.ராஜ் கௌதமன்
ராஜ்கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்
ராமச்சந்திர குஹா தனது “இந்தியா காந்திக்குப் பிறகு” என்ற புகழ்பெற்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் சமகால வரலாற்றெழுத்து சந்திக்கும் பிரச்சினைகளை விளக்குவதற்கு என்று ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார். அப்பகுதியில் வரலாற்றெழுத்து சமகாலத்தை நோக்கி முன்னேறும் போது சிக்கல்கள் நிறைந்ததாக கருத்து முரண்களை ஏற்படுத்துவதாக இருப்பதை சுட்டியிருப்பார். ஆனால் காலம் பின்னுக்குச் செல்லச் செல்ல வரலாற்றெழுத்து அவ்வளவு முரண்களை கிளர்த்துவதில்லை. ஏனெனில் முற்கால வரலாற்றினை நாம் பெரும்பாலும் உணர்ச்சிகளாகவோ தரப்புகளாகவோ நினைவில் வைத்திருப்போம். உதாரணத்துக்கு சோழர்களின் காலகட்டத்தை கலைஞர்கள் கலை செழித்த காலம் என்பார்கள். மார்க்ஸியர்கள் அடிமைமுறை மிகக்கடுமையாக நிலவிய காலகட்டம் என்பார்கள். தமிழியர்கள் பிராமண மேலாதிக்கம் தமிழ்ச் சமூகத்தில் பரவலாக்கப்பட்ட காலகட்டம் என்பார்கள். வரலாற்று ஆசிரியர்கள் நிலையான நெடுங்கால ஆட்சியின் காரணமாக சீரான நிர்வாகமும் உள்நாட்டு போர்களற்ற நிலையான வாழ்க்கை முறையும் நிலவியும் காலகட்டம் என்பார்கள். ஒவ்வொரு பிரிவுக்கு கீழே வருகிறவர்களும் தங்களுக்கு உவப்பளிக்கும் சான்றாதாரங்களை அடுக்கிக் கொண்டே செல்வார்கள். ஆகவே அந்த காலகட்டத்தை ஒருவகையில் ஒருவர் விளக்கத் தொடங்கும் போதே அவர் எந்த சிந்தனைப் பள்ளியை சேர்ந்தவர் என்பதை ஊகித்து அவருடன் இணைந்து கொள்ளவோ விவாதிக்கவோ விலகிவிடவோ முடிவு செய்து விடுவோம். ஆகவே விவாதங்கள் இத்தகைய முற்கால வரலாறுகளில் சாத்தியமில்லை.
நாம் பெரும்பாலும் சமகால வரலாற்றையே தரவுகளாக அல்லாமல் உணர்ச்சிகளாக நினைவில் நிறுத்தக்கூடிய மனநிலை உடையவர்கள். வரலாற்றை தரவுகளாக பார்க்காமல் நம்முடைய அரசியல் சார்பு சுயசாய்வு போன்றவற்றை காரணிகளாக்கியே பார்க்கிறோம். ஆகவே வரலாறு என்று நம் மனதில் எஞ்சுவது ஒரு எளிய உணர்ச்சிச் சித்தரமாக நின்று விடுகிறது. அதிலும் சுதந்திரத்துக்கு முற்பட்ட பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு நம்முடைய தேசிய உணர்ச்சியுடன் இணைந்திருப்பதால் பிரிட்டிஷார் குறித்த நம்முடைய மனப்பதிவு இந்திய தேசியத்தை நாம் ஏற்கிறோமா மறுக்கிறோமா என்பதைச் சார்ந்தே கட்டமைக்கப்படுகிறது.
