ரயிலில் கடிதங்கள் -2

train2

ரயிலில்… [சிறுகதை]

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

உங்கள் பக்கத்தை தொடர்ந்து வாசித்து வருபவன் நான். இது என் முதல் கடிதம்.

 

இந்தக் கதை ஒரு கண்ணாடி போல என் முன்னே நிற்கிறது. சாமிநாதன் உருவில் நான் நிற்கிறேன். அவரின் இளம் வயது பிம்பமாக. உண்மையாகவே எனக்கு எதிரில் முத்துசாமி. இந்தப் பெயரும் அப்படியே பொருந்தியிருக்கிறது.

 

என் அப்பா என் சகோதரியின் திருமணத்திற்காக கொஞ்சம் பணம் வாங்கியிருந்தார். அதற்கு மாறாக எங்கள் 13 ஏக்கர் நிலத்தை அடமானமாக வைத்து விட்டார். முத்துசாமி மற்றும் அவர் குடும்பம், நீதிமன்றம் போய் நிலத்தை பதிந்து கொடுக்க கேட்டு வழக்கு தொடர்ந்தார்கள். சுமார் 8 வருடங்களாக இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இடையில் என் தந்தை இறந்து விட்டார். எனக்கு இது தெரியவந்து, அதில் இருந்து, கடந்த 6 வருடங்களாக, வாங்கிய பணத்தை வட்டியுடன் கொடுக்க நான் முன்வந்தும், அவர்கள் நிலமே வேண்டும் என்று பிடிவாதத்துடன் நிற்கிறார்கள். இந்த நிலம் அவர்கள் கொடுத்த பணத்திற்கு சுமார் 15 மடங்கு மதிப்புடையது. அவர்களுடன் எவ்வளவு பேசியும் அவர்கள் நிலம் பறிப்பதிலேயே  இருக்கிறார்கள். இது வரை, நிலம் என் சுவாதீனத்தில் தான் இருக்கிறது. ஆனால் இந்த வழக்கினால் தொலையும் மன நிம்மதி அளவில்லை.

 

//உங்கப்பா அத குடுக்கலேன்னு நெனச்சுக்கோடேன்னு. இல்லியே மாமா கண்ணெதிர்ல மலை மாதிரி நிக்குதே. இவ்ளோ பெரிய சொத்த துப்புக்கெட்டதனமா எழந்துட்டோம்னு நெனக்கிறப்ப கும்பி எரியுதே. இல்லேன்னா அது வேற. இருக்கிறது இல்லாம போச்சுன்னா அந்த வெறுமைய தாள முடியல்லியே. //

 

எவ்வளவு இயல்பான எண்ண ஓட்டத்தை இந்த வார்த்தைகள் வெளிக்கொணருகின்றன. அப்படியே என் மனதை படித்த மாதிரி இருந்தது. நான் இந்தப் பிரச்சனையால் முற்றிலும் நிலை குலைந்து விடவில்லை. வசதியும், வருமானமும் தேவைக்கு ஏற்ப உள்ளது. ஆனால், வேண்டுமென்றே ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணம் மிகவும் வலியது.

 

ஒருமுறை மணிரத்னத்திடம் ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

“அதெப்படி உங்க படத்தில சில கேரக்டர் கடைசி வரைக்கும் ஒரே மாதிரி இருக்காங்க.” என்று.

 

அதற்கு அவர் பதில்: “இயல் வாழ்க்கையில் மனிதர்கள் சுபாவம் மாதத்திற்கு ஒரு முறை மாறுவதில்லை. ஒரே நிகழ்வில் அவர்கள் அப்படியே முற்றாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதும் இல்லை.”

 

இந்தக் கதையில் வரும் கடைசி இரண்டு பத்திகள், இந்த மனித இயல்பை மிக நுணுக்கமாக சொல்லி இருக்கிறது.

 

//சாமிநாதன் “உண்மைதான்” என்றார் பின்னர் இட்லியை எடுத்து மடிமேல் வைத்து பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தார்.//

 

இந்த ஒற்றை வரியில், சாமிநாதனின் மனதில் முத்துசாமியைப் பற்றிய அனுமானம், அவர் மாறவேயில்லை என்பதைப் பற்றிய விரக்தியான சலிப்பும், தான் இதுவரை அவர்களுக்கு ஏதேனும் தவறாக செய்து விட்டோமா என்ற குற்றஉணர்ச்சி சட்டென மறைந்து போகும் பல உள நிலைகளை உணர்த்துகிறது.

 

என்னை சட்டென உள்வாங்கிக் கொண்ட சிறந்த படைப்பு.

 

நன்றி.

