இந்நாட்களில்…கடிதங்கள்

laugh

இந்நாட்களில்…

 

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

“இந்தநாட்களில்” படித்தேன், இதில் நீங்கள் கூறியது முழுதும் உண்மையே. தங்கள் வாசகர்களில் நிறையபேர் தங்கள் மீது சமூக ஊடகத்தில் நிகழ்த்தப்படும் காழ்ப்புகளின் மூலமே உங்களை அறிந்திருப்பர் நான் உட்பட.

நான் முன்பு முகப்புத்தகத்தில் முடங்கி கிடந்தவன். அ. மார்க்ஸ் உங்களை பற்றி அதிகம் காழ்ப்புகள் நிறைந்து எதையாவது எழுதி கொண்டிருப்பார். அவர் மூலமே நான் உங்களை பற்றி தெரிந்து கொண்டேன் சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னாள். பின்பு உங்கள் கட்டுரைகளை நம் தளத்தில் மாதக்கணக்கில் படித்தேன், பின்பு தினமும் உங்கள் தளத்தில் வெளியாகும் அனைத்தும் வெண்முரசு தவிர்த்து, பின்பு உங்கள் நாவல்கள், சிறு கதைகள், பின்பு வெண்முரசு (முதர்கானல் முதல் இமைக்கணம் வரை 10 மாதங்களில் படித்தேன், செந்நா வேங்கை முதல் இன்று வரை தொடர்ந்து வாசித்து வருகிறேன்), கடைசியாக நீங்கள் கைகாட்டும் எழுத்தாளர்களின் புத்தகங்களாக வாங்கி வாசித்து கொண்டிருக்கிறேன். என்னை போன்று உங்கள் வாசகர்கள் பல பேர் இப்படித்தான்.

இப்படித்தான் இது நடக்கும் போல இருக்கிறது. முகப்புத்தகத்தில் உங்களை பற்றி தவறாக எழுதுபவர்களிடம் உண்மையை சுட்டிக்காட்டி வாதம் செய்திருக்கிறேன், கொதித்திருக்கிறேன், சண்டை இட்டுருக்கிறேன். அவர்கள் காதிலும் மனத்திலும் இது எட்டாது என்பதை தாமதமாக மெல்ல மெல்ல புரிந்து கொண்டு விலகிவிட்டேன். இன்றும் அப்படியே நடந்து கொண்டுதான் உள்ளது. நம் தளத்தில் சமகாலக் கட்டுரைகள் வெளியானதும் முகப்புத்தகம் சென்று தங்கள் மேல் பொழியப்படும் காழ்ப்புகளை கண்டு சிரிப்பதே என் வழக்கமாக ஆகி கொண்டு உள்ளது. தங்கள் புதிய வாசகர்கள் யாராவது பின்னூட்டத்தில் சண்டை இட்டு கொண்டிருப்பார்கள் அன்று நான் செய்தது மாதிரியே. அதே நிகழ்வுகள் அப்படியே ஐந்து வருடங்கள் கழித்தும் கூட.

இன்று தங்களை பற்றி அதிகமாக “யமுனா ராஜேந்திரன்” அதிகமான காழ்ப்புகளை முக புத்தகத்தில் கொட்டி கொண்டிருப்பவர். இவர்தான் “ஜெயமோகன் பாசிசத்தின் இலக்கிய முகம்” என்ற நூலின் தொகுப்பாளர் வேறு.16 கட்டுரையாளர்கள் எழுதுகிறார்கள். இதில் “கவுதம சித்தார்த்தன்” என்ற பேரை மட்டும் நம் தளத்தில் பார்த்ததாக ஞாபகம்

ஆனால் நீங்கள் தங்கள் கட்டுரையில் குறிப்பிடாத ஒன்றும் உள்ளது. ஜெயமோகனின் வாசகர்கள் எங்கள் மீதும் காழ்ப்புகள் சமூக ஊடகத்தில் ஏராளம். “ஆசான் குஞ்சுகள், அடிவருடிகள், சுய சிந்தனை அற்றவர்கள், ஜெயமோகன் பக்தாள், வசியம் செய்ய பட்டவர்கள் இன்னும் நிறைய..