சுதந்திர காலகட்ட சிந்தனையாளர்கள் தலைவர்கள் என்று அனைவரையும் இந்த மனச்சாய்வின் பாற்பட்ட முன்முடிவுகளின் அடிப்படையில் ஏற்கவும் மறுக்கவும் செய்கிறோம். அதாவது நமக்கு அக்காலகட்ட வரலாறு ஒரு நாடக நிகழ்வினைப் போல மனதில் பதிந்துள்ளது. நம்முடைய அன்றாட வாழ்வில் நாடகத்தனமான உணர்ச்சித் தருணங்களை நாம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. ஆனால் அத்தகைய ஒரு நாடகத்தனத்தை வரலாற்றின் மீது போட்டுப் பார்க்க நாம் தயங்குவதில்லை. ஆனால் சற்று ஆழ்ந்து வாசிக்கத் தொடங்குகிறவர்களுக்கு ஒன்று புரியத் தொடங்கும். மேற்புறச் சலனங்களைத் தாண்டி பெரும்பாலானவர்களின் அன்றாடம் அன்றும் இன்றும் ஒன்று போலவே இருக்கிறது என்ற உண்மை அது. எல்லாக் காலங்களிலும் மக்களுக்கு மேல் அரசும் நிர்வாகமும் ஆதிக்கத்தை செலுத்தியிருக்கின்றன. மக்களும் அரசுகளை ஏதோவொரு வகையில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். ஆகவே ஒரு காலகட்டத்தை நாம் அறிந்து கொள்ள முனையும்போது அக்காலகட்டத்தில் நிலவிய அரசு நிர்வாகம் அதாவது நிதியமைப்புகள், நீதியமைப்புகள், பொருளாதார வாய்ப்புகள், உற்பத்தி முறை போன்றவற்றின் அடிப்படைகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அதன்பின்னரே அந்த குறிப்பிட்ட காலத்தில் மக்களை பாதித்த கருத்தியல் சக்திகள், பொருளியல் கூறுகள், ஆழ்மன நம்பிக்கைள் போன்றவை பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.
ராஜ் கௌதமனின் “ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்” பிரிட்டிஷ் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய பொருளியல் மாற்றங்களையும் அதன்வழியாக தமிழக தலித் சமூகம் மெல்ல மேலெழுந்து வரும் விதத்தையும் மேற்கூறிய அரசின் நிர்வாகக்கூறுகளைக் கொண்டு ஆராயும் நூல். முழுக்க முழுக்க நிர்வாகவியல் ரீதியாக அக்காலகட்ட வரலாற்றையும் சமூக மாற்றங்களையும் அணுகி எழுதப்பட்டிருக்கும் நூல் இது.
டேவிட் லட்டனின் Peasant History of South India மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பதிப்பான Early capitalism and Local History in south India ஆகிய இரு நூல்களை முதல் நூலாகக் கொண்டு ராஜ் கௌதமனின் இந்த ஆய்வு நூல் எழுதப்பட்டுள்ளது. எனினும் ராஜ் கௌதமன் முன்னுரையிலேயே “டேவிட் லட்டன் தன் நூலில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொள்கைகளை ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்குரிய பொருளாதாரச் சுரண்டலுக்கு ஏற்றவை என்ற கோணத்தில் ஆராயவில்லை. மாறாக,காலணியட்சியின் செயல்பாடுகளை சுதேசிய கிராமப்புற மேம்பாட்டுக்குரியவையாக கவனப்படுத்தியுள்ளார். மேலைநாட்டாரின் ஆய்வுகளில் இத்தகு பாரபட்சம் இருக்கவே செய்யும். ஆனால் அவர்களது ஆய்வு முறைமைகளை மறுக்க முடியாது” என்று லட்டனின் நோக்கத்தினை தெளிவுபடுத்தி விடுகிறார்.
ஆய்வுச் சமநிலையுடன் இறுக்கமும் கூர்மையும் கொண்ட மொழியில் எழுதப்பட்டிருக்கும் இச்சிறுநூல் பல விவாதப்புள்ளிகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.
டேவிட் லட்டன் பத்தாம் நூற்றாண்டுக்கு பிந்தைய தமிழ் நிலத்தை நான்காகப் பிரிக்கிறார். பிற்கால சோழ பாண்டிய பேரரசுகளின் காலகட்டம். சுல்தானிய பேரரசுகள் விஜயநகரப் பேரரசுகள் ஆதிக்கம் செலுத்திய பதினான்காம் நூற்றாண்டுக்கு பிறகான பதினாறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம். அதன்பிறகு மராட்டியர் மொகலாயர் என்று எழுச்சியும் வீழ்ச்சியுமான ஒரு காலம்
அதன்பிறகு பிரிட்டிஷ் ஆட்சி மெல்ல தமிழ்நிலத்தில் வேரூன்றத் தொடங்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமும் அதற்கு பிந்தைய பிரிட்டிஷ் அரசின் காலமும்.