 

-குமார்

train2

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

ரயிலில் சிறுகதை படித்தேன். அந்த நாள் முழுவதும் அதையே திரும்பத்திரும்ப படித்துக்கொண்டே இருந்தேன். டிரெயின் போவதுபோலவே முதலில் மெதுவாக ஆரம்பித்து வேகம் அதிகரித்துக்கொண்டே போய் தலைதெறிக்க ஓடி மறுபடியும் வேகம் குறைந்து நிற்பதுபோல் கதையும் இருந்தது. யாரிடம் தவறு. யார் அதைச் சொல்ல முடியும். இவ்வளவு பட்டும் முத்துசாமி இன்னும் திருந்தவில்லை. வளியில போற சொத்துன்னுல்லா வாரி திங்குதான்காட்டுப்பய.சாமி உண்டும்னா அவன் நல்லா இருக்கமாட்டான்  என்று இன்னொருத்தனை திட்டுகிறார். ஆனால் இவரே அதைத்தான் கிட்டதட்ட ஐம்பது வருடங்களாக செய்திருக்கிறார்.

 

அவருக்கும் அவருடைய அப்பாவிற்கும் தங்கள் செய்வது தவறு என்றே தெரிந்து அழிச்சாட்டியமாக செய்திருக்கிறார்கள். இவங்களை விட பெரிய கேடி வந்ததும் வாலை சுருட்டிக்கொண்டு அடங்குகிறார்கள். உங்களுக்கு முன்பே எழுதி இருக்கிறேன். ஆறு வருடங்களுக்கு முன்பதாக ஒரு நண்பரை நம்பி பனிரெண்டு லட்சம் ரூபாய் பணத்தை, நான்கைந்து பேரிடம் வட்டிக்கு வாங்கி கொடுத்திருந்தோம். கடன் வாங்கிக்  கொடுக்கவேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். என் கணவரும் தயங்கினார். ஆனால் கடைசியில் ஒரு நாள் கணவன் மனைவியாக வந்து பேசிக்கொண்டே இருக்கும்போது காலில் விழுந்து காலை இருவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முடியாதுன்னு சொல்லிடாதீங்க என்று அழும்போது விழுந்து விட்டோம். இரண்டே மாதத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று சொல்லி வாங்கிக் கொண்டு போனார்கள். இன்றைய தேதி வரைக்கும் வாங்க முடியவில்லை. கேட்கப் போய் கேவலப்பட்டு வந்திருக்கிறோம். ஒன்னு நிறைபோதையில் இருப்பார், அல்லது குடிக்க காசு இல்லாமல் அலை பாய்ந்து கொண்டு இருப்பார். எங்களுக்கு கடன் நெருக்கடி தாங்க முடியாமல் நான் மட்டும் போய் கேட்டிருக்கிறேன். நாய துரத்துத மாதிரி கையத்தூக்கி  த்தா அந்தால போன்னு சொல்லுதாருன்னு அப்பா அழுதாரு”. இதைப்போல் போக்கா, போய் வேலையைப் பாரு என்று நாயை துரத்துவதுபோல் துரத்தி இருக்கிறார்கள். அவன் மனைவியிடம் காலில் விழுந்தீங்கனு தான் கடன் வாங்கிக் கொடுத்தோம். இப்ப இப்டி பேசுறீங்களே என்று கேட்டதற்கு கடன் கேக்கிறவங்க அப்படித்தான் கேப்பாங்க. நீங்கதான் சுதாரிச்சி இருக்கனும். உங்களால் என்ன பண்ண முடியுமோ அதைப் பண்ணுங்க என்று திமிராய் பேசினாள்.

 

 

போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுத்தோம். நான் போலீஸ் ஸ்டேஷன்ல போய்ச் சொன்னேன். அவங்க வந்து பார்த்து உங்கப்பாகிட்ட ரெண்டாயிரம் ரூவா வாங்கிட்டு போய்ட்டானுக. இல்ல பிள்ளைவாள், அவன் காலி பண்ண முடியாதுன்னு சொல்லுதான். அடிதடிக்கு வாரான். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆயிடப்போகுது. நீங்களே தன்மையாட்டு பேசி முடிச்சுக்குங்கன்னு அந்த எஸ்ஸை சொல்லுதான்”. இதைபோலவே நடந்தது. மாசம் முன்னூறு ரூபாய் கொடுத்திடுறேன் என்று சொல்லி, போலீஸ் அதான் இப்டி தந்துடறேனு சொல்றானே அதைக் கேட்டுக்கங்கன்னு தீர்ப்பு சொன்னாங்க. பனிரெண்டு இலட்சம் ரூபாய் மாசம் 300 வாங்கி நான் எந்த காலம் அடைக்கிறது. நகை செய்வது எங்கள் தொழில். இந்தத் தொழிலில் கடன் இருப்பது தெரிந்தவுடன் எங்களுக்கு வேலை கொடுப்பவர்கள் நிறுத்திவிட்டார்கள். கடன் இருப்பவன் கிட்ட தங்கத்தைக் கொடுத்தால் தூக்கிக்கொண்டு ஓடிவிடுவான் என்பது இங்குள்ள பாலபாடம். எல்லாக் கதவுகளும் அடைக்கப் பட்டு இரவும் பகலும் இதே சிந்தனை. என்ன செய்யப்போறோம், என்ன செய்யப்போறோம்னு புலம்பிக்கொண்டே இருந்தோம்.

