சினிமா பற்றி நீங்கள் கேட்டவை

sarkar-1-757x506

 

சென்ற இருபது நாட்களாக இணையத்தில் எழுந்த என்மீதான வெறுப்பின் கசப்பின் அலையைப்பற்றி நண்பர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது வெற்றிக்கு எதிரான கசப்பு. என் வெற்றி என் புனைவுகளில் உள்ளது என்பதே என் எண்ணம். ஆனால் இவர்களின் உள்ளத்தில் இவர்கள் மதிக்கும் வெற்றி என்பது சினிமாவில் கிடைக்கும் உலகியல்வெற்றி மட்டுமே. அது இவர்களை பொறாமையால்  கொந்தளிக்கச் செய்கிறது. இலக்கியவெற்றியை மதிப்பிடுமளவுக்கு இவர்களுக்கு அறிவோ நுண்ணுணர்வோ இல்லை.

 

சர்க்கார் வெளிவருவதற்கு முன் அதன் கதை திருட்டு,அதற்கு வசனம் எழுதிய நானே காரணம் என ஒரு ஆர்ப்பாட்டம். அதன்பின் அது தோல்வி என்றும் அதன் முழுப்பொறுப்பும் எனக்கே எனச் சொல்லி இன்னொரு வசைமழை. அது மாபெரும் வெற்றி என்பது உறுதியானதும் அதிலுள்ள எல்லா கருத்துக்களுக்கும் என்னைப் பொறுப்பாக்கி அடுத்த கசப்புமிழ்தல். சற்றேனும் நடுநிலையும் தெளிவும் கொண்டவர்கள் இக்கூச்சல்களில் உள்ள சிறுமையை கவனித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

 

நான் ஏற்கனவே சொன்னதுபோல ஒரு சினிமா என்பது முழுக்கமுழுக்க இயக்குநரின் கலை. வணிகசினிமாவில் அது இன்னும் ஒரு படி மேல். அதிலும் குறிப்பாக, இயக்குநரே கதை, திரைக்கதையை அமைக்கையில் அதில் எவரும் எதையுமே தனது எனச் சொல்லிக்கொள்ள முடியாது. சினிமாவின் உருவாக்கத்தில் ஒளிப்பதிவாளர், கலைஇயக்குநர் போன்ற பலருடைய பங்களிப்பு உள்ளது. அந்தப்பங்களிப்பு எந்த அளவுக்கு என்பதை முடிவெடுப்பது இயக்குநர். ஆகவே அவர்களும்கூட படைப்பின் கூட்டாளிகள் அல்ல. தமிழ் சினிமாவில் எழுத்தாளரின் இடமும் அவ்வளவே.

 

நான் எவருக்கும் விளக்கம் அளிக்கவேண்டிய இடத்தில் இல்லை. என் வாசகர்கள் என்னை எழுத்துக்களினூடாக அறிபவர்கள். ஆனால் பொதுவாக அறிமுகமாகும் நண்பர்கள் சிலரின் கேள்விகளுக்காக இந்த விளக்கங்கள்.

 

ஒன்று ,சுந்தர் ராமசாமி என்ற பெயர் கதாநாயகனுக்கு இருப்பது. அதில் எவ்வகையிலும் எனக்குப் பங்கில்லை. படம் வெளியானபின்னரே நான் அதை அறிந்தேன். திரைக்கதை எழுதப்பட்டபின் பெரும்பாலும் நான் சினிமாவை கடைசிவடிவிலேயே பார்க்கிறேன். இப்படத்தில் கதைநாயகனுக்கு நான் சூட்டிய பெயர் வேறு. ஆனால் எந்த சினிமாவிலும் நான் சூட்டிய பெயர் இறுதியில் வந்ததில்லை. அது ஒரு தற்காலிகப் பெயராகவே இருக்கும். கதாநாயகனுக்கு ராமசாமி என்ற பெயர் என்பது முருகதாஸின் எண்ணம். சொல்லப்போனால் ஒருகட்டத்தில் படத்துக்கே ராமசாமி என பெயரிடலாம் என்று பேசப்பட்டது. அது ஏதோ செண்டிமெண்ட். இறுதியில் சுந்தர் வந்துசேர்ந்தது. முழுக்கமுழுக்க அது தற்செயல்தான்.