சோழர் காலத்தில் ஏற்பட்ட நிலையான ஆட்சியின் காரணமாக உருவாகிவந்த கிராம விவசாய முறையும் கிராமத்தினரிடமிருந்து வரிவசூல் செய்யும் பொறுப்பு சிறுசிறு மாற்றங்களுடன் தொடர்ந்ததையும் விவரிப்பதாக முதல் பகுதி அமைந்துள்ளது. விஜய நகரப் பேரரசு தமிழ் நிலத்தினை மூன்று கூறுகளாக பகுக்கிறது. மதுரை(தென் தமிழகம்) செஞ்சி(வடதமிழகம்) தஞ்சை(மத்திய தமிழகம்) என்று இம்மூன்று பிரிவுகளில் பள்ளர்,பறையர்,சாணார்(நாடார்) ஆகிய ஜாதியினர் ஒடுக்கப்பட்டு பண்ணை அடிமைகள் ஆக்கப்படுவதையும் நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் மாறுவதையும் முதல் பகுதியில் ஆசிரியர் விளக்குகிறார். டேவிட் லட்டன் தமிழக நிலத்தை தன்னுடைய ஆய்வு வசதிக்காக தமிழ் நிலத்தை வளத்தின் அடிப்படையில் மூன்றாகப் பகுக்கிறார். விவசாயத்துக்கு போதுமான நீர்வளமும் சாதகமான சூழலும் நிலவும் பகுதியை மென்புலம் எனவும் பாதகமான விவசாயச்சூழல் கொண்ட பகுதிகளை வன்புலம் எனவும் இவற்றுக்கு இடைப்பட்ட சூழல் நிலவும் பகுதிகளை கலப்புப்புலம் என்று பிரிக்கிறார்.
ராஜ் கௌதமன் இந்த நிலச்சூழலுக்கு ஏற்றவாறு ஜாதிய அடக்குமுறைகளின் தன்மை மாறுவதை சுட்டுகிறார். உதாரணமாக திருநெல்வேலியை சூழ்ந்திருந்த மென்புலப் பகுதிகளில் நில ஆதிக்கம் பிராமணர்-வெள்ளாளர் கூட்டிடம் இருந்தது. மென்புலப் பகுதிகளிலேயே விளைச்சல் மிகுந்திருந்தது. மிகப்பெரிய பரப்புகளில் விவசாயப் பணிகள் நிகழ்ந்ததால் நிலையான ஊழியர் அமைப்பு நில உடைமையாளர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. பள்ளர்களும் பறையர்களும் இந்த மென்புலப்பகுதிகளில் ஏறக்குறைய அடிமைகளாகவே உழைத்திருக்கின்றனர். ஆனால் வன்புல கலப்புப்புலப் பகுதிகளில் நிலத்தின் மீது ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாடு இல்லாததால் அப்பகுதிகளில் வாழ்ந்த தலித் சாதியினர் நிலத்தினை சொந்தமாக்கிக்கொண்டு உழைத்த சுதந்திரமானவர்களாக இருந்திருக்கின்றனர். தென் தமிழகத்தை விட மத்திய தமிழகத்தில் தஞ்சையைச் சூழ்ந்த பகுதிகளில் கடுமையான ஜாதிய ஒடுக்குமுறை நிலவியதற்கு விவசாயம் செழித்தோங்கியதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற ஊகிக்க இந்த கோட்பாடு இடமளிக்கிறது.
சோழர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் தஞ்சையில் அமைந்த நாயக்க அரசு அதற்கு பிந்தைய மராட்டிய அரசு ஆகியவை குறித்த குறிப்புகள் இந்த நூலில் குறைவாகவே உள்ளன. ஆனால் தமிழகத்தின் மற்ற பிரதேசங்களை விட தஞ்சை மராட்டியர் ஆட்சி காலத்தில் மன்னர்களும் உயர் அதிகாரிகளும் உச்சகட்ட போகத்தில் திளைத்திருப்பதை ராஜ் கௌதமன் சுட்டிக்காட்டுகிறார். விவசாயத்துக்கு ஏற்ற சூழல் பெரும் சவால்களை அளிக்காத சமவெளி என்று பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மிக அதிகமான உணவு உற்பத்தி செய்த பிரதேசமாக தஞ்சை இருந்திருக்கிறது. இசை நாட்டியம் போன்ற கலைகள் வளர்க்கப்பட்ட மண் என்று தஞ்சையைப் பற்றி ஒற்றைப்படையாக கொடுக்கப்பட்ட சித்திரத்தை இப்பகுதி கேள்விக்கு உட்படுத்துகிறது. நாயக்கர் ஆட்சி வீழ்ந்த பிறகு தஞ்சை அரசாங்கம் சுகபோகத்தினால் வீழ்ந்த வலுவற்ற ஒன்றாக மாறியிருப்பதை ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தஞ்சை மராட்டியர்கள் அளித்த லஞ்சத்தில் இருந்து அறிய முடிகிறது என்கிறார் ராஜ் கௌதமன்.
