எழுத்து:கடிதங்கள்

 

அன்புள்ள ஜெ,
 
மத்தகம் இன்னும் படிக்கவில்லை. கட்டுரைகளையும், பதில்களையும் படித்து வருகிறேன்.நீங்கள் எழுதும் வேகத்திற்கு என்னால் படிக்க முடியவில்லை என தோன்றுகிறது. படித்த பின் அசை போட கொஞ்சம் நேரம் வேண்டுமே!
 
கட்டுரைகளில் (முக்கியமாக நிழல்களில்) – அடர்த்தியாக அதே நேரத்தில் நினைவுகளை மீட்டும் வண்ணம் எழுதும் உத்தி மிகவும் நேர்மையாகவும், வாசகர்களிடம் இணைப்பதாகவும் உள்ளது.
 
சுருதி சேரும் போது, இரண்டாவது, மூன்றாவது hormonics ஒலிப்பது போல், மனதில் உள்ள வெவ்வேறு தளங்களில் உள்ள நினைவுகள் மற்றும் நிகழ்வுகள், ஒளிர ஆரம்பிக்கின்றன. கர்நாடக செவ்விசையில், இசைப்பவரும், கேட்பவரும் சேர்ந்தே அனுபவித்தாலும், அவர்தம் உணர்வு வீச்சுக்கள்-?-(domains) வெவ்வேறாக இருந்தாலும், virtual ஆக ஒரு தளத்தில் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு போல.. இலக்கியத்தில் ஒரு படிமம்.
 
சில காட்சிகளின் மீட்பு, அறிந்ததாக உள்ளன, சில அறியக்கூடியதாக உள்ளன. சில புதியனவாகவும், அதிலிருந்து, அனுபவங்கள் நீட்சி பெறக் கூடியதாகவும் அமைகின்றன.
 
உங்கள் கட்டுரைகள் உற்சாகம் தருவதுடன், ஊக்குவிக்கவும் செய்கிறது.
 
நன்றி.. மற்றும் வாழ்த்துகள்..
முரளி.
M.Murali
Technology Consultant
அன்புள்ள ஜெ
அனேகமாக தினமும் உங்கள் கட்டுரைகளைப் பைத்துவருகிறேன். இப்படி மாதக்கணக்கில் ஒரு படைப்பாளியின் படைப்புகளை படிப்பதென்பது எனக்கு புதிய அனுபவம். ஆகவே எப்போதும் உங்களிடம் மானசீகமாக உரையாடிக்கொண்டே இருக்கிறேன். நான் சிந்திப்பதே உங்களிடம் பேசுவதுதான் என்று ஆகிவிட்டிருக்கிறது இப்போது. நான் படிக்கும் ஒவ்வொன்றைப்பற்றியும் ஈங்கள் என்ன சொல்வீர்கள் என்றுதான் என் மனம் யோசிக்கிறது. நாம் இருவரும் ஒத்துப்போகும் இடங்களே அதிகம். முரண்படும் இடங்களும் உண்டு. அவையெல்லாம் நீஙள் ஆணித்தரமாக சிலவற்றைச் சொல்வதைப் பார்க்கும்போதுதான். நான் ஒரு விஞ்ஞானி என்ற முறையில் உறுதியான கருத்துக்களைச் சொல்ல எப்போதும் எனக்கு தயக்கம் உண்டு. ஆகவே நீங்கள் சொல்லும் திட்டவட்டமான கருத்துக்களை சற்றே சந்தேகப்படுவேன். ஆனாலும் என் மனதை மிகவும் தூண்டும் படைப்புகளாக உங்கள் எழுத்துக்கள் உள்ளன. நன்றி
அரவிந்தன் ராகவன்
[தமிழாக்கம்]
அனுப்ள்ள அரவிந்தன்
நான் திட்டவட்டமாகச் சொல்லும் கருத்துக்கள் என் இலக்கிய அனுபவம் அல்லது சமூக அனுபவம் சார்ந்தவை மட்டுமே. அவற்றுக்கு திட்டவட்டத்தன்மையை அளிப்பது அதில் உள்ள என் என்ற சொல்தான்
ஜெ
***
அன்புள்ள ஜெ:

புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வாண்டில் அசோகவனத்தை படிக்க ஆவலாக இருக்கிறேன். அப்படியே ரப்பரையும் மறுபதிப்பாக கொண்டு வர வேண்டும் என்ற அன்புக்கோரிக்கை.

சில நாட்களாக தீராத ஒரு ஐயம். பயம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். தாங்கள் தங்கள் குடும்பத்தை (துவாரவாலகன், வால், தெய்வமிருகம்..) பற்றிய கட்டுரைகளை எழுத ஆரம்பித்ததில் இருந்தே இந்த ஐயம் உள்ளது. அக்கட்டுரைகள் என்னை மிகவும் பாதித்தன. அதே சமயம் இதை எல்லாம் எழுதி எழுதி  நீங்கள் விரைவில் எழுதுவதை நிறுத்திவிடுவீர்களோ என்ற புரியாத ஐயம் ஏற்படுகிறது. அதற்காகத் தான் இவற்றை அவசர அவசரமாக எழுதிகிறீர்களோ என்றும் தோன்றுகிறது.

நீங்கள் எங்கும் போகக் கூடாது.

சுயநலமான எண்ணம் என்றும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.  எழுத்தாளன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்றெல்லாம் வாசகன் கூறக் கூடாது என்று திட்டினாலும் பரவாயில்லை.

என் ஊகம் தவறாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி.

மீண்டும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

-அர்விந்த்

அன்புள்ள அரவிந்

ஒருவகையில் உண்மை. எழுதித்தீர்க்க முடியுமா என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது– அதாவது தீர்ந்தால் நல்லதுதானே என்று. எங்காவது அமர்ந்துவிடலாம் என்று. ‘ஒன்றொன்றாய் தொட்டு எண்ணி, எண்ணும் பொருள் ஒடுன்கையில் தோன்றிஉம் பரம்’ என்று நாராயணகுரு சொல்லியிருக்கிறார்
ஜெ
முந்தைய கட்டுரைஇந்திய சிந்தனை மரபில் குறள் 5
அடுத்த கட்டுரைதிலீப்குமார்