வே. பாபு -கடிதம்

46002455_730647257299792_7527216020608516096_n

அஞ்சலி வே பாபு

அன்பு ஜெயமோகன்,

 

 

அண்ணன் வே.பாபு அவர்களின் மறைவு குறித்த தகவலை உங்கள் தளத்தின் வழி தெரிந்து கொண்ட கணம்.. எனக்கு அதிர்ச்சியைத் தரவில்லை; பெருவியப்பையே தந்தது. சற்றும் யோசிக்கவில்லை. அவர் எண்ணுக்கு நடுக்கத்தோடு அழைத்தேன். அவர் உறவினர்களில் ஒருவர் பேசினார். “உடம்பெல்லாம் சரியில்லாம இல்லீங்க.. படுக்கப்போகும்போது நல்லாத்தான் இருந்தார்” என்பதாகத்தான் அவர் பதில் இருந்தது. ”இன்னிக்கு சாயந்திரம் 3 மணிக்கு உடலை அடக்கம் செய்யறதா இருக்கோம்!” என்றும் அந்த உறவினர் குறிப்பிட்டார்.

 

 

வே.பாபுவுக்கும் எனக்குமான நட்பு விசித்திரமான ஒன்று. பாலகுமாரன் நாவல் ஒன்றுக்கு அவர் எழுதியிருந்த விமர்சனக் கடிதமே அவர்பால் என்னை ஈர்த்தது. விமர்சனக் கடிதத்தின் இறுதியில் இருந்த அவரின் முகவரிக்குச் சில கடிதங்களைத் அனுப்பினேன். பதிலுக்குத் தொடர்ந்து அவரும் கடிதங்கள் எழுதினார். கையெழுத்து மிகத் தெளிவாகவும், சொற்கள் மிகமிக குறைவாகவும் இருக்கும். பாலகுமாரனைத் தீவிரமாக வாசிப்பதற்கு என்னைத் தூண்டியவர்களில் வே.பாபு முக்கியமானவர். அவரின் கவிதைகள் தொடர்ந்து பல்சுவை நாவலில் வெளிவந்து கொண்டே இருக்கும். அவை குறித்து நானும் அவருக்குக் கடிதங்கள் அனுப்பிக் கொண்டே இருப்பேன்.

 

 

ஒருமுறை அவர் நான் படித்துக் கொண்டிருந்த கோபி கலைக் கல்லூரிக்கே வந்து விட்டார். முதுநிலை கணிப்பொறிப் பயனியல்(MCA); இரண்டாமாண்டு என நினைக்கிறேன். நான் படிக்கும் பிரிவு அவருக்குத் தெரியாது. “விகடன் மாணவ நிருபராய் இருக்கும் சக்திவேலைப் பார்க்க வந்திருக்கிறேன்” என அலுவலகத்தில் தெரிவித்திருக்கிறார். என்னிடம் அவர் பெயரைச் சொல்லவில்லை. “யாரோ உன்னைப் பார்க்க வந்திருக்காங்க” என்று மட்டுமே சொல்லப்பட்டது. பரபரப்பாய் அலுவலகம் வந்த என்னை நிதானமாக எதிர்கொண்டார் பாபு. கைகுலுக்கிய அவர், “சக்தி, நான் வே.பாபு. சேலத்தில் இருந்து வருகிறேன்!” என்றார். அருவமாய் மட்டுமே அறிமுகமாகி இருந்த நாங்கள் இருவரும் உருவங்களாகச் சந்தித்த அக்கணம்.. இன்றுவரை இளமையாக இருக்கிறது. “அண்ணா! எப்படி இங்க?” என்ற என் வியப்புடனான கேள்விக்கு, “பண்ணாரி கோவிலுக்குப் போயிருந்தேன். உங்க கடிதத்துல இருக்கிற முகவரியை வைச்சுட்டு வீட்டுக்குப் போனேன். நீங்க காலேஜ் போயிருக்கிறதா பாட்டி சொன்னாங்க. உங்களைப் பார்க்காம போகக்கூடாதுன்னு நினைச்சேன். காலேஜ்-க்கு வந்துட்டேன்” என்றார்.