செஞ்சிப்பகுதியைப் பற்றிய விவரிப்புகளில் சங்ககாலந்தொட்டு தொண்டைமண்டலம் எவ்வாறு வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் தமிழ் நிலம் மற்ற மொழிப்பிரதேசங்களுடன் தொடர்பு கொள்ளும் வாயிலாக செஞ்சி அமைந்திருந்ததால் பௌத்தம் சமணம் போன்ற சமயங்களை எவ்வாறு உள்ளிழுத்துக் கொண்டது என்பதையும் இருபதாம் நூற்றாண்டு வரை பௌத்தத்தின் தாக்கம் வட தமிழகத்தில் நீடித்தது குறித்தும் சுருக்கமாக விவரிக்கிறார்.
நூலின் முதல் பகுதி பிரிட்டிஷ் ஆட்சி நிலைகொள்வதற்கு முன் தமிழகத்தில் நிலவிய உணவு உற்பத்தி முறை ஜாதியப்படிநிலைகள் குறித்த ஒரு குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கிறது. இரண்டாயிரம் வருடங்களாக தலித்துகள் ஒடுக்கப்பட்டனர் என்ற தொன்மங்களை மறுத்து பல்லவர் காலத்தில் பிராமண மேலாதிக்கத்தால் நிலை தாழ்ந்த பள்ளர் பறையர் போன்ற ஜாதியினர் சோழப்பேரரசில் மேலெழுந்து வந்திருப்பதை கல்வெட்டு ஆதாரங்களின் வழியே ராஜ் கௌதமன் நிறுவுகிறார். அதன்பிறகு நாயக்கர் ஆட்சிகாலத்திலும் கடுமையான அரசியல் குழப்பங்கள் நிலவிய பதினெட்டாம் நூற்றாண்டிலும் (மதுரையில் 1732 முதல் 1755வரை மதுரை பத்துமுறை கைமாறியிருக்கிறது!) தலித்துகளின் நிலை என்னவாக இருந்திருக்கிறது என்பதை விவரித்த பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுவாக காலூன்றிவிட்ட பிரிட்டிஷ் காலத்தில் எவ்வாறு மேல்நோக்கி நகரத் தொடங்கியது என்பதை கடைசி இரண்டு அத்தியாயங்களில் விவரிக்கிறார்.
முதலாளித்துவத்தின் முதல் தடம்
இங்கிலாந்தின் கம்பெனி அரசு எந்தவித உள்நாட்டு சிக்கல்களிலும் தலையிடாமல் உற்பத்தியை பெருக்கி வரிவசூல் செய்து தன்னுடைய கருவூலத்தை நிரப்பிக் கொள்ளும் நோக்கமுடையது. ஆகவே உற்பத்தியை பெருக்கும் வகையில் ஏற்கனவே நிலவிவந்த நிலவுடைமை முறைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாமல் வரிவசூல் முறைகளையும் சட்டங்களையும் மாற்றி அமைக்கிறது. இந்த மாற்றங்கள் ஜமீன்தார்கள்,விவசாயிகள்,அரசு அதிகாரிகள்,இடைத்தரகர்கள் என பல்வேறு பிரிவினரிடையே மோதல்களை உருவாக்குகிறது.
ரயில்பாதைகள்,நீண்ட சாலைகள் என அதுவரை இல்லாத பெரும் வணிக வழிகள் உருவாக்கப்பட்ட விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதியாகின்றன. மற்ற பயிர்களைவிட பருத்தி அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. உள்ளூர் நெசவாளர்கள் வேலையிழக்கின்றனர். இங்கிருந்து குறைந்த செலவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்தி அதிக இறக்குமதி தொகையுடன் உடைகளாக மீண்டு வருகிறது. ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் இருந்து உற்பத்தி உறவுகள் முதல் முறையாக இடையூறினை சந்திக்கத் தொடங்குகின்றன. பள்ளர்கள் விவசாயத்தில் பல நூற்றாண்டு தேர்ச்சி உடையவர்கள் என்பதால் நேரடியாக விவசாயம் செய்து வரிசெலுத்தத் தொடங்குகின்றனர். முதன்முறையாக உழைப்பவர்களுக்கு நாமொரு அரசின் கீழ் செயல்படுகிறோம் என்ற ஓர்மை இக்காலத்தில் ஏற்படுகிறது.
