கட்டண உரை -கடிதம்

d

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

 

கட்டண உரை குறித்து கிருஷ்ணன் அவர்களின் கடிதத்தை படித்தவுடன் மனம் பெரும் அதிர்சியை சந்தித்தது.ஏனென்றால் உங்களுக்கு விலை,சம்பளம் என்பது எல்லாம் எப்படி என்று என் மனம் ஏற்றுகொள்ளவே இல்லை. பணத்திற்காக கூறவில்லை. இன்று எனது அற்ப ஞானம்,கொஞ்சம் இருக்கும் நுண்ணுணர்வு, தன்னறத்திக்காய் முட்டி மோத அத நேரம் எனது வலுவை இழந்து விடாமல் சமநிலையோடு யோசிக்கும் செயல்படும் தன்மை எல்லாம் நீங்கள் கொடுத்தது.

 

 

இன்றைய ஆசிரியனைபோல் இருந்தால் எவ்வளவு  என்றாலும் தரலாம்.ஆனால் நீங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமான பிதா. குரு. குருதட்சணை குடுக்கலாம்தான் ஆனால் உங்களுக்கு விலை என்பது எல்லாம் அம்மாவின் அன்பிற்கு விலை பேசுவதுபோல் மனம் ஒத்துகொள்ளவே மறுக்கிறது.

 

 

நீங்கள் விளம்பரம் கொடுத்த முதல் நாள் அந்த பத்தியை படித்ததோடு சரி.பிறகு வந்த எதையும் நேற்று எழுதியதை கூட ஓபன் பண்ணவே இல்லை.இன்று இதை பார்த்தவுடன் மனதில் எதோ ஓன்று நடக்கிறது.அதை எனக்கு என்ன என்று சொல்ல தெரியவில்லை.

 

 

ஆனாலும் நீங்கள் செய்யும் பிரயாணங்களுக்கும், நடத்தும் கூட்டங்களுக்கும், விஷ்ணுபுர விழா நடத்தவும் அதிகம் செலவாகும் என்பதையும் புரிந்துகொள்கிறேன்.

 

 

எங்களைவிட்டு அதிக தூரம் சென்றுவிடாதீர்கள்.

 

 

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்

e

அன்புள்ள ஸ்டீபன்,

 

கட்டண உரை என்று வந்தால் அதில் பேசுபவருக்கும் கட்டணம் அளிக்கவேண்டும், அதுவே அதன் வடிவம். வருங்காலத்தில் துறைநிபுணர்கள் பேசுவார்கள் என்றாலும் இதுவே முறை.

 

உங்கள் உள்ளம் புரிகிறது. விலையில்லாதது என்பதற்கு இரு பொருள் உண்டு. விலைக்கு அப்பாற்பட்டது என்றபொருளில் நீங்கள் கொள்கிறீர்கள். விலைக்குத் தகுதியற்றது என்றபொருளிலேயே பெருவாரியானவர்களால் கருதப்படுகிறது. அந்த இரண்டாவது உளநிலையை மாற்றுவதே நோக்கம்.

 

இப்போது எனக்கு தொடர்ச்சியாக பேசுவதற்கான அழைப்புகள், [கணிசமான ஊதியத்துடன்] வந்துகொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் அனைத்தையுமே தவிர்த்துவிடுகிறேன். முக்கியமான காரணம், கவனமற்றவர்களின் அவையில் என்னால் பேசமுடியவில்லை என்பதுதான். அப்படியே சுருதி இறங்கி ஒன்றுமே தோன்றாமலாகிவிடுகிறது. பெரும்பாலும் இங்குள்ள பெருங்கூட்ட அரங்குகள் இப்படிப்பட்டவைதான். மேடையில் பேச்சு நிகழும்போதே அரங்கில் என்னென்னவோ நடந்துகொண்டிருக்கும். வருவது, போவது, டீ குடிப்பது, குடும்பச்சண்டை, நாளிதழ் வாசிப்பு என.  என்னுடையது உரையாடல். மறுதரப்பு முக்கியம். பயின்று தேர்ந்த கலைநிகழ்ச்சி அல்ல. வழக்கமான கூட்டம்கேட்பவர்களின் முன் கேலிப்பொருளாகிவிடுவேன் என்னும் அச்சம் உள்ளது. ஆகவே இந்த வகையான அரங்குகள் உவப்பானவையாகத் தோன்றுகின்றன அவ்வளவுதான்.

 

கடைசியாக, பணம் தேவையாகிறதா? ஆம், விஷ்ணுபுரம் அமைப்பின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் நான் உட்பட நண்பர்களின் நிதியுதவியால் நடப்பவை. இணையதளமும் பெருஞ்செலவுகொண்டது, இலவசம். நாளும் இவை பெரிதாகிக்கொண்டே செல்கின்றன. அதற்கேற்ப பணம் தேவையாகிறது

 

ஜெ

முந்தைய கட்டுரைநம்பிக்கையும் எழுத்தும்-கடிதம்
அடுத்த கட்டுரைஇலக்கியத்தின் வாசல்கள்