இந்தத் தொலைக்காட்சிப் பேச்சாளர்கள்… கடிதம்

speech

இந்நாட்களில்…

நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்

அன்புள்ள ஜெ

 

இந்நாட்களில் வாசித்தேன்

 

சமீபத்தைய சர்ச்சைகளில் உங்களைப் பற்றி இணையத்தில் பேசிய பலருக்கு நீங்கள் யார், என்ன எழுதியிருக்கிறீர்கள் என்றே தெரியவில்லை என்பதை கவனித்தேன். பெரும்பாலானவர்கள் திமுகவினர். இணையத்திலேயே இருக்கிறார்கள், ஒரு கூகிள் செய்தால் வந்து சேர்ந்துவிடலாம். ஆனால் அவர்களுக்கு அந்த வம்புப்பேச்சின் வழியாக உருவாகி வந்த கருத்துக்களையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். கீழே போய் பலர் இணைப்புகளை அளித்தார்கள். அந்த இணைப்புக்களைக்கூட அவர்கள் சொடுக்கிப் பார்க்கவில்லை. அதே மாறாத பாட்டு

 

என்ன ஆச்சரியம் என்றால் தொலைக்காட்சியில் உங்களைப்பற்றிய பேச்சுக்கள்தான். உங்களைப்பற்றி சில பேனல் டிஸ்கஷன்களே நடந்தன. ஆளூர் ஷாநவாஸ் போன்ற வழக்கமான முகங்கள் வந்தமர்ந்து ஒரே ஆக்ரோஷமாகக் கருத்துச் சொன்னார்கள். ஆனால் எவருக்குமே நீங்கள் யார் என்று எளிமையாகக்கூட தெரியாது. கூகிள்செய்துகூட பார்க்கவில்லை. பெரும்பாலும் அத்தனைபேருமே ஜெயமோகன் ஒரு சினிமா வசன எழுத்தாளர், பிஜேபி ஆதரவாளர் என்னும் இரண்டே வார்த்தைகள் மட்டும்தான் தெரிந்து வைத்திருந்தனர். நீங்கள் நாவல்கள் எழுதியிருக்கிறீர்கள் என்றுகூட எவருக்கும் தெரியவில்லை. நீங்கள் உங்கள் அரசியலை எழுதியிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கவே இல்லை. அத்தனைபேரும் ஒரே மாதிரி பேசிக்கொண்டிருந்தார்கள்

 

ஆளூர் ஷாநவாஸ் என்பவர் நீங்கள் இடஒதுக்கீட்டின் எதிரி என்று கத்திக்கொண்டே இருந்தார். அவரைப்பொறுத்தவரை நீங்கள் ஓர் இந்து என்ற கணிப்புதான் உள்ளே. வேறு ஒன்றுமே இல்லை. நான் அவருக்கு ஜெமோ இதுவரை விடுதலைச்சிறுத்தைகள் என்ற அரசியல்கட்சியின் மேடையில் மட்டும்தான் ஏறியிருக்கிறார், அந்தக் கட்சியில்தான் நீங்கள் இருக்கிறீர்கள் தெரியுமா என ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர் நூறுநாற்காலிகள் என ஒரு கதை எழுதியிருக்கிறார் தெரியுமா என்று இன்னொரு மின்னஞ்சல் அனுப்பினேன். நீங்கள் சாதியைப்பற்றி, இட ஒதுக்கீடு பற்றி எழுதிய இணைப்புகளை அனுப்பினேன். அவர் எதையுமே படிக்கவில்லை.

 

நாலைந்து வரிகளுக்குமேல் வாசிக்கும் வழக்கமே இல்லை இவர்களுக்கு. நான் பார்த்தவரை அங்கே டிவியில் மற்றவர்கள் பேசுவதுதான் இவர்களின் அறிவுக்கு அடிப்படை. அதைவைத்து தங்கள் நிலைபாட்டை எடுக்கிறார்கள். அங்கே பேசியவர்களில் நெறியாளர் உட்பட ஒருவருக்குக்கூட அறம் என்ற தொகுப்போ, நூறுநாற்காலிகள் என்ற கதையோ தெரியாது. அது முதலில் ஆச்சரியமாக இருந்தாலும் பிறகு வேறு எப்படி இருக்கமுடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இவர்கள்தான் இங்கே கருத்துக்களை உருவாக்குகிறார்கள் என நினைக்கும்போது பீதியாகவும் இருந்தது

 

ஆனால் நெல்லையில் உங்கள் கூட்டம் கேட்க 250 இளைஞர்கள் பணம் கட்டி வந்திருந்தார்கள் என்பதை வாசித்தபோது ஒரு மெல்லிய ஆறுதலும் ஏற்பட்டது

 

சந்திரசேகர்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-66
அடுத்த கட்டுரைஅமிஷ் நாவல்கள் -கடிதங்கள்