கீழ்மையின் சொற்கள்

face

ஜெ

முகநூலில் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்.

ஒருமுறை ஜெயமொகன் சபர்மதி பயணம் பற்றிய ஒரு கட்டுரையில் நேரடி அனுபவம் இன்றி கூகுள் துணையோடு எழுதியதால் அந்த பயணத்தின் பாதையில் பூகோள ரீதியாக பெரும்பிழை இருந்ததாக ஒரு எழுத்தாளர் நண்பர் டெல்லியில் என்னை சந்தித்தபோது வருத்தப்பட்டார். அதுவும் இப்போது தேவை இல்லாமல் நினைவுக்கு வருகிறது.

பின்குறிப்பு- ஜெயமோகன் மீது எத்தவகையான வன்மமும் எனக்கு கிடையாது. அவர் எழுத்துக்களை தொடர்ந்து படிக்கிறவன் நான்

உங்கள் பயணங்கள் எல்லாமே முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டவை என எனக்குத்தெரியும். ஆனாலும் முகநூலில் என்ன நிகழ்கிறது என்பதைச் சுட்டிக்காட்டவே இதை எழுதுகிறேன்

குமார் மகாலிங்கம்

***

அன்புள்ள குமார்

எவன் இதை எழுதியிருப்பான் என தெரியவில்லை, அறிந்துகொள்ளவும் ஆர்வமில்லை. நான் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்றது 1981ல். அதைப்பற்றி ஒரு வரிகூட எழுதியதுமில்லை. இந்த ஆசாமி சொல்லும் வம்பு வேறு ஒரு எழுத்தாளருடன் சம்பந்தப்பட்டது. நாஞ்சில்நாடன் அதை எங்கோ எழுதியிருந்தார். அதை எங்கோ தோராயமாகத் தெரிந்துகொண்டு என்மேல் கொண்டுவைக்கிறான். இதை எவரும் மறுக்கப்போவதில்லை. ஆறுமாதம் கழித்து இதை வேறு ஒருவன் மேற்கோள் காட்டுவான். அது நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும். இந்தக்காலகட்டத்தின் பெரும்சிக்கல் இது.

இதைப்போன்ற கீழ்மை நிறைந்த வம்புகளை எப்போதுமே சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம், இதை அன்றி எதையுமே அறியாத ஒரு கூட்டம், எப்போதும் உள்ளது. இந்தக் கீழ்மகனின் இக்குறிப்பிட்ட வம்பை நான் ஆதாரபூர்வமாக மறுத்துவிட முடியும்.  ஆனால் இவன் என்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தால், அதன்பின் நான் தனிப்பட்டமுறையில் சொன்னதாக கீழ்மைநிறைந்த வம்புகளை இதேபோல இணையத்தில் எடுத்துவிட்டிருந்தால், என்ன செய்யமுடியும்? மறுப்பதற்கு ஆதாரமா தேடிப்போகமுடியும்?

இப்படி ஆளுமைகளைச்  சிறுமைசெய்வதன் வழியாக ஒர் அடையாளத்தை ஈட்டிக்கொள்ள முயல்கிறார்கள். இந்த கூற்றிலேயே ஒரு எழுத்தாளர் நண்பர் டெல்லியில் என்னை சந்தித்தபோது என்ற வரியைக் கவனியுங்கள். இது மட்டுமே இவனுக்கு முக்கியமானது. இதை எழுதத்தான் இந்த வம்பு. ஒரு சில எழுத்தாளர்களுடன் முகம்தெரியுமளவுக்கு ஒரு பழக்கம் இருக்கும், அவ்வளவுதான். இவன் என் எழுத்தையோ வேறு எவருடைய எழுத்தையுமோ வாசிக்கக்கூடியவனாக இருக்க வாய்ப்பில்லை. இவனுக்கும் இலக்கியத்திற்கும் தொடர்பே இருக்காது.