ராஜ் கௌதமன் இந்த ஓர்மையை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“முதற்கட்டத்தில் விவசாயக் குடும்பங்கள்,குடும்ப விவசாயிகள்–தனியார் இடம்,உடைமை மற்றும் பொது இடம்,உடைமை– ஆகியவற்றுக்கு இடையேயான நிரந்தரப் பாகுபாட்டினை உணரத் தொடங்கினார்கள். அடுத்த கட்டத்தில் பொதுவாழ்வில் பிரதிநிதித்துவம் வகிப்பதற்கான போராட்டங்களால்,தனியார் மூலதன ஆதாரங்களைக் கொண்டவர்களால் அதுவரை நிலத்தின் மீதும் உழைப்பின் மீதும் கொண்டிருந்த அதிக கட்டுப்பாட்டை வலியுறுத்த இயலவில்லை”
இந்த தொடக்ககால முதலாளித்துவ ஓர்மை ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு தலித் சாதியிலும் வெவ்வேறு வகையில் பிரதிபலித்ததை ராஜ் கௌதமன் விளக்குகிறார். இரட்சணிய சேனை போன்ற மிஷனரிகளும் பௌத்த தாக்கமும் பறையர்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்தன. பள்ளர்களைப் பொறுத்தவரை விவாசய உற்பத்தியில் நீண்டகால அனுபவம் உடையவர்கள் புதிதாக நிலம் வாங்குதல் கண்மாய் சீரமைத்தல் போன்ற செயல்கள் வழியே உற்பத்தியை பெருக்கி தங்களுக்கென மூலதனத்தை பெருக்கிக் கொண்டனர்.
வட தமிழகத்தை பொறுத்தவரை அங்கு நிலவிய பௌத்த சங்கங்கள் தலித்துகளின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றின என்று ராஜ் கௌதமன் குறிப்பிடுகிறார். அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா என்று முன்னோடி தலித் சிந்தனையாளர்கள் அனைவரது களமுமாக ஏதோவொரு வகையில் சென்னை விளங்கியிருக்கிறது. சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் சென்னை தலித் போராட்டங்களின் கேந்திரமாக விளங்கியது குறித்து பேசியதுடன் இதனை ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.
நாடார்களைப் பொறுத்தவரை ஆதிக்கசாதிகளுடன் முரண்பட்டு தொழில் மற்றும் வணிகத்தில் தென் தமிழகத்தில் அவர்கள் மேலேறி வந்திருப்பதை இந்த நூலில் ராஜ் கௌதமன் குறிப்பிடுகிறார்.
உற்பத்தி உறவுகள் அரசு நிர்வாகம் முதலாளித்துவத்தின் முதல் தடம் என்று மார்க்ஸிய நோக்கில் செல்லும் இந்த நூல் ஒரு அடிப்படை ஆய்வு நூலாக கொள்ளப்படும் பெறுமானம் மிக்கது. அதேநேரம் முன்னரே குறிப்பிட்டது போல தலித் சாதிகளுக்கு தங்களுக்குள்ளான உரையாடல்கள் என்ன உண்மையிலேயே நாம் நம்பும்படிதான் அவர்களது சமூகநிலை இருந்ததா என்ற விலகலான பார்வையுடன் கூடிய கேள்வியையும் வைக்க இந்த நூல் தவறவில்லை. ஒரு உதாரணமாக வலங்கை இடங்கை சாதிப்பிரிவை எடுத்துக் கொள்ளலாம். உணவு உற்பத்தியில் ஈடுபடக்கூடிய சாதியினர் வலங்கையினராகவும் தொழில் வாணிகம் போன்றவற்றில் ஈடுபடுகிறவர்கள் இடங்கையினராகவும் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். வேறெந்த சாதிகளைவிடவும் உணவு உற்பத்தியில் நேரடி பங்கு கொண்ட பள்ளர்கள் இடங்கையினராக அடையாளப்படுத்தப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியை ஓரிடத்தில் இந்த நூல் முன்வைக்கிறது.
இறுக்கமான மொழிநடையில் எழுதப்பட்டிருந்தாலும் சற்றே கற்பனை கொண்டு வாசிக்கும் போது தமிழ் நிலத்தின் முகம் மெல்ல மெல்ல மாறி இன்றைய நிலையை எட்டியிருப்பதை மிகுந்த நேர்த்தியுடன் முன்வைப்பதால் இது ஆய்வாளர்களுக்கு மட்டுமின்றி பொதுவாசகப் பரப்புக்கும் முக்கியமான நூலாகிறது.
சுரேஷ் பிரதீப்
ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்
=============================================================================================================
ராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்
ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்
சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்
சுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1
ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2
சிலுவைராஜ் சரித்திரம் பற்றி
ராஜ் கௌதமனின் உலகம்
ராஜ் கௌதமனும் தலித்தியமும்
பாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்
ராஜ் கௌதமன் -கடிதங்கள்