ஒரே தொகுப்பாக மணிவண்ணனின் இத்தனை கவிதைகளைப் பார்க்கிறேன். பெரும்பாலான கவிதைகளில் ததும்பாத நெகிழ்ச்சியும் இயல்பான மொழியும் அமைந்துள்ளன
இருவகை கவிதைகள்.
உணர்வெழுச்சியில்லாமல் பெய்யுமா மழை ?
ஹோவென இரைந்து விழுவது ஒரு தளம்
பின்னர் சொட்டுச் சொட்டாக
வெதும்புதல் மற்றொரு தளம்
உணர் நரம்புகளின் அனைத்து பாதையையும்
நனைக்கும் தூறல்
அத்தனையும் வசப்படா சொற்கள்
சிறைக்குள்ளிருந்து
மழை பார்ப்பது போலிருக்கிறது
எனது உடலுக்குள்
நானிப்போது
வசிப்பது
இத்தனை சொற்களில் எத்தனை
சினையுறும் ?
கதவடைத்து கால்விரித்து
பயந்து நிற்கிறாள்
மழையில்
ஓர் அம்மன்
மனமெங்கும்
உணர்வுச் சகதி
போன்ற கவிதைகள் அருவமான உணர்வுகளைச் சொல்பவை என்றால் சில கவிதைகள் சிறிய புனைவுத்துண்டுகள். ஒரு புள்ளியை மெல்லத்தொட்டுவிட்டு நின்றுவிடுபவை
விதவையான தாய்
தனது இரண்டு மகள்களுக்கும்
விதவைக் கணவனை
பங்கு வைத்துக் கொடுத்தாள்
பிறகும் பற்றாது என
ஒவ்வொரு கைச் சோறாக
வாரிவாரிக் கொடுத்தாள்
கசந்தெடுத்து உண்டு
பெரியவர்கள் ஆனார்கள்
அவர்களில் அப்பன்
சமாதியாகி
அழுத்தம் இருவர் முகத்திலும்
வாள் கொண்டுக் கீறி காய்ந்த வடுவாகத்
தெரிந்தான்
உயிர் மகனுக்குள் ஒடுங்கியது
மகனுக்குள்ளிருந்து
“இந்த சாப்பாட்டை சரியாகச் செய்யக் கூடாதா ?
எந்நேரமும் சொல்லணுமா ? ”
என்று நித்தம் கிடந்து அரற்றுகிறான்
அவன்
“இங்கன எங்கேயோதான்
மனுசன் குரல் கேக்கு …”
என தேடி கொண்டிருக்கிறாள்
அவள்
பத்து வருடமாச்சு காரியம் முடிந்து