பாண்டியன் சதீஷ்குமார்
கொரியா

reboot23

அன்புள்ள ஜெ

இந்நாட்களில் கட்டுரை வாசித்தேன். உண்மைதான் உங்கள் வாசகர்களுக்கு நீங்கள் செய்வதென்ன, அதன் மதிப்பு என்ன என்று தெரியும். இந்த இணையதளம் இன்றைக்கு இரண்டு பெரியபணிகளைச் செய்துவருகிறது. இலக்கியத்தை அரசியலில் இருந்து அகற்றி ஒரு தனியான அறிதல்முறையாகவும் கலையாகவும் முன்வைக்கிறது. அரசியலையே இலக்கியம் வழியாக அணுகக் கற்றுக்கொடுக்கிறது. அரசியல்நிலைபாடுகளை இலக்கியத்திற்குள் கக்கிக்கொண்டிருப்பவர்கள் நடுவே இது ஒரு மிகப்பெரிய வழிகாட்டுதல். அதை ஏற்றுக்கொண்டுதான் உங்களை நோக்கி இளைஞர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். சுந்தர ராமசாமி வரையிலான அறிஞர்கள் செய்த பணி அது

இரண்டாவதாக, இன்றைக்கு மெய்ஞானம், மரபுசார்ந்த அறிதல் எல்லாமே அரசியலின் ஒரு தரப்பாக குறுக்கப்பட்டுள்ளன. அதன் எதிரிகளும் அதை அப்படித் திரிக்கிறார்கள். அதை ஆதரிப்பவர்களும் அதை தங்கள் அரசியலின் கருவியாக முன்வைக்கிறார்கள். ஆகவே மெய்யியல்தத்துவம், இந்திய ஞானம் ஆகியவற்றைப் பேச ஒரு தளமே இல்லாத நிலை. நீங்கள் இங்கே இந்த இரண்டு madding crowds நடுவே ஒரு நடுநிலையான இடத்தை உருவாக்கி அதைப்பற்றி பேச வைக்கிறீர்கள். இந்த ஒரு தளத்துக்கு வெளியே தூய மெய்யியலைப் பேச இங்கே இடமேயில்லை.

இந்தப்பணிகளை ஏற்றுக்கொண்டவர்களே உங்களை வாசிக்கிறார்கள். இதில் அவர்களுக்கு மாறுபட்டக் கருத்துக்களும் வெவ்வேறு தரப்புக்களும் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் இந்தப்பணியின் இன்றைய பெறுமதி என்ன என்று தெரியும். சலிக்காமல் பத்தாண்டுகளில் இணையத்தில் பணியாற்றி நீங்கள் உருவாக்கியது இது. இதெல்லாம் பிறரால் இங்கே கனவுகூட காணமுடியாதவை. அவர்களில் பலதரப்பினர். உங்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டம். உங்களை எவ்வகையிலும் புரிந்துகொள்ளாமல் தங்கள் வட்டங்களிலேயே உழலும் கூட்டம்.

நான் உங்களை நோக்கி எப்படி வந்தேன்? உங்களையும் உங்கள் வட்டத்தையும் இகழ்ந்து பேசுபவர்கள், அடிவருடிகள் என்றெல்லாம் கேலிசெய்பவர்களையே முதலில் வாசித்தேன். உங்களை வாசிக்கவில்லை. ஏனென்றால் நான் முகநூலுக்கு வெளியே அப்போதெல்லாம் வாசிப்பதில்லை. இப்படி கேலியும் கிண்டலும் செய்பவர்கள் எல்லாருமே ஒருவர் பாக்கியில்லாமல் சல்லிப்பயல்களாகவே இருக்கிறார்களே என்று நாங்கள் எங்கள் அலுவலகத்திலே பேசிக்கொண்டோம். ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கிறதிலேயே சல்லித்தனமான கருத்தைச் சொல்பவர்கள், மொத்த வாழ்நாளிலும் ஒரு புத்தகத்தைப்பற்றிக்கூட நாலு வரி எழுதாதவர்கள்தான் அந்த கேலிகளைச் செய்துகொண்டிருந்தார்கள். அதன்பிறகுதான் நான் உங்கள் இணையதளத்துக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. அதன்பின் முகநூலையே விட்டுவிட்டேன்