 

 

பாரம் அதிகமாகி அச்சு முறியப்போற ஒரு இரவில் சடாரெண்டு இரண்டு பேரும் தெளிந்தோம். தாலி உட்பட எல்லா நகைகளும் எடுத்துக் கொடுத்தேன். சின்ன சின்னதாய் இடம் வாங்கி இருந்தது எல்லாம் வித்துக் கடனை நாங்களே அடைத்தோம். நான் வேலைக்கி முயற்சி செய்தேன். உடனே வேலை கிடைத்தது. சாப்பாட்டு பிரச்சினை நான் பார்த்துக்கிறேன். மத்தக் காரியத்தை நீங்க பார்த்துக்கங்கன்னு சொல்லி விடுதலை ஆனேன். வேலை கிடைத்தது ஒரு கல்லூரியின் நூலகத்தில். மறுபடியும் படிக்க ஆரம்பித்தேன். அழியாச்சுடர்கள் படுகை வழியாக உங்கள் தளத்தை அடைந்தேன். இன்றுவரை தொடர்கிறேன். 2  வருடங்கள் கழிந்ததும் மறுபடியும் தானாகவே தங்க வேலை வந்தது. ஒண்ணுமே இல்லை என்று மறுபடியும் வாழ்க்கையை ஆரம்பித்தோம். 6 வருடங்களுக்கு முந்தைய நிலையை விடக் கூடுதலான பொருளாதாரத்தை அடைந்திருக்கிறோம். அந்த தெளிவடைந்த இரவை இரண்டு பேரும் அடிக்கடி நினைத்துக் கொள்வோம். தூங்கி முழிப்பது போல, அதற்கப்புறம் எந்த பாரமும் இல்லை. ஏமாற்றியவர்களை பற்றி நினைப்பது கூடக் கிடையாது. இந்தக் கதையைப் போலவே ஆள் தெரியாமல் ஒரு கேடியை ஏமாற்றப்போய் அவனும் அவன் மனைவியும் மிகுந்த துன்பம் அனுபவித்தார்கள் என்றும் அவன் ஜெயில்ல இருக்கான் என்றும் அவன் மனைவி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வேறு ஏதோ ஊருக்குச் சென்று விட்டார்கள் என்றும் பின்னர் தெரிந்து கொண்டோம். நாங்கள் அதே இடத்தில் இன்றும் இருக்கிறோம்.

 

 

ஆனால் கடன் கொடுத்து அதை திருப்பி வாங்க இறங்கி அடித்தால்தான் முடியும். சாமிநாதன் கூட ஒரு குற்ற உணர்ச்சி கொண்டவராக இருக்கிறார்.  முத்துசாமி அதையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டார். சாமிநாதனின் இரண்டு பெண்கள் நல்லபடியாய் வீடு வாசலோடு இருப்பதற்கு பாவம் அந்த இரண்டு பெயர் தெரியாத பெண்பிள்ளைகள் வீணாய்ப் போயிருக்கிறார்கள். மறுபடியும் படித்துக் கொண்டே இருக்கிறேன். நன்றி சார்.

 

 

அன்புடன்

டெய்ஸி

train3

எழுத்தாளர் அவர்களுக்கு,

 

ரயிலில்..

 

என் தாத்தாவுக்கு கூட பிறந்த அக்கா ஒருவர். தாத்தாவுக்கு 5 மகள்கள். முதல் பெரியப்பாவுக்கு 3 மகள்கள், இரெண்டாமவர்க்கு 2 பெண்கள், என் அப்பாவுக்கு ஒரு மகள்.

 

திருமணம் செயது கொடுக்கவே வேலை செய்கிறோம், தொழில், விவசாயம், போவது வருவதும் எல்லாமே ஒரு விதத்தில் இந்த பெண்களுக்காகதான்.

 

கட்டி கொடுத்த பின்னும் ஆன் பிள்ளைகள் ஒரு பொருட்டு அல்ல.. எப்போதும் அவர்கள் பற்றிய பேச்சு தான்.

 

இப்போது திருநெல்வேலியில் உள்ளேன். இங்கு வருவதற்கு முன் நீங்கள் பல வருடம் முன்பு அமீரகத்தில் பேசிய ஒரு காணொளியை பார்த்தேன்.. அதிலும் ஒரு புலி ஆடு-டின் ஆட்டம் வரும்.

 

கனமான கதை. முன்பு இதை சென்னையில் ஆள் பெயருடன் இந்த கதையை நீங்கள் சொல்லி இருக்கின்றீர்கள்… மனதை திகைக்க வைக்கிறது. ரயிலும் ஓடிக்கொண்டே இருக்கும் அதிலே ஆடும் புலியும்.

 

நன்றி

வெ. ராகவ்

 

 

ரயிலில் கடிதங்கள் 1

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67
அடுத்த கட்டுரைஇந்த வசையாளர்கள்-கடிதங்கள்