‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-71

bowதுண்டிகன் காவலனின் புலம்பல்களை கேட்காதவன்போல மருத்துவநிலைக்குள் புரவியில் மென்னடையில் சென்றான். வலியலறல்களும் துயிலின் முனகல்களும் நெளிவுகளும் அசைவுகளுமாக அந்த இடம் பரவியிருந்தது. அவற்றுக்கு இடையிலிருந்த இடைவெளி மேலும் இருண்டு செறிந்திருந்தது. அது இறப்பு என அச்சமூட்டியது. அந்த அலறல்களும் முனகல்களும் அசைவுகளும் உயிருக்குரியவை என இனியவையாக தோன்றின. அலறி நெளிந்துகொண்டிருந்த இருவருக்கு நடுவே இருந்த இருண்ட இடைவெளியை அவன் விழி சென்று தொட்டபோது உடல் குளிரில் என நடுங்கியது. நோக்கை திருப்பிக்கொண்டு உடலை இறுக்கி, கைகளை சுருட்டிப்பற்றியபடி அந்தச் சிறிய தொலைவை நெடும்பொழுதெனக் கடந்துசென்று பெருமூச்செறிந்தான்.

அங்கே குருதியும், சீழும், கந்தகமும், படிக்காரமும், பச்சிலைகளும் கலந்த கெடுமணம் மூச்சடைக்கும்படி எழுந்தது. நாற்றம் முகத்தில் ஒட்டடைபோல படியமுடியும் என அவன் அப்போதுதான் உணர்ந்தான். அறியாமலேயே கையால் முகத்தை வருடிக்கொண்டே இருந்தான். அந்தச் சீழ்நாற்றத்தை முன்னரே அறிந்திருந்தான். நாட்பட்ட சீழின் நாற்றம் அது. சூழ்ந்துகொள்ளும் நாற்றம். குருதிபோல் எரிவதோ கந்தகம்போல் தீய்வதோ படிக்காரம்போல் உவர்ப்பதோ அல்ல. மென்மையானது. பாய்வதற்கு முன்னர் புலி உறுமுவதுபோல மிகமிக மென்மையான பேராற்றல்கொண்டது. அவன் கடிவாளத்தைப் பற்றி இழுத்து நிறுத்தினான். அது என்ன? எங்கே அறிந்தேன்? சீழில் அல்ல. இத்தனை சீழை எங்கும் பார்த்ததில்லை. வேறெங்கோ.

கண்களை மூடியபோது விழிகளுக்குள் அலைகள் எழுந்தன. செல்க என புரவியை தட்டியபோது அது மெல்ல செல்லத் தொடங்கியது. அதன் தாளம் அவன் உடலுக்குள் எங்கெங்கோ சென்று நரம்புத்துடிப்புகளாக மாறியது. விழிகள் ஒரு நெளிவை கண்டுவிட்ட பின்னர்தான் அவை அதற்காக துழாவிக்கொண்டிருந்தன என்று அறிந்தான். நெஞ்சு திடுக்கிட நோக்கு கூர்ந்தான். அந்த நாகம் இருளுக்குள் இருளலையாக மறைந்தது. படுத்திருந்தவர்களுக்குள் நிறைந்திருந்த இருளுக்குள் விழிகள் நூற்றுக்கணக்கான நெளிவுகளை உருவாக்கிக்கொண்டன. உடல் அதிர்வடங்கியதும் அவன் முன்னால் சென்றான்.

அவை உயிரின் ஓசைகள் அல்ல என்று அவனுக்கு தோன்றியது. இறப்பின் ஓசைகள்தான் அனைத்தும். ஊற்றின், ஓடையின், ஆற்றின், அருவியின் ஓசைகள் எல்லாமே கடலின் ஓசைகளே. ஆம், என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்? நான் ஒருகணம்கூட ஒழியாமல் எண்ணிக்கொண்டிருப்பது சாவைப்பற்றி மட்டுமே. சாவின் ஓசைகளால் நிறைந்திருந்தது இருள். இருளே சாவாகவும் இருந்தது. அவன் நோக்கியபடியே சென்றான். காட்டுமரங்களின் இலைகளைக்கொண்டு உருவாக்கப்பட்டிருந்த படுக்கைகள். சிலருக்கருகே மரக்கிளைகள் நடப்பட்டு கைகால்கள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. கட்டுகள் பெரும்பாலும் இலைகளாலும் மரநார்களாலும் ஆனவை. மரவுரிகள் தீர்ந்துவிட்டிருக்கும். மருந்துகள் இருக்குமா? இல்லை இந்த மருத்துவநிலையே ஒரு நாடகம் மட்டும்தானா?