உங்களுக்கு இவர்களால் மனச்சோர்வெல்லாம் வராது என்று தெரியும். ஆனால் சின்ன தொந்தரவுகள் வந்திருக்கும். ஆகவே இதை எழுதுகிறேன். சென்ற ஆண்டில் உங்களையும் வெண்முரசையும் எல்லாம் விமர்சித்து எழுதப்பட்ட 13 கட்டுரைகளை வாசித்தேன். ஒரு நல்லவாசகன் பொருட்படுத்தி வாசிக்கத்தக்க, பேசத்தக்க ஒரு கட்டுரையைக்கூட வாசிக்கமுடியவில்லை. உண்மையில் வேறுபேரில் நானே ஒரு நல்ல எதிர்ப்புக் கட்டுரையை எழுதினாலென்ன என்றுகூடத் தோன்றியது. ஏனென்றால் இந்த சல்லித்தனமான எதிர்ப்பு என்பது ஒரு மோசமான அறிவுச்சூழலையே காட்டுகிறது

ஆனந்த்ராஜ்

laugh

 

அன்புள்ள ஜெ
இந்நாட்களில் கட்டுரையை வாசித்தேன். அதில் பதிப்புரிமை காப்புரிமை குறித்தும் அவதூறு வழக்கு குறித்தும் நீங்கள் சொல்லியிருப்பவை முக்கியமான கருத்துக்கள். உண்மையில் அவை எனக்கு இதுவரை தெரியாது. நீங்கள் பின்னர் விரிவாக எழுதவேண்டும்

நீங்கள் இந்த சில்லறைச் சர்ச்சைகளைப் பொருட்படுத்தவேண்டியதில்லை. ஆனால் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும். வேறெந்த சூழலையும் விட இப்போதுதான் உங்களுக்கு ஆதரவான வலிமையான குரல்கள் வந்தன.உங்களை வசைபாடியவர்களெல்லாம் சில்லறைத்தனமாக காழ்ப்புகளைக் கொட்டினார்கள். [அதிலும் உங்களை இமிடேட் செய்கிறேன் பேர்வழி என சில அசடுகள் எழுதியதெல்லாம் கேவலத்தின் உச்சம். வாசிக்கும் பழக்கமே இருக்காதுபோல]

ஆனால் உங்களை ஆதரித்து எழுதியவர்கள் உணர்ச்சிகரமாகவும் நேர்மையாகவும் வலுவான இலக்கிய நிலைபாட்டுடனும் எழுதினார்கள். உங்கள் பங்களிப்பு என்ன என்று ஆதாரபூர்வமாக எழுதினார்கள். அவர்களை காழ்ப்புடன் திட்டமட்டுமே எதிர்தரப்பால் முடிந்தது. அந்தவகையில் அவர்கள் மேலும் வெளிப்பட்டார்கள். அந்தவகையில் இந்தச் சர்ச்சை நல்லதுதான்

ஆர்.ஜெயராஜ்

reboot23

ஜெ

உங்கள் தோற்கடிக்கப்பட்ட தரப்பு, சர்க்கார், அச்சம் குறித்த பதிவுகள் படித்தேன்.

ஹராரி சேப்பியன்ஸ் புத்தகத்தில் ஹோமா நியாண்டதால்களை பற்றி 91 முறையும், ஹோமோ எரக்டஸ் குடும்பத்தினை பற்றி 11 முறையும் குறிப்பிட்டு இருப்பார். ஐரோப்பா மற்றும் வெஸ்ட் ஆசியாவினை உலகின் மையமாக கொண்டவர்களுக்கு ஹோமோ நியாண்டர்தால்கள் மிக முக்கியம். ஹராரி லிபரல், ஆனால் வெஸ்டர்ன் லிபரல். அவர்களுக்கும் நியாண்டர்தால்கள்தான் முக்கியம். வலையில் ஜெயமோகன் கான்ஸ்பிரசி தியரி சொல்கின்றார் நண்பர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மேலை மரபில் இடதும், வலதும் தங்களை மேலை மரபின் இடதாகவும், வலதாகவும் முன் வைப்பார்கள். அமெரிக்காவில் இருந்தாலும் பூர்விக அமெரிக்கர்களின் நேரேட்டிவ்வில் இருந்து விதை கிளைக்காது, கிரேக்க மரபில் இருந்துதான் இடதும், வலதும் கிளைத்ததாக முன் வைப்பார்கள். நீங்கள் ரிச்சர்ட் டாக்கின்ஸ் பற்றி முன்பு ஒரு முறை சொல்லியிருந்த பொழுது இதே கருத்தினை சொல்லியிருந்திர்கள். மேலை உலகத்தினர் மிக மரபானவர்கள், மரபின் மீது முழு நம்பிக்கை உடையவர்கள். நம்மூடையவர்கள் அங்கு உரசிக் கொண்டு தர்மராஜாவின் யாகத்துக்கு வந்த உடும்பினை போல பரிட்சித்து கொண்டு உள்ளார்கள்.