ஒவ்வொருநாளும் எவரேனும் எதையேனும் இப்படிச் சுட்டிக்காட்டி விளக்கம் கோருகிறார்கள். உண்மையில் இங்கே எழுத்தாளர்களுக்கு இந்தக் கீழ்மக்கள் மிகப்பெரிய தொல்லை.புகைப்படம் எடுப்பது, பொது இடங்களில் தெரிந்தவர்களாக பழகுவது என ஒரு முன்னடையாளத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.அதன்பின் அதையே சான்றாக்கி வம்புகளைப் பரப்புவார்கள். முன்பெல்லாம் அது வாய்ப்பேச்சிலேயே போய்விடும். இப்போது முகநூல் அதற்கான ஊடகம். எதையும் எழுதலாம், எழுதப்படுபவர் மேல் வாசிப்பவர்களுக்கு வெறுப்போ பொறாமையோ இருந்தால் கூசாமல் அதைப் பரப்புவார்கள்.

இந்த எச்சரிக்கையுணர்ச்சியால் உண்மையான வாசகர்களை நம்மிடமிருந்து அகற்றிவிடவும் கூடாது. கடுமையானவர்களாக, நண்பர்களிடமிருந்து அன்னியமானவர்களாக ஆகிவிடக்கூடாது. ஆகவே இவர்களைமுழுமையாகத் தவிர்க்க முடியாது. தெரிந்துகொண்டபின் அகற்றிக்கொள்ளலாம், அவ்வளவுதான் சாத்தியம்.

அடிப்படைநெறி என ஏதேனும் கொண்டவர்கள் முதலில் இந்தக் கீழ்மக்களின் சொல்லில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளவேண்டும். எதன்பொருட்டென்றாலும் எச்சூழலில் என்றாலும் இத்தகைய இழிந்தோருடன் தொடர்புகொள்வதென்பது நம்மையும் இழிவுநோக்கியே கொண்டுசெல்லும்

ஜெ

 Hi ,

I just read the latest Ananda vikatan magazine. They created cheap cartoon about you and they criticized about you in that cartoon. I felt very bad that they are hurting a writer like you. Media became very unethical which is pelting stones at any one at any time…especially for celebrities. I sometime feel life is more peaceful when being a general public than a celebrity. what do you think sir?
Thanks and Regards,
Arunkumar.P.G
***
அன்புள்ள அருண்குமார்
ஊடகங்கள் எப்போதும் இரட்டைமுகம் கொண்டவை. ஊடகவியலாளர்களும் அப்படித்தான். அவர்களின் தொழிலே புகழ்பெற்றவர்களைக்கொண்டுதான்.  ஆகவே அவர்களை தொடந்து நைச்சியம் செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு புகழ்மிக்கவர்கள் மேல் எப்போதும் காழ்ப்பு இருக்கும். ஏனென்றால் அந்த ஊடகத்தைப் பயன்படுத்தி அவர்கள் தாங்கள் புகழடைய முயல்வார்கள், அது ஒருபோதும் இயல்வதில்லை. அவர்கள் தற்காலிகமாக ஒரு முகத்தை மட்டுமே உருவாக்கிக்கொள்ள முடியும்.
ஊடகங்களின் வாசகர்களும் இருமுகம் கொண்டவர்கள். புகழ்பெற்றவர்களை வழிபட்டு, அவர்களைப்பற்றிய செய்திகளைத் தேடித்தேடி வாசித்து மகிழ்வார்கள். ஆனால் அந்த புகழ்பெற்றவர்கள் வீழ்ச்சியடையவேண்டும் என்றும் உள்ளூர விரும்புவார்கள். அந்த வீழ்ச்சியைக் கொண்டாடுவார்கள், அது இவர்களே கற்பனைசெய்துகொண்டதாக இருந்தாலும் சரி. அவர்களுக்கு ஊடகங்கள் தீனிபோடுகின்றன
ஆனால் இது இயல்பானது அல்ல. இதில் தமிழகத்தில் சாதிக்கணக்கு மிக வலுவானது. எவர் கிண்டலுக்கும் சிறுமைக்கும் ஆளாகிறார்கள், எவர் மெய்யாகவே சிறுமைப்பட்டாலும் இந்த ஊடகங்களால் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை எவரும் காணமுடியும்.
ஜெ
முந்தைய கட்டுரைவாசிப்பில் சோர்வு
அடுத்த கட்டுரைபிரதமன்[சிறுகதை]