உங்களுக்கும் கவிதைக்குமான பரிச்சயம் என்ன? ஒரு கதாசிரியனுக்கு ஓரளவாவது கவிதை மனமும் இருந்தால் கதையின் கடினமான இடங்களில் அவனுக்குள் இருக்கும் கவிஞன் வந்து எழுத்தை நெகிழ்விப்பான்; அது தேவையும் கூட என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
எல்லாக் குழந்தைகளும் குறிகளைக் கொஞ்சகாலம் சீண்டியிருக்கும். எல்லா உரைநடையாசிரியர்களும் கொஞ்சகாலம் கவிதை எழுதிப்பார்த்திருப்பார்கள். நானும். அவற்றை நூலாக ஆக்காதபடி எனக்கு விவேகம் இருந்தது.
நல்ல உரைநடையாளனின் முதற்கவனம் கவிதை மீதிருக்கும். கவிதைக்கு ஒரு புறவய உலகை உருவாக்கிக் காட்டவேண்டிய கட்டாயம் இல்லை. வாசகனின் தர்க்கபுத்தியை அது பொருட்டாக எண்ணுவதேயில்லை. உண்மைகளைத் தொகுத்து பேருண்மையாகக் கட்ட அது முனைவதேயில்லை. ஆகவே அது அம்மணமான குழந்தை போல தடையற்று துள்ளிச்செல்வது. இலக்கியவடிவங்களில் தூயகலைக்கு மிக அருகே உள்ளது அதுவே.
ஆகவே கவிதையில்தான் மொழிபழகும் குழந்தைக்கு அடுத்தபடியாக மொழியின் புத்தம் புதிய எல்லைகள் திறக்கின்றன. கவிதை வழிகாட்டிப்பறவை. அதன் திசையில் தன் ‘தேரானைக்கால்’ படைகளுடன் உரைநடை செல்லவேண்டியுள்ளது. இதுவரையிலான தமிழின் மிகமிகச்சில முதன்மை உரைநடையாசிரியர்களுள் நானும் ஒருவன் என்று உறுதியாக அறிவேன். ஆயினும் ஒரு நல்ல கவிஞனின் மொழித்திறப்பு என்னைவிடமேலாகவே இருக்கும். என் நாவல்களில் மகத்தான கவித்துவத் தருணங்கள் சில நிகழ்ந்துள்ளன. ஆயினும் உரைநடையில் நிகழ்பவை கவித்துவங்களே ஒழிய கவிதைகள் அல்ல.
தமிழ் கவிமரபு குறித்தும் புதுக்கவிதை குறித்தும் விரிவாக, தொடர்ந்து திறனாய்வுகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘நவீனத்துவத்துக்குப் பின் தமிழ்க்கவிதை- தேவதேவனை முன்வைத்து’ என்ற நூல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மலையாளக்கவிதைகளை திறனாய்வுசெய்து நான் எழுதிய கட்டுரைகள் விரிவான நீண்டகால விவாதங்களை உருவாக்கியுள்ளன. மலையாளக் கவிதைகளை இருதொகுதிகளாகத் தமிழாக்கம் செய்துள்ளேன். கவிதைக்காக எட்டு ஆய்வரங்குகளை நடத்தியிருக்கிறேன்.
எனக்கு பிடித்தமான கவிஞர்கள் பிரமிள், தேவதேவன், கலாப்ரியா, விக்ரமாதித்யன், எம்.யுவன், மனுஷ்யபுத்திரன், யூமாவாசுகி, பிரேம் ரமேஷ் ஆகியோர். இவர்களிலிருந்து வேறுபட்ட அங்கதக் குரலாக ஞானக்கூத்தன்.