மனிதர்கள் கோபம், குரோதம் கொள்ளுதல் இயல்பாகவே இயற்கைக்கு மாறானது என உணர்வதால் ஒரு ஜஸ்டிபிகேஷன் வழியே அதை சமப்படுத்திக் கொள்கின்றார்களா?

உங்கள் மீதான் கோபமும், குரோதமும் இணையத்தில் நிரம்பி வழிந்தது. அதை ஜஸ்டிபிகேஷன் செய்ய சர்க்காரினை ஒரு சால்ஜால்பாக பயன்படுத்தினார்கள். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதெல்லாம் பொருட்டல்ல, கையில் ஜெயமோகனுக்கு எதிராக பேச ஏதோ ஜஸ்டிபிகேஷன் சிக்கியுள்ளது என்பதே அவர்களுக்கு குஷியாக இருந்தது. பெரிய நியுஸ் சானலின் எடிட்டரெல்லாம் உங்களுக்கு எதிராக சொன்னதை மாய்ந்து மாய்ந்து விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அதிசயமாக இருந்தது. இத்தனைக்கும் மீடியாக்காரர்களுக்கு சினிமா தொழில் பற்றி தெரியாமலா இருக்கும். பாக்யராஜ் பேட்டி பார்த்தால் நீங்கள் சொன்னது போலவே இருந்தது.

காரணம் சொல்லுதல் அல்லது ஜஸ்டிபிகேஷன் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு முக்கியமாகின்றது. அதற்கு நியாயம் சொல்ல தர்க்கம் தேவைப்படுகின்றது. தர்க்கம் உருவாக்க மொழி ஆளுமையும், தரிசனமும் உள்ள தரப்பு தேவைப்படுகின்றது. எல்லா சாமான்யராலும் அதை செய்ய இயலாது, விருப்பு, வெறுப்பு அலையில் தரிசனம் சார்ந்த தர்க்கமெல்லாம் கைக் கூடாது. மேலை மரபில் இடதாகவும், வலதாகவும் பல நூறு ஆண்டு உடைய ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட் போன்ற பெரும் கல்வி நிலையங்களே இடதாகவும், வலதாகவும் விவாதித்து அறிவு தளத்தில் ஆர்க்யுமெண்ட்ஸ் உருவாக்கி வைத்துள்ளார்கள். சொந்தமாக யோசித்து சிரமபட வேண்டியதில்லை, நாலு நல்ல புத்தகம் வாங்கி படித்தால் ஒரளவுக்கு சுமாராக அவர்கள் சொன்னதை பாராப்ரேஸ் செய்து விடலாம். நிகழ்கால தர்க்கத்தில் ஜஸ்டிபிகேஷன் கிடைத்து விடும். Feel good உணர்ச்சிக்கு எளிதில் சென்று விடலாம்.

ஜஸ்டிபிகேஷன் மொழியாக இல்லாது வெறும் உள்ளுனர்வாக மட்டும் இருந்தால் மிக மிக மன பலம் உடையவர்களால் மட்டுமே அன்றாட உலகின் அத்தனை இரைச்சல்களை தாண்டி தங்கள் உண்மையென உணர்வதை தக்க வைக்க முடிகின்றது. மற்றவர்கள் ஏதோ ஒரு விதத்தில் எது பலமான தர்க்கமோ அந்த தரப்பினையே மெல்ல கைக் கொள்கின்றார்கள்.

மொழி அத்தனை பலம் வாய்ந்தது. ஜஸ்டிபிகேஷன் இல்லாமல் எதையும் செய்ய முடியவில்லை என்பது எவலூஷனில் இருந்து வந்திருக்குமோ?

அன்புடன்
சஞ்சீவ் மன்னவன்

சர்க்கார், இறுதியாக…

சர்கார்- இறுதியில்…

சர்க்கார் அரசியல்

சர்க்கார்- ஒரு கடிதம்

சர்க்கார், அவதூறுகளின் ஊற்று

சர்கார், காழ்ப்புகளும் வம்புகளும்

 

முந்தைய கட்டுரைகல்மலர்தல்- பார்கவி
அடுத்த கட்டுரைதேங்காயெண்ணையும் வெள்ளையரும்