புள்ளினங்காள்!

birds

அன்புள்ள ஜெ,

கட்டண உரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. நான் துவங்கும் கடைசி நிமிடத்தில் வந்தேன், சரியாக நீங்கள் உள்ளே செல்வதற்கு முன் லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களுடன், உங்களுக்கு முகமன் மட்டும் கூற முடிந்தது. உரையின் முதல் பாதி மிகவும் செறிவாகவும் இரண்டாம் பகுதியான லிபரலிசம்/தாராளவாதம் நமது சிந்தனையில் செலுத்துவைத்து பற்றிய பார்வையும் கொஞ்சம் இலகுவாக இருந்தது.  இது போல நிறைய உரைகள் நடக்க வேண்டும்.

உரையின் இடைவெளியில் பல புத்தகங்களை வாங்கினேன், உங்களிடம் கையெழுத்து பெற முடியவில்லை. எனது முதல் மகனுக்கு கண்ணில் சிறு பிரச்சனை காரணமாக அன்று காலை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தேன். அவனை ஒரு உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அரங்கிற்கு வந்திருந்தேன். உரை சற்று நீண்டுவிட்டதால் கொஞ்சம் பதட்டம் ஆகிவிட்டது. கூட்டமும் அதிகம் இருந்ததால் உடனே சென்றுவிட்டேன். மன்னிக்கவும்.

இந்த கடிதம் எழுத காரணமே நேற்று 2.0 படத்தில் புள்ளினங்காள் பாட்டு கேட்க நேர்ந்ததுதான். உடனே எனக்கு தேவதேவனின் கவிதையைத்தான் பாடலாக்கியிருக்கிறார்களோ என சந்தேகம் ஏற்பட்டது. பார்த்தால், நா. முத்துக்குமார். ஏ ஆர் ரஹ்மான் இம்மாதிரி  கவிதைகளை பாடலாக்குவதில் வல்லவர் (வைரமுத்துவுவின் பல பாடல்கள், பாரதிதாசனின் வரிகள் உட்பட )  ஆனால் இது அதன் உச்சம். இதை கேட்க்கும்போது கவிதை வாசிக்கும் ஒரு மனநிலையே கிட்டிவிடுகிறது.

பின்னர் யோசித்ததில், தேவதேவனை நினைவுறுத்தியது இதிலுள்ள ‘செல்லமே..’ என்னும் விளி.

உடனே தேடிப்பிடித்தேன், அவரது ‘மார்கழி’ தொகுப்பில் இருக்கிறது. என்ன இருந்தாலும் தேவதேவனின் கவிதை பல படிகள் மேலே நிற்கிறது.  அதற்க்கு காரணம் நீங்கள் அடிக்கடி கூறும்  ‘அதில் துயரே இல்லை..’  என்பதே.  ஈனச்சிறு மானுடர்கள் எனச் சொல்லும்போது அவர் அங்கு  நின்றிருக்கிறார் . அற்புதமான கவிதை.

தேவதேவன்
தேவதேவன்

சின்னஞ் சிறு குருவியே

————————–

எத்துணை கொடுத்து வைத்தவள் நீ !
மானுடப் பரப்பில்
உன் மூளை இயங்கிக் கொண்டிருக்கவில்லை
அமைதி அமைதியின்மை அறியாத
பேரமைதியின் புதல்வி நீ.
எளிய தேவைகளுக்கும்கூட
தன் வாணாளைப் பணையம் வைத்துப்
பாடுபட வேண்டிய
விந்தை உலகத்தவனில்லை நீ.
உன் உயிர் தயாரிப்பதற்கான
சிற்றுணவு பஞ்சத்தை
நீ ஒரு நாளும் அறிந்திருக்கவில்லை.

புகழுக்கும் மேலாண்மைக்கு போகத்திற்குமாய்
அல்லலுறும் மானுட உலகையே அறியாது,
வானத்திற்கும் பூமிக்கும் பிறந்தவளாய்
அன்பின் பெருவிரிவில் சிறகுவீசும் என் செல்லம் !

இன்பமும் துன்பமும் உயிரெச்சமும்
அறியாதவன்
என்றாலும் இயற்கைப் பெருவெளியை
உதைக்கும் ஒரு சிறு கீறலுக்கும்
துணுக்குற்று அலறும் ஒரு நுண்ணுயிர் !
உனக்காக,
உனக்காகவேதான் என் கண்ணே,
இந்த ஈனச்சிறு மானுடர்க்காய் அல்ல;
அவர்களுக்காகவெனில்
இவ்வுலகை ஆயிரம்முறை அழிக்கலாம்.
உன் துணுக்குரலாற் துயருற்றே
உனக்காகவேதான் என் செல்லமே
தன்னை சரிசெய்துகொள்ளத் துடிக்கிறது
இப் பேரியற்கை
என் அன்பே !

-தேவதேவன்

அன்புடன்

ஆனந்த்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-70
அடுத்த கட்டுரைசெவ்வல்லி -கடிதங்கள்