படுக்கையில் எழுந்தமர்ந்த ஒரு வீரன் அவனை நோக்கி “மிக எளிது!” என்று புன்னகைத்தான். துண்டிகன் நின்று “என்ன? என்ன?” என்றான். அவன் ஒருக்களித்து படுக்கையில் மீண்டும் விழுந்தான். அவன் என்ன சொன்னான் என்று திகைத்தபடி சிலகணங்கள் நோக்கிநின்றான். அவன் ஆழ்துயிலில் கிடந்தான். அவனேதானா? அவனிலெழுந்த வேறேதும் தெய்வமா? இங்கு விழியறியாமல் நிறைந்திருப்போர் எவரெவர்! துண்டிகன் மீண்டும் புரவியைத் தூண்டி முன்னால் சென்றான். பின்னால் “மிக எளிது!” என்னும் சொல் எழுந்தது. சொல்லப்பட்டதா, உளம் கேட்டதா? எது எளிது? எது மிக எளிது? விலக்குக! உளம்விலக்கிக் கொள்க! இல்லையென்றால் இங்கிருந்து மீள்தல் அரிது.

பாதையோரமாக உருண்டு வந்து படுத்திருந்த ஒருவன் தன் வலக்கையை நிலத்தில் ஓங்கி ஓங்கி அறைந்து “என்னை கொன்றுவிடுங்கள்! கொன்றுவிடுங்கள்! உத்தமரே, என்னை கொன்றுவிடுங்கள்! என் மூத்தோர் உங்களை வாழ்த்துவர். என் அன்னை உங்களை வணங்குவாள். என்னை கொன்றுவிடுக!” என்று அலறிக்கொண்டிருந்தான். துண்டிகன் கடந்து சென்றபோது அவன் தன் கையை நீட்டி “மருத்துவரே, எனக்கு நஞ்சூட்டுங்கள்! என் நரம்பொன்றை அறுத்துவிடுங்கள்! இவ்வண்ணம் இங்கு வலியில் துடிக்க நான் விழையவில்லை! நன்று செய்வீர்கள் எனில் இது ஒன்றையே செய்யுங்கள்!” என்றான். அவன் விழிகள் சிவந்து வெறித்திருந்தன. எங்கும் நரம்பு புடைத்து கொடிகளால் கட்டப்பட்டது போலிருந்தது அவன் உடல்.

கழுத்தறுக்கப்பட்ட கன்றுக்குட்டியென ஊளையிட்டுக்கொண்டிருந்த ஒருவனைக் கடந்து துண்டிகன் சென்றான். ஒருவன் எழுந்து எழுந்து விழுந்துகொண்டிருந்தான். அவர்கள் அனைவரிலும் மானுடமல்லாத ஒன்று இருந்தது. மானுடவியல்பு என்பது அறிந்த அசைவுகளும், பொருள்சூடிய சொற்களும் சேர்ந்து அமைப்பது. உள்தொடர்ச்சியால் அறியப்படுவது. சினம்கொண்டவர்கள், வெறியெழுந்தவர்கள், காமத்திலாடுபவர்கள் மானுடவியல்பை இழந்துவிடுகிறார்கள். தெய்வமெழுந்தவர்களிலும் மானுடவியல்பு இல்லை. பெருவலி கொண்டவர்களும் மானுடர்கள் அல்ல. உடல்கள், விலங்குகள். அல்லது அவர்கள் தெய்வமெழுந்தவர்களா என்ன?

எதிரில் கைவிளக்குடன் மருத்துவஏவலன் ஒருவன் வந்தான். துண்டிகன் இறங்கிக்கொண்டு “வணங்குகிறேன், உத்தமரே. நான் துண்டிகன், தேர்வலன்” என்றான். அவன் விழிகளில் சொல்லடங்கியிருந்தது. நெடும்பொழுதாக எதையுமே பேசாமலாகிவிட்டிருந்தமையால் உதடுகளும் தொண்டையும் அசைவை மறந்திருந்தன. வெறுமனே தலையை மட்டும் அசைத்தான். “உத்தமரே, நான் பீஷ்ம பிதாமகரின் மாணவரும் தேர்வலருமான வீரசேனரை பார்க்க விழைகிறேன். இது அரசரின் ஆணை” என்றான். கணையாழியை காட்டினாலும் மருத்துவஏவலன் அதை வாங்கிப்பார்க்க ஆர்வம் காட்டவில்லை. அவன் வெறுமனே கையை நீட்டி காட்டினான்.