 

இரண்டு, அதிலுள்ள அரசியல்கருத்துக்கள். என் அரசியல் கருத்துக்களை நான் தெளிவாகவே பதிவுசெய்திருக்கிறேன். அதில் எந்த ரகசியமும் இல்லை. எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் வாசித்தறியத்தக்கது அது. [நம் தொலைக்காட்சி விவாதங்களில் அமர்பவர்களில் பலருக்கு அப்படி ஏதேனும் தெரியுமா என்ற ஐயம் எனக்கிருக்கிறது]. முருகதாஸ் தனக்கான அரசியல்நிலைபாடுகள் கொண்டவர். அதில் உறுதியாகவும் இருப்பவர். இன்னொருவரால் அவர் கையாளப்படத்தக்கவர் அல்ல. அவருடைய அரசியல் சீமானின் நாம்தமிழர் கட்சிக்கு அணுக்கமானது. அதோடு இந்தப்படம் விஜயின் அரசியல் கனவுகள் சார்ந்தது, அதற்கேற்பவே உருவாக்கப்பட்டது

 

இத்தகைய படங்களில் அனைத்துமே முழுக்கமுழுக்க வெளியே நோக்கியே எடுக்கப்படுகின்றன. மக்கள் விரும்புவதும் நம்புவதுமே படத்திற்காக எடுத்தாளப்படுகின்றன. அதாவது ஏற்கனவே எது மக்களின் அரசியலாக இருக்கிறதோ அதுவே படத்திலும் இடம்பெறுகிறது. இலவசங்கள் ஏன் இந்தப்படத்தில் நிராகரிக்கப்படுகின்றன? அது ஒன்றும் ‘சிந்தித்து’ அடையப்பட்ட அரசியல்நிலைபாடு அல்ல.  தமிழக மக்கள் மேல்  ‘சுமத்தப்படுவதும்’ அல்ல. தமிழகத்தில் நிகழ்ந்த அத்தனை மக்கள் போராட்டங்களிலும்  ‘இலவசங்கள் வேண்டாம்,எங்கள் உரிமைகளை கொடு’ என்ற குரல் எழுந்துள்ளது. எல்லா விவசாயிகள் போராட்டமும் ‘இலவசங்கள் வேண்டாம், விளைபொருட்களுக்கு உரியவிலைகொடு’ என்றே ஒலித்திருக்கிறது. சமீபத்தில் டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டமேகூட ‘இலவசம் வேண்டாம், டாஸ்மாக்கை மூடு’ என்றுதான் ஒலித்தது. அதைத்தான் சினிமா எதிரொலிக்கிறது.மிக எளிய உண்மை இது. இதைக்கூட உணராமல் நம் அறிவுஜீவிகள் ஆராய்ச்சி செய்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

The perfect combination for a blockbuster! What did you enjoy the most out of the four?

sar

 

மூன்று, சன் டிவி வெளியிட்ட விளம்பரத்தில் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் யார் என்று கேட்டு என்பெயரையும் கொடுத்திருந்தனர். பலர் என் பெயரைச் சுட்டியிருந்தனர். நண்பர்கள் சிலர் அதை எனக்கு அனுப்பி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள்.

 

ஒரு வணிகசினிமாவில் எழுத்தாளர் என்னசெய்கிறார்? அவர் இயக்குநருக்கு உதவுகிறார். நான் கதையமைப்பு –வசனம் ஆகியவற்றில் இயக்குநர் கோரும் பணியை ஆற்றுபவன் மட்டுமே. அதை திறமையாக, விரைவாக, முழுமையாக ஆற்றுபவன் என்றவகையில் என்னை நிறுவிக்கொண்டிருக்கிறேன். அது ஒரு தொழில், அதோடுசரி.