 

 

இருவரும் கேண்டீன் சென்றோம். ஒருமணி நேரத்துக்கு மேலாகப் பேசிக்கொண்டிருந்தோம். தொடர்ந்து அவரை இருமுறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன். எங்கள் கல்லூரியில் குணா(தற்போது தூரன் குணா எனும் பெயரில் கவிதைகள் எழுதிவருபவர்) என்பவரும் படித்து வந்தார். அவருக்கு பாபுவை அறிமுகப்படுத்தி வைத்தேன். அதற்குப் பிறகு, என்னைக் காட்டிலும் குணாவுக்கு மிக நெருக்கமானவராகிப் போனார் பாபு. இருவரும் மணிக்கணக்கில் சந்திப்பதும், உரையாடுவதுமாக இருந்தனர். தூரன் குணா சொல்லித்தான் இத்தகவல்களே எனக்குத் தெரியும். ஒரே ஒருமுறை அவரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். மற்றபடி, அவரின் இலக்கிய நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டதே இல்லை. என்றாலும், அந்நிகழ்வுகள் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பார்.

 

 

ஒருமுறை உயிர்மையில் என்னுடைய சில கவிதைகள் வெளியாகி இருந்தன. நேர்ச்சந்திப்பில் அதுகுறித்து என்னிடம் பேசினார் பாபு. “எதையாவது எழுதிட்டே இருங்க சக்தி. இல்லைன்னா மனசு வறட்டுத்தனமா ஆயிடும்!” என்பதே என்னிடம் அவர் வேண்டுகோளாக இருந்தது. தக்கை அமைப்பைத் துவங்கும் சமயம் அலைபேசியில் என்னிடம் பேசினார். அதற்குப் பிறகு எப்போதாவது நான் அவரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பேன். பலமுறை அவரிடல் இருக்கும் புத்தகங்களைக் கேட்டு நச்சரித்திருக்கிறேன். “சக்தி! என்னிடம் இருக்கும் புத்தகங்களை ஒருநாள் வந்து எடுத்துட்டுப் போங்க!“ என்பதுதான் கடைசியாய் அவர் என்னிடம் பேசியது.

 

 

துவக்கத்தில் இருந்தே பாபுவின் கவிதைகளை வாசித்திருப்பவன் எனும் வகையில், அக்கவிதைகளில் இழையோடும் குழந்தைமையையே அவற்றின் பலமாகப் பார்க்கிறேன். கல்யாண்ஜியின் பிரதியோ எனும்படியான யோசனைக்கு அவரின் கவிதைகள் தள்ளி இருக்கின்றன. மதுக்குவளை மலர் எனும் தொகுப்பு ஒன்றே இன்றைக்கு அவரின் அடையாளம். அத்தொகுப்பில் நிரம்பி வழிந்த மதுதான் அவர் உயிருக்கு உலைவைத்திருக்குமோ எனும் அச்சம் இப்போது எனக்கு எழுகிறது; உறுதியாகச் சொல்லுமளவுக்கு பாபுவின் அணுக்கவட்டமல்ல நான். எப்படி இருப்பினும், அவரின் மறைவு விசித்திரமான வியப்பாகவே என்னை எதிர் கொண்டிருக்கிறது.

 

 

நேற்றுவரை வே.பாபு என்றால் “15, திரு.வி.க பாதை, அம்மாபேட்டை, சேலம்” எனும் முகவரியே முண்டியடித்து நினைவுக்கு வரும். இனி, பாபு என்றால் கறுப்பான ஒரு திங்கள்கிழமையே நிழலாடும் என்று ஊகிக்கிறேன்.

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69
அடுத்த கட்டுரைஇலக்கியவேல் மாத இதழ் – உஷாதீபன்