“அங்கா?” என்றான் துண்டிகன். “ஆம்” என அவன் தலையசைத்தான். “உத்தமரே, என் விழிமயக்காக இருக்கலாம். ஆனால் நான் இங்கே ஒரு பாம்பை பார்த்தேன்” என்றான் துண்டிகன். மருத்துவஏவலன் “ஆம், இங்கே பாம்புகள் நிறையவே உள்ளன. அவ்வப்போது பாம்பு கடித்து பலர் இறக்கிறார்கள்” என்றான். “இத்தனைபேர் இருக்கையில் பாம்புகளா! அருகே உள்ள காடுகளிலிருந்து வருகின்றன போலும்!” என்றான் துண்டிகன். “இல்லை, காடுகளில் இருந்து சிற்றுயிர்களும் விலங்குகளும் வராமலிருக்க நெருப்பு அரண் போடப்பட்டுள்ளது. கந்தக அரணும் உள்ளது. இவை இந்த மண்ணில் நிறைந்துள்ள வளைகளினூடாக வருகின்றன.”

துண்டிகன் கீழே பார்த்தான். “இந்த மண்ணே பல்லாயிரம் வளைகளாலானது. யானைக்கூட்டங்கள் நடமாடும் அளவுக்கு பெரிய பிலங்கள் முதல் புழுக்களின் பாதைகள் வரை நாம் கரவுப்பாதைகளின் பெரிய வலைக்கு மேல் அமர்ந்திருக்கிறோம்” என்றான் மருத்துவஏவலன். “ஆகவே, நம்மால் நாகங்களை எவ்வகையிலும் தடுக்கமுடியாது.” துண்டிகன் “அவை ஏன் இங்கே வருகின்றன? இங்கே இரை என ஏதுமில்லையே” என்றான். “அவற்றின் இரை இந்த மண்ணில் நிறைந்துள்ள சிதல்தான். இங்கே சிதலின் மணம் பெருகியிருக்கிறது. சீழுக்கும் சிதலுக்கும் ஒரே நாற்றம்தான்” என்றான் மருத்துவஏவலன்.

துண்டிகன் மெய்ப்பு கொண்டான். ஆம், அந்த மணம்தான். தன் ஆழுள்ளம் தேடித்தேடி அலைந்தது சிதல்மணத்தின் நினைவொன்றைத்தான். இளமையில் அவனுடைய ஆடை ஒன்று தொலைந்துவிட்டிருந்தது. அவன் தந்தை புரவிகளுடன் தண்டகம் என்னும் ஊரில் நிகழ்ந்த விழாவுக்குச் சென்று மீண்டபோது கொண்டுவந்து அளித்த பரிசு. இரு வண்ணங்களில் அமைந்த பருத்தியாடை. அவன் குடியில் பிறிதெவருக்கும் இல்லாதது. பெரும்பாலானவர்கள் பார்த்தே இராதது. தந்தை அதை மூன்று வெள்ளிக்காசுகளுக்கு வாங்கினார். பத்து வெள்ளிக்காசுகளுக்கு ஒரு பரிக்குழவியை வாங்கமுடியும்.

அதை தான் ஆடையென அணியக்கூடும் என்றே அவனுக்கு தோன்றவில்லை. கைகளால் நீவிநீவி நோக்கிக்கொண்டிருந்தான். மென்மையான குழவியொன்றை தொட்டு வருடுவதுபோல. அதை நெஞ்சோடணைத்தபடி படுத்திருந்தான். முகத்தில் ஒற்றிக்கொண்டான். அதை வைத்துப்பூட்டிய மரப்பெட்டிக்கு அருகிலேயே அமர்ந்திருந்தான். அதை அணியும்படி அன்னையும் மூதன்னையும் சொல்லியும் அவனால் இயலவில்லை. அதை ஒவ்வொருநாளும் எடுத்துப் பார்த்து முகர்ந்து முத்தமிட்டு திரும்ப வைத்தான். “பெண் வளர்வதற்காக முறைமணவாளன் காத்திருப்பதுபோல” என அன்னை ஏளனம் செய்தாள்.

