ரயிலில் கடிதங்கள் 5

train3

ரயிலில்… [சிறுகதை]

 

 

அன்புள்ள  ஜெ ,

 

 

ரயிலில் கதையை நேற்று தான் படித்தேன்.  ஓர் நிகழ்வை இரு வேறு நபர்கள் தங்களின் நியாயங்களையும் தங்களின் அறங்களையும் மாறி மாறி  விளக்குகிறார்கள் .  இதில்  சாமிநாதன்  தன் நிலையை விளக்கும் போது அவனிடம் இயல்பாகவும் , முத்துசாமி தன் தரப்பை சொல்லும் போது அவனிடமும் மனம் மாறி மாறி ஊசல் ஆடுகிறது. இதில் யார் பக்கம் நியாயம் இருக்கும் என்று உறுதியாக  கூற முடியவில்லை சாமிநாதன்  பக்கம்  அதிகம் அறம் இருப்பதாக  நினைத்தால் , முத்துசாமி  அவன் இழந்தது மூலமாக அந்த சமநிலையை  நிகர் செய்கிறான் அவன் இழந்தது  அதிகம். கடைசியில்  சாமிநாதனால் இயல்பாக  சாப்பிட முடியவில்லை ஆனால்  முத்துசாமி இயல்பாக அதை கடந்து சாப்பிட சொல்கிறான்.

 

கடைசியில்  முத்துசாமியின் மகளை மணம்  செய்து வைக்க போகிறார் என்ற செய்தியும்  அதை  பையனிடம்  சொல்லிவிட்டீர்களா என்பதற்கு   இல்லை என்ற பதிலை சாமிநாதனால்  முதலில் ஏற்க முடியவில்லை

 

//இதிலே நியாய அநியாயம் பாத்தா முடியுமா? நம்ம பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கணும். நாம அதைத்தானே பாக்க முடியும்?” என்று முத்துசாமி கேட்டார். சாமிநாதன் “உண்மைதான்” என்றார்//

 

பின்  சாமிநாதனும்  ஏற்று கொள்கிறான்  அந்த வீடைவித்து வந்து பணத்தில் தானே  தன் இரு மகளுக்கும் கல்யாணம் செய்து வைக்கிறான். அங்கு முத்துசாமியின் குடும்பம் சிதையும் போது இங்கு அவனின் குடும்பம் நிலைகொள்ளவதை அவன் ஏற்று கொள்கிறான்  தானே. பின் அவன் இதையும்  இயல்பாக ஏற்று கொள்கிறான்.

 

 

கதையின் ஆரம்பமே கதையின் சாரத்தை கூறுவதாக இருந்தது. ரயில் நிற்கும் அந்த  ஐந்து நிமிடம் ஒழுங்காக ஏறினால் இரண்டு மூன்று நிமிடம் மீதி இருக்கும் ஆனால் எல்லாம் ஒருவரை ஒருவர் இடித்து ” மனிதர்களாலான ஒரு கார்க்கை வைத்து வாசலை அடைத்துவிட்டது போலிருக்கும்”.  ஆனால் இறுதியில் எல்லாரும் அந்த ரயிலில் ஏறி விடுவது தான் ஆச்சரியம் . நல்ல ஒரு கதை .

 

நேற்று தான் ரஷோமோன் திரைப்படத்தை  பார்த்தேன். ரயிலில் சிறுகதை அந்த ரஷோமோன் விளைவு பாணியில் இருப்பதாக எனக்குப்பட்டது.

 

அன்புடன் ,

 

சுகதேவ்.

 

மேட்டூர்.

 

 

அன்புள்ள ஜெ

 

ரயிலில் ஒரு ஆழமான சிறுகதை. அதன் நுட்பங்களைப்பற்றி பேசுவதற்கு நிறையவே இருக்கின்றன. முக்கியமானச் சிறப்பு அதன் லௌகீகத்தன்மைதான். எந்தவிதமான இலட்சியக் கற்பனைகளும் இல்லாமல், அழகுபடுத்தல்களும் இல்லாமல் யதார்த்தம்நோக்கித் திறக்கிறது இந்தக்கதை.

 

உலக இலக்கியத்தின் பெரும்படைப்புகள் எல்லாமே இரண்டு விஷயங்களைத்தான் சொல்கின்றன என்று  அப்டைக் ஒரு பேட்டியில் சொல்கிறார். மனிதனின் பாவனைகள், மனிதனின் கையாலாகாத்தனம். இரண்டுமே இந்த கதையில் உள்ளன. இரண்டுபேருமே பலவகையான பாவனைகள் வழியாக அந்தச்சந்தர்ப்பத்தைக் கடந்துசெல்கிறார்கள். சாமிநாதனுக்கு முத்துசாமியின் குடும்பத்துக்கு என்ன ஆயிற்று என்று தெரியுமா? தெரியாது என அந்தக்கதையில் இல்லை. அவர் அதிர்ச்சி அடையவில்லை. ஏனென்றால் தெரியும், ஆனால் தெரியாததுபோலவே வாழ்ந்துவிட்டார். மறந்தேகூட போயிருக்கலாம்

 

அதேபோல முத்துசாமிக்கு அவர்கள் சாமிநாதன் குடும்பத்திற்குச் செய்தவை  எவ்வளவுபெரிய தப்பு என்று தெரியுமா? தெரியும். ஆனால் எல்லா பொறுப்பையும் அப்பாமேல் போட்டுவிட்டு பேசுகிறார். அவர் ஒன்றுமே செய்யவில்லை என்று பாவனை செய்கிறார். ஆனால் தன் பெண்களுக்கு ஒரு நல்லது நடக்கும் என எதிர்பார்த்ததாகவும் சந்தடிசாக்கில் சொல்கிறார்

 

இந்தப்பாவனைகள் எல்லாமே அவர்களின் கையறுநிலையால்தான். பாம்பு தவளையை கவ்வி விழுங்கமுடியாவிட்டால் ரெண்டும் சாகும். அதே நிலைதான். விடவும் முடியாது விடாமலிருக்கவும் முடியாது

 

 

 

ஆனந்த் சுப்ரமணியம்

 

ரயிலில்- கடிதங்கள்1

ரயிலில் கடிதங்கள் -2

ரயிலில்- கடிதங்கள் 3

ரயிலில் -கடிதங்கள்-4

 

 

 

முந்தைய கட்டுரைடார்த்தீனியம் – பதட்டமும் விடுபடலும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விழா சிறப்பு விருந்தினர் அனிதா அக்னிஹோத்ரி