*

 

இங்கே பலர் தாங்களே திரைப்படைப்பாளிகளாகக் கற்பனைசெய்துகொண்டு கருத்துக்களை அள்ளிக் குவித்ததை பொதுவாகப் பார்த்தேன். கதாநாயக சினிமா என்பது ஒரு மாபெரும் கலவை. சிறிய சினிமாக்களுக்கு இருப்பதுபோல எளிதாக ஒரு திரைக்கதை ஒருமையை உருவாக்க முடியாது. பலதரப்பட்ட ரசிகர்களின் மாறுபட்ட ரசனைக்குரியதாக ஒரு படம் அமையவேண்டும். அதாவது பலவகையான சுவைகள் நடுவே ஒருமை உருவாகவேண்டும். அது எளிய விஷயமே அல்ல. ஒன்று அமைந்தால் இன்னொன்று கைவிட்டுப்போகும். அந்த ஒருமைக்காகவே அத்தனை போராட்டம். அது எளிதாக அமையுமென்றால் இங்கே அத்தனைபேரும் கோடீஸ்வரர்கள்தான். பல மாபெரும் வெற்றிகளை அடைந்தவர்கள் கூட அதற்கிணையான மாபெரும் தோல்விகளை அடைவது அதிலுள்ள அந்த சவாலால்தான்.

 

கதை- திரைக்கதை என்பது இத்தகைய மாபெரும் கதாநாயக சினிமாக்களுக்கு ஒரு எளிமையான முன்வரைவு மட்டுமே. அதில் ஓட்டம், ஒருமை ஆகியவற்றை முதலில் விவாதித்து உருவாக்கலாம். ஆனால் அதன் திரையுருவாக்கத்தில் அது மாறிக்கொண்டே இருக்கும். காட்சிகளின் நீளம் மாறுபடும். வசனங்கள்  மாறுபடும். காட்சிகளின் அடுக்கு மாறுபடும். இறுதியில் படத்தொகுப்பு மேஜையில் படத்தின் ஓட்டமும் ஒருமையும் மீண்டும் உருவாக்கப்படும். இது பலபடிகளாக, பற்பல நிபுணர்களால் உருவாக்கப்படுவது. அதன் மையவிசையே இயக்குநர். படம் அவருடையதுதான்.

 

ஆனால் படப்பிடிப்பில் மெல்லமெல்ல சினிமா அதன் இயக்குநர் கையைவிட்டுப் போகும். ஒரு கட்டத்தில் இயக்குநரால் படத்தை புறவயமாகப் பார்க்கவே முடியாது. ஒரு சுவரை மிக அருகே நின்று பார்க்கமுடியாததுபோல. எல்லாமே சரியாகவும் தோன்றும், எல்லாமே தப்பாகவும் தெரியும். ஆகவே திருத்திக்கொண்டே இருப்பார்கள். பலசமயம் திரைப்படம் மொத்தமாகவே இன்னொன்றாக ஆகிவிடுவதுமுண்டு. படம் வெளியாகி ஆறுமாதம் கடந்தால்தான் இயக்குநர் அதை விலகி நின்று பார்வையாளனாகப் பார்க்கமுடியும். அப்போதுதான் அவருக்கே சரியான மதிப்பீடு உருவாகும்

 

படப்பிடிப்பில் பல்வேறு விசைகள் படத்தை பல திசைக்கு இழுக்கும். சண்டைக்காட்சிகள், பாடல்காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு அமைப்பு கொண்டவை.சில விஷயங்கள் மிகச்சிறப்பாக அமைந்துவிடும். சில விஷயங்கள் அமையாது. நன்றாக வராதவை படத்தொகுப்பில் இல்லாமலாகிவிடும். அவற்றின் நடுவே ஒத்திசைவு இயக்குநரின் விழிப்புமனத்தால் உருவாவதில்லை. ஒருவகையில் அவரை மீறி அது உருவாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் அது ஒரு “அற்புதம்’தான். அதை திரும்பத்திரும்ப தவறாமல் செய்துகாட்டும் இயக்குநர் என எவரும் இன்றுவரை உலகில் உருவானதில்லை.. எவரும் இது உறுதியாக வெல்லும் என்று சொல்லமுடியாது. ஆகவே சினிமா வெளியாவது வரை உச்சகட்ட முள்முனையில் நின்றிருப்பவரே இயக்குநர்தான்

 

