம் என்றிருக்கும். அதேசமயம் ஒரு ஆளுமையை ஏற்க வேண்டாம் நிராகரிக்கும்போது குறைந்தபட்ச தகுதியோ நியாயமோ வேண்டாமா என்றும் தோன்றும். நீங்கள் ஓராயிரம் முறை இந்த மக்களைப் பற்றி எழுதிவிட்டீர்கள். இருந்தும் மனம் கேட்க்காமல்தான் இதை எழுதுகிறேன்.

நான் மிகவும் ரசித்த கதைகளுள் ஒன்று ரயிலில். மனித மனம் சொல்லிக்கொள்ளும் சமாதானங்கள்தான் சமயங்களில் என்னென்ன செய்ய வைக்கின்றன.. அல்லது நாம் செய்யும் எல்லா காரியங்களுக்கும் சமாதானம் சொல்லிக்கொள்ள முடிகிறது என்பது பெரிய ஆருதலாக இருக்கின்றது.
அதுதான் தீயதைச் செய்யும் முத்துசாமியின் செயல்களுக்கும் விளக்கம் கொடுக்கிறது.. அதுதான் கதையில் ஒரே ஒரு தவறைச் செய்துவிட்டதாய் வருந்தும் அல்லதுகுற்றவுணர்ச்சியோடு இருக்கும் சாமிநாதனையும் அதிலிருந்து மீட்டு சாப்பிட வைக்கிறது. இரு கதாப்பாத்திரங்களும் நன்மை*தீமை என்பதன் அடையாளங்களாக வந்தாலும் இருவருக்குள்ளும் இருக்கும் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்ல வைத்து அதன்மூலம் அவர்களின் இடங்களை மாற்றிக்காட்டி கதை விளையாடும் விளையாட்டு நம் மனதோடு நம் உணர்வுகளோடு விளையாடுகிறது. ஒரு மாஸ்டர் எழுதுவது என்பது இதுதான்போலும். மகிழ்ச்சி ஆசானே. ஒரு கோர்வையாய் இல்லாவிட்டாலும் மனதில் நினைத்ததை சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன் :)

நன்றி,
சங்கர்

 

 

 

ரயிலில்- கடிதங்கள்1

ரயிலில் கடிதங்கள் -2

ரயிலில்- கடிதங்கள் 3

ரயிலில் -கடிதங்கள்-4

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78
அடுத்த கட்டுரைஆனந்தியின் அப்பா- கடிதங்கள்