ஏழு மாதம் அதை அவன் அணியவில்லை. அதன்பின் உள்ளூர் விழவில் அதை அணியும்படி தந்தை ஆணையிட்டார். அன்று அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அதை அணிந்தபோது இரும்புக் கவசம் என எடைகொண்டிருந்தது. அவன் வெளியே வந்தபோது தான் பிறிதொருவனாக ஆகிவிட்டதாக உணர்ந்தான். அனைத்து விழிகளும் மாறிவிட்டிருந்தன. அவை வேறு எவரையோ நோக்கின. அந்நோக்கு தன்னையல்ல என உணர்ந்து அவன் அகம் சீற்றம்கொண்டது. அதை கிழித்து வீசிவிடவேண்டுமென எழுந்தது. ஆனால் அன்று பகலுக்குள் அந்த ஆடைக்குரியவனாக அவன் மாறிவிட்டிருந்தான். தன் உடலுக்குள் வேறொன்றாகப் பிறந்து வளர்ந்திருந்தான்.

பின்னர் அத்தனை விழவுகளிலும் அவன் அந்த ஆடையையே அணிந்தான். துவைத்து கஞ்சியிட்டு வெம்மைமிக்க எடை கொண்டு அழுத்தி புதியதென ஆக்கி அணிந்து வெளியே செல்லும்போது ஒவ்வொருவரும் தன்னைவிட கீழே என உணர்ந்தான். அதை அணிவதற்காகவே விழவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் சென்றான். அந்த ஆடையின் வண்ணமும் வடிவமும் அவன் என்று ஆகியது. தன் அகவையின் அப்பருவத்தின் உடல் அது. பின்னர் அறிந்தான், அத்தகைய நூற்றுக்கணக்கான உடல்களினூடாக ஓடிச்சென்றுகொண்டே இருக்கிறோம் என. கடந்தபின் நம்மால் அவ்வுடலை நினைவுகூரவே இயல்வதில்லை. அது எவருடையதோ என ஆகிவிட்டிருக்கிறது. ஓவியங்களில் அரசர்களை பார்க்கையில் அந்த உடலில் இருந்து அவர்கள் நெடுங்காலம் முன்னரே வெளியேறியிருப்பார்கள் என நினைத்துக்கொள்வான். அதன்முன் வந்து நின்றால் யார் இவர் என்றே அவர்கள் துணுக்குறுவார்கள்.

அவன்மேல் பொறாமை உருவாகிக்கொண்டிருந்ததை அறிந்தாலும் அது அவனை உளம்மகிழச் செய்தது. பின்னர் ஒருநாள் அவன் பெட்டியைத் திறந்து நோக்கியபோது ஆடை அங்கே இருக்கவில்லை. முதல் கணத்திலேயே அது முற்றாக மறைந்துவிட்டது என உள்ளம் உணர்ந்து குளிர்ந்துறைந்தது. ஆனாலும் அது எங்கோ இருக்கும் என தேடத் தொடங்கினான். அனைவரிடமும் உசாவினான். சினந்தான், அழுதான், பித்தன்போல் அலைந்தான். அது எங்குமிலாதபடி மறைந்துவிட்டிருந்தது. அந்த ஏக்கம் அவனை தளர்த்தியது. நோயுற்று விழிகளில் ஒளியும் வயிற்றில் அனலும் அணைந்து சொல்லிழந்து தனித்தான். அவனை மீட்க அன்னையும் மூதன்னையும் முயன்றனர். அவனுக்கு வேறு ஆடை வாங்கி அளிப்பதாக உறுதியளித்தனர். அவனை புதிய ஊர்களுக்கு அழைத்துச்சென்றனர். மீளமீள அவனிடம் நல்லுரை உரைத்தனர். அன்னை நயந்துரைக்க தந்தை கடிந்துரைத்தார்.

உண்மையில் அவன் மீள விழையவில்லை. மீண்டு எழும் அவ்வுலகில் அந்த ஆடை இருக்காதென்பதனால் அந்த ஆடை நினைவென்றும் துயரமென்றும் எஞ்சியிருக்கும் உலகையே நீட்டிக்க விழைந்தான். ஆனால் மிக விரைவில் அந்த உலகம் கரைந்துகொண்டிருந்தது. நாளென்று சூழும் புறம் அவனை உருமாற்றிக்கொண்டே இருந்தது. அவன் அந்த ஆடையை மறந்தான். எப்போதேனும் கனவுகளில் மட்டும் அது எழுந்தது. விழித்து அமர்ந்து ஏங்கி விழிகசிந்தான். ஒவ்வொன்றுக்கும் நிகராக ஆயிரத்தை வைக்கும் விரிவுள்ள புறவுலகில் அவன் மீண்டும் புதியவனாக எழுந்தான்.

அதன்பின் ஒருமுறை இல்லத்தின் பின்புறம் பழைய புரவிச்சேணங்களை இட்டுவைக்கும் சிற்றறைக்குள் சேணம் ஒன்றை எடுப்பதற்காகச் சென்றபோது அவன் அந்த ஆடையை பார்த்தான். கீழே கிடந்த இரும்பாலான கால்வளையம் மண்ணுடன் சேர்ந்து துரும்பெடுத்திருந்தது. அதை தூக்கியபோது உதிர்ந்தது. கூரையின் வெயில்குழல்களின் ஒளியில் அப்பால் தன் ஆடை கிடப்பதை கண்டான். வண்ணம் மாறியிருந்தாலும் அதன் வடிவமே ஆடையென காட்டியது. மெல்ல சென்று குனிந்து நோக்கியபோது உணர்ந்தான், அது ஆடை அல்ல. சிதல் ஆடைக்குமேல் உருவாக்கிய கூடு. ஆடையின் அதே வடிவம், அதே நெளிவுகள். அதன் அணிநெசவுகள்கூட மென்மண்ணால் உருவாகியிருந்தன.

அவன் அதை விரலால் தொடப்போய், தயங்கினான். மீண்டும் மெல்ல தொட்டான். புண் பொருக்கு கட்டியதுபோலிருந்தது. அதை உடைத்தான். உள்ளே வெண்ணிறத்தில் சிதல்கள் ஓடிக்கொண்டிருந்தன. உயிருள்ள சீழ். சீழ்மணம். அவன் அந்த ஆடைவடிவை தட்டித்தட்டி கலைத்தான். சிதல்களின் வழித்தடம் மண்ணில் எஞ்சியிருந்தது. அதையே நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் பெருமூச்சுடன் எழுந்து மீண்டுவந்தான். அதை அவன் எவரிடமும் சொல்லவில்லை. நெடுநாட்களுக்குப் பின் ஒரு கனவு வந்தது. அவன் துயின்றுகொண்டிருந்தான். உடல் மண்ணாலானதாக இருந்தது. உள்ளே சிதல்கள் ஓடிக்கொண்டிருந்தன.

bow“இவர்தான்” என்று மருத்துவஏவலன் சொன்னான். அவன் தலைவணங்க மருத்துவஏவலன் விலகிச் சென்றான். ஒருமுறை நோக்கி அது வீரசேனர்தான் என்று உறுதி செய்தபின் துண்டிகன் படுக்கையில் படுத்திருந்த அவரை அணுகி நின்றான். அவர் உடலில் இருந்து கந்தகம் உடல் வெப்பத்தால் ஆவியாகும் கெடுமணம் எழுந்தது. கந்தகத்திற்கும் அழுகும் மணம் உண்டு. உடல் அழுகும் மணம் வேறு. கந்தகம் நிலம் அழுகுவதன் கெடுமணம். அவன் வீரசேனரின் கால்களைத் தொட்டு “வீரரே!” என்றான். அவன் அழைத்த பின்பே அவர் கண்களைத் திறந்து “நீங்களா? நீங்களா?” என்றார். “ என்னை அறிவீரா?” என்றான் துண்டிகன் வியப்புடன்.

வீரசேனர் முற்றாக விழித்துக்கொண்டு “நீ யார்?” என்று கேட்டார். “நான் துண்டிகன். அரசர் ஆணைப்படி தங்களை பார்க்க வந்தேன். தங்கள் உடல்நிலையை நோக்கி பீஷ்ம பிதாமகரிடம் சொல்லும்படி ஆணை” என்றான். வீரசேனர் “உங்களுடன் வந்தவர்கள்! இவர்களை நான் முன்னரே அறிவேன்!” என்றார். “யார்?” என்று துண்டிகன் திரும்பிப்பார்த்தான். “இவர்கள்! இங்கெலாம் இவர்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். குளிர்ந்தவர்கள். அவர்கள் வருகையிலேயே கைகளும் கால்களும் குளிர்கொண்டு விரைத்துக்கொள்கின்றன” என்றார் வீரசேனர். “பலமுறை வந்திருக்கிறார்கள். நீங்கள் வருவதை தொலைவிலேயே கண்டேன்.”

துண்டிகன் “தங்கள் உடல்நிலை எவ்வாறு உள்ளது?” என்றான். “நான் இவர்களுடன் செல்வேன். இவர்களை பார்க்க முடிவது என்பதே அதற்கான அறிகுறிதான்” என்றார் வீரசேனர். விழிகள் வெறித்து உருள “இவர்கள் என்னை அழைத்துச் செல்வார்கள்… ஆம்” என்று மெல்லிய குரலில் சொன்னார். “பிதாமகரிடம் சொல்லுங்கள், அவரிடமிருந்து அவன் விலகிச் செல்வதை நான் பார்த்தேன். அவரைப் போன்றே தோற்றம் கொண்டவன். ஆனால் வைரங்கள் பதிக்கப்பட்ட பொன்முடியும் ஒளிரும் குண்டலங்களும் பொற்கவசமும் அணிந்தவன். மின்னல் கதிர்போல் ஒளிவிடும் வில்லேந்தியவன்… அவரிடமிருந்து விலகிச்சென்றான்.”

“எப்போது?” என்று துண்டிகன் கேட்டான். “போர்க்களத்தில் என் முன்னாலிருந்த நோக்காடியில் அவரை பார்த்தபடியே தேர்செலுத்திக்கொண்டிருந்தேன். அவர் ஒருவராகவும் இருவராகவும் அதில் தெரிந்தார். அவன் அவர் உடலாக ஆகி உடன்நின்றிருப்பதுபோல. நோக்காடி அசையும்போதெல்லாம் அவருடைய ஆடிப்பாவையும் உடைந்து அவர்கள் இரண்டானார்கள். மீண்டும் ஒன்றாகினர். முன்னரே அவருடைய தேர்ப்பாகனாகிய என் மூத்தவர் உக்ரசேனர் என்னிடம் கூறியிருந்தார், அவரில் எட்டு வசுக்கள் குடிகொள்வதாகவும் ஒவ்வொரு முறையும் ஒரு வசுவே அவர்களில் எழுந்து அப்போரை நடத்துவதாகவும். அந்த எண்ணத்தால் ஏற்பட்ட உளமயக்கா என்று நான் ஐயப்பட்டேன்.”

“ஆனால் ஆடிப்பாவையை விழிநுனியால் நோக்காமலிருக்க என்னால் இயலவில்லை. என் பின்னால் நின்று போரிடுபவர் இருவர் என்ற உணர்வை முதுகுகொண்ட நுண்ணுணர்வும் வலுவாக அடைந்துகொண்டே இருந்தது. போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோது எதிரில் அவன் வந்தான்…” என்றார் வீரசேனர். “யார்?” என்றான் துண்டிகன். “சிகண்டி, ஆணிலி. ஒருகணம்தான் என் ஆடியில் நான் அந்தத் தேவனின் முகத்தை பார்த்தேன். திகைத்ததுபோல், கசந்ததுபோல் ஒரு முகம். பின்னர் அவன் அகன்றுவிட்டிருந்தான். வில் தாழ்த்தி துயருடன் நோக்கிக்கொண்டிருந்த பீஷ்ம பிதாமகரின் முகத்தையே அதன்பின் ஆடியில் பார்த்தேன்.”

“தேரை திருப்புகையில் அன்று பீஷ்மரின் பின்னால் எட்டு நிழல்கள் எழுந்து சரிந்திருப்பதை கண்டேன். அவர்கள் எண்மர்தான். எண்மரும் அவரிடமிருந்து விலகிவிட்டார்கள். ஐயமில்லை இனி அவர் ஆற்றலற்றவர். அவர் உடல்தளர்ந்திருந்தார். ஒவ்வொருமுறை நோக்குகையிலும் இறப்பற்றவர், தோல்வியற்றவர், மானுடம்கடந்த பிறிதொருவர் என நமக்கு தோன்றும் ஒன்று அவரிடமுண்டு. அது முற்றாக அகன்றுவிட்டிருந்தது. இன்று அவர் உயிர்துறக்கக்கூடும்” என்றார் வீரசேனர்.

துண்டிகன் “இன்றுமுதல் நான் அவருக்கு தேரோட்டவிருக்கிறேன்” என்றான். வீரசேனர் சிலகணங்கள் அவனை கூர்ந்து நோக்கிவிட்டு “ஆம், பிறிதொரு தேர்வலன் அவருக்கும் தேவை. நீர் எவரென்று சொன்னீர்?” என்றார். துண்டிகன் தன் குலத்தையும் தந்தை பெயரையும் சொன்னான். “அறிந்திருக்கிறேன். உமது தந்தை பலமுறை குருநிலைக்கு வந்து பிதாமகரிடம் சொல்லாடியிருக்கிறார். தங்களை அவர் அறிவார்” என்றார் வீரசேனர். பின்னர் புன்னகைத்து “அவருடன் களம்படும் நல்லூழ் கொண்டவர் நீங்கள். அவர் மாணவர்களாகிய அனைவருமே அந்த நல்லூழை விழைபவர்கள்தான். அவர் பொருட்டு உயிர்துறந்தோம் என்ற நிறைவுடன் இங்கிருந்து செல்கிறோம்” என்றார்.

துண்டிகன் என்ன சொல்வது என்று அறியாது நோக்கிக்கொண்டிருந்தான். வீரசேனர் தன் கைகளை நீட்டி அவன் கைகளை பற்றிக்கொண்டார். “சற்று முன்னர் வரை எண்ணிக்கொண்டிருந்தேன், நான்கு தலைமுறை மாணவர்களை பயிற்றுவித்த பின்னரும் களத்தில் என் ஆசிரியன் தனித்து நின்றிருக்கவேண்டுமா என்று. ஆனால் என்றும் அவர் தனியரே. இக்களத்தில் எவராயினும் தனியரே. ஆனால் எந்தக் கோழையாவது வஞ்சம் கொண்டு அவர் முதுகின் பின் ஒரு அம்பு செலுத்தி களத்தில் வீழ்த்திவிட்டால் அவ்விழிவுக்கு அவருக்கு முன் களம்பட்ட அத்தனை மாணவர்களுமே பொறுப்பேற்க வேண்டுமே என்று எண்ணினேன்.”

“அது நிகழாது” என்று கூரிய குரலில் துண்டிகன் சொன்னான். “நேர்நின்று கற்றால்தான் மாணவன் என்றில்லை.” வீரசேனர் “ஆம், நீர் வந்ததுமே அதை அறிந்துகொண்டேன். நீர் அவருக்குரியவர், அதன்பொருட்டு தேர்வுசெய்யப்பட்டவர். அவருடன் இரும். களம்பட்ட நாங்கள் அனைவரும் உம்முடன் வந்திருப்போம். என் ஆசிரியர் நிமிர்ந்து களம் நிற்க வேண்டும். அடிபணியும் மைந்தர் குருதிநிரையை கைதூக்கி வாழ்த்தும் மூதாதையின் புன்னகையுடன் உயிர் துறக்கவேண்டும். விண்ணுலகில் அவருக்காக சந்தனுவும் பிரதீபரும் ஹஸ்தியும் குருவும் யயாதியும் காத்து நின்றிருப்பார்கள்” என்றார்.

“அவர் அவர்களில் ஒருவர். இங்குள்ளவர் அல்ல. கதைகளில் வாழும் மூதாதைகளில் ஒருவர். இங்கிருக்கும் உலகைவிட நூறுமடங்கு பெரிது கதையுலகு. அதில் ஒரு சிறு துளி காலத்தில் சற்றே பிந்தி, இவ்வுலகில் தலைநீட்டி நின்றிருக்கிறது. அதுதான். அந்தப் பொருந்தாமையினால் இங்கிருக்கும் ஒவ்வொருவருடனும் அவர் முட்டிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் அவரை புண்படுத்தியிருக்கிறோம். தேர்வலரே, அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் ஒரு சொல்லம்பையேனும் பிதாமகர் மேல் வீசாத எவரும் இருக்கமாட்டார்கள்.”

“துரியோதனருக்காக படைகொண்டு எழுகிறார் என அவர் சொன்னபோது மாணவர்கள் அனைவரும் அவரை பழித்தோம். அவர் வெற்றிகொள்ளும் தரப்பில் நிற்க விழைகிறார் என்றும், அதனூடாக சென்றபின்னர் இங்கொரு நடுகல்லை ஈட்ட எண்ணுகிறார் என்றும் அவரிடம் நானே சொன்னேன். சொல்லில்லாது விழிதாழ்த்தி தாடியை நீவிக்கொண்டிருந்தார். சென்ற ஒன்பது நாட்களில் இந்தப் படைகளில் நான் செவிகொண்ட அனைவருமே அவரை பழித்தனர். இவ்வழிவுக்கும் போருக்கும் அவரே ஊற்றென்று அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அரங்கிலும் அடுமனைகளிலும் அவரை தூற்றுகிறார்கள். கௌரவரும் பாண்டவரும் அவரை வெறுக்கிறார்கள். சொல்லாதவர் எண்ணத்தால் அம்பு தொடுக்கிறார்கள். உடலெங்கும் இடைவெளியிலாது அம்புகள் தைத்து விழுந்து கிடப்பவராகவே அவரை என்னால் எண்ண இயல்கிறது. மயிர்க்கால்கள் அனைத்தும் அம்புகளாகிவிட்டவைபோல்.”

“ஆனால் அதுவே இயல்பு. நம் வீழ்ச்சிகளுக்கும் சரிவுகளுக்கும் தந்தையரை குறைசொல்வதற்கே நாம் பயின்றிருக்கிறோம். தந்தைவடிவானவருக்கு நிகராக குடிப்பழியும் குலவஞ்சமும் வேறெவருக்கும் அளிக்கப்படுவதில்லை. நம் பொறுப்புகள் அனைத்தையும் தந்தையரிடமே அளிக்கிறோம். நமது கீழ்மைக்கான பொறுப்பையும் அவர்களிடமே கொடுக்கிறோம். அவர்களும் உளம் கனிந்து ஆமென்று பெற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறே என்று தாங்களும் நம்புகிறார்கள். மகவென்று நெஞ்சில் உதைப்பதை மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் அதே உளநிலையில் இறுதிக்கணம் வரை அவர்கள் நீடிக்கிறார்கள். அவர்கள் மண்மறைந்து சொல்லிலும் கனவிலும் விண்ணிலும் நிறைந்த பின்னர் அவர்களுக்கு நாம் என்ன அளித்தோம் என்பதை நாம் உணர்வோம்.”

வீரசேனர் மெல்ல மூச்சு வாங்க கண்களை மூடினார். அச்சொற்கள் அவருக்குள் ஊறிநிறைந்து காத்திருப்பதாகத் தோன்றியது. எஞ்சிய மூச்சே அதுதான் என. இமைகளுக்குள் விழிகள் மெல்ல அசைந்துகொண்டே இருந்தன. துண்டிகன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அவர் உடலிலிருந்து அந்த அதிர்வு மெல்ல வடிந்துசெல்வதுபோல் தோன்றியது. “ஆனால் நான் நிகர்செய்துவிட்டேன். நான் அளித்துவிட்டேன்“ என்றார். மேலும் அவர் பேசக்கூடும் என துண்டிகன் காத்திருந்தான். அவர் நெடுநேரம் பேசவில்லை. மூச்சு மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. காற்றுகாட்டிபோல அவ்வப்போது திடுக்கிட்டு திசைமாறியது. அவர் உடல் இன்னொன்றாக மாறிக்கொண்டிருந்தது. அதிலிருந்து உயிர் என உணரும் ஒன்று, அது அசைவா, தோலின் ஒளியா, மெய்ப்பா ஏதோ ஒன்று அகன்றுகொண்டிருந்தது. குடுவையிலிருந்து துளைகளினூடாக நீர் ஒழிந்து மறைவதுபோல. சற்று நேரம் கழித்து அவன் அவர் கைகளை பற்றினான். அவற்றில் உயிரில்லை என்பதை உடனே உணர்ந்தான்.

துண்டிகன் அவர் கையை வைத்துவிட்டு எழுந்துகொண்டான். சூழ்ந்திருந்த இருளையும் வானில் நிறைந்திருந்த விண்மீன்களையும் நோக்கிக்கொண்டு நின்றான். மூச்சை இழுத்து இழுத்து விட்டான். மருத்துவஏவலனை அழைத்து சொல்லவேண்டுமா என எண்ணினான். வேண்டாம் என்று தோன்றியது. அவன் மெல்ல நடந்து தன் புரவியை நோக்கி சென்றான். கால்வளையத்தை மிதித்துச் சுழற்றி சேணத்தின்மேல் அமர்ந்த கணம் அந்த ஆடை நினைவுக்கு வந்தது. அது எவ்வாறு அங்கே சென்றிருக்கும் என்றும்.

முந்தைய கட்டுரைஅம்பேத்கரும் இலக்கியமும்
அடுத்த கட்டுரைவெள்ளையானையும் உலோகமும்