அதேபோல படத்தின் ஏற்பு. பொதுமக்களின் மனம் என்பது கடவுள் போல. கண்ணுக்குத்தெரியாது, ஆனால் எங்கும் சூழ்ந்திருக்கும். எது சென்றுசேரும் எது சேராது என கணிக்கவே முடியாது. ஏற்கனவே வந்த படங்களில் எந்தக்காட்சி ரசிக்கப்பட்டது, எந்தக்காட்சி புரிந்துகொள்ளப்பட்டது என்ற தகவல்தான் கையிலிருக்கும் ஒரே ஆதாரம். அதைக்கொண்டுதான் அடுத்தபடம் செய்யப்படுகிறது. ஆகவே ஏற்கனவே வந்தபடங்களின் சாயலில்தான் பெரிய படங்களைச் செய்யமுடியும். புதிய, துணிச்சலான கதைகளை மிகச்சிறிய படங்களாகவே செய்யமுடியும். ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற உறுதியும் இருக்கவேண்டும், கொஞ்சம் புதிதாகவும் இருக்கவேண்டும். சர்க்கார் படத்தை இகழ்ந்து கரித்துக்கொட்டியவர்கள் அது ஏன் அத்தகைய மாபெரும் வரவேற்பைப் பெற்றது என எண்ணிப்பாருங்கள். நீங்கள் நினைப்பதற்கும் களஉண்மைக்கும் இடையே உள்ள  தொலைவு தெரியவரும். களஉண்மைக்கு நெருக்கமாகச் செல்லவே சினிமாக்காரர்கள் முயல்வார்கள். ஏனென்றால் இது கோடிக்கணக்கான பணம்புரளும் தொழில்.

 

களநிலவரத்துக்கும் தங்கள் எண்ணங்களுக்கும் ஏன் இத்தனை இடைவெளி என இணையத்திலும் தொலைக்காட்சிகளிலும் கூச்சலிடுபவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும். அது இந்தச் சினிமா பற்றிய உங்கள் பேச்சுகளிலேயே உள்ளது. முருகதாஸோ ஜெயமோகனோ மக்களிடம் இதைச் சொல்கிறார்கள், இது தவறு, இது சூழ்ச்சி என்றெல்லாம் சொல்லி வசைபாடுகிறீர்கள். அதாவது நாமெல்லாம் பேச மக்கள் கேட்டுக்கொண்டு போவார்கள் என கற்பனைசெய்கிறீர்கள். அது உண்மை அல்ல. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பலகோணங்களில் feedback mechanism வழியாக ஊகித்து அதையே அவர்களிடம் பேசுவதையே வணிக சினிமா செய்கிறது. மக்கள் கருத்தை வணிகசினிமா உருவாக்குவதில்லை, அவற்றை தொகுக்கிறது, அவ்வளவுதான். உங்கள் மேட்டிமைத்தனத்துடனும்  அதன்விளைவான அறியாமையுடனும், தனிநபர்க் காழ்ப்புகளுடனும்  அதைப் புரிந்துகொள்ளவே முடியாது.

 

இவையெல்லாம் ஹாலிவுட்டிலும் இப்படித்தான். உதாரணமாக, அலெக்ஸாண்டர், ஜான் கார்ட்டர் போன்ற படங்களை எடுத்துக்கொள்வோம். அவை நூறு பெரிய தமிழ்ப்படங்கள் அளவுக்கு முதலீடு கொண்டவை. அப்படியென்றால் எவ்வளவு பெரிய திரைக்கதைத் திறனாளர்களை அமர்த்தியிருப்பார்கள்!. அலெக்ஸாண்டரின் திரைக்கதை  Oliver Stone ,Christopher Kyle, Laeta Kalogridis மூவரும் இணைந்து உருவாக்கியது. ஜான் கார்ட்டரின் திரைக்கதை Andrew Stanton, Mark Andrews ,Michael Chabon மூவரும் சேர்ந்து உருவாக்கியது. இவ்விரு படங்களும் திரைவடிவில் மிகப்பெரிய சலிப்பை அளித்தன. வசூலில் படுதோல்வி அடைந்தன. இங்கே அமர்ந்து பார்த்து ‘என்னய்யா திரைக்கதை அமைச்சிருக்கான்! அறிவே கெடையாது” [ அதாவது ஒரு வார்த்தை நம்மகிட்ட கேட்டிருக்கலாம்ல என்று உட்பொருள் ]  என்று நாம் சொல்லலாம். ஆனால் திரைக்கதையிலிருந்து சினிமாவுக்கான பயணம் எத்தனை சிக்கலானது என்பதற்கான சான்றுகள் இவை. இதைப்போல ஆயிரம் சினிமாக்களைச் சுட்டிக்காட்டமுடியும். [அதேசமயம் மிகமிகச்சிக்கலான, ஆனால் மிக நேர்த்தியான திரைக்கதையாகிய  Shutter Island  படத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் அதே  Laeta Kalogridis தான் ]

 

இது எளிதான பணி அல்ல. ஏன் நீளமான விவாதங்கள்? ஒரு கோணம் சரியா என்பது மட்டுமல்ல சென்றடையுமா என்பதையும் சோதனை செய்துகொள்ளவேண்டும். அதாவது வெளியே பெருகிப் பரந்திருக்கும் பலகோடி மக்களுக்கு பொதுவான ஒரு பொருளை உருவாக்கவேண்டியிருக்கிறது. ஒரு சாதாரண டூத்பிரஷ் எந்த அளவுக்கு ஆய்வுகள், விவாதங்களுக்குப்பின் உருவாக்கப்படுகிறது, எவ்வளவு நிபுணர்கள் அவற்றில் ஈடுபடுகிறார்கள் என்று பாருங்கள். அவ்வாறு கொண்டுவரப்படுவனவற்றில் எவ்வளவு பொருட்கள் சந்தையில் தோல்வியடைகின்றன என்று கவனியுங்கள். கோடிக்கணக்கானவர்களின் ருசிகளுடன் உரையாடும் ஒரு வணிகப்பொருளை எளிதில் உருவாக்கமுடியாது என்று புரியும். உதாரணமாக புதிய கோல்கேட் பற்பசையின் வடிவம், நிறம் பற்றி எவ்வளவு நிபுணர்கள் அமர்ந்து எவ்வளவு விவாதம் செய்திருப்பார்களோ அதில் நூற்றில் ஒருபங்கு விவாதமே சர்க்காருக்கு நிகழ்ந்திருக்கும். ஆனால் சர்க்கார் அந்த பற்பசையைவிட பத்துமடங்கு வணிகம் செய்திருக்கும்.

 

நான் திரைக்கதைவிவாதம் மாதக்கணக்கில் நீள்வதைப் பற்றி கொஞ்சம் வேடிக்கையாக சொன்னது இந்த அர்த்தத்தில்தான். [நான்கு வெண்முரசுக்கு சமம் என]. அதை பலர் நக்கலடித்ததை வாசித்தேன். நம்மவர்களுக்கு நகைச்சுவை என்றால் நகைச்சுவை என்று தனியாக எடுத்துச் சொல்லவேண்டும்..

 

இலக்கியப்பணி என்பது ஓர் ஆசிரியன் தன் அக எழுச்சியை மொழியில் கலையாக ஆக்குவது. அதில் அவன் மட்டுமே இருக்கிறான். வாசகனைப்பற்றி கவலைகொள்ளவேண்டிய அவசியமே கிடையாது. மொழிக்கும் அவனுக்குமான உறவாடல் அது. சமயங்களில் மொழியும் வடிவமும் அவனைக் கைவிட்டுவிடவும்கூடும். இதை சிறிய, ஆத்மார்த்தமான கலைப்படங்களுக்கும் சொல்லலாம். ஆனால் சினிமா என்பது பலர் பங்களிப்பாற்ற வேண்டியிருப்பதனால் இலக்கியம்போல ஆசிரியனின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஆயினும் அதுவும் அச்சினிமாவின் ஆசிரியனான இயக்குநர் தன் அகத்தைநோக்கி உருவாக்குவது

 

வணிகசினிமா என்பது ஒரு நுகர்பொருள். ஒரு மாபெரும் வணிகப்பொருள். அது முழுக்கமுழுக்க வெளியே நோக்கி எடுக்கப்படுகிறது. எது விரும்பப்படுமோ அதையே வணிகப்பொருளாக உருவாக்கமுடியும். இந்தவேறுபாட்டை மட்டும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைபார்ப்பதுபோலத்தான் நான் ஒரு சினிமாவில் வேலைபார்ப்பது. அதன் ஒட்டுமொத்தத்தில் நானும் ஓர் உறுப்பு, அதற்குப் பங்களிப்பாற்றுகிறேன், ஆனால் வழிநடத்தவில்லை.

 

என் படங்கள்

 

முந்தைய கட்டுரைகட்டண உரை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாண்டிச்சேரி வெண்முரசு விவாதக்கூட்டம்-